உன் மகன் எங்கே என்று கேட்ட ஒருவனிடம் அவன் சிங்கம்போல வீரத்துடன் போரிட யுத்தகளத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் அவனைப் பெற்றெடுத்த தன் வயிறு, சிங்கம் தங்கியிருந்து கிளம்பிச் சென்ற குகையைப்போல இருப்பதாகவும் ஒரு தாய் சொல்வதாக புறநானூற்றுப் பாடலொன்றில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. பெற்றெடுப்பதும் சான்றோனாக்குவதும் வேல்வடித்துக்கொடுப்பதும் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கடமையை வரையறுத்த சமூகம் உடல்வலிமையும் மனவலிமையும் மிகுந்த இளைஞர்களுக்கு போரிடுவதை கடமையாக வரையறுத்தது.
ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் ஒப்பற்ற வீரனாக விளங்கி போரிட்டு வெற்றிபெற வேண்டும் என்பது மகத்தான கனவாக இருக்கிறது. அச்சத்துக்கு இடமில்லாதவகையில் ஒரு சிங்கமென தன் மகன் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும்போது தாயின் மனம் பெருமிதத்தால் நிறைவெய்துகிறது. மகனின் வீரத்தால் அவளுடைய சமூகமதிப்பு உயர்ந்துபோகிறது. பெருமிதமான அக்கணத்தில்தான் அவள் தன் மகன் குடியிருந்த வயிற்றை சிங்கம் குடியிருந்த குகைக்கு நிகரானதாகக் கருதிக்கொள்கிறாள். புறநானூறு சித்தரிக்கிற இக்காட்சிக்கு நேர்மாறாக, அந்த மகன் போருக்குச் செல்ல மறுத்து, தனக்குப் பிடித்த ஏதோ ஒரு திசையில் சென்றுவிடுகிறவனாக இருந்தால் அந்தத் தாயின் மனநிலை எப்படி இருக்கும். அப்போது அவனைப் பெற்றெடுத்த வயிறென்னும் குகையை அவள் எப்படி உருவகப்படுத்திச் சொல்வாள் என்னும் கேள்வி சுவாரசியமான ஒன்று.
தன் கனவைப் புறக்கணித்துவிட்டு தன் வழியே பெரிதெனச் செல்கிற மகனை அவள் என்னவென்று நினைப்பாள்? கோழை என்று கருதுவாளா? பித்தன் என்று எண்ணிக்கொள்வாளா? அசடன் என்று வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவாளா? சோம்பித் திரிகிறவனாக எடையிட்டுவிடுவாளா? தனக்குக் கிடைக்கவேண்டிய சமூகமதிப்பை கிட்டாமல் செய்துவிட்டதாக நொந்துகொள்வாளா? நோக்கமில்லாத அல்லது சாரமில்லாத மகனுடைய போக்கால் தன் கனவு சிதைநததாக நினைத்துக்கொள்வாளா? அவள் வயிற்றுக்கு இப்போதும் குகை என்கிற மதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சிங்கம் குடியிருந்த குகையல்ல. சாதாரணமான இருட்குகை. சின்னச்சின்ன பிராணிகளும் பூச்சிகளும் வசித்துவிட்டுச் செல்லும் குகை. ஒரு தாயின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பைச் சித்தரிக்கிற செய்யுளின் வழியாக, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத சூழலை அவள் மனம் எவ்வகையில் ஒரு நீண்ட பெருமூச்சோடு எதிர்கொள்ளக்கூடும் என கற்பனை செய்ய இடமிருக்கிறது.
சல்மாவின் கவிதையில் இடம்பெறுவதும் ஒரு தாயின் மனச்சித்திரம். பெற்றெடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் தன் பாசத்தைப் பங்கீடு செய்கிற தாயின் வாழ்வில் இடம்பெறுகிற ஒரு காலைக்காட்சி இக்கவிதையின் வழியாக முன்வைக்கப்படுகிறது. வயதில் மூத்தவன் என்பதால் தன்னை முதலில் குளிக்க அனுமதிக்குமாறு மன்றாடும் பிள்ளை ஒரு பக்கம். வயதில் இளையவன் என்பதால் தன்னை அனுமதிக்குமாறு கோரிக்கைவைக்கும் பிள்ளை இன்னொரு பக்கம். எந்தப் பிள்ளையை அனுமதிப்பது என்கிற பாசப்போராட்டத்தில் தத்தளிக்கிறாள் தாய். தன் அனுமதி தன் அன்பை மதிப்பிடுகிற அளவுகோலாக மாற்றமடையக்கூடும் என்கிற அச்சம் அவளை தயங்கவைக்கிறது. ஒருநொடி மனப்போராட்டத்துக்குப் பிறகு, சொன்னால் புரிந்துகொள்வான் என்கிற நம்பிக்கையிலும் விட்டுக்கொடுப்பது வயதில் மூத்தவர்களுக்கு அழகு என்னும் மதிப்பீட்டை மனத்தில் விதைக்கிற வேகத்திலும், முதலில் குளிக்கும் வாய்ப்பை மூத்தவனுக்கு மறுத்து இளையபிள்ளையை அனுமதிக்கிறாள் தாய். அக்கணமே தான் புறக்கணிக்கப்பட்டதாக துயரம் கொள்கிற மூத்தவன் இதற்குமுன்பாக தான் புறக்கணிக்கப்பட்ட எல்லாச் சம்பவங்களையும் தொகுத்துப் பார்த்து மனபாரம் கொண்டவனாக மாற்றமடைகிறான். தெரிந்தே அன்பின் சமநிலை குலைந்துபோவதற்கு தாயே காரணமாக மாறிவிடுகிறாள்.
குளியல் காட்சி ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான். விடியலில் இப்படி தொடங்குகிற உரிமைக் கோரிக்கைகளும் அன்பின் சமநிலைக்குலைவும் தினசரி நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் உருவாகக்கூடும். எல்லா நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு நாளில் தொடர்ந்து புறக்கணிப்புகளைச் சந்திப்பவன் மூத்தவனாகவே இருப்பதுபோல சூழல் தற்செயலாக அமைந்துவிடுகிறது. வயதில் மூத்த பிள்ளை தாயின் சங்கடங்களை ஒருவேளை புரிந்துகொள்ளக்கூடும் என்பது தாயின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பிள்ளையின் மனத்திலிருக்கிற ஏக்கத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் வயது என்பது அளவுகோல் அல்ல என்பது தாய்க்குப் புரியாமல் போவது மிகப்பெரிய வேதனை. புரிந்தும் அன்பின் சமநிலைக்குலைவை அனுமதிப்பது அதைவிட மிகப்பெரிய வேதனை.
சல்மா தன் கவிதையில் சுட்டிக்காட்டும் தாய் இத்தகு வேதனையில் நொந்து நலிகிறவள். தெரிந்தே அனுமதிக்கும் அன்பின் சமநிலைக்குலைவால் அவள் சோர்வடைகிறாள். தவிர்க்கமுடியாத செயற்கையான அத்தகு கணங்களை ஆதாரமாகக்கொண்டு தாயின் அன்பு தனக்கே அதிகம் அல்லது தனக்கே குறைவு என்று கணக்கிடுகிற பிள்ளைகளின் போக்குகளால் அவள் சோர்வு பலமடங்காகப் பெருகுகிறது. ஆழமாக யோசித்துப் பார்த்தால் இச்சோர்வு ஒருவகையான அலுப்புதானே தவிர, வெறுப்புக்கு இடம்கொடுக்கிற புள்ளி அல்ல. அதனால்தான் அவள் தன் மனத்தில் உறையும் சோர்வை மீறி, தன் பிள்ளைகளையே மீண்டும் நாடிச் செல்கிறாள். எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள், தன் அன்பு நாடகம் தற்யெலானது என்பதையும் சந்தர்ப்பம் மற்றும் சூழல் சார்ந்தது என்பதையும் தன் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று அத்தாய் நினைக்கக்கூடும்.
கவிதையில் இரண்டுவிதமான இருள் இடம்பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். தொடக்கத்தில் இடம்பெறும் இருள் எதார்த்தமான புறஇருள். விடிவதற்குமுன்பு உலகத்தின்மீது கனத்துக் கவிழ்ந்திருக்கும் இருள். கவிதையின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் இருள் ஓடாத தேராய் கூடவே இருக்கும் இருட்தேர். சங்ககாலத்துத் தாய் தன் வயிற்றை சிங்கம் குடியிருந்து வெளியேறிப்போன குகை என்று உயர்வுநவிற்சியாக முன்னுரைத்துக்கொள்வதுபோல, சல்மா சுட்டிக்காட்டுகிற நவீனகாலத்துத் தாய் கரு சுமந்த தன் வயிற்றை இருட்தேர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.
தேர் என்கிற படிமம் மிகமுக்கியமானது. தெய்வத்தின் திருச்சிலையைச் சுமந்து வலம்வரும் தேர் பெருமை மிக்கது. தெய்வச்சிலையில்லாமல் தேர் நிலையில் நிற்கலாமே தவிர, வலம்வரமுடியாது. நவீனத்தாயின் கருசுமந்த வயிறு இருட்தேர் என்றால், அவள் பெற்றெடுத்த பிள்ளைகளே திருச்சிலைகள். தாயைவிட்டு விலகிச்செல்கிற அளவுக்கு பிள்ளைகள் இன்னும் பெரியவர்களாக மாறவில்லை. இன்னும் குழந்தைகள். குளிப்பதற்கு நான் முந்தி நீ முந்தி என்று போட்டிபோட்டுக்கொண்டு, அவள் பிரியத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் குழந்தைகள். அவர்களை அமர்த்திப் பார்த்து மனத்துக்குள்ளேயே தேரை அசைத்துப் பார்த்து மகிழ்கிறாள் தாய். ஒருவேளை அவர்கள் வெளியேறிச் செல்லும் தருணங்கள் அமையநேரினும் அவர்களைப்பற்றிய நினைவுகளையே தேரில் அமர்த்தி அசைத்துப் பார்த்துக்கூட அவள் வாழ்க்கையைக் கழிக்கக்கூடும்.
*
இருட்தேர்
சல்மா
என் விழிப்பிற்கெனக் காத்திருக்கிறது
பிள்ளைகளின் விடியல்
இருள்கனத்த இரவுகளிலிருந்து
தினமும் தம் முறையீடுகளோடே
என் அதிகாலையை உருவி எடுப்பார்கள்
பெரியவன் நீர் மினுங்கும் விழிகளும்
விடைத்துச் சுருங்கும் நாசியுமாய்த்
தனது முதல் குளியலுக்கான சிபாரிசு வேண்டி நிற்க
எனது முலைப்பாலின் கடைசிச்சொட்டை
விழுங்கிய இளையவன்
ஓங்கிய குரலைத் தன் வயதின் சலுகையோடு இணைக்க
அசைகிறது வீடு
என் நொடிப்பிசகும்
அன்பின் சமன்குலைக்கப்
பெரியவனிடத்தில் என்றென்றைக்குமாய்த்
தேங்கிவிடுகிறது
அழித்தகற்றவியலாத புறக்கணிப்பின்
மிகைச்சித்திரம்
என் தாய்மையைத்
தம் கண்ணீரால் கடைந்து
திரள்கிற பிரியத்தில்
தம் பங்கை எடையிடுகிற
இளம்மனங்கள்
சோர்வின் விதையையே
ஊன்றினாலும்கூட
ஓடாத தேராய்க் கூடவேயிருக்கிற
இருளின் வடம்பிடிப்பேன்
அவர்களின் துணையோடே
*
தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் வெளிப்பட்ட கவிஞர்களில் ஒருவர். ஒரு மாலையும் இன்னொரு மாலையும், பச்சைத் தேவதை ஆகியவை இவருடைய கவிதைத்தொகுதிகள். இரண்டாம் ஜாமங்களின் கதை இவருடைய நாவல். இவருடைய பெரும்பான்மையான கவிதைகள் பெண்களின் ஆழ்மனஉணர்வுகளையும் கேள்விகளையும் குமுறல்களையும் சமரசங்களையும் எளிய சொல்லோவியங்கள்வழியாக உணர்த்துகிற வரிகளைக் கொண்டிருக்கின்றன.
*