Home

Tuesday, 26 September 2017

கசப்பு என்னும் பாசி - சண்முக சுப்பையாவின் "உலகம்"


மகிழ்ச்சி என்பது மனம்சார்ந்ததா அல்லது வசதிகள்சார்ந்ததா என்பது முக்கியமான கேள்விவசதிகள் மிகுந்த இருக்கை, படுக்கை, இருப்பிடம், தோட்டம், வாகனங்கள், மாளிகைகள் என எதை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடமுடியும். ஆனால் மகிழ்ச்சியை எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாது. மெத்தையைத்தான் வாங்கமுடியும், தூக்கத்தை எப்படி விலைகொடுத்து வாங்கமுடியும்? வசதிக்குறைவு என்பது சிற்சில வருத்தங்களுக்கும் சிரமங்களுக்கும் காரணமாக இருக்கலாம்ஆனால் ஒருபோதும் அது மகிழ்ச்சி இல்லாமல்போவதற்கான காரணமாக இருக்கமுடியாது


மனத்தில் இடமிருந்தால் பத்துக்கும் மேற்பட்டவர்கள்கூட ஓர் ஒற்றை அறைக்குள் வசித்துவிடமுடியும்மனத்தில் இடமில்லாத நிலையில் இரண்டு பேர்கள்கூட ஓர் அறைக்குள் வசிக்கமுடியாது. சிறீரங்கப்பட்டணத்துக்குச் சென்றிருந்தபோது, எங்களுக்கு அருகில் ஒரு டாடா சுமோ வாகனம் வந்து நின்றது. வாகனத்திலிருந்து பதினனைந்து பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் சிரித்துக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் ஒவ்வொருவராக இறங்கியதை கண்ணால் பார்த்தேன். ஆச்சரியம் தாங்காமல் "உள்ள எதாச்சிம் ஸ்பெஷல் குகை இருக்குதா, வந்துட்டே இருக்காங்க" என்று அருகிலிருந்த ஒரு தம்பதியினர் புன்முறுவலோடு சொன்னது கேட்டது. சாதாரணமாக அதில் ஏழு பேர்கள் மட்டுமே உட்கார முடியும். அந்த இடத்தில் பதினைந்து பேர்கள் உட்கார்வதற்கு அவர்களிடையே இருந்த புரிதலே காரணம்.

சார்லி சாப்ளின் படங்களில் பார்த்த பல காட்சிகள் மறக்கமுடியாதவை. அடுத்தடுத்து துயரங்கள்  மோதும் கணங்களில் நான் நினைத்துக்கொள்ளும் ஒரு காட்சி சாப்ளின் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தின் இறுதிக்காட்சி. மிகச்சிறப்பான நகைச்சுவைப் பாத்திரம் என்கிற பெயரையும் புகழையும் தேடித் தந்த சர்க்கஸ் நிறுவனம் ஊரைவிட்டு வெளியேறுகிற கணம். உயிருக்குயிராக தான் காதலித்த பெண்ணை, அதே சர்க்கஸ் ஊழியர்களில் வேறொருவரை அவள் காதலிப்பதை அறிந்து, தன் துயரத்தை மறந்து, அவர்கள் இருவரும் இணைந்திருக்க வழிவகுத்துத் தருகிறது அப்பாத்திரம். தம்பதியினரை மனமார வாழ்த்தி ரயில் பெட்டியில் ஏற்றிவிடுகிறது. "நீயும் வரவேண்டும்" என்று வற்புறுத்தப்படும்போது, தான் கடைசிப்பெட்டியில் ஏறிக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் பின்வாங்குகிறதுசர்க்கஸ் ஊழியர்களையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு ரயில் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு ஓரமாக உட்கார்கிறது. அருகில் கிழிந்து தொங்குகிறது சர்க்கஸ் கூடாரத்திலிருந்து அறுந்துவிழுந்த ஒரு நட்சத்திரக்கொடி. நேற்றுவரை பார்வையாளர்களுக்கு நட்சத்திரமாக இருந்தவன் ஒரே நாளில் நடுத்தெருவில் ஆதரவில்லாதவனாக நிற்கநேர்கிறது. எல்லாம் தொலைந்துபோக மறுபடியும் வாழ்க்கை அப்பாத்திரத்தை தொடக்கப்புள்ளியில் உட்காரவைத்துவிடுகிறது. ஒரே ஒரு கணம். எல்லாவற்றையும் தொகுத்து பரிசீலிப்பதுபோல அக்கணம் அப்பாத்திரத்தின் முகத்தில் உறைகிறதுமறுகணமே அப்பாத்திரம் தனக்கே உரிய துள்ளலோடும் கண்ணசைவோடும் உதட்டுக்கோணலோடும் எவ்விதமான கசப்புமின்றி தன் நடையைத் தொடங்கிவிடுகிறது. தன் உயிர்ப்பாற்றலை மீண்டும்மண்டும் திரட்டியெழுகிற அக்கணம் மிகவும் முக்கியமானது.

கசப்பில்லாமலும் மகிழ்ச்சியாகவும் ஒருவர் வாழ்வதற்கான தூண்டுதலை வழங்குவது இந்த உயிர்ப்பாற்றல்உயிர்ப்பாற்றலின் இறுதித்துளி நம் நெஞ்சில் சுரக்கும்வரைக்கும் கசப்பு என்கிற சொல்லுக்கே இடமில்லை. அத்தகைய கசப்பற்ற -அதே சமயத்தில் எல்லாவிதமாக சங்கடங்களும் நிறைந்த ஒரு உலகத்தைத் தீட்டிக்காட்டுகிறது சண்முக சுப்பையாவின் கவிதை.
எல்லா வரிகளும் நேரிடையான பொருளைத் தருவதாகவே கவிதையின் அமைப்பு அமைந்துள்ளது.  அன்பில்லாத மனைவி. நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள். வசதியில்லா வீடு. சுவையில்லாத உணவு. பிடிப்பில்லாத தொழில்சொல்லிவைத்தமாதிரி அடுக்கடுக்கான சங்கடங்கள். எல்லாமே மனச்சோர்வை அளிக்கவல்லவைஆனால் சங்கடங்களைப் பட்டியலிடும் பாத்திரம் மனச்சோர்வில் மூழ்கவில்லை என்பதுதான் கவிதையின் விசேஷம்ஏனோ உலகம் கசக்கவில்லை என்பது கவிதையின் முக்கியமான வரி. சங்கடங்களுக்கிடையே ஆறுதலைத் தனக்குத்தானே தேடிக்கொள்கிற மனவலிமை ஆச்சரியம் நிறைந்தது. பாம்பை விழுதென்று நம்பி பற்றிக்கொண்டு பாழுங்கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருக்கிற வேளையில் உச்சிக்கிளையிலிருக்கும் தேனடை உடைந்து சிதறுகிற தேன்துளிகளை நாவால் சுவைக்கிற பழைய பாடலில் இடம்பெறுகிற பாத்திரத்தின் மன அமைப்புக்கு நிகரானது இந்த மனஅமைப்பு. உயிர்ப்பாற்றல் நிறைந்த மனத்துக்குமட்டுமே இத்தகைய அமைப்பு உண்டு. எது நடந்தாலும் அதை அக்கணமே புறந்தள்ளி, அடுத்த கணத்துக்குத் தேவையான சக்தியை திரட்டியெடுத்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது. அது எதையும் கசப்பாகப் பார்ப்பதில்லை. மாறிமாறி உருவாகிற பள்ளங்களை தனக்குத்தானே நிரப்பிக்கொள்கிற அபூர்வ ஆற்றலால் அது கசப்பை அண்டவிடுவதில்லை. வருத்தங்களும் துயரங்களும் இயற்கையானவை. மீண்டெழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கசப்பு என்பது பாசியைப்போல. ஆகாயத்தாமரையைப்போல. ஒரே ஒரு கணம் அதற்கு இடம்கொடுத்தாலும் போதும், மனம் முழுவதையும் ஆக்கிரமித்து உருவில்லாமல் சிதைத்துவிடும்.



*

உலகம்

சண்முக சுப்பையா

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.


*

எழுத்து காலக் கவிஞர்களில் ஒருவர் சண்முக சுப்பையா. தாளலயம் கூடிய சொற்செட்டுடன் எழுதப்பட்ட இவருடைய கவிதைகள் நல்ல வாசிப்புத்தன்மை உள்ளவை. எழுத்து பதிப்பகம் வழியாகவே இவருடைய ஒரு கவிதைத்தொகுதி வந்துள்ளது.

*