Home

Monday 30 March 2015

பள்ளிக்கூடம்


முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வாழ்ந்திருந்த ஊரோடு மறுபடியும் ஓர் உறவு துளிர்க்கும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவோ அம்மாவோ இருந்திருந்தால் என்னைவிட மிகவும் அதிகமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். என் மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளையுடைய குலதெய்வம் அந்த ஊரில் இருந்தது. அவருடைய தாய்வழி உறவினர்களும்கூட அந்த ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு என்னால்தான் யாரையும் நினைவுக்குக் கொண்டுவரமுடியவில்லை. நான் சொன்ன விவரங்கள்மூலமாக அவர்களாலும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரோடு புதிதாக ஓர் உறவு என நினைப்பதே எனக்கு ஆனந்தமாக இருந்தது.
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிறகுதான் மற்ற கடமைகளைக் கவனிக்கமுடியும் என்று சம்பந்தி கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். மூன்று கார்களில் கிளம்பி இரவே வந்து தங்கிவிட்டோம். காலையில் வழிபாடு முடிந்து மதிய விருந்து உறவினர் வீட்டிலேயே தடபுடலாக நடந்துமுடிந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு நான் மட்டும் கிளம்பினேன். மனைவியையும் அழைத்துச் சென்று காட்டவேண்டும் என ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு அடிக்கடி மூட்டுகள் வீங்கும் பிரச்சினை இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
மாறியிருந்த ஊரின் அமைப்பு ஒருகணம் குழப்பி திகைக்கவைத்தது. பல இடங்களில் புரியாமல் நின்றுவிட்டேன். தோப்புபோல இருந்த மரங்கள் எதுவும் இல்லை. மாட்டுவண்டிப் பாதைகள் சிமெண்ட் சாலைகளாக மாறியிருந்தன. ஏராளமான கடைகள். வாகனங்கள். நடமாட்டம். உணவு விடுதிகள். மூன்று ஏ.டி.எம்.கள். நான்கு வங்கிகள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த பிள்ளையார் கோயிலை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முதலில் கோயிலைத் தேடி, அதற்குப் பிறகு தெருவைக் கண்டுபிடித்தேன். முன்பக்கமும் பின்பக்கமும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்த எங்கள் வீட்டுப்பகுதியில் நிழலுக்குக்கூட ஒரு மரம் இல்லை. எங்கெங்கும் வீடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.

கோயிலை மையமாகக் கொண்டு திசைகளைத் தீர்மானித்து, ஒரு குறிப்பிட்ட திசையில் நடந்தேன். ஒரு சிறுவனாக தோளில் பாடப்புத்தகப் பை தொங்க அந்தத் தெருவில் பள்ளிக்கு நடந்துசென்ற நாட்களின் நினைவுகள் நெஞ்சில் அலைமோதின. அந்தப் பள்ளி நான் படித்த பள்ளி மட்டுமல்ல. அங்கே ஒரு மாதம் நான் கணக்கு ஆசிரியராக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அந்தப் பள்ளியில் படித்து, அப்புறம் உயர்நிலைப்பள்ளியில் படித்து, அதற்கப்புறம் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி, வேலைக்கான தேர்வுகளை எழுதியபடி வீட்டோடு இருந்த சமயத்தில் சுப்பராயன் சார் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு பிள்ளைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தேன். “என்னமோ அல்ஜீப்ரா கில்ஜீப்ரானு ஹைஸ்கூல் காலேஜ் பாடத்தயெல்லாம் எலிமெண்ட்ரி ஸ்கூல்ல சேத்து உட்டுட்டானுங்க. எனக்கே கண்ண கட்டு காட்டுல உட்டமாரி இருக்குது. புள்ளைங்களுக்கு எப்படி இருக்கும், நெனச்சி பாரு. அவன கொஞ்சம் அனுப்பி உடறியா?” என்று அப்பாவிடம் கேட்டார். அப்பா என்னிடம் சொன்னார். மாலை நேரங்களில் சம்பளம் வாங்காத ஆசிரியராக நான் அங்கே வேலை செய்தேன்.
அந்தத் தெருவின் எல்லையில் பள்ளிக்கூடம் இருந்தது. விசாலமான இடம். அதற்குள் ப வடிவத்தில் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதுபோல மூன்று கட்டடங்கள். சுற்றியும் ஆளுயரத்துக்கு மதில்கள். மதிலையொட்டி இரண்டு பெரிய தூங்குமூஞ்சி மரங்கள். அவற்றின் நிழல்தான் பிள்ளைகளுக்கு விளையாடும் இடமாக இருந்தது. மரச்சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட  பெரிய கதவைத் தள்ளிக்கொண்டுதான் உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியும். சின்னப் பிள்ளைகளால் தள்ளமுடியாது என்பதால் வாசலிலேயே ஒரு சட்டாம்பிள்ளை நின்றுகொண்டு உதவி செய்வார். அந்தக் கதவுகளுக்கு மேல் அரைவட்டவடிவில் பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகை அப்படியே இருந்தது. அந்தப் பலகையையும் பள்ளிக்கூடத்தையும் பார்த்த பரவசத்தில் என்னை மறந்து பழைய நினைவுகளில் மூழ்கி சில கணங்கள் கழிந்தபிறகுதான், அந்தக் கதவுகள் மூடியிருப்பதையும் மூடிய சங்கிலியின் கண்ணிகளுக்கிடையில் பெரிய பூட்டு தொங்குவதையும் கவனித்தேன். விடுப்பாக இருக்குமோ எனத் தோன்றினாலும் அதன் பாழடைந்த கோலம் ஒருவித சந்தேகத்தை உருவாக்கியது. யாரை விசாரிப்பது என யோசித்தபடி அங்குமிங்கும் முகம்தேடி பார்த்தபோது, பள்ளிக்கூடத்தையே வெறித்து நோக்கியபடி, எதிர்ப்பக்கத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவரின் உருவம் தெரிந்தது. பளிச்சிடும் வெண்மையில் கதர் வேட்டியும் கதர் சட்டையும் அணிந்திருந்தார். சுருக்கம் விழுந்த முகம். நரைத்த தலைமுடி. அவருக்குப் பக்கத்தில் ஒரு குடை இருந்தது.
விசாரிக்கலாமா வேண்டாமா என தயங்கி நின்றிருந்த சில கணங்களிலேயே அந்த முகத்தை என்னால் நினைவுக்குக் கொண்டுவரமுடிந்தது. ஏரிக்கரையை ஒட்டி மரங்களுக்கும் செடிகளுக்கும் இடையிலிருந்த அவருடைய வீட்டைக்கூட நினைத்துக்கொள்ளமுடிந்தது. ஒவ்வொருநாளும் காலை நேரத்தில் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்பதும் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பிள்ளைகளை   புன்னகையோடு பார்த்து கையசைப்பதும் அடுத்தடுத்து நினைவுக்கு வந்தன. என் தாத்தாவுக்கு அவரை நன்றாகத் தெரியும். அசையாத இரும்பாக இருந்த அரசாங்கத்தை அசைத்து, ஊருக்குள் பள்ளிக்கூடம் உருவாக அவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லிப் பாராட்டியதையும் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. அப்போதெல்லாம் நான் உட்பட பல பிள்ளைகள் அவருக்கு அருகே வந்து ”வணக்கம் ஐயா” என்று சொல்லிவிட்டுச் சிரிப்போம். அவரும் “வணக்கம் வணக்கம்” என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பார். கேட்கிறவர்களுக்கு சிலேட்டு, பலப்பம், நோட்டு, பென்சில் என எடுத்துக்கொடுப்பார். விஸ்டம் என எழுதப்பட்ட நாற்பது பக்க நோட்டுகளை நானும் அவரிடம் வாங்கியிருக்கிறேன்.  
பெரியவருக்கு அருகில் சென்று ”வணக்கம் ஐயா” என்றேன். அவர் எதுவும் பேசாமல் என்னை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு பெருமூச்சோடு மெதுவாக ”வணக்கம்” என்றார். அப்புறம் “யாரு?” என்று கேட்டார். நான் அவருடைய கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, ஒரு வேகத்தில் “ஐயா, இந்தப் பள்ளிக்கூடம்?” என்று பேச்சைத் தொடங்கினேன்.
ஒரு பதிலும் சொல்லாமல் சில கணங்கள் அவர் என்னையே பார்த்தார். பிறகு தலையைத் திருப்பி பள்ளிக்கூடத்தையும் தலைக்குமேலே நீண்டு சென்ற மரக்கிளையையும் பார்த்தார். அக்கிளையின் கவைகளுக்கிடையில் சுள்ளிகள் அடர்ந்த ஒரு கூடு தெரிந்தது. குஞ்சுகள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. கைவிடப்பட்டதுபோன்ற அந்தத் தோற்றத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது. நான் மெதுவாக “சந்தைத்தோப்பு புள்ளயாரு கோயில் தெருவுல வடிவேலு மேஸ்திரி பேரன் நான். சின்ன வயசுல உங்கள நான் பார்த்திருக்கேன். சுப்பராயன் சார் காலத்துல, இதே பள்ளிக்கூடத்துல ஒரு மாசம் நான் கணக்கு சொல்லிக்குடுத்திருக்கேன்” என்று சொல்லச்சொல்ல அவர் கவனம் என்மீது மீண்டும் குவிந்தது. “ம்.ம்” என்றபடி அவர் தலையை அசைத்துக்கொண்டார்.
“இப்ப எங்க இருக்கிங்க?”
“அப்ப பேங்க் வேல கிடைச்சி ஆந்திராவுக்குப் போனதுதான்.  ஆந்திரா, மும்பை, பூனா, டில்லி, மறுபடியும் ஆந்திரான்னு ஒரு சுத்து சுத்தி முடிச்சாச்சி. அதுக்கப்புறம் அங்கயே வீடு வாசல்னு வாங்கி தங்கிட்டம்.”
“அப்பா அம்மா?”
“டில்லில இருக்கும்போது அந்தக் குளுரு ரெண்டு பேருக்குமே ஒத்துக்கலை. ஆஸ்த்மாவும் உண்டு. கொஞ்ச காலம் முடியாம இருந்து ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலதான் ட்ரீட்மெண்ட் குடுத்தோம். அஞ்சி வருஷத்துக்கு மின்னால அடுத்தடுத்து போய்ட்டாங்க.”
நாக்கு சப்புக்கொட்டியபடியும் தலையை அசைத்தபடியும் ஒருகணம் அவர் பேசாமல் இருந்தார். பிறகு மூச்சை இழுத்தபடி, “அப்பா பேரு ராஜவேலு, இல்ல?” என்று கேட்டார். அவருடைய நினைவாற்றலைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஆமாம் ஐயா” என்றபோது என் கண்கள் கலங்கிவிட்டன.
“திடீர்னு இங்க எப்படி…?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார். வந்த விவரத்தை அவருக்கு சுருக்கமாகச் சொல்லிமுடித்தேன். “இந்த ஊரோடு உங்க வம்சத்துக்கு என்னமோ விட்டகுறை தொட்டகுறை இருக்குதுபோல” என்று சிரித்தார் ஐயா. தொடர்ந்து, “தாராளமா சொல்லிக்குடுக்கற அளவுக்கு இப்ப உங்களுக்கு நேரம் இருக்குது. ஆனா படிக்கத்தான் புள்ளைங்களும் இல்ல. பள்ளிக்கூடமும் இல்ல” என்று கசப்போடு சொல்லிவிட்டுச் சிரித்தார்.  கண்ணாடியைக் கழற்றி வேட்டி நுனியால் தேய்த்துத் துடைத்துவிட்டு மறுபடியும் அணிந்துகொண்டபடி என்னைப் பார்த்தார்.
“பள்ளிக்கூடத்த ஏன் பூட்டிவச்சிருக்குது?” என்று தயக்கத்தோடு அவரிடம் கேட்டேன். “படிக்க ஒரு புள்ளகூட வரலை. வேற வழி இல்லாம மூடிட்டாங்க” என்றார் அவர். தொடர்ந்து “கடைவிரித்தேன் கொள்வாரில்லைன்னா கடையை மூடிடவேண்டிதுதானே” என்று வேகமாகச் சொன்னார்.
“எவ்ளோ நாளாச்சி மூடி?”
“கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்கும். அரசாங்கப் பள்ளிக்கூடம்ன்னா பிஞ்சிபோன தொடப்பக்கட்டன்னு நெனைக்கற ஊருல வேற என்ன நடக்கும்…?.”
ஒருகணம் நான் மிகவும் தயங்கினேன். பிறகு, சுருக்கம் விழுந்த அவருடைய முகத்தையும் தளர்ந்த கழுத்தில் கொடிபோல ஓடும் நரம்புகளையும் பார்த்தபடி மெதுவாக “புள்ளைங்கள்ளாம் இப்ப எங்க படிக்கறாங்க?” என்று கேட்டேன்.
“இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல படிச்சாதான் அறிவு வளரும்ன்னு டவுன் ஸ்கூல்ங்கள்ல சேந்து படிக்கறாங்க. அடிவாசல் வரைக்கும் வண்டிங்க வந்து குப்பைய அள்ளறாப்புல புள்ளைங்கள வாரிப் போட்டுகினும் போவுது” என்றார். பிறகு என்னைப் பார்த்து, ”நீங்க இந்த பள்ளிக்கூடத்துல படிச்சவருதான? பேங்க்ல பெரிய ஆபீசரா இருக்கலையா? என்னமோ இங்க இருக்கறவங்கதான் புதுசுபுதுசா பேசறாங்க. இங்கிலீஷ்மீடியம் இங்கிலீஷ்மீடியம்ன்னு வேட்டநாய்மாதிரி ஓடறாங்க. நாம சொல்றத காதுகுடுத்து கேக்க யாருக்கு நேரம் இருக்குது?” என்று கேட்டுவிட்டு அமைதியாக தரையைப் பார்த்தார். கடைசியாக “ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. ஒரு புடிமானம். அத குறை சொல்ல நாம யாரு?” என்றபடி தலையாட்டிக்கொண்டார்.
எனக்கு அவர் கைகளைப் பற்றி, அவருடைய தவிப்பை ஆற்றவேண்டும்போல இருந்தது. நானே கிளறிவிட்ட நெருப்பை அணைப்பது எப்படி என்று புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அந்த காலத்துல இங்க சுத்துவட்டாரத்துல இருந்த பன்னெண்டு பாளையங்க எதுலயுமே பள்ளிக்கூடம் கிடையாது. புள்ளைங்க படிக்கறதுக்கு வழியே இல்ல. அத்தி பூத்தாப்புல எங்கயோ ஒன்னு ரெண்டு திண்ண பள்ளிக்கூடம் இருக்கும். அவ்ளோதான். கொஞ்சம் பேருங்கதான் அதுல படிப்பாங்க. மத்தவங்களுக்கு ஆடுமாடு மேச்சிகினு அப்பன் வேலைய செஞ்சிகினு பொழுத ஓட்டறதுதான் வேல……..”
அவர் சொல்லமுனையும் விஷயங்கள் எல்லாமே எனக்குத் தெரிந்தவைதான். ஆனால் எனக்குத் தெரியும் என்று அவரிடம் சொல்வது எப்படி என்று புரியாமல் அவர் கண்களையே பார்த்தேன்.
“சொதந்தரம் கெடச்சா மொதல் வேலயா எல்லா ஊருக்கும் பள்ளிக்கூடம் வந்துடும்ன்னு நெனச்சேன். அப்படி எதுவும் நடக்கலை. அந்த அதிகாரி, இந்த அதிகாரின்னு பத்து நூறு பேர பாத்து அலைஞ்சதுதான் மிச்சம். ஒரு காசுக்குகூட பிரயோஜனமில்லை. ஒருநாள் ரயிலேறி நேரா மெட்ராஸ்க்கே போயி முதலமைச்சர பார்த்து மனு குடுத்தன். நீங்க போயி அவினாசிலிங்கம் செட்டியார பாருங்கன்னு சொல்லி கையெழுத்து போட்டு குடுத்தாரு அவரு…..”
ஒருகணம் நிறுத்தினார் அவர். பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக்கொண்டார். தொடர்ந்து ”எடம் வாங்கறதுக்கும் கட்டடம் கட்டறதுக்குலாம் சர்க்காருகிட்ட பணம் கிடையாது. ஒங்க ஊருல குடுக்கறவங்க யாராச்சிம் இருந்தா சொல்லுங்க, இந்த வருஷமே ஆரம்பிச்சிடலாம்ன்னு பட்டும்படாம சொன்னாரு செட்டியாரு. யாரோ எதுக்குங்க ஐயா குடுக்கணும், நானே குடுக்கறன், ஆள அனுப்புங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். மறுவாரமே அதிகாரிங்க வந்து நின்னுட்டாங்க……” சொல்லும்போது அவர் உதடுகளில் ஒரு புன்னகை அரும்பி மறைவதைப் பார்த்தேன்.
“இந்த இடம் எங்க தாத்தா வழியில எனக்கு கிடைச்ச சொத்து. அன்னைக்கே அளந்து பாத்து சர்க்காரு பேருக்கு எழுதி குடுத்துட்டேன். உங்க தாத்தா வடிவேலு மேஸ்திரிதான் கட்டடவேலைக்கு பொறுப்பு எடுத்து ஆறு மாசத்துல செஞ்சி முடிச்சாரு. பள்ளிக்கூடம் தொடங்கும்போது சின்ன க்ளாஸ்ங்க மட்டும்தான் இருந்திச்சி. அப்பறம்தான் படிப்படியா அதிகமாச்சி……”
பள்ளிக்கூட மதிலிலிருந்து ஒரு கருப்புப்பூனை தாவிக் குதித்து எங்களைக் கடந்து ஓடியதை இரண்டுபேருமே பார்த்தோம். கொஞ்ச தூரம் ஓடி நின்று திரும்பி அது எங்களைப் பார்த்தது. ”ஒரு காலத்துல நானூறு ஐநூறு புள்ளைங்க படிச்ச எடம். ப்ரேயர் சமயத்துல எல்லாரயும் ஒன்னா பார்க்கும்போது அப்படியே மனசு பூரிச்சிடும்…….” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.
சைக்கிள் கேரியரில் இருபுறமும் இளநீர்க்குலைகளை வைத்துக்கொண்டு ஒருவன் தள்ளிக்கொண்டு சென்றான். ”எளநீ குடிக்கறிங்களா?” என்று அவரிடம் கேட்டேன். அவருடைய ஆற்றாமையின் அழுத்தத்தைக் குறைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் சரியென்று தலையசைத்தார். சைக்கிள்காரரை அழைத்து ஒரு இளநீரை சீவித் தரும்படி சொன்னேன். ஐயா அதை வாங்கி மெதுவாக அருந்தினார். “நீங்க குடிக்கலையா?” என்று என்னைப் பார்த்தார். ”நான் குடிக்கறதில்லை ஐயா. ரெண்டுமூணு வருஷமா ரத்தத்தில கொஞ்சம் சர்க்கரைப் பிரச்சினை…..”  என்று புன்னகைத்தேன்.
சைக்கிள்காரர் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிச் சென்றபிறகு அவர் “இந்த ஊருல நான் யாருகிட்டயும் பேசறதில்லை……” என்றார். அதைக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. மெதுவாக ”எதுக்காக?” என்று கேட்டேன்.
“என் வார்த்தைய கேக்காதவங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு வேண்டிகெடக்குது. அதான் எல்லாத்தயும் நிறுத்திட்டன். காலையில வீட்டுலேருந்து கெளம்பி வந்து கொஞ்ச நேரம் இங்க வந்து உக்கார்ந்து இந்த பள்ளிக்கூடத்தயே பார்த்துகிட்டிருப்பேன். பழைய நினைவுகள் எல்லாம் மனசுல ஓடும். அதுல என்னமோ ஒரு திருப்தி. நீ வாழ்ந்த வாழ்க்கை வீணா ஒன்னும் போவலைன்னு யாரோ சொல்றமாதிரி இருக்கும். அப்பறம் எழுந்து போயிடுவேன். வீடு. பள்ளிக்கூடம். வீடு. அவ்ளோதான் என் நடமாட்டம்……”
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
“போன வருஷம் மூடப் போறாங்கன்னு அரகொறயா செய்தி கெடச்சதுமே பஞ்சாயத்து தலைவரை போயி பார்த்தேன். எனக்கு இருந்த பதற்றத்துல நூத்துல ஒரு பங்குகூட அவருக்கு இல்ல. சாத்தனா சாத்தட்டுமே போங்கன்னு சாதாரணமா சொன்னாரு. அரசாங்க பள்ளிக்கூடம்ன்னு ஒன்னு இருந்தாதானே ஏழபாழைங்களுக்கு உதவியா இருக்கும்ன்னு சொன்னது எதுவுமே அவர் காதுல உழலை. வாயகட்டி வயித்தகட்டி பணத்த சேத்து இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல படிக்கவைக்க பெத்தவங்களே தயாரா இருக்கும்போது, வயசான காலத்துல நீங்க எதுக்கு கஷ்டப்படறிங்கன்னு  சொல்லி அனுப்பி வச்சிட்டாரு. பெரிய மனுஷன் லட்சணம் என்னன்னு பார்த்திங்களா?”
அவர் கண்களில் சீற்றத்தின் நெருப்பு படர்வதை அப்போது பார்த்தேன்.
”இந்த ஊருல பன்னெண்டு வார்டு இருக்குது. ஆம்பள கவுன்சிலர் பொம்பளை கவுன்சிலர்னு எல்லாரயும் போயி பார்த்து பேசனேன். தலைவரு சொல்றதயே அவனவனுங்களும் வேறவேற வார்த்தையில சொன்னானுங்களே தவிர பள்ளிக்கூடம் நம்ம ஊருக்கு முக்கியம்ன்னு ஒரு ஆள்கூட சொல்லலை…..”
பல வண்ணங்களில் ஏராளமான குடங்களை அடுக்கி காட்சிப்பொருளாக்கியபடி ஒரு வேன் மெதுவாக ஊர்ந்துவந்து எங்களை கடந்தது. வேனுக்குள்ளிருந்து மைக் வழியாக எழுந்த விளம்பரச் சத்தத்தில் அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. ”பிளாஸ்டிக் குடங்கள் உங்கள் வீடு தேடி வந்திருக்கிறது தாய்மார்களே. கையாள்வதற்கு எளிதாகவும் மிகக்குறைந்த விலையிலும் உங்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை தாய்மார்களே. வாருங்கள், வந்து கைநிறைய வாங்கிச் செல்லுங்கள். நூறு ரூபாய்க்கு மூன்று குடங்கள்……” என்று விதவிதமான ஏற்ற இறக்கங்களோடு அந்தக் குரல் இடைவிடாமல் ஒலித்தது. குரல் வெகுதூரம் கடந்துபோகும்வரை அவர் அமைதியாக இருந்தார்.
“இழுத்து மூடிக்கலாம்ன்னு கையெழுத்து போட்டு அதிகாரிங்களுக்கு கடுதாசி குடுத்ததே இவனுங்கதான்னு அப்பறமாதான் தெரிஞ்சது. செய்யறதயெல்லாம் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி ஒவ்வொருத்தனும் நல்ல புள்ளயாட்டம் பேசனானுங்க.  எல்லாமே வேஷம்…” என்றார் பெரியவர். அவர் முகம் சிவந்து கன்னத்தின் தசைகள் இறுகி அடங்குவதைப் பார்த்தேன்.
“உலகத்துல எல்லாருமே சுயநலவாதிங்களா இருக்காங்க ஐயா. ஊர் நலம் பொதுநலம்ன்னு யாரு இப்ப நெனைக்கறாங்க? காந்தி காலத்துலதான் ரொம்ப பேரு அப்படி இருந்தாங்க. இப்ப வெரல்விட்டு எண்ணிடலாம்” என்று நான் பொதுவாகச் சொன்னேன்.
நான் சொன்னதை அவர் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தானாகவே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். “சரி, இவனுங்கள ஏன் தொங்கணும், நேரா சம்பந்தப்பட்ட அதிகாரியயே பார்த்துடலாம்ன்னு கெளம்பி போனேன். சின்ன அதிகாரி, நடு அதிகாரி, பெரிய அதிகாரின்னு ஒருத்தனயும் விட்டு வைக்கலை. எல்லாரையுமே பார்த்து பேசனேன். நாப்பது அம்பது பசங்ககூட இல்லாம பன்னெண்டு வாத்தியாருங்களுக்கு சம்பளம் குடுத்து பள்ளிக்கூடத்த எப்படி நடத்தமுடியும், அரசாங்கத்துக்குத்தானே அது நஷ்டம்னு ஒரே பல்லவியயே மாத்திமாத்தி பாடனானுங்க. அவங்ககிட்ட பேசிப்பேசி எனக்கே வெறுத்து போச்சி…..”
அவருடைய சிரமங்களை காதுகொடுத்துக் கேட்பதற்கே வருத்தமாக இருந்தது. “நஷ்டம்ன்னு ஒரு வார்த்தய எழுதி எப்படிப்பட்ட நடவடிக்கை வேணும்ன்னாலும் இந்த நாட்டுல எடுக்கலாம் ஐயா. எந்த கோர்ட்டுக்கு போனாலும் அது செல்லும்…..” என்று பொதுவாகச் சொன்னேன்.
“உண்மைதான். நஷ்டம்ன்னு நிரூபிக்க அவன்கிட்ட புள்ளிவிவரம் இருக்குது. இதுல மக்களுக்கு நஷ்டம் இருக்குதுன்னு நிரூபிக்க நம்மகிட்ட ஒன்னுமே இல்ல” என்று கசப்பாகச் சிரித்தபடி என்னையே ஒரு கணம் வெறித்துப் பார்த்தார். பிறகு, “மனவேதனையுலயும் அவமானத்துலயும் குன்னி குறுகிட்டேன். எது எக்கேடு கெட்டுபோனா எனக்கென்னன்னு ஒரு சலிப்பு. வெறுப்பு. ஒரு வாரம் வீட்டுல சும்மாவே இருந்தேன். அதுக்குமேல மனசு கேக்கலை. தட்டிக்கேக்க வேண்டிய விஷயத்த சரியான நேரத்துல தட்டிக் கேக்காம போனா அதுவும் ஒருவகையில குற்றம், இம்சைன்னு காந்தி சொன்னத நெனச்சிகிட்டேன். அடுத்த வாரமே ஒரு மனு எழுதிம் போயி கலெக்டர பார்த்து பேசனேன். என்ன பத்தி அவருகிட்ட சொல்லிவச்சிருப்பாங்க போல.  உக்காரவச்சி தன்மையாதான் பேசனாரு. நான் சொன்னதயெல்லாம் பொறுமையா கேட்டுகினாரு. கடைசியா எங்களுக்காக நீங்க ஒரு காரியம் பண்ணுவிங்களான்னு கேட்டாரு.  சொல்லுங்கன்னு அவர் மூஞ்சிய பார்த்தேன். ஒரு பத்து நாள் டைம் எடுத்துகுங்க. உங்க பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிக்கறதுக்கு ஒரு அம்பது புள்ளைங்கள சேத்து உடுங்க. அரசாங்கத்துகிட்ட பேசி மூடன பள்ளிக்கூடத்த நான் தெறக்கவைக்கறேன்னு சொல்லி அனுப்பனாரு……..”
நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“பட்ட வேதனைக்கெல்லாம் கலெக்டர் மூலமா ஒரு விடிவு காலம் பொறந்திடுச்சி கடவுளேன்னு ரொம்ப சந்தோஷமா ஊருக்கு வந்தேன். ஆனா நான் நெனச்சபடி எதுவுமே நடக்கலை. பத்து நாள் ராத்திரி பகல்னு பார்க்காம, தெருத்தெருவா, வீடுவீடா ஏறிஏறி எறங்கனேன். ஒவ்வொருத்தன் கையையும் புடிச்சி கெஞ்சாத கொறயா கேட்டு பார்த்தேன். அஞ்சி புள்ளைங்களகூட என்னால சேர்க்கமுடியலை……” ஒருகணம் பேச்சை நிறுத்தி உதட்டைப் பிதுக்கி நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதுபோல தலையை அசைத்தார்.
“நான் தோத்துட்டேன்ங்கறத அந்த நிமிஷத்துல புரிஞ்சிகிட்டேன். எனக்கு அதுகூட பெரிய வேதனையா தெரியலை. ஆனா, இத்தன காலமும் நமக்கு வணக்கம் சொல்லி, நேருக்குநேரா பார்த்து பேசி, சிரிச்சவங்க எல்லாருமே திடீர்னு புது ஆளா மாறி என்ன ஒதுக்கி தள்றாப்புல பேசனததான் தாங்கிக்கவே முடியலை. ஒன் புள்ளைங்கள்ளாம் அமெரிக்கா லண்டன்னு போயி செட்டிலானமாதிரி எங்க புள்ளைங்க போவவேணாமான்னு கேட்டான் ஒருத்தன். எங்க சாதியும் இங்கிலீஷ்ல பேசி நாலு ஊரு சுத்தி நாலு பணம் சம்பாதிக்கவேணாமான்னு கேட்டான் இன்னொருத்தன். ஐயையோ, எவ்ளோ பேச்சு, எவ்ளோ ஏச்சு, என்னால தாங்கிக்கவே முடியலை. அதோட என் முயற்சிய நிறுத்திட்டேன்……..”. பேசுவதை நிறுத்தி அவர் நிராசையோடு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
தளர்ந்திருந்த அவருடைய கால்கள், அருகிலிருந்த காலணிகளை தன்னைநோக்கி இழுப்பதும் தள்ளுவதுமாக இருந்தன. நான் மெதுவாக அவரிடம் “விடுங்க ஐயா, என்னைக்காவது ஒருநாள் அவுங்க இத உணர்வாங்க….” என்று நிறுத்திநிறுத்தி பொதுவாகச் சொன்னேன்.
எனது கைப்பேசியில் எதிர்பாராதவிதமாக ஒலித்த அழைப்பின் ஒலியை பொத்தானை அழுத்தி நிறுத்திவிட்டு பேச்சிலேயே கவனமாக இருந்தேன்.  என் மனைவியின் அழைப்பு என்பதால் நேரில் பார்த்துச் சொன்னால் புரிந்துகொள்வாள் என நினைத்தேன். ஆனால் மூன்றாவது முறையாகவும் அது விடாமல் ஒலித்தபோது, அவரே என்னைப் பார்த்து, “பரவாயில்லை, எடுத்து பேசுங்க” என்றார்.
“என்ன ராதா?” என நான் ஆரம்பித்ததுமே, “எங்க போயிட்டிங்க நீங்க? எல்லாரும் உங்களுக்காக காத்திட்டிருக்காங்க. சீக்கிரம் வாங்க” என்றாள் அவள். ”சரி சரி” என்றபடி நான் உரையாடலைச் சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
அவரிடம் இன்னும் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என மனம் விரும்பியது. அரைகுறையாக  பேச்சை முடித்துக்கொண்டு புறப்படுவதில் சங்கடமாக இருந்தது. ”வீட்டுலதான் கூப்ட்டாங்க. ஏதோ சடங்கு செய்யணுமாம். வரச் சொல்றாங்க…” என்றபடி கைப்பேசியை பைக்குள் வைத்தேன். “சரி கெளம்புங்க. ரொம்ப காலம் கழிச்சி உங்கள பார்த்ததுல சந்தோஷம். உங்கள பார்க்கும்போது மேஸ்திரியயே நேர்ல பார்க்கறமாதிரி இருக்குது…..” என்றார் பெரியவர். புறப்படும்போது “ஒரு விஷயம் சொல்லட்டுங்களா?” என்று மெதுவாகக் கேட்டேன். .
“சொல்லுங்க…”
“பள்ளிக்கூடத்த மூடனாலும், இங்க படிச்சிட்டு போன ஆயிரக்கணக்கானவங்களுடைய நெஞ்சில அந்த பள்ளிக்கூடம் அப்படியே இருக்கும் ஐயா. இன்னும் ஆயிரம் வருஷம் போனாலும் அத யாராலயும் மூடமுடியாது. நடந்ததையே நினைச்சிநினைச்சி நீங்க வேதனையோட இருக்கறத பார்க்க கஷ்டமா இருக்குது. எல்லாத்தயும் மறந்துட்டு நீங்க நிம்மதியா இருக்கணும்….”
நான் அப்படிச் சொல்வேன் என எதிர்பாராதவரைப்போல அவர் என்னைப் பார்த்தார். “தெறக்கறதுக்கு அந்தக் காலத்துல ஒரு காரணம்ன்னா, மூடறதுக்கு இந்தக் காலத்துல இன்னொரு காரணம். அவ்ளோதான் ஐயா. அதுக்குமேல இந்த விஷயத்துல ஒன்னுமில்ல. எந்த கவலயும் இல்லாம நீங்க நிம்மதியா இருங்க…..” என்று ஏதோ ஒரு வேகம் தூண்ட மீண்டும் கேட்டுக்கொண்டேன்.  தோளில் இருந்த துண்டை சரிசெய்தபடி அவர் திண்ணையிலிருந்து எழுந்து நின்று என் தோளில் இரண்டுமூன்று முறை தட்டினார். ”சரி கெளம்புங்க, பார்க்கலாம்” என்று விடைகொடுத்தார்.
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஊரில் இருப்பவர்கள் அவரை மிகவும் புண்படுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றியது. அவருடன் நெருக்கமாக பழகக்கூடியவர்கள் நாலைந்துபேர் சேர்ந்து அக்கறையோடும் அன்போடும் பேசியிருந்தால், அவருடைய மனபாரத்தை ஆரம்பத்திலேயே குறைத்திருக்கலாம். அந்த ஊரில் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
அன்றைய பொழுது முழுக்க சடங்கு, பூசை, சாப்பாடு என்று கடந்துபோய்விட்டது. சாயங்காலமாக ஒரு கோயில் பயணமும் சேர்ந்துகொண்டது. என் மனம் முழுக்க பெரியவரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையிலும் புதுப்புது சடங்குகள். நினைத்த நேரத்தில் கிளம்ப இயலவில்லை. தாமதமாகத்தான் புறப்பட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தேன். ஆனால், அந்தத் திண்ணையில் அவர் இல்லை. சிறிதுநேரம் கடைத்தெரு பக்கம் சுற்றியலைந்துவிட்டு மீண்டும் அங்கு வந்து சேர்ந்தேன். அப்போதும் அவரைக் காணவில்லை. குழப்பத்துடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.  
அடுத்தநாள் மணமக்களுடன் புறப்படவேண்டிய நாள். துணிமணிகளை அடுக்கி பெட்டிகளை ஒழுங்குசெய்துவிட்டு, வாகனத்துக்கும் சொன்ன பிறகு, பெரியவரைப் பார்க்கும் ஆவலோடு பள்ளிக்கூடத்தின் பக்கம் அவசரமாக வந்தேன். தொலைவில் வரும்போதே, திண்ணையைக் கவனித்தேன். அவர் இல்லை. நாலைந்து காக்கைகள் அங்கே வட்டமிட்டு உட்கார்ந்திருந்தன. ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை அவர் தாமதமாக வரக்கூடும் என நினைத்து வரும்போகும் வாகனங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடி அரைமணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தேன். அதற்குப் பிறகுதான் புறப்பட்டுச் சென்றேன்.
ஆறு மாதம் கழித்து, அந்த ஊரிலிருந்தவர்கள் வீட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்காக வரவேண்டியிருந்தது. மண்டபத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தார்கள். பெரியவரைச் சந்திக்கும் ஆவல் என்னை உந்தித் தள்ளியது. பத்துமணிக்கு மேல் ஊரைச் சுற்றிப்  பார்த்துவிட்டுவருவதாகச் சொல்லிக்கொண்டு பள்ளிக்கூடத்தின் பக்கம் வந்தேன். பள்ளியின் மதில்மீது ஒரு கொடி ஏறிப் படர்ந்திருந்தது. மதிலருகே வரிசையாக சில வாகனங்கள் நின்றிருந்தன.  நிழலில் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருந்த நான்கு பசுக்கள் குனிந்து புல்லைத் தின்றுகொண்டிருந்தன. சுற்றுப்புறமெங்கும் சாணத்தின் வாடை. திண்ணையில் பெரியவர் இல்லை. ஏமாற்றமாக இருந்தது. அவரை வீட்டிலேயே சென்று பார்த்துவிடலாம் என முடிவுசெய்துகொண்டு கிளம்பினேன். யாரிடமாவது வழி விசாரித்துக்கொண்டு போகலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு நம் ஞாபகசக்தியை சோதித்துக்கொள்ள இது ஒரு நல்ல தருணம் என நினைத்து, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தெரு அமைப்பையும் திருப்பங்களையும் ஒரு வரைபடம்போல ஒருகணம் மனசுக்குள்ளேயே குறித்துவைத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கினேன். நாலைந்து திருப்பங்களில் தடுமாற்றத்தில் திசைமாறி சிறிது தூரம் நடந்து, பிறகு சரியான பாதையில் திரும்பி பெரியவரின் வீட்டைக் கண்டுபிடித்தேன்.
நாவல்மரங்களும் கொடுக்காப்புளி மரங்களும்  மதிலோரத்தில் அப்படியே நிற்கக்கண்டு ஒருகணம் மனம் சிறுவயதைத் தொட்டு மீண்டது. பழைய நினைவுகளை அசைபோட்டபடி, வாசலுக்கு அருகில் சென்றேன். பூட்டியிருந்தது. இரண்டுமூன்று முறை கதவைத் தட்டி சத்தமெழுப்பிய பிறகுதான் ஒரு காவல்காரர் வந்து கதவைத் திறந்தார். “யாரு வேணும்?” என்று குழப்பத்தோடு பார்த்தார்.
“நான் வெளியூருலேருந்து வரேன். பெரியவர பார்க்கணும்” என்றேன். காவல்காரர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு “பெரியவரு காலமாயி ரெண்டுமாசத்துக்கும் மேல ஆயிட்டுதே. உங்களுக்கு தகவல் தெரியாதா?” என சொல்லிக்கொண்டே அவர் கதவைத் திறந்துவிட்டார். ஒருகணம் நான் திகைத்து நின்றுவிட்டேன். “எப்படி?” என மெதுவாகக் கேட்டேன்.
“ஐயாவுக்கு நல்ல சாவுங்க. குளிச்சி முடிச்சதும் தோசை கேட்டாரு. ஊத்தி குடுத்ததும் சாப்ட்டாருங்க. அப்பறம் கொஞ்ச நேரம் பேப்பர் பாத்தாரு. வழக்கமா காலையில பள்ளிக்கூடத்து பக்கம் போயி வரது உண்டுங்க. கொடயயும் கைத்தடியையும் எடுத்தாடான்னு சொல்லிகிட்டே எழுந்து நின்னாருங்க. இந்தாங்கன்னு எடுத்தும் போய் குடுத்தத வாங்கறதுக்கு நீட்டன கை அப்படியே நின்னுடுச்சிங்க. சட்டுனு சுருண்டு கீழ உழுந்துட்டாரு. அவ்ளோதாங்க. அங்கயே உயிர் போயிடுச்சு”
காவல்காரர் சொல்லச்சொல்ல எனக்கு வேதனையாக இருந்தது. கடந்தமுறையே வீட்டுக்கு வந்து பார்த்திருக்கலாமோ என்கிற குற்ற உணர்வு முளைத்தது. “பெரியவரு படம் ஏதாச்சிம் இருந்தா பார்க்கலாமா?” என்று காவல்காரரிடம் கேட்டேன். “தாராளமா பாருங்க, வாங்க” என்றபடி அவர் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மல்லிகைப்பந்தல், கனகாம்பரம், கல்யாணமுருங்கை, செம்பருத்தி என வாசலிலிருந்து வீடுவரைக்கும் அடர்த்தியாக இருந்தது. வீட்டுக்கதவைத் திறந்து முற்றத்தில் மாலையிட்ட பெரியவரின் படத்தின்முன்னால் என்னை நிறுத்தினார் காவல்காரர்.  கருப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட அந்தக் காலத்துப் படம். படத்தின் இருபுறங்களிலும்  வெள்ளிவிளக்குகளில் ஏற்றப்பட்ட திரி சுடர்விட்டபடி இருந்தது. திண்ணையில் நான் பார்த்த, தளர்ந்து தோல் சுருங்கிய அவர் முகம் ஒருகணம் எழுந்து கலைந்தது. அஞ்சலி செலுத்துவதுபோல ஒருகணம் படத்தின்முன் நின்றுவிட்டு திரும்பினேன்.
“அமெரிக்காவிலேருந்து ரெண்டு புள்ளைங்களும் பேரப்புள்ளைங்களும் ஒடனே வந்து கிட்ட இருந்து அடக்கம் செஞ்சாங்க. ரியல் எஸ்டேட் பசங்க தொல்ல தாங்கமுடியாமதான் அவுங்க ஒடனே கெளம்பிட்டாங்க. சாவு வீடுன்னு கூட பாக்காம இந்த வீட்ட வித்தா எங்களுக்குக் குடுங்கன்னு ஓயாம மாறிமாறி வந்துகிட்டே இருந்தானுங்க. பெரிய புள்ள என்னா பண்ணாரு தெரியுங்களா? இந்த வீட்ட வித்து கிடைக்கக்கூடிய பணத்த சென்னையில மனநலம் பாதிக்கப்பட்ட புள்ளைங்க இருக்கிற ஒரு பள்ளிக்கூடத்துக்கு . குடுக்கணும்ன்னு எழுதி வச்சிட்டு போயிட்டாரு. பெரிய புள்ள கூட்டாளி ஒருத்தரு இந்த ஊருல வக்கீலா இருக்காரு. அவருகிட்டதான் அந்த பொறுப்பு இருக்குது. இன்னைய தேதிக்கு இதும் மதிப்பு மூணு கோடி ரூபா. தானமா குடுக்க யாருக்கு மனசு வரும் சொல்லுங்க? பெரியவராட்டமே அவருக்கும் பெரிய மனசு….”
காவல்காரர் உருக்கமாகச் சொல்வதை கேட்டபடி  சுவரையொட்டி போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட ஆல்பங்கள், புத்தகங்கள், துணிமணிகள், செய்தித்தாள்கள் என ஒவ்வொன்றையும் பார்த்தேன்.
“இந்த ஊட்ட வித்துமுடிக்கறவரிக்கும்தாங்க நான் இங்க இருப்பேன். அப்பறமா புள்ளைகூட இருக்கறதுக்கு பெங்களூரு போயிடுவேங்க….”
“புள்ளை என்ன செய்றாரு?”
“ஏதோ ஒரு கம்ப்யூட்டரு கம்பனியில வேல செய்றான்ங்க. அவன்  காலேஜ்ல சேர்ந்து பி.இ. முடிக்கறதுக்கு பெரியவருதாங்க உதவி செஞ்சாரு. உதவின்னு வந்து நிக்கறவங்களுக்கு ஐயா உயிரயே குடுப்பாருங்க…..”
ஓரமாக இருந்த ஒரு சின்ன பென்சிலின்மீது என் பார்வை விழுந்தது. அதை எடுத்து கைக்குள் வைத்து உருட்டினேன். “நான் இத எடுத்துக்கலாமா?” என்று காவல்காரரிடம் கேட்டேன். நம்பமுடியாதவர்போல ஒருகணம் அவர் விழிகள் உறைந்து தெளிந்தன. பிறகு “ஐயா ஞாபகமா கேக்கறிங்க போல, எடுத்துக்குங்க…..” என்றார்.
பென்சிலை பைக்குள் வைத்துக்கொண்டு திரும்பி நடந்தேன்.
“ஐயா போல இருக்கறவங்களுக்குலாம் சாவே கெடயாதுங்க. ஏதாச்சிம் ஒரு ரூபத்துல நம்மகூடவே இருப்பாங்க.…..”
வீட்டைவிட்டு வெளியே வந்து காவல்காரரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன். அடுத்த பயணத்தில் இந்த வீட்டைப் பார்க்கமுடியாது என்கிற எண்ணம் புரள, மிண்டுமொரு முறை திரும்பிப் பார்த்தேன்.
“என்னாச்சிங்க? எதயாச்சிம் மறந்துட்டிங்களா?” என்று கேட்டார் காவல்காரர். “ஒன்னுமில்ல” என்றபடி தலையசைதேன் நான்.

(உயிர்மை இதழில் வெளியான சிறுகதை)