20.06.1987
அன்று எங்களுக்கு
மகன் பிறந்தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும்
விதமாக என் தோள்பை நிறைய சாக்லெட்டுகளை எடுத்துச் சென்று மருத்துவமனைக் கூடத்தில் இருந்தவர்கள்
அனைவருக்கும் வழங்கினேன். அது ஒரு கொண்டாட்டமான கணம். என் உடலில் முளைத்த ரகசிய இறக்கைகளை
அசைத்தசைத்து திக்குத்திசை புரியாமல் பறந்தபடி இருந்தேன். ஒரு கூடத்தில் தங்கியிருந்த
அனைவருக்கும் கொடுத்த பிறகு, அடுத்தடுத்த கூடங்களில் இருப்பவர்களுக்கும் கொடுத்தால்
என்னவென்று தோன்றியது. மறுகணமே அங்கே நுழைந்து எல்லோருக்கும் சாக்லெட்டுகளை வழங்கிவிட்டுத்
திரும்பினேன். இப்படியே நடந்து நடந்து மருத்துவர்கள் அறைவரைக்கும் சென்றுவிட்டேன்.
எல்லா மருத்துவர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்குப் பேறு பார்த்த மருத்துவர்
மட்டும் காணவில்லை. இருந்தவர்கள் அனைவருமே வாழ்த்துச் சொல்லோடும் புன்னகையோடும் சாக்லெட்டுகளை
எடுத்துக்கொண்டார்கள்.
அன்று மாலையில் மீண்டும் அந்த மருத்துவரைச்
சந்திக்கச் சென்றேன். அறையில் அவர் காணவில்லை. அதற்கடுத்த நாள் காலை மாலை இரு வேளைகளிலும்
கூட சந்திக்க முடியவில்லை. மூன்றாவது நாள் காலையில் அவர் அறைக்குள் இருந்தார். ஆனால்
உள்ளே யாரோ உடல்நலத்தைச் சோதித்துக்கொள்ள வந்த ஒருவரும் இருந்தார். அதனால் நான் வெளியே
காத்திருந்தேன். பொழுதைக் கழிப்பதற்காக பக்கத்தில் இருந்த ஆங்கிலச் செய்தித்தாட்களைப்
புரட்டிக்கொண்டிருந்தேன். தற்செயலாக ஒரு பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி என்
கவனத்தை ஈர்த்தது. பறவையியலாளரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான சாலிம் அலி மறைவை அச்செய்திக்குறிப்பு
தாங்கியிருந்தது. அவருடைய படமும் அருகில் பிரசுரமாகியிருந்தது. வருத்தமாக இருந்தது.
சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு பழைய புத்தகக்கடையில் அவரே எழுதிய அவருடைய தன்வரலாற்றுப்
புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். ஆனால் அது தொடப்படாமலேயே இன்னும் என் மேசையிலேயே
இருந்தது. அந்தக் குற்ற உணர்வும் ஒருவகையில் என் வருத்தத்துக்குக் காரணம். மருத்துவருக்கு
சாக்லெட் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது என் மனம் சாலிமைப்பற்றிய செய்திகளையே அசைபோட்டபடி
இருந்தது.
ஊருக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அவர்
எழுதிய தன்வரலாற்றைப் படித்து முடித்தேன். மிக எளிய குடும்பம். உற்சாகத்துக்குக் குறைவேயில்லாத
இளம்பருவம். இளம்வயதில் அவர் மனத்தில் பதிந்துவிட்ட ஒரு பழக்கமும் கனவும் அவரை மாபெரும்
உச்சப்புள்ளியை நோக்கி அழைத்துச்செல்கின்றன. ஒருவகையில் அவருடைய வாழ்க்கையை லட்சியவாழ்க்கை
என்றே சொல்லவேண்டும். அவரே செதுக்கியெடுத்த வாழ்க்கை. அவருடைய வரலாற்றுப் பங்களிப்புக்காக
அனைவராலும் போற்றிப் பாராட்டப்படும் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். ஒரே மூச்சில்
படிக்கத் தகுந்த வாழ்க்கை வரலாறு. நீண்ட காலத்துக்குப் பிறகு நேஷனல் புக் டிரஸ்டு
‘ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்னும் தலைப்பில் சாலிம் அலியின் வாழ்க்கைவரலாற்று
நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. மொழிபெயர்த்தவர் நாக.வேணுகோபாலன்.
இவ்வுலகில் முறையான பயிற்சிகள் வழியாக படிப்பு
வழியாகவும் ஒரு துறையில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக்கொள்பவர்களும் உண்டு. தற்செயலாக
ஊற்றெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக ஒரு துறையில் இறங்கி, அனுபவங்களின் அடிப்படையிலும்
ஊகங்களின் அடிப்படையிலும் கற்றுக்கற்று தன்னை வளர்த்துக்கொள்பவர்களும் உண்டு. சாலிம்
அலி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். பத்து வயதில் இயற்கையாக அவர் மனத்தில் கிளர்ந்தெழுந்த
ஆர்வத்தின் தூண்டுதலால் பறவையியல் துறையில் பல சாதனைகளை அவர் படைத்தார். தொண்ணூற்றியொன்றாவது
வயதில் அவர் மறைவதுவரை அவருடைய சாதனைகள் தொடர்ந்தபடியே இருந்தன.
சிட்டுக்குருவி வேட்டையிலிருந்துதான் அலிக்கு
பறவைகள் மீதான ஆர்வம் தொடங்குகிறது. மிகவும் எளிய குடும்பத்தில் ஐந்து சகோதரிகளுக்கும்
நான்கு சகோதரர்களுக்கும் இளையவனாக பிறந்தவர் அவர். முதல் வயது முழுமையடைவதற்குள் தந்தையார்
மறைந்துவிட மூன்றாம் வயது முடிவதற்குள் தாயாரும் மறைந்துவிடுகிறா. அதற்குப் பிறகு தாய்மாமனின்
அன்புப் பராமரிப்பில் அவர் வளர்ந்தார். வழக்கமான கோழிக்கறியைவிட பெருநாட்களிலும் விடுமுறைகளிலும்
குயில், காடை, குருவி என பறவைகளைப் பிடித்துவந்து மதச்சட்டங்களில் விதிக்கப்பட்ட முறையில்
கொன்று புசிக்கும் பழக்கம் நீண்ட காலமாக அக்குடும்பத்தில் இருந்தது. சாலீமுக்கும் அவருடைய
சகோதரர்களுக்கும் குருவிகளை வேட்டையாடி வீட்டுக்கு எடுத்து வருவதில் எப்போதும் ஆர்வம்
அதிகம். ஒருமுறை அவர் வேட்டையாடி எடுத்து வந்த ஒரு குருவியின் கழுத்து மஞ்சள் நிறமாக
இருப்பதைப் பார்த்து சற்றே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறார். அது ஏன் அப்படி இருக்கிறது
என்பதற்கு விடைகாணும் ஆர்வம் அவருக்குள் பொங்கியெழுகிறது. அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு
எவ்விதமான பதிலும் தெரியவில்லை. அவர் இறந்துபோன அக்குருவியை ஒரு காகிதத்தில் சுற்றிப்
பொட்டலமாக எடுத்துக்கொண்டு சாமுவேல் மிலார்ட் என்பவரைப் பார்க்கச் செல்கிறார். அவர்
ஒரே பார்வையில் அதைப் பார்த்ததுமே அது மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி என்று சொல்கிறார்.
சிறுவனான அலியின் குழப்பத்தை நீக்கும் பொருட்டு, தம் அலுவலகத்தில் பாடம் செய்து வைத்திருக்கும்
பலவிதமான குருவிகளைக் காட்டி ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறி ஒவ்வொரு
இனத்துக்கும் உரிய அடையாளம் என்ன என்றும் எடுத்துரைக்கிறார். அக்கணத்தில் முதன்முதலாக
அவருடைய நெஞ்சில் பறவைகளைப்பற்றிய் ஆர்வம் பற்றிக்கொள்கிறது.
அவர் அளித்த உற்சாகத்தின் விளைவாக அவர் பலவிதமான
பறவைகளைச் சேகரிக்கத் தொடங்கிவிடுகிறார். சேகரிப்பதன் வழியாகவே ஒவ்வொன்றைப்பற்றியும்
தெரிந்துகொள்கிறார். விசாரித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டதை ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்கிறார்.
பறவைகள் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கும் மூல நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்
காலத்தில் இந்தியாவில் குறைவாகவே இருந்தன. அனைத்தும் ஆங்கிலேயர்கள் எழுதியவை. தம் தாயகமான
இங்கிலாந்தில் காலம்காலமாக புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்கை வரலாற்று மரபுகளிடையே வாழ்ந்து
இங்கு வரும்போதே பறவையியலில் ஓர் அடிப்படை ஞானத்தோடு வந்தவர்கள் அவர்கள். அவர்களே இந்தியாவின்
பல பகுதிகளில் வாழும் பறவைகளைப்பற்றி முதன்முதலாக எழுதியவர்கள். அவர்களைத் தொடர்ந்து
பறவைகளைப்பற்றி எழுதிய முன்னோடி இந்தியர் சாலிம். சாலிமுக்கு இயற்கையாகவே அமைந்திருந்த
ஆங்கில மொழியறிவு அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வலிமையைச் சேர்த்தது. பத்து வயதில் அவர்
எழுதிய கட்டுரையை அதன் ஆங்கில மொழி மதிப்புக்காக உஸ்மானிய பல்கலைக்கழகம் தான் உருவாக்கிக்கொண்டிருந்த
தொகுதியில் சேர்த்துக்கொண்டார்கள். ’இந்தியாவின் ஆங்கில மேதைகள்’ என்னும் தலைப்பில்
வெளிவந்த அத்தொகுதியில் தாகூர், சரோஜினி நாயுடு போன்றோரும் எழுதியிருந்தார்கள். அவர்களுடைய
மொழியறிவுக்கு இணையானதாகக் கருதப்படும் அளவுக்கு சாலிமுடைய மொழியறிவு இருந்தது.
13-14 வயதில் தீராத தலைவலிப் பிரச்சினையால்
அவரால் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இடம் மாறினால்
ஆரோக்கியத்தில் மாற்றம் வரக்கூடும் என்ற எண்ணத்தில் அவருடைய சகோதரர் வசித்துவந்த சிந்து
மாகாணத்தைச் சேர்ந்த ஐதராபாத் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அந்த ஊரில் காணப்பட்ட
பாயா என்னும் பறவையைப் பின்தொடர்ந்து அவர் அறிந்துகொண்ட உண்மைகள் சுவாரசியமானவை.
பாயா சிட்டுக்குருவி போல அழகான ஒரு பறவை.
தங்கநிறம் கொண்டவை. ஓர் ஆண்குருவி பல பெண்குருவிகளோடு தொடர்பு வைத்திருக்கிறது. அவற்றுக்கான
கூடுகளை ஆண்குருவியே கட்டித் தருகிறது. பாபுல் மரத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமான வளைவுகளோடு
பாதுகாப்பாக பின்னிய கூட்டை அதில் தொங்கவிடுகிறது ஆண்குருவி. கூடு உருவாகும் தருணத்திலேயே
பல பெண்குருவிகள் அந்த இடத்தை நோக்கி வந்து இரைச்சலிடத் தொடங்குகின்றன. கூடுகளைச் சுற்றிப்
பார்த்து தனக்குப் பிடித்த கூட்டை அவை தேர்ந்தெடுக்கின்றன. ஏதேனும் ஒரு கூட்டை தன்
வசிப்பிடமாக முடிவு செய்துகொண்ட பிறகு, அக்கூட்டைக் கட்டிய ஆண்குருவியை அது ஏற்றுக்கொள்ளும்.
சிறிது காலத்துக்குப் பிறகு ஆண்குருவி அதே
மரக்கிளையில் வேறொரு கூட்டைக் கட்டிவிட்டு மற்றொரு துணைக்காகக் காத்திருக்கும். பிறகு
அந்தக் கூட்டை ஏற்றுக்கொள்ளும் பெண்குருவியோடு சேர்ந்து வாழத் தொடங்கிவிடும். பல பெண்குருவிகளால்
விரும்பப்படும் ஆண்குருவியும் உண்டு. ஒரு பெண்குருவியால் கூட ஏற்கப்படாமல் தான் கட்டிய
கூட்டுக்கு வெளியே தனிமையில் வாடும் ஆண்குருவியும் உண்டு. பறவைகளின் வாழ்வில் இத்தகு
திகைப்பூட்டும் மர்மங்கள் ஏராளம். ‘பறவைகளைப் பார்த்தல்’ என்பது காடுமேடுகளில் புகைப்படக்கருவியோடும்
தொலைநோக்கிக் கருவியோடும் அலைந்து திரியும் பயணம் மட்டுமல்ல, இப்படி ஒரே இடத்தில் பல
நாட்கள் தங்கி, பல நாட்கள் கவனித்து உற்றறியும் அனுபவமும் கூட. சாலிம் அலி அந்த அனுபவத்தை
சுவையான ஒரு கதையைப்போல பதிவு செய்திருக்கிறார்.
சிறிது காலத்துக்குப் பிறகு திரும்பி வந்து
மெட்ரிகுலேஷன் தேர்வில் எப்படியோ ஒரு வழியாகத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார். பட்டப்படிப்பைத்
தொடர்வதற்காக மும்பையில் இருந்த சேவியர் கல்லூரியில் அவர் சேர்க்கப்படுகிறார். ஆயினும்
முதலாண்டுப் படிப்பைக் கடந்து அவரால் செல்ல முடியவில்லை. பர்மாவில் தாதுச்சுரங்க உரிமையை
வாங்கிவைத்திருந்த உறவினர் ஒருவர் தன் தொழிலில் உதவி செய்ய அழைத்ததையே ஒரு சாக்காக
வைத்துக்கொண்டு ரங்கூனுக்குக் கப்பலேறிவிடுகிறார். முதல் உலகப்போர் தொடங்கி ஒரு மாதம்
முடிந்திருந்தது என அந்த நாளைக் குறிப்பிடுகிறார் சாலிம். காடுகளால் சூழப்பட்ட அந்த
இடம் அவருடைய ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியாகவே இருக்கிறது. 1917 ஆம் ஆண்டு
இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் முற்றுப்பெறாத பட்டப்படிப்பை முடிக்க முயற்சி செய்கிறார்.
அவருடைய ஆர்வத்தை அறிந்த கல்லூரி ஆசிரியர் அவரை விலங்கியல் பாடத்தை எடுத்துப் படிக்கும்படி
தூண்டுகிறார். அதை ஏற்றுக்கொண்ட சாலிம் பகலில் வணிகவியலும் மாலைக்கல்லூரியில் விலங்கியலும்
படிக்கிறார். இதே தருணத்தில் தொலைதூரத்து உறவுப்பெண்ணான தெஹ்மினா என்பவரை 1918 ஆம்
ஆண்டில் மணம் செய்துகொள்கிறார்.
மும்பையில் பறவைகள் கணக்கெடுப்புக்காக முதன்முதலாக
ஓர் அமைப்பு உருவானபோது, முறையான பல்கலைக்கழகப் பட்டம் இல்லாத காரணத்தால் சாலிமின்
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வேறொரு ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்படுகிறது. சில ஆண்டுகள்
கழித்து 1926 ஆம் ஆண்டில் மும்பை இயற்கை வரலாற்றுக்கழகம் இளவரசர் வேல்ஸ் பெயரில் ஒரு
அருங்காட்சியகத்தை உருவாக்கியபோது, அதில் வழிகாட்டி விரிவுரையாளராகப் பணிபுரியும் பொறுப்பு
சாலிமுக்கு வழங்கப்படுகிறது. அப்பணியில் விரைவில் மனம் சலித்துவிடும் சாலிம் இரு ஆண்டுகள்
விடுப்பெடுத்துக்கொண்டு ஜெர்மனிக்குச் செல்கிறார். அங்கு பெர்லின் அருங்காட்சியகத்தில்
பாடம் செய்யப்பட்ட விதவிதமான பறவைகளைப்பற்றிய குறிப்புகளை எழுதித் தொகுக்கும் வேலையைச்
செய்கிறார். இந்தியர் என்பதால் அவர் சில சிறுமைகளை அங்கே அடைய நேர்ந்தாலும் அவற்றைப்
பொருட்படுத்தாமல் தன் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் அவர். அப்போது மிகச்சிறந்த பல பறவையாளர்களைச்
சந்தித்து உரையாடும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
1930ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குத்
திரும்பிய சாலிமுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. அரசாங்கத்திடமிருந்து போதுமான பணவரவு
இல்லாததால் அருங்காட்சியக வழிகாட்டி வேலையையே அவர்கள் ரத்து செய்துவிட்டிருந்தனர்.
புதிய வேலை கிடைக்காத வருத்தத்தில் மனைவியுடன் அவர் மும்பைக்கு அருகில் இருந்த கிஹிம்
என்னும் கிராமத்துக்குச் சென்று குடியேறுகிறார். அந்த இடத்தில்தான் பாயா சிட்டுக்குருவியின்
வாழ்க்கை முறையையும் இனப்பெருக்க முறையையும் உற்றறிந்த வாய்ப்புகளின் அடிப்படையில்
கட்டுரைகளை எழுதத் தொடங்குகிறார். அவை அவருக்கு பறவையியல் துறையில் ஒரு நல்ல மதிப்பைச்
சம்பாதித்துக் கொடுக்கின்றன. அதைத் தொடர்ந்து ஒரு ராணுவ மருத்துவரின் அழைப்பை ஏற்று
கோத்தகிரி பகுதிக்குச் சென்று வசிக்கிறார். பிளிரங்கன் குன்றில் வசித்து வந்த மோரிஸ்
என்பவருடைய தொடர்பும் அவருக்குக் கிடைக்கிறது. இத்தொடர்புகள் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பை
வழங்குகின்றன. பிரின்ஸ்லி மாகாணங்கள் என வழங்கப்படுகிற ஐதராபாத், கொச்சின், திருவிதாங்கூர்,
குவாலியர், இந்தூர், போபால் ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு செய்யும் வாய்ப்பு.
இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்கனவே இத்தகு ஆய்வுகளை மேற்கொண்ட விஸ்லர் என்பவர் சாலிமுக்கு
உதவியாக இருக்கிறார். தொடக்கத்தில் இருவருக்குமிடையே சில பிழையான புரிதல்கள் உருவாகின
என்றாலும் போகப்போக நெருங்கி பணியாற்றத் தொடங்கினார்கள். இருவரும் இணைந்து ஆப்கானிஸ்தான்
சென்று அங்கும் கணக்கெடுப்பு வேலைகளைச் செய்து முடித்தார்கள்.
பத்தாண்டு கால ஆய்வுகளின் விளைவாக 1941 ஆம்
ஆண்டில் அவர் வெளியிட்ட ’இந்தியப்பறவைகள்’ என்னும் நூலும் பிறகு பத்து தொகுதிகளாக வெளிவந்த
‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள்’ என்னும் புத்தகங்களும் தேசிய அளவிலும் உலக அளவிலும்
அவரைக் கவனப்படுத்தின. பறவையியல் துறையில் இவர் ஆற்றிய பணியைப் பாராட்டி அரசு பத்மபூஷன்
விருதை அளித்து கெளரவித்தது. அலிகர்- இஸ்லாமியப் பல்கலைக்கழகமும் ஆந்திரப் பல்கலைக்கழகமும்
அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.
புத்தகம் முழுதும் பயணக்குறிப்புகளும் வாழ்க்கைக்குறிப்புகளும்
பின்னிப்பிணைந்திருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண்ணற்ற தகவல்கள். ஆப்கானிஸ்தான்
பயணத்தைப்பற்றிய குறிப்பில் பறவைகளின் இறக்கைகளில் வாழும் பேன்களைப்பற்றிய குறிப்பு
ஆச்சரியம் தரக்கூடியதாக உள்ளது. ஆடுமாடுகள், கோழிகளின் முதுகில் பேன்கள் தங்கியிருப்பதுபோல
பறவைகளின் இறக்கைகளிலும் பேன்கள் தங்கியுள்ளன. அப்பேன்கள் பலவகை. ஒரு பறவையினத்தில்
வாழும் பேன்கள் மற்றொரு பறவையினத்தில் இருப்பதில்லை. பறவைகளில் எத்தனை இனங்கள் உண்டோ,
பேன்களிலும் அத்தனை இனங்கள் இருக்கின்றன. இவை சிறகுப்பேன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பேன்களைப் பிரித்தெடுப்பதுகூட கணக்கெடுக்கும் பணிகளில் இடம்பெறுகிறது. முதலில்
ஒரு வெள்ளை மஸ்லின் துணியால் பறவையைச் சுற்றி இறுக்க மூடக்கூடிய ஒரு பெட்டியில் போட்டுவிடுவார்கள்.
சில நிமிடங்கள் கழித்து லினன் துணியை அகற்றி, அதில் ஒட்டியிருக்கும் பேன்களை எடுத்து
ஒரு குப்பியில் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். அதே சமயத்தில் பறவையின் எடை, உடல் உறுப்புகளின்
நிறம், சிறகசைவு ஆகிய குறிப்புகளையும் எழுதி வைத்துக்கொள்வார்கள். தோலுரிக்கப்பட்ட
பறவைகளை அறுத்து பாலினம், இரைப்பை, உள்ளுறை சிற்றுயிர்கள் என அனைத்துத் தகவல்களையும்
குறித்துவைத்துக் கொள்கிறார்கள். இப்படித்தான் தகவல்கள் எழுதப்பட்டு, ஆய்வின் முடிவில்
அவை தொகுக்கப்படுகின்றன.
வேளாண்மை, தாவரவளர்ச்சி, வனஇயல் ஆகிய துறைகளில்
பறவைகளின் பங்களிப்பைப்பற்றி முற்றுமறிந்த அறிஞராகவே இருந்தார் சாலிம். பறவைகளின் பங்களிப்பு
இருவிதமான தாக்கங்களை உருவாக்குகிறது. தானியச்செடிகளையும் பழவகை மரங்களையும் பொறுத்த
அளவில் பறவைகள் ஊறு விளைவிக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பயிர்களை அழிக்கக்கூடிய புழுபூச்சி
போன்ற உயிரனங்களாலும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துத் தின்னும் உயிரினங்களாலும் ஏற்படக்கூடிய
இழப்பைக் குறைக்கின்றன. ஒரு பறவையின் தாக்கம் அழிவுசக்தியாகவும் இருக்கமுடியும், ஆக்க
சக்தியாகவும் இருக்கமுடியும். ஒரு பறவையின் வாழ்வை முழுமையாக ஆய்வுக்குள்ளாக்கவேண்டும்.
தாவர உணவு, ஊன் உணவு இரண்டையும் உண்ணும் பறவைகள்
பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் அவசியமாகும். அதையொட்டி 1934 ஆம் ஆண்டில் அரசுக்கு அவர்
சமர்ப்பித்த திட்டநகலை அரசு ஏற்கவில்லை. பல ஆய்வுகளை அவர் தனிப்பட்ட வழியிலேயே செய்ய
நேர்கிறது.
’இந்தியப்பறவைகள்’ நூல் வெளிவந்த
பிறகுதான் அவர் மீது புறவுலகின் வெளிச்சம் விழுகிறது. அந்த நூலைப் படித்த கட்ச் மன்னர்
மகாராவ் விஜயராஜ்ஜி சாலிமுக்கு அழைப்பு அனுப்புகிறார். தம் வளைகுடாவைச் சுற்றிக் காணப்படும்
பறவைகளைக் கணக்கிட்டு புத்தகம் எழுதும்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதை மனமுவந்து
ஏற்றுக்கொள்ளும் சாலிம் ஒரு சில மாதங்கள் அங்கேயே தங்கி தன் ஆய்வுகளைச் செய்து முடிக்கிறார்.
ஆய்வுக்காலம் முழுதும் அவருக்குத் துணையாக விளங்குகிறார் மன்னர். கட்ச் நாரைகளுக்குப்
பேர்போன இடம். மகாராவ் ரண் என்னும் பகுதியில்தான் அதன் நடமாட்டம் அதிகம். பலமணி நேரங்கள்
நீண்ட பயணம் செய்து ஒருவழியாக அவ்விடத்தை அவர்கள் அடைகிறார்கள். சதுப்புநிலத்தில் கூடாரம்
அமைத்து இரவும் பகலும் நாரைகளின் நடமாட்டத்தை அமைதியாகக் கண்காணித்தபடி எங்கெங்கும்
அலைகிறார்கள். பார்த்த இடங்கள் முழுக்க கண்டடைந்த கூடுகளின் அடிப்படையில் அங்கு வாழும்
நாரைகளின் எண்ணிக்கை, குஞ்சுகளின் எண்ணிக்கையை கணக்கிடுகிறார்கள். அவர்கள் கணக்கு கிட்டத்தட்ட
50000. ஆசியாவின் பெருநாரைகள் வாழிடங்கள் அனைத்திலும் ரண் என்கிற நாரை நகரமே மிகப்பெரிதென்னும்
முடிவை அடைகிறார்கள். சாலிம் நிகழ்த்தும் ஒவ்வொரு பயணமும் சாகசப்பயணத்துக்கு நிகரானதாகவே
இருக்கிறது. பஸ்தார் பறவைக்கணக்கீட்டின் போது பெரிய கருப்பு மரங்கொத்தியைக் காணும்
அனுபவத்தை சாலிம் விவரித்திருக்கும் பகுதியும் முக்கியமானது.
சாலிம் அலியின் ஒரு சகோதரர் ஹமீத் அலி. அவர்
குஜராத்தில் மாவட்டத் துணை ஆட்சித்தலைவராகவும் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றிவந்தார்,
அப்போது ஒரு கிராமத் தலையாரிக்கு எதிரான வழக்கொன்றை அவர் விசாரிக்க வேண்டியிருந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி குஜராத்தில்
தங்கியிருந்தார். வழக்கில் அந்தத் தலையாரிக்கு ஆதரவாக சாட்சி சொல்ல, நீதிமன்றத்துக்கு அவர் வருகை தந்திருந்ததாகவும்
சகோதரர் வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் அவரைப் பார்த்ததாகவும் சாலிம் ஒரு குறிப்பை
எழுதியிருக்கிறார். நேரு போன்ற சுதந்திரப் போராட்ட நாயகர்களைப்பற்றிய குறிப்புகளும்
அங்கங்கே உள்ளன.
சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து
முடித்த பிறகு, வானத்தில் காணும் ஒவ்வொரு பறவையும் அவரை நினைவூட்டியபடி இருக்கிறது.
பறவைகளைப்பற்றிய தகவல்களைத் தொகுப்பதற்காக, வாழ்நாள் முழுக்க அவற்றின் பின்னால் அவரும்
ஒரு பறவையென அலைந்தபடி இருந்தார். அப்பயணங்களின்போது அவர் கொண்டிருந்த கனவுகளும் அடைந்த
அனுபவங்களும் மகத்தானவை.
(புத்தகம் பேசுது இதழில் எழுதிவரும் தொடரின் இரண்டாவது கட்டுரை)