Home

Monday 23 March 2015

சேவை என்னும் வழிபாடு

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப்பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கிவந்தன. அந்த ஏரிக்கும் ஏழெட்டு மைல்கள் தள்ளிப் பாய்ந்துகொண்டிருந்த தென்பெண்ணை ஆற்றுக்கும் ஆழங்கால் இணைப்பு இருந்தது. தென்பெண்ணை அப்போது வளமான ஆறு. ஆறுமாதம் ஓடிக்கொண்டே இருக்கும். நீரற்று வறண்டுபோன சமயத்திலும் ஒரே ஒரு அடி அளவுக்கு ஆழமாகத் தோண்டினாலேயே நீர் சுரந்து பள்ளத்தில் நிரம்பிவிடும். பொங்கலையொட்டி வரும் ஆற்றுத் திருவிழா சமயத்தில் பள்ளம் தோண்டி நீரைக் கண்டுபிடிப்பதுதான் சிறுவர்களான எங்களுடைய பொழுதுபோக்கு. இன்று எல்லாமே பழங்கனவுகள். மணல்கொள்ளைக்குப் பேர்போன இடமாக மாறிவிட்டது தென்பெண்ணை. இப்போது அழிந்துகொண்டிருக்கும் ஆறு அது. ஆண்டுமுழுக்க மணலைச் சுரண்டிக்கொண்டே இருப்பதால் ஆற்றில் நீரோட்டமே இல்லை. மழைக்காலத்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைமட்டுமே பார்க்கமுடியும். ஆறே நீரற்றுப் போனதால் ஆழங்கால் தூர்ந்துபோனது. ஆற்றைச் சுரண்டிய மக்கள் வறண்டுபோன ஏரியை வளைத்தெடுத்துக்கொண்டார்கள். ஒருபங்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக  மாறின. இன்னொரு பங்கு விவசாய நிலங்கள் முந்நூறு அடி ஆழத்துக்கும் கீழே சென்று விட்ட கிணற்றுநீரை நம்பி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன.
தொண்டுள்ளம் கொண்ட ஒரே ஒரு அதிகாரியின் பார்வையில் இந்தக் காட்சி விழுந்திருந்தால், ஏரியைக் காப்பாற்றியிருக்கமுடியும். சேவைமனம் கொண்ட ஒரே ஒரு தலைவனின் முயற்சி கிடைத்திருந்தால், இந்த ஏரியின் அழிவைத் தடுத்திருக்கமுடியும். விவசாயம் குறைந்துபோனால் என்ன, ஏரியை ஓர் அழகான சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என யாருமே யோசிக்கவில்லை. படகு வீடுகள், படகோட்டம், படகுப் பயிற்சி என மனத்தைக் கவரும் திட்டங்களை உருவாக்கி ஏரியை வற்றாமல் தக்கவைத்திருக்கமுடியும்.
ஆனால் எதுவுமே நிகழவில்லை. யாரோ ஓர் அரசன் ஏதோ ஒரு காலத்தில் எதிர்காலச்
சந்ததியினரின் தேவைக்காக வெட்டி உருவாக்கிய ஏரி அது. மூதாதையரின் சொத்தை வைத்து வாழத் தெரியாத ஊதாரித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். நமக்கு உருவாக்கவும் தெரியாது. அழிக்காமல் இருக்கவும் தெரியாது.
ஆற்றாமையில்தான் இதை நான் எழுதுகிறேன். கடந்த மாதம் கர்நாடகத்தின் இலட்சுமேஸ்வர் செல்லும் வழியில் நான் கண்ட காட்சி அந்த ஆற்றாமையை அதிக அளவில் தூண்டிவிட்டது. அங்கும் ஓர் ஏரி உண்டு. அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் அதைப் பார்ப்பேன். மழைக்காலத்தில்மட்டும் நீர் குட்டையாகத் தேங்கியிருக்கும். ஒரு பெரிய தேக்கு இலையில் ஒரே ஒரு சொட்டு மழைநீர் தேங்கி நிற்பதுபோல. மற்ற நேரங்களில் வறண்டுபோய் காணப்படும். ஏரியைச் சுற்றிலும் கரிசல் மண்ணாலான பூமி.  அங்கங்கே மரங்களில் சுற்றிப் படர்ந்தபடி தொங்கும் கொடிகளை இழுத்துத் தின்னும் ஆடுமாடுகள்.   வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை பால்வெள்ளமாக ஏரி நிரம்பித் தளும்பியதைப் பார்த்தேன். ஒரு மூலையில் இரண்டடி விட்டமுள்ள ஒரு குழாய் வழியாக அருவிபோலப் பொழியும் நீர் ஏரியை நிரப்பிக்கொண்டே இருந்தது. கரையோரத்து மரங்களில் ஏராளமான கொக்குகள். கிளைகளில் சின்னச்சின்ன வெள்ளைத்துணிகளைக் கட்டிவைத்ததுபோல. கண்கொள்ளாக் காட்சி.
வறண்ட ஏரியை நிரம்பிய ஏரியாக மாற்றியது அந்த ஊர்த்தலைவரின் சேவை என்று நன்றியோடு சொன்னார்கள் ஊர்க்காரர்கள். நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் பாய்கிற ஆற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்தது மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான அரசியல் தடைகள். நிர்வாகத் தடைகள். எல்லாவற்றையும் கொஞ்சம்கொஞ்சமாகக் கடந்துவந்தார் அவர். கால்வாய் வெட்டி தண்ணீரைக் கொண்டுவருவதில் நிறைய சிக்கல்கள் தோன்றின. சூழலியல் துறையிலிருந்தும் வனத்துறையிலிருந்தும் சான்றிதழ்கள் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் பள்ளம் வெட்டி குழாய்கள் பதிக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். திட்டமிட்டதைவிட குறுகிய கால அளவிலேயே வேலை முடிந்தது. ஏரியின் நீர் நிரம்பியதும், அதுவரைக்கும் மானாவாரிப் பயிராக சோளத்தைமட்டும் பயிரிட்டு வந்தவர்கள், வேர்க்கடலையையும் பருத்தியையும் பயிரிட்டார்கள். அந்த ஏரியைச் சுற்றி எந்த இடத்திலும் அவர் பெயரைச் சொல்லும் பதாகையோ, வளைவுகளோ, கல்வெட்டோ, சுவரொட்டிகளோ எதுவுமே இல்லை. ஒரு புராணப் பாத்திரத்தைப்பற்றிச் சொல்வதுபோல மக்களாகவே அவரைப்பற்றிப் பேசுகிறார்கள். அவ்வளவுதான். நிரம்பி வழிந்த ஏரி வறண்டுபோவதை வேடிக்கை பார்ப்பதும் இந்த மண்ணில் நடக்கிறது. வறண்டுபோன ஏரியை நிரம்பித் தளும்புவதாக மாற்றும் முயற்சியும் இந்த மண்ணில்தான் நடக்கிறது. சேவைமனம் இருந்தால் சாதனை நிகழும். அது இல்லையென்றால் எதுவுமே நிகழாது.
வரலாற்றின் பாதையில் தன்னலமற்ற சேவையாளர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த மண்ணில் ஏராளமான கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், குளங்கள், ஏரிகள், சாலைகள், அணைக்கட்டுகள், வேலை மையங்கள், விற்பனை மையங்கள், சிறுதொழில் நிலையங்கள் என எண்ணற்ற சாதனைகள் சேவையாளர்களால் நிகழ்ந்தவை. கனவுகளைச் சாதனையாக மாற்றமுடிந்தவர்களே சேவையாளர்கள். மக்கள் நலன் என்பதை வாழ்வின் இலக்காகக் கொண்டவர்கள் அவர்கள். காலம் கருதி இடத்தாற் செய்தால் ஞாலம் கருதினும் கைகூடும்
என்கிற நம்பிக்கை அவர்களுக்கிருந்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊர்முழுக்க ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பிள்ளைகளைப்போல கனிவாகப் பார்த்துப்பார்த்து வளர்த்த திம்மக்கா என்னும் பெரியம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வேளையில் உலகத்தில் மிக உயர்ந்த சேவைகள் எல்லாம் இப்படித்தான் தன்னிச்சையான தூண்டுதலில் விளைவாக தனி நபர்களால் மட்டுமே செய்யப்படுகின்றனஎன்று என் நண்பர் சொன்னார். எப்படி?என்று கேட்டேன்.

அந்த எண்ணம் எழுகிறவரைக்கும் அவர்கள் நம்மைப்போன்ற வாழ்வையே வாழ்கிறார்கள். சேவையாற்றும் எண்ணம் ஒரு காந்தத்துண்டுபோல. அது உருவாகும் கணம் ஒரு பொற்கணம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமாக அது உருவாகிறது. அவர்களை அப்படியே கவர்ந்திழுத்து தன் உறுப்பாகவே மாற்றிக்கொள்கிறது
நண்பர் விரிவாக விளக்கியபடியே சென்றார். பிரசவ உதவிவேண்டி வந்தவர்கள், அங்கிருந்த மருத்துவர் ஆண் என்பதால் மருத்துவம் பெறாமலேயே திரும்பிச் சென்று மனைவிமார்களைப் பறிகொடுத்த சம்பவத்தை நேருக்குநேர் பார்த்த அனுபவம்தான் ஓர் இளம்பெண்ணின் மனத்தில் ஒரு மருத்துவமனையை உருவாக்கும் உத்வேகத்தை ஊட்டியது என்று வேலூர் மருத்துவமனையின் ஆதித் தொடக்கப்புள்ளியைச் சுட்டிக் காட்டினார். அடுக்கடுக்காக இன்னும் பல எடுத்துக்காட்டுகள். பல சேவையாளர்களின் வாழ்க்கைவரலாறுகளைப் படித்திருக்கிறேன். அல்லும்பகலும் தன் செயல்பாடுகளின் வெற்றிக்காக பாடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். தோல்விகளைப்பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தோல்விகளை அனுபவங்களாக்கிக்கொண்டு மென்மேலும் உத்வேகத்தோடு செயல்படுகிறார்கள். தம் வாழ்வே, இந்தச் செயலைச் செய்வதற்காக என்பதுபோல அயராது உழைக்கிறார்கள். தினசரி அரசியல் நடவடிக்கைகளைக் கடந்த செயல்கள் இவை. இந்தச் சேவையாளர்களின் பயணம் மக்கள் நலனை நோக்கிய ஒன்றே தவிர, அரசியல் அதிகாரத்தைநோக்கிய ஒன்றல்ல. அரசியலோ, பதவியோ, அதிகாரமோ எதுவுமே சேவைக்குத் தேவையானவை அல்ல. உண்மையான ஈடுபாடும் உத்வேகமும் மட்டுமே போதும். ஒன்றைப் பெறுவதற்காகவே ஒன்று செய்யப்படுகிறது என்கிற எளிய வாய்ப்பாட்டை இத்தகு சேவையாளர்களின் வாழ்க்கை உடைத்து நொறுக்கிவிடுகிறது. தன்னை எருவாக்கிக்கொண்டே தன் செயலைச் செய்கிற அபூர்வ மனிதர்கள் அவர்கள். அபூர்வ மனிதர்களின் வாழ்க்கைவரலாறுகள் அர்ப்பணிப்புணர்வோடு ஆற்றப்படுகிற சேவைகளின் சக்தியை சமூகத்துக்கு உணர்த்துகின்றன. மானுட வரலாறு அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.  
திருச்சியில் சத்திரம் என்கிற பேருந்து நிறுத்தத்தின் பெயர்க்காரணத்தை பேச்சோடு பேச்சாக நண்பர் ஒரு நாள் சொன்னார். சமூகத்தில் எல்லாத் தரப்பு குழந்தைகளிடமும் கல்வி வேட்கை உருவான காலகட்டத்தில், தங்கிப் படிக்கும் வசதியை வழங்கும்பொருட்டு, தனக்குச் சொந்தமான இடத்தில் சொந்தச் செலவில் ஒரு சேவையாளர் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டிவைத்தார். அதை அந்தக் காலத்தில் சத்திரம் என்று அழைத்தார்கள். அந்தச் சத்திரத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களில் நானும் ஒருவன்என்றார். பேச்சோடு பேச்சாக அதன் தூய்மை, அங்கிருந்த வசதிகள் எல்லாவற்றையும் சொன்னார். இன்று அரசாங்கச் செலவில் கட்டப்பட்டு இயங்குகிற எல்லா இலவச விடுதிகளையும்விட, சத்திரம் உயர்ந்த தரத்தில் இருந்ததாகவும் சொன்னார். அதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அரசு எந்திரத்துக்கு எல்லாமே ஒரு கடமை. சேவையாளருக்கோ அது ஆன்மாவை நிறைக்கும் வழிபாடு.