நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப்பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கிவந்தன. அந்த ஏரிக்கும் ஏழெட்டு மைல்கள் தள்ளிப் பாய்ந்துகொண்டிருந்த தென்பெண்ணை ஆற்றுக்கும் ஆழங்கால் இணைப்பு இருந்தது. தென்பெண்ணை அப்போது வளமான ஆறு. ஆறுமாதம் ஓடிக்கொண்டே இருக்கும். நீரற்று வறண்டுபோன சமயத்திலும் ஒரே ஒரு அடி அளவுக்கு ஆழமாகத் தோண்டினாலேயே நீர் சுரந்து பள்ளத்தில் நிரம்பிவிடும். பொங்கலையொட்டி வரும் ஆற்றுத் திருவிழா சமயத்தில் பள்ளம் தோண்டி நீரைக் கண்டுபிடிப்பதுதான் சிறுவர்களான எங்களுடைய பொழுதுபோக்கு. இன்று எல்லாமே
பழங்கனவுகள். மணல்கொள்ளைக்குப் பேர்போன இடமாக மாறிவிட்டது தென்பெண்ணை. இப்போது
அழிந்துகொண்டிருக்கும் ஆறு அது. ஆண்டுமுழுக்க மணலைச் சுரண்டிக்கொண்டே இருப்பதால்
ஆற்றில் நீரோட்டமே இல்லை. மழைக்காலத்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும்
தண்ணீரைமட்டுமே பார்க்கமுடியும். ஆறே நீரற்றுப் போனதால் ஆழங்கால் தூர்ந்துபோனது. ஆற்றைச்
சுரண்டிய மக்கள் வறண்டுபோன ஏரியை வளைத்தெடுத்துக்கொண்டார்கள். ஒருபங்கு விவசாய
நிலங்கள் வீட்டுமனைகளாக மாறின. இன்னொரு பங்கு விவசாய நிலங்கள் முந்நூறு
அடி ஆழத்துக்கும் கீழே சென்று விட்ட கிணற்றுநீரை நம்பி உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன.