Home

Tuesday, 12 September 2017

காலம்காலமாக நீளும் கனவுகள்- சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"



கர்நாடகத்தைச் சேர்ந்த  இந்துஸ்தானிக்கலைஞர் ஹானகல் கங்குபாய் சமீபத்தில் மறைந்ததையொட்டி எல்லா இதழ்களிலும் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகள் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் இருந்த நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டியிருந்தன. கங்குபாய் சிறுமியாக இருந்தபோதே இசையில் ஆர்வமுடன் விளங்கினார். கங்குபாயின் தாயார் மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர். தாயின் செல்வாக்கு சிறுமியின் உள்ளத்தில் படிந்திருக்கக்கூடும்அதனால் சின்ன வயதிலேயே அவரும் இசையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மகளுடைய இசையார்வம் தாய்க்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது. கர்நாடக இசையின் பாதையில் தன்னையும் கடந்து மகள் செல்லவேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது.


தன்னை விஞ்சி நிற்பவள் தன் மகள் என்பதைக் கண்ணாரப் பார்க்க விரும்பாத தாய் உலகில் இருக்கமுடியுமா? அதனால் முறையாக இசையைப் பயில்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் கங்குபாயின் தாயார். எதிர்பாராத விதமாக கங்குபாய்க்கு கர்நாடக இசையைவிட இந்துஸ்தானி இசையின்மீது  நாட்டம் பிறந்தது. ஆர்வம் இப்படி எதிர்பாராதவிதமாக இன்னொரு திசையில் பாய்ந்துசெல்லும் என்று தாயாரே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் மகளுடைய ஆசையை  அவர் மதித்தார்f. அவர் விருப்பப்படி இந்துஸ்தானி இசையையே கற்றுக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். வீட்டுக்கு வந்து மகள் மேற்கொள்ளும் பயிற்சிக்கு குறை வரக்கூடாது என்பதற்காக தன்னுடைய திறமையை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டார் தாயார். இந்துஸ்தானி இசையின் நுட்பங்களை அறிந்துகொள்ளும் தருணத்தில் கர்நாடக இசை காதில் விழுந்து குழப்பிவிடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள் பாடுவதைக்கூட அவர் நிறுத்திவிட்டார். அந்த வீட்டுக்குள் அதற்கப்புறம் கர்நாடக இசை ஒலிக்கவே இல்லை. மகளுடைய இந்துஸ்தானிக்கனவை அவர் நீரூற்றி உரமிட்டு செழுமையுற வளர்த்தார்.

பிள்ளைகளைக் குறித்த ஒரு தாயின் கனவு மகத்தானது. தன் வாழ்நாள் முழுதும் அந்தக் கனவு நிறைவேறாதா என்ற ஏக்கத்துடன் வாழ்கிறாள் அவள்பல தாய்மார்களின் கனவுகள் நொறுங்கிப் போகின்றன. சில தாய்மார்களின் கனவுகள் பாதித்தொலைவுவரை நீண்டு அறுபட்டு விடுகின்றனமிகக் குறைந்த தாய்மார்களின் கனவுகள்மட்டுமே அரைகுறையாக நிறைவேறுகின்றன. ஆனால் விளைவுகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் கனவுகளை காலம்காலமாக நெஞ்சில் சுமந்துவருகிறார்கள் தாய்மார்கள்.

தன் பிள்ளை அரசனாகவேண்டும் என்று நினைக்கிறாள் கைகேயி. அவள் மகனோ அண்ணனின் பாதுகைகளை அரியணையில் வைத்துவிட்டு நாட்டுக்கு ஒரு பொறுப்பாளராக வாழத்தொடங்குகிறான்தன் மகன் அரசனாக ஆண்டு பெருமையுற வாழவேண்டும் என்று நினைக்கிறார் புத்தரின் தந்தை. புத்தரோ ஞானத்தைத் தேடி நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். வாய்த்துடுக்கான தன் பிள்ளை உயிர்பிழைத்து இந்த உலகில் வாழவேண்டும் என்ற ஆவலில் கிருஷ்ணனிடம் வரம் கேட்டுப் பெறுகிறாள் சிசுபாலனின் தாய். சிசுபாலனோ அடங்காத நாக்குத் திமிரால் தன் மரணத்தின் பாதையை தானே அமைத்துக்கொள்கிறான். கனவுகள் சிதைந்துபோகும் கதைகளையும், அதைமீறி வளர்த்துக்கொள்ளப்படும் கதைகளையும் புராணங்களிலும் வரலாற்றிலும் ஏராளமாகப் பார்க்கலாம்மூத்தோர் சொத்தாக ஒருவருக்கு செல்வம் கிடைப்பதற்கு வாய்ப்புகளுண்டு. ஆனால் கலையும் ஞானமும் ஒருபோதும் பரம்பரைச் சொத்தாக அடையமுடியாதவை. வழிவழியாக அவை கருசார்ந்து உருவாவதில்லை. குரு சார்ந்து உருவாவதாகும். கருவால் உருவாகும் பரம்பரை வேறு. குருவால் உருவாகும் பரம்பரை வேறு. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் எங்கேனும் இருக்கலாம். அவற்றைப் பொதுமைப்படுத்திப் பார்க்கமுடியாது. ஆனால் தர்க்கங்களை மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் தம் கனவுகளை ஒருவகையில் எஞ்சிய தன் வாழ்நாளை வாழ்ந்துமுடிப்பதற்குத் தேவையான சக்தியை வழங்குகிற ஊற்றுக்கண்களாக நினைக்கிறார்கள். உயிரைவேண்டுமானாலும் விடலாம். ஆனால் கனவை எப்படித் துறக்கமுடியும்.

"என் கால்கள் ஆடி முடிக்காத நடனத்தை நீ ஆடு" என்று மகளிடம் மானசிகமாக வேண்டிக்கொள்ளும் தாயின் விண்ணப்பத்தை முன்வைக்கிற சூத்ரதாரியன் கவிதையில் ஒரு நாட்டியத்தாயின் கனவு இடம்பெறுகிறதுசாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, தன் மகள் குட்டிப்பெண்ணாக இருந்தபோது பயின்ற நடனத்தை மீண்டும்மீண்டும் தன் நினைவில் நிகழ்த்திப் பார்த்து காலம் கழிக்கிறாள். மகளுடைய தொடர்ச்சியான நடனவிருப்பம் அவளுக்கு ஓரளவு நிறைவைத் தருகிறதுஅந்த நிறைவும் கனவும் மகள் இல்லாத தனிமையை வெல்ல உதவுகின்றன. எதிர்பாராமல் ஒருநாள் வெகுதொலைவிலிருந்து வந்து சேர்ந்த மகளுடைய கடிதம் அவளைப்பற்றிய நினைவுகளைக் தாயின் மனத்தில் கிளறிவிடுகின்றன. தன் கனவின் வேகம் அதிகரிப்பதையும் அவளால் உணரமுடிகிறது. அருகில் இல்லாத மகளிடம்  தன் சலங்கைகளை ஒப்படைப்பதாகச் சொல்வதும் தன் கால்கள் ஆடிமுடிக்காத நடனத்தை ஆடும்படி தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் அவள் வேகத்தின் அடையாளங்கள்.

இந்தத் தொடர்ச்சி நிகழுமா என்பதையும் கனவு நிறைவேறுமா என்பதையும் உறுதியாகச் சொல்லமுடியாது.   ஒரு தாயின் கனவுகள் அரும்புபோல இயல்பாக முகிழ்க்கின்றன. சில அரும்புகள் மலர்களாகின்றன. சில  கருகிவிடுகின்றன. சில மண்ணில் உதிர்ந்துபோகின்றன. இருந்தாலும் இயல்பாக செடிகளில் தொடர்ந்து அரும்புகள் முகிழ்த்தபடியே உள்ளன.

*

நடன மகளுக்கு

சூத்ரதாரி

என் சாய்வு நாற்காலியின்
பின்னிருந்து சவுக்குக் காட்டில்
மிச்சமிருக்கிறது அந்தியின் தவம்

நீண்ட இடைவேளைக்குப் பின்
உன் முகம் காட்டிய கடிதம்
ஊஞ்சலை அசைத்துவிட்டிருக்கிறது

நிலவிழைப் பொழிந்த
இசைச்சதுக்கமொன்றில்
நீயாடிய நடனத்தை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்

அன்றிரவு நீ களைத்துறங்கினபோது
சிவந்த உன் பாதங்களை
முத்தமிட்டதை நீ அறிவாயா?

கொலுசொலிக்க மார்புதைத்து
பயின்ற உன் பாதங்கள்
இன்று சிகரங்களில் ஆடுகின்றன

என் பூரணமே, தாங்கவில்லை எனக்கு
கை ஓய்ந்து போவதற்குள்
கொஞ்சம் சொல்ல இருக்கிறது எனக்கு

அலை வந்தழித்த
என் மணல்வீடுகளை செப்பனிடு

காற்றுதிர்த்த கனவுகளைத் தொடுத்து
கருங்கூந்தலில் சூடிக்கொள்

முற்றுப்பெறாத  என் கீர்த்தனைகளை
உன் சொற்களைக் கொண்டு பூர்த்திசெய்


ஓசைகள் மறந்த
என் காற்சலங்கைகளை கட்டிக்கொள்

பின் ஆடு அந்த நடனத்தை

ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத
அந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு

*


தொண்ணூறுகளில் தெரியவந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர் சூத்ரதாரி. இரண்டாயிரத்துக்குப் பிறகு தன் இயற்பெயரான கோபாலகிருஷ்ணன் என்னும் பெயரிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என இவருடைய எழுத்துக்களம் மிகவும் விரிவானது. குரல்களின் வேட்டை என்னும் தலைப்பில் இவருடைய கவிதைத்தொகுதி 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முனிமேடு இவருடைய முக்கியமான சிறுகதைத்தொகுதி. மணற்கடிகை இவருடைய நாவல். ஒரு அடிமையின் வரலாறு முக்கியமான மொழிபெயர்ப்பு. நித்ய சைதன்ய யதியின் ஈசாவாஸ்ய உபநிடதம் என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்புதிது இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்துள்ளார்.