Home

Tuesday, 26 September 2017

நிம்மதியைக் குலைக்கும் அமைதி - மு.சுயம்புலிங்கத்தின் "தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்"



சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள்தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்மேல் பாதையோரங்களில் வசிப்பவர்கள்யாருக்கும் முறையான தங்குமிடம் இல்லை. பலருக்கு உடல்மறைக்கும் துணிகள் இல்லை. பசிவேளைக்கு போதுமான உணவில்லை. கிடைக்கும்போது சாப்பிட்டு, கிடைக்கிற கிழிசலை அணிந்து, கிடைக்கிற இடத்தில் தூங்கி நாட்களை ஓட்டுகிறார்கள். கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள். கிடைக்கிற பணத்தை விருப்பம்போல செலவு செய்கிறார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கைமுறை. யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதற்கும் வழியில்லாத வாழ்க்கைமுறை என்றும் சொல்லவேண்டும்.


இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுடைய வாழ்க்கைமுறையில் எந்த மாற்றமும் உருவாவதில்லைஇவர்களுடைய மறுவாழ்வுக்காக தீட்டப்படுகிற திட்டங்கள் சரியான முறையில் இவர்களைச் சென்று சேர்வதில்லை. ஆனால் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிற நிதிமட்டும் பலவகைகளில் செலவழிந்துபோகிறது. ஏழைகள் ஏழைகளாகவே காலம்காலமாக இருக்கிறார்கள். ஏழைகளின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். பாதையோரத்தில் பிறந்து பாதையோரத்திலேயே வளர்ந்து, வாழ்ந்து செத்துப்போகிறவர்களைப்பற்றி யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை.

ஒருநாள் வெளியூரிலிருந்து வரவிருந்த என் நண்பரை அழைத்துச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். இரவு இரண்டரைக்கும் மேல் இருக்கும். யாருமில்லாத இடம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். சிறிதுநேரம் கழிந்தபிறகுதான் சற்றே தொலைவில் ஒரு மரத்தடியில் ஒரு குடும்பம் அமர்ந்திருப்பது புலப்பட்டதுஒரு அம்மா உட்காரக்கூட முடியாமல் தூக்கத்தில் வளைந்துவளைந்துவிழுகிற பிள்ளைகளை நிமிர்த்தி உட்காரவைத்து சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். எல்லாரையும் சாப்பிடவைத்துவிட்டு ஒரு தட்டில் சோறு போட்டு அவளும் சாப்பிட்டாள். இரண்டரைமணிக்குச் சாப்பிட்ட அந்தச் சாப்பாடு கடந்துபோன இரவுச்சாப்பாடாகவோ அல்லது மதியச்சாப்பாடாகவோ அல்லது அன்றைய நாளின் ஒரே சாப்பாடாகவோ இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்ஏன் இந்த நேரத்தில் சாப்பிடுகிறாய் என்று கேட்பதற்கும் ஆள் இல்லை. ஏன் இந்தநேரம் வரைக்கும் சாப்பிடாமல் பட்டினிகிடந்தாய் என்று கேட்பதற்கும் ஆள் இல்லை. கிடைக்கும் நேரத்தில் சாப்பிட்டு கிடைக்கிற இடத்தில் தூங்கிவிட்டுச் செல்கிற வாழ்க்கையை அவர்களும் விரும்பியோ விருப்பமில்லாமலோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தம் வாழ்க்கையைக் குறித்த புகார்களைப் பட்டியலிடச் சொன்னால் ஒவ்வொருவரும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் சொல்லப்பட்ட புகார்களுக்கெல்லாம் எந்த நல்விளைவும் நிகழாததைப் பார்த்துப்பார்த்து, சோர்வில் துவண்டு, புகார்களோடேயே வாழ்ந்து பழகத் தொடங்கிவிடுகிறார்கள். தம்மை உற்றுக் கவனிக்கும் முகங்களைக் கண்டு அவர்கள் புன்னகைக்கக்கூடும். அப்புன்னகையின்பின்னால் நூறு மடங்கு கசப்புகள் குவிந்திருக்கலாம். சந்தோஷம் என்று சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஆயிரம் மடங்கு துக்கம் மண்டியிருக்கக்கூடும். எதிர்மறையான உணர்வுகளை நேர்மறையான சொற்கள்மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

சுயம்புலிங்கத்தின் கவிதையில் ஒலிக்கும் குரல் ஒற்றைப்படையான குரல் அல்ல. அது ஒரு பிரதிநிதித்துவக்குரல். ஒரு பெருங்கூட்டத்தை பின்னணியில் கொண்ட குரல். உணவு, உடை, உறையுள் இல்லாதவர்கள் அவர்கள். ஆதரிப்பதற்கும் யாருமே இல்லாதவர்கள்அறிவுரை சொல்லவோ, துணையாக இருந்து வழிநடத்தவோகூட துணையில்லாதவர்கள்கிடைத்தபோது உண்டு, கிடைக்காதபோது பட்டினி கிடப்பவர்கள்குழந்தைகளுக்கு அணிந்துகொள்ள சரியான உடைக்கு ஏற்பாடு செய்யமுடியாதவர்கள்எங்கெங்கோ கிடைக்கிற அளவுப்பொருத்தம் இல்லாத தொளதொள சட்டைகளைமட்டுமே அணிந்துகொள்ளத் தூண்டுகிறவர்கள்மலிவுவிலையில் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக பழைய துணிக்கடையில் தீட்டுக்கறை படிந்த நிறம் மங்கிய சேலைகளை வாங்கி அணிந்துகொள்கிறவர்கள்பசியை தண்ணீரருந்தி தணித்துக்கொள்ளும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். இழப்புகளை ஆதாயங்களாகவும் அவமானங்களை விருதுகளாகவும் தோல்விகளை வெற்றிகளாகவும் மாற்றி, அவற்றையே ஆபரணங்களாக அணிந்துகொள்கிறவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் தன்னைநோக்கி நலம்விசாரிக்கும் முகத்தைப் பார்த்து நலம்தான் என்று சொல்கிறார்கள்அப்போதுகூட தன் குறைகளைப் பட்டியலிட்டுச் சொல்ல மனம்நாணுகிறவர்கள். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையவேண்டும் என்று வள்ளுவர் சொல்வதுண்டு. மனிதகுலத்தில் ஒரு பிரிவு உடுக்கையிழந்து நிற்கும்போது, இன்னொரு பிரிவு ஓடிவந்து உடுக்கையாக நின்று மானம் காப்பதுதானே நாகரிகமாக இருக்கமுடியும். தானாகவே நாகரிகமுறையில் நடந்துகொள்ளத் தெரியாதவர்கள் பிறர் உணர்த்தும்போதுமட்டும் நாகரிகமாக நடந்துகொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இல்லாததாலேயே, மனக்கூச்சத்துடன் நலம்தான் என்று புன்னகைக்கிறார்கள். நலம்தான் என்ற சொல்லோடு ஒட்டிக்கொண்டு வெளிப்படுகிற சிரிப்பின்வழியாக, உள்ளார்ந்த துக்கங்கள் வெடித்துச் சிதறுவதை நாம்தான் உணரவேண்டும்f. 

'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா' என்றொரு இசைப்பாடல்வரியை நாம் கேட்டிருப்போம். நான் நினைத்ததையெல்லாம் நடத்திக்கொடுத்துவிட்டாய். என் கண்களால் நல்லவை அனைத்தையும் பார்த்துவிட்டேன். வாழ்வில் எந்தக் குறையும் இல்லை என்று நன்றியுணர்வு புலப்பட உருகும் குரலில் தொழும் உருவத்தை சின்னஞ்சிறிய அவ்வரிகளைக் காதுகொடுத்துக் கேட்டதுமே உணர்ந்துகொள்ளலாம்சுயம்புலிங்கத்தின் கவிதையில் ஒலிக்கும் குரல் இதற்கு நேர்மாறானது. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்று கவிதை முன்வைக்கும் குரலில் கசப்பான பெருமூச்சின் வெப்பம் சுட்டெரிக்கிறதுபடிக்கிற கணத்தில் அவ்வெப்பத்தின் அனலை நம்மால்  உணர்ந்துகொள்ளமுடிகிறது. உணவு உடை உறையுள் என்று சொல்லப்படும் அடிப்படைத்தேவைகளுக்கே தாளம்போடுவதை  நீதான் கண்ணால் பார்க்கிறாயே, நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று கேட்காமல் கேட்கிற அமைதி கவிதையில் புலப்படுவதை நாம் உணரவேண்டும். நிம்மதியைக் குலைக்கிற அமைதி இது. வறுமைகூட ஒருவகையில் இளைய முள்மரம்போல. இளம்கன்றாக இருக்கும்போதே வெட்டி அகற்றுவதுதான் நல்லது. ஆழமாக வேரூன்ற வேரூன்ற, அதை அகற்றும் வழிமுறைகளும் சிக்கலானதாக மாறிவிடக்கூடும்

*

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

மு.சுயம்புலிங்கம்

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

*

கரிசல் காட்டுப் படைப்பாளிகளில் ஒருவர் சுயம்புலிங்கம். வாழ்வின் அவலங்களையும் அலங்கோலங்களையும் மிகையற்ற சொற்களோடு கதைகளாகவும் கவிதை களாகவும் புனைபவர். கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கல்குதிரை என்னும் இதழில் இவருடைய தொடக்கக்காலக் கவிதைகள் வெளிவந்த காலத்திலேயே வாசக கவனத்தைப் பெற்றவை. 'நிறம் மறந்த வண்ணத்துப்பூச்சிகள்' தொகுப்பு தமிழ்க்கவிதையுலகத்துக்கு ஒரு முக்கியமான வரவு. 'ஒரு பனங்காட்டுக் கிராமம்' என்னும் தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியும் பிரசுரமாகியுள்ளது.