Home

Thursday 5 March 2015

பெரியம்மா (சிறுகதை)

வரட்டுமா பெரீம்மா. ராதிகா வந்துட்டா. காலையில நான் கஞ்சி எடுத்துகினு வரேன். எத நெனச்சியும் பயப்படக்கூடாது, தெரியுதா?” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்தார் அம்மா. புடவைச் சுருக்கங்களை நீவிச் சரிப்படுத்தியபடி, சரிவாக வைத்திருந்த தலையணையில் பொம்மைபோல படுத்திருந்த பெரியம்மாவின் மெலிந்த தோளைத் தொட்டு சில கணங்கள் அழுத்தினார். பிறகு, தலைமுடி உதிர்ந்து மொட்டையாகிவிட்டிருந்த தலையை மெதுவாக வருடிக் கொடுத்தார். அப்புறம், விரல்களைத் தாழ்த்தி ஒட்டிப் போயிருந்த வலது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி புன்னகைத்தார்.
நீங்க கெளம்புங்கம்மா. பெரீம்மாவ நான் பார்த்துக்கறேன்என்றபடி ஓரமாக வைத்திருந்த கைப்பையை எடுத்துக் கொடுத்தேன் நான். அதை உடனே வாங்கிக்கொண்டார் அம்மா.
இன்னும் ஒரு சிட்டிங்தான் பெரீம்மா. பல்ல கடிச்சிகினு தாங்கிக்குங்க. அப்பறமா நம்ம வீட்டுக்கு போயிடலாம். சரியா? ஐயனாரு, திரோபதயம்மா, முருகரு, பிள்ளையாருலாம் உங்கள சுத்தி காவலுக்கு நிக்கறாங்கன்னு நெனச்சிக்குங்க. என்ன புரியுதா?”

வறட்சியான புன்னகையொன்று பெரியம்மாவின் உதடுகளில் படர்ந்ததைப் பார்த்தேன்.அவுங்கள்ளாம் எதுக்கும்மா? எனக்கு நீ இருக்கியே, அது ஒன்னே போதும்என்று சொன்னபடி கண்களை உருட்டினார். மறுகணமேஅப்ப நான் வேணாமா பெரீம்மா?” என்று பெரியம்மாவைப் பார்த்து விரலை நீட்டிக் கேட்டேன். அவர் கண்கள் தளும்பிவிட்டன.
நீயும்தான்டி செல்லம். நீ என் குட்டித்தங்கமாச்சே, உன்ன மறப்பனா?” என்றபடி என் கையை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். உடனேநல்ல பெரீம்மாஎன்றபடி அவர் கன்னத்தில் முத்தமிட்டேன்.
மனுஷிய சாமியாக்கலைன்னா பெரீம்மாவுக்கு தூக்கமே வராதுஎன்றபடி பெரியம்மாவின் கைமணிக்கட்டின் பக்கம் அழுத்தி விடுவித்தார் அம்மா. பிறகு, என் பக்கம் திரும்பிகவனமா பார்த்துக்கடி. ஏதாவது அவசரம்ன்னா செல்லுல கூப்பிடுஎன்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
பக்கத்துப் படுக்கையில் சாய்ந்தபடி ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டே இருந்த அம்மா, சில கணங்களுக்குப் பிறகு ஆழ்ந்த பெருமூச்சுடன் முகத்தைத் திருப்பி ஜன்னல்கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த ஒரு வேப்பமரத்தின்பக்கம் பார்ப்பதை தற்செயலாகக் கவனித்தேன். விழிகள் தளும்பி கசிந்த கண்ணீர்த்துளிகளை விரலை உயர்த்தித் துடைத்துக்கொண்டார் அவர். அந்த அசைவுக்கே தன் தோளில் கடுமையான வலி படர்வதை உணர்ந்ததுபோல முகம்சுருக்கி முனகினார். அவர் நெற்றியோரத்திலும் கழுத்திலும் பட்டையாக இழுத்ததுபோல ஒரு கரிய கோடு படர்ந்திருந்தது.
நான்தண்ணி கொஞ்சம் குடிக்கறிங்களாம்மா?”  என்றபடி எழுந்து பிளாஸ்க்கிலிருந்து தம்ளரில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்று அவருடைய உதடுகளிடையே வைத்தேன். ஒருகணம் எதுவும் புரியாமல் என்னையே வைத்த கண்ணை விலக்காமால் பார்த்தார்.ம். குடிங்கம்மாஎன்று மீண்டும் சொன்னேன் நான். மெதுவாக, ஆறேழு மிடறுகள் குடித்த பிறகு போதும் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தார் அவர். தளர்வாடையையும் போர்வையையும் கடந்து அவருடைய கால்கள் நீண்டிருந்தன. நல்ல சிவப்பு நிறம். போர்வையின் மடிப்புகளை விலக்கி அவர் கால்வரைக்கும் இழுத்துவிட்டேன்.
கட்டில் காலுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த மருத்துவக் குறிப்பட்டையைப் படித்தபோதுதான், இரண்டு மாதங்களுக்கும் மேலாக அந்த மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளி அவர் என்பது புரிந்தது. பெயர் சங்கரியம்மாள். இடது மார்பகத்தில் புற்றுநோய். எடுத்துவிட்டார்கள். மூன்றாவது மாடியில் சில வாரங்கள். அறுவைசிகிச்சை முடிந்து ஆழ்கவனப்பிரிவில் இரண்டு வாரங்கள். மீண்டும் மூன்றாவது மாடியில் ஒரு வாரம் என தங்கவைக்கப்பட்டு, இந்த இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார். ஒரு கணம் அவரை நிமிர்ந்து பார்த்தேன். உருண்டையான முகம். அடர்த்தியான புருவங்கள். நீளமான மூக்கு. பருவத்தில் பேரழிகியாக இருந்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் குடியிருந்த ஒருவருக்கும் இதேபோல மார்பகப் புற்றுநோய் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குமுன்பாக, பெங்களூரில் அவருக்கு அறுவைசிகிச்சை நடந்தது. குணமாகி திரும்பிவந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக உயிருடன் இருந்தார். அப்புறம் காலமாகிவிட்டார். எங்கள் பள்ளியில் வேதியியல் பாடம் எடுத்த பார்வதி மேடம்கூட மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்தான். சிகிச்சை முடிந்து எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அவர் உயிருடன்தான் இருக்கிறார். தொடர்பில்லாமல் பல பழைய செய்திகள் நினைவில் படர்ந்தன.
அந்த பெட்டிய கொஞ்சம் எடுத்துத் தரியாம்மா?” என்று அந்த அம்மா கேட்டதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். உடனே சட்டென்று எழுந்து பக்கத்தில் மேசைமீது வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். கைகளை ஊன்றி பின்னால் நகர்ந்து உட்கார்ந்துகொண்டு பெட்டியைத் திறந்தார் அவர். நான் நினைத்திருந்தது போலவே பட்டைபட்டையாக ஏராளமான மாத்திரை அட்டைகள். ஒவ்வொன்றாக விலக்கி விலக்கி, அடியில் இருந்த ஒரு சிவப்பு அட்டையை எடுத்துப் பிரித்தார். உருண்டையான கற்பூரம்போல இருந்தது மாத்திரை. தம்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு அவர் அருகில் சென்றேன். அவர் புன்னகைத்தபடி வாங்கிக்கொண்டு சில கணங்கள் கண்களை மூடியிருந்தார். பிறகு கண்களைத் திறந்து மாத்திரையை விழுங்கி தண்ணீர் பருகினார்.
அருகில் இருந்த துண்டை எடுத்து, வாய் ஓரத்திலும் கழுத்திலும் வழிந்திருந்த தண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றியதால், ”எந்த ஊரும்மா நீங்க?” என்று கேட்டேன்.திண்டிவனம்என்றார் அவர். பதில் சொல்லும்போது அவருடைய பல்வரிசையைக் கவனித்தேன். உதடுகளுக்குள் ஒடுங்கி அழகாக இருந்தது. ஈறுகள் கருத்திருந்தன.
உங்களுக்கு தொணையா யாரும் வரலையா?” என்று மெதுவாகக் கேட்டேன்.
பகலுக்கு ஒரு ஆளு, ராத்திரிக்கு ஒரு ஆளுன்னு ரெண்டு பேர போட்டிருக்குதும்மா. பகல் ஆள் லீவ் சொல்லிட்டு போயிட்டுது. அவள பொண்ணு பார்க்கறதுக்காக யாரோ வராங்கன்னு சொன்னா. ராத்திரி ஆளு இந்நேரத்துக்கு வந்திருக்கணும். காணோம். என்ன காரணமோ தெரியலை
அடுத்த கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா என்று நான் தயங்கிக்கொண்டிருக்கும்போதே, தனது கட்டிலிலிருந்தபடி பெரியம்மா என்னைப் பார்த்துஒரு நிமிஷம் உன் வாய் சும்மா இருக்காதாடி? தொணதொணன்னு எதுக்குடி பேசிகினே இருக்க?” என்று அதட்டினார். பிறகு கட்டிலில் இருந்தவரிடம்அம்மா, தப்பா எதுவும் நினைச்சிக்காதிங்க. சரியான தோல்வாய் இவளுக்கு. விட்டா இருவத்தி நாலுமணிநேரமும் பேசிகினே இருப்பா. என்ன பேசறோம், யார்கிட்ட பேசறோம், அவுங்க நெலம என்னன்னு எதயும் யோசிச்சியே பார்க்கமாட்டாஎன்று மன்னிப்பு கோரும் குரலில் சொன்னார்.இருக்கட்டும் விடுங்கம்மா. சின்ன பொண்ணுதானஎன்றார் அவர்.இந்த வாயாடியையா சின்ன பொண்ணுன்னு சொல்றீங்க. சரியான ஜகதலக்கில்லாடிஎன்றார் பெரியம்மா. உடனே பொய்க்கோபத்தோடு வேகமாக எழுந்து பெரியம்மாவின் பக்கத்தில் நின்று விரலை நீட்டி, “இங்க பாரு பெரீம்மா. இப்படிலாம் பேசினா, இப்பவே நான் எழுந்து போயிடுவேன், பார்த்துக்கோஎன்று பொரிந்து தள்ளினேன். மறுகணமே, பெரியம்மா கைகளை நீட்டி என்னைப் பக்கத்தில் இழுத்துக்கொண்டார்.வாடி வாடி வாடி. கோவிச்சிக்காதடி. வாடி. நீ இல்லாம நான் எங்கடி செல்லம் போவேன்என்றபடி என் கன்னத்தைத் தொட்டுக் கிள்ளி தன் உதடுகள்மீது ஒத்திக்கொண்டார்.
தங்கமான பொண்ணு. கண்ணுல கடவுள் அம்சம் தெரியுது. எங்க போனாலும் மகராசியா இருப்பா. கவலப்படாதிங்கசங்கரியம்மாவின் சொற்களைக்  கேட்டு பெரியம்மாவின் கண்கள் மலர்ந்தன. என் கன்னங்களை மீண்டும் தன் விரல்களால் தொட்டு, தன் நெற்றியில் மடித்துவைத்து அழுத்தி நெட்டி முரித்தார்.எங்க வீட்டு மகராசி உலகத்துக்கே மகராசியாகப் போறாஎன்றார். கூச்சத்தில்சும்மா இருங்க பெரியம்மாஎன்று அவர் தொடையில் அழுத்தினேன்.  
சாரி மேடம்….. சாரி மேடம்….. ரயில்வே சிக்னல்ல வண்டி மாட்டிகிச்சி மேடம். லேட்டாயிட்டுதுஎன்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன்.  அவசரமாக உள்ளே வந்த பெண் சங்கரியம்மாளின் அருகில் சென்று நின்று கைகளைத் தொட்டுக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன்.பழக்கத்துல பழைய ரூமுக்கு போயிட்டேன் மேடம். வாசல்வரைக்கும் போயிட்டு, ஞாபகம் வந்து திரும்பி ஓடியாந்தேன் மேடம். அதுல வேற கொஞ்ச நேரம் ஓட்டிட்டுதுஎன்று பரபரப்புடன் சொல்லிமுடித்தாள். பிறகு அமைதியடைந்தவளாக, “பாத் ரூம் போவணுமா மேடம்?” என்று கேட்டாள். அவர் தலையை அசைத்துவேணாம்மாஎன்று பதில் சொன்னார். அடுத்துமாத்திரை போடற நேரமாய்டுச்சே மேடம்என்றபடி பெட்டியை எடுத்துத் திறக்க முனைந்தாள் அவள்.போட்டுட்டேன்மா. அதோ, அந்தப் பொண்ணுதான் எடுத்துக் குடுத்தாஎன்று சங்கரியம்மாள் என் பக்கமாக விரலை நீட்டியபோதுதான் அவள் என்னைப் பார்த்தாள். ஒருகணம் அவள் உதடுகளில் ஒரு சிரிப்பு படர்ந்து உறைந்தது.  
எத்தன நாளாம்மா இப்படி?” பெரியம்மா
சங்கரியம்மாவுடைய கட்டிலின் பக்கமாக திரும்பி உட்கார்ந்துகொண்டு கேட்டார்.
இதுக்குலாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடமுடியுமா? தெம்பா இருக்கறவரைக்கும் நல்லா இருக்கறோம்ன்னு நாமளே நினைச்சிக்கிறோம். முடியலைன்னு ஒருநாள் படுக்கறபோதுதான் ஒன்னொன்னா நமக்கே தெரியுது.என்றார் சங்கரியம்மாள்.
பெரியம்மா கனிவான குரலில், “கடலசெடிகூட களயும் வளந்துர்றமாரி இந்த வியாதியும் உடம்புக்கூடவே வளர்ந்துடுதுபோல. புடுங்கி போட்டுரலாம்ன்னு நெனைக்கறதுக்குள்ள திடுதிடுனு முத்தி மரமாய்டுது. நம்ம கையில என்னம்மா இருக்குது?” என்றார்.
மழ வரும்ன்னு கண்டுபுடிக்கறதுக்கு கூட இந்த காலத்துல மிஷின் வந்துட்டுதுன்னு சொல்றானுங்க. இந்த மாதிரி நோய்ங்க வரப் போவுதுன்னு கண்டு சொல்ல ஒரு மிஷின் இல்லை. எல்லா கருமாந்தரமும் வந்தபிறகுதான தெரிஞ்சிக்கறோம்சோகமும் சலிப்பும் நிறைந்த குரலில் சங்கரியம்மாள் பதில் சொன்னதைக் கேட்க வருத்தமாக இருந்தது.
எத்தன புள்ளைங்க?” பெரியம்மா சாதாரணமாக ஒரு கேள்வியைக் கேட்டு பேச்சின் திசையை மாற்றிவிட்டார்.
எல்லாரும் பெத்துக்கறமாரிதான் ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னுன்னு பெத்தேன். ஒன்னொன்னும் வளர்ந்து படிச்சி பெரிய ஆளாயி வேலை கிடைச்சி அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு போயிட்டுதுங்க. எதுவும் பக்கத்தில இல்லைசங்கரியம்மாள் கசப்போடு நாக்கை சப்புக்கொட்டியபடி சில கணங்கள் அமைதியாக இருந்தார்.செத்தாகூட வருதுங்களோ இல்லயோ, அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்?”
தொடர்ந்து அவரைப் பேசவிடாமல் தடுத்த பெரியம்மாஅடடா, வெளக்கு போட்ட சமயத்துல இப்பிடி பெரியபெரிய வார்த்தைங்கள பேசலாமா? உட்டன்னு சொல்லுங்கஎன்று அவசரமாகச் சொன்னார். அவர் குரலில் கனிவு இழைந்தோடியது.பெத்த மனசு எதிர்பார்க்கறதுல ஒரு தப்பும் இல்ல. அதே சமயத்துல ஒவ்வொன்னும் அததும் வேலையையும் பாக்கணுமா வேணாமா? பக்கத்துலயே இருந்தாமட்டும் நம்ம நோயையும் நோவையும் வாங்கிக்கவா போவுதுங்க? நம்ம வலிய நாமதான் தாங்கியாவணும்…….” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு நிறுத்தினார்.
சுவரோடு பதிக்கப்பட்டிருந்த குழல்விளக்கின் திசையிலேயே சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தார் சங்கரியம்மாள். பிறகு நீண்ட பெருமூச்சோடு, “கடசி காலத்துல புள்ளைங்கள்ளாம் பக்கத்துல இருந்து கரயேத்தறதுதான பெத்தவங்களுக்கு நிம்மதி. அந்த குடுப்பனைக்குக்கூட வழியில்லாத அளவுக்கு…. “ என்று இழுத்தார். தொடர்ந்து பேசமுடியாமல் நெஞ்சை அழுத்திக்கொண்டார்.
உடனடியாக பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்த பெரியம்மா மெதுவான குரலில்நம்மள பாத்து நாமளே ஒருநாளும் பரிதாபப்படக் கூடாது. அது ஒரு பெரிய வியாதிஎன்று சொன்னார். பிறகு, ”ஆத்தா அப்பன காலம்பூரா கண்கலங்காம வச்சி காப்பாத்தணும்ன்னு நெனக்கற கணக்கும் உண்டு. பெத்தவங்க எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு ஆடுமாடுங்களாட்டம் போவற கணக்கும் உண்டு. நம்ம பேர ஆண்டவன் எந்த கணக்குல வச்சிருக்கானோ? அதயெல்லாம் அறங்கணக்கு பொறங்கணக்கா சொல்றது ரொம்ப கஷ்டம். தண்ணி இழுக்கறபக்கம் தோணி போவறமாரி போயிகினே இருக்கணும். அவ்ளோதான். அதுக்குமேல ஒன்னுமில்ல….” என்றார். அதைக் கேட்டதும், அதுவரை கலங்கியிருந்த சங்கரியம்மாளின் கண்களில் ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது.
 “புள்ளைங்களுக்கு கல்யாணம் ஆயிட்டுதா?” என்று பெரியம்மா பேச்சை மேலும் வளர்த்தார்.
பொண்ணு அங்கத்திய பையன் ஒருத்தனயே கட்டிகிட்டா. பையனுக்கு இங்கதான் வந்தவாசிபக்கத்துல பொண்ண பார்த்து கட்டிவச்சோம்……”
பேரப்புள்ளங்க?”
ரெண்டு புள்ளைங்க உண்டு. ரெண்டயும் அங்கயே பெத்துகிட்டாங்க. மொத புள்ளைக்கு சம்பந்தியம்மா போயி இருந்து பார்த்து வளர்த்துக்குடுத்துட்டு வந்தாங்க. ரெண்டாவது புள்ளைக்கு நான்தான் போய் கூடவே இருந்தேன். அப்பதான் இந்த கருமாந்தரத்த கண்டுபுடிச்சாங்க. ஒரு வாரமா வாந்தி நிக்கவே இல்ல.  டாக்டருட்ட கூட்டிம் போனாங்க. அந்த வெள்ளைக்காரன் ஏதேதோ டெஸ்ட்லாம் எடுத்துட்டு கடசியில மார்ல கட்டின்னு சொன்னான்.
அந்த ஊரு ஆஸ்பத்திரிதான் ஒலகத்துலயே ஒஸ்தின்னு சொல்றாங்க. அங்கயே காட்டிக்கறத உட்டு ஏன் இங்க வந்தீங்க?”
நானா எங்கம்மா வந்தேன்? அவ்ளோ ஆவும் இவ்ளோ ஆவும்ன்னு புள்ளயும் மருமவகாரியும் கூடி கூடி ஒரு வாரம் பேசிகினாங்க. இந்தியாவுல இதுல நாலுல ஒரு பங்குதான் செலவாவும்ன்னு சொல்லி மூட்ட கட்டி அனுப்பி வச்சிட்டுதுங்க. என் ஊட்டுக்காரு உயிரோட இருந்தா, இப்படி அனாதயா உழுந்து கெடந்திருக்கமாட்டேன். என் தலயில எழுதன எழுத்து கோணலாயிட்டுது. யார சொல்லி என்ன பிரயோஜனம்?…….” சங்கரியம்மாள் வேதனையோடு சிரித்ததை கண்ணால் பார்க்கவே முடியவில்லை. சிறிது நேரத்துக்கு முன்பாக படர்ந்திருந்த வெளிச்சம் சுத்தமாக அணைந்துவிட்டது.
சில கணங்கள் இருவருமே பேசிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெதுவாக பெரியம்மா மற்றொரு கேள்வியைக் கேட்டார்.இங்க யாரு சேத்தாங்க?”
சம்பந்தி ஊட்டு அம்மாதான் சேத்து உட்டுட்டு போச்சி. வாரத்துக்கு ஒருதரம் வந்து பணம் கட்டிட்டு போவும். பகலுக்கு ராத்திரிக்குன்னு இந்த ரெண்டு புள்ளைங்க கூட அவுங்க ஏற்பாடுதான்……”
இனிப்பு சாப்புடலாமில்ல?” என்று கேட்டு சங்கரியம்மாள் தலையசைத்த பிறகு, பிளாஸ்க்கிலிருந்த பழச்சாற்றை இரண்டு தம்ளர்களில் நிரப்பி இருவருக்கும் கொடுத்தேன்.எந்த நோவுநொடியையும் வாழ்க்கையில குடுக்காத கடவுள், கட்டய சாய்க்கற நேரத்துல இந்த நோவ குடுத்துட்டான்என்றபடி தம்ளரை உதட்டுக்கருகில் கொண்டு சென்றார் சங்கரியம்மாள்.இந்தமாதிரி நினைக்கறதுதான் வியாதியைவிட பெரிய வியாதி. புரியுதுங்களா? சீக்கிரமா கொணமாயி நூறு வருஷம் இருப்பிங்க நீங்கஎன்றேன். அதைக் கேட்டுநல்ல பொண்ணு. நீ இரு நூறு வருஷம்என்றார் அவர். பிறகு, “நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம் சொல்லுஎன முணுமுணுத்தபோது அவர் கண்கள் தளும்பியிருப்பதைப் பார்த்தேன்.
திரும்பி இன்னொரு தம்ளரில் சாற்றை நிரப்பி கட்டிலுக்கு அருகிலேயே நின்றிருந்த தாதிப்பெண்ணிடம் கொடுத்தேன்.வேணாம் மேடம், வேணாம் மேடம்என உடனே அந்தப் பெண் பதற்றத்தோடு மறுத்தாள்.ஹலோ, அவுங்கதான்  உனக்கு மேடம். நான் கெடயாது, வெறும் ராதிகா. தெரியுதா? இந்தா குடிஎன்று ஒருமையில் அழைத்துச் சொன்னதும் வாங்கிப் பருகினாள்.
மெட்ராஸே ஒங்களுக்கு சொந்த ஊரா?” என்று பெரியம்மாவைப் பார்த்துக் கேட்டார் சங்கரியம்மாள்.
இல்லம்மா. இப்பதான் ஒரு அஞ்சாறு வருஷமா இந்த பட்டணத்துல இருக்கறன். சொந்த ஊரு விழுப்புரத்துக்கு பக்கத்தில. பனங்குப்பம்னு ஒரு ஊரு.
இங்க பொண்ணு குடுத்திருக்கிங்களா?”
சங்கரியம்மாளைப் பார்த்து ஒருகணம் புன்னகைத்தார் பெரியம்மா.பொண்ணும் இல்ல புள்ளயும் இல்ல. நான் ஒரு ஒண்டிக்கட்ட”. கட்டில் விரிப்பை தடவிக்கொண்டே உரையாடலைக் கேட்டபடி இருந்த என்னை பெரியம்மாவின் பதில் சீண்டியதைப்போல இருந்தது. உடனே தலையை வேகமாக நிமிர்த்திபெரீம்மா, என்ன?” என்று சத்தமாகக் கேட்டேன். உடனடியாக குரலை மாற்றிய பெரியம்மாஐயையோ, தப்பா சொல்லிட்டேன். தப்பா சொல்லிட்டேன். இந்த ராட்சசி இருக்காளே, இவதான் என் வம்சம். நான் பெரிய சம்சாரிஎன்று சிரித்தார்.ம். அது. அது எப்பவும் ஞாபகத்துல இருக்கணும்என்று எச்சரிக்கையாக ஆட்காட்டி விரலைக் காட்டியபோது  “சரிடிம்மா, சரிடிம்மாஎன்று பெரியம்மா வணங்குவதுபோல தலைகுனிந்தார். அவருடைய மொட்டைத்தலையைப் பார்த்ததும் ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது. பெரியம்மாவை தொடையில் கிள்ளிவிட்டு சிணுங்கினேன்.
பட்டணத்துக்கு வரதுக்கு மின்னால……. ஒரு முப்பது நாப்பது வருஷம் இருக்கும்….. பனங்குப்பத்துல ஒரு ரெட்டியாரு கழனியில எங்க அப்பாவும் அம்மாவும் கூலிக்கு வேல செஞ்சிட்டிருந்தாங்க. ஒருநாளு தண்ணி பாய்ச்ச மோட்டாரு போட போன சமயத்துல அப்பாவ கரண்டு அடிச்சிடுச்சி. அங்கயே உழுந்து துடிச்சித்துடிச்சி செத்துட்டாரு. அப்பாவ புடிக்க போன அம்மாவும்  செத்துட்டாங்க.  பொழைக்க வேற வழி இல்லாம அந்த சேத்துலயே நானும் வேல செஞ்சிட்டு கெடந்தேன். ஒத்தையில இருக்கறது கஷ்டம்ன்னு சீக்கிரமாவே புரிஞ்சிட்டுது. கண்டகண்ட பொறம்போக்குலாம் கைவச்சி பாத்துடலாம்ன்னு நேரம் கெட்ட நேரத்துல வந்து நின்னுதுங்க. எவ்ளோ காலத்துக்குத்தான் அவனுங்க மூஞ்சி முன்னால பிஞ்சிபோன செருப்பயும் தொடப்பகட்டயயும் காட்டி தப்பிச்சிக்க முடியும், சொல்லுங்க. சீ, ஆதரவில்லாம ஒருத்தி இந்த மண்ணுல உயிரோடவே இருக்கக்கூடாதுனு நெனச்சி சமுத்திரத்துல உழுந்து செத்துடலாம்ன்னு ஒருநாளு ஊரவிட்டே கெளம்பிட்டேன்…….”
தற்கொலையா? நெஜமாவா?” சங்கரியம்மாள் உதட்டின்மீது விரலை வைத்தபடி அதிர்ச்சியோடு கேட்டாள்.  
மானத்த காப்பாத்திக்க தெனம்தெனம் சாவறதவிட ஒரேடியா செத்து போவலாமில்ல. அண்ணன் மொற தங்கச்சி மொற கூட தெரியாம மேல வந்து உழ நெனைக்கிற பொறுக்கிங்க ஊருல இந்த உயிர வச்சிகினு என்ன செய்ய?” என்று கேட்டார் பெரியம்மா.கெளம்பி கெழக்குல பிச்சேரி பக்கமா போய்கினே இருந்தேன். பொழுது இருட்டிட்டுது. பசியில் கைகாலுலாம் வெலவெலன்னு தொவண்டுபோச்சி. ஒரு கொழாயில தண்ணிய புடிச்சி குடிச்சிட்டு பக்கத்துலயே ஒரு திண்ணையில படுத்து தூங்கிட்டேன்….. யாரோ தட்டி எழுப்பன பிறகுதான் கண்ண தெறந்தேன். வெளிச்சம் கண்ண கூசுது. ஐயோ வெடிஞ்சிட்டுதேன்னு அரக்கப்பரக்க எழுந்து என்ன எழுப்பனவங்கள பார்த்து மன்னிச்சிக்க தாயேன்னு கையெடுத்து கும்பிட்டேன். என்ன சேதின்னு கேட்டப்போ இப்படி இப்படி நடந்ததுன்னு எல்லாத்தயும் ஒன்னு உடாம சொன்னேன்.சரி சாப்புடறியான்னு கேட்டாங்க. கொஞ்சம் தண்ணி வாங்கி பல்ல தேச்சிகினு அங்கயே ஒக்காந்தேன். அந்த அம்மா அதட்டி உள்ள கூட்டு உக்காரவச்சி சோறு போட்டுது…….” தொடர்ந்து சொல்லமுடியாமல் பெருமூச்சு விட்டார் பெரியம்மா. சங்கரியம்மாள் பெரியம்மாவை ஆதரவோடு பார்த்தபடி மெளனமாக இருந்தார்.
சோறுமட்டுமா போட்டாங்க? கழனிவேல தவிர வேற எந்த வேலயும் தெரியாத மண்ணு நான். அந்த அம்மாவே ஒவ்வொன்னயும் கத்துக்குடுத்து, ஊட்டுக்குள்ளயே ஒரு ஆளா வச்சிகிட்டாங்க……”
பெரிய மனசுதான். வேலை பார்க்கறவங்களா?”
ஆமா. பெரிய அதிகாரி. எப்பவும் கார்லதான் போவாங்க. வருவாங்க. பிச்சேரிலேருந்து கடத்திட்டு போற பிராந்தி சாரயத்தையெல்லாம் கண்டுபுடிச்சி நிறுத்தறதுதான் அம்மா வேலை. சோதனை சோதனைன்னு நேரம் காலம் தெரியாம ஓடிகிட்டே இருப்பாங்க. நிர்மலா மேடம்ன்னா ஊரே ஏந்து நின்னு கும்புடும். பெரியபெரிய பதவியில இருக்கப்பட்டவங்கள்ளாம் அம்மாவ பாக்க வரிசையில வந்து நிப்பாங்க….”
அப்படியா?” சங்கரியம்மாள் ஆச்சரியத்தில் மலைப்போடு பார்த்தார். நீண்ட நேரமாக உட்கார்ந்தபடியே இருந்ததில் இடுப்பில் வலி பரவிவிட்டதால் கையை ஊன்றி மெதுவாகப் படுக்கையில் மெதுவாகச் சரிந்தார். தாதிப்பெண் ஓடிவந்து தலைக்கு வசதியாக தலையணையை வைத்தார்.
பராசக்தி அம்சம் அவுங்க……. த்ச்குடும்ப வாழ்க்கைதான் அவுங்களுக்கு சரியா அமையாம போயிடுச்சி. எவனோ ஒரு கூட படிச்ச பையன்மேல சின்ன வயசுலயே ஆசப்பட்டு கல்யாணம்வரைக்கும் போயிட்டுதுபோல. ரெண்டு மூணு வருஷத்துல பெரிய குடிகாரனா மாறிட்டானாம் அவன். சந்தேக புத்தி வேற. எவ்வளோ சொல்லியும் திருந்தலையாம். சரி, போடா கழுதைன்னு கோர்ட் மூலமா அவன்கிட்டேருந்து பிரிஞ்சி வந்துட்டாங்களாம். எல்லாம் அவுங்களா ஒருநாளு சொல்லசொல்ல கேட்டதுதான். ஆனா பதவியில மேலமேல போயிகினே இருந்தாங்க……. பிச்சேரிலேருந்து பெங்களூரு…. அப்பறம் அங்கேருந்து பம்பாய், கோவா, எர்ணாகுளம்……. கடைசியா இங்க சென்னைக்கு வந்துதான் ஓய்வு வாங்கனது…… எல்லா எடத்துக்கும் என்னயும் கூடவே வச்சிகிட்டாங்க……அவுங்களப்போல இன்னொருத்தவங்க இந்த உலகத்துல பொறந்தாதான் உண்டு…….”
புராணகாலத்துலதான் வள்ளல்ங்க சில பேரு ஏழைபாழைங்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிச்சாங்கன்னு சொல்வாங்க. நம்ம கலிகாலத்துலயும் இப்படி நடக்குதுங்கறது பெரிய விஷயம்……”
இது என்னம்மா பெரிய விஷயம்? ஒரு பிச்சைக்காரி நான். என்ன பார்த்து வாடிபோடின்னு சொல்லாத ஆளே கெடையாது. ஆனா, அந்த அம்மா மொத நாளே என்ன பார்த்து பெரியம்மான்னு வாய் நிறைய கூப்ட்டாங்க, தெரிமா?. அத நெனச்சா இன்னிக்கும் என் உடம்பு சிலுத்து போவுது. அதுதான் எல்லாத்தயும் விட பெரிய விஷயம். இவுங்களுக்குத்தான் பெரீம்மான்னா, அவுங்கள பெத்த அம்மா அதுக்கும் மேல. அவுங்களும் சாவறவரைக்கும் பெரீம்மா பெரீம்மான்னுதான் கூப்புட்டாங்க.
சங்கரியம்மாள் வாய்மேல் விரலை வைத்தாள்.உங்க கூடவே இருந்துட்டு இப்ப கெளம்பி போனாங்களே, அவுங்களையா சொல்றிங்க? ஒங்க சொந்தக்காரங்கன்னு நான் நெனச்சிட்டிருந்தேன்.
அவுங்களேதான். இந்த நன்றிக்கடன அடைக்க இன்னும் இந்த பூமியில எத்தனமுறை பொறந்தாலும் போதவே போதாது. என்ன மட்டுமில்ல, என்னப்போல எத்தனையோ பேர அவுங்க காப்பாத்தி ஆளாக்கி விட்டிருக்காங்க. அவ்ளோ எதுக்கு? இதோ இங்க கண்ணுமுன்னால நிக்கறாளே, இந்த ராதிகாவும் அவுங்க வளர்ப்புதான். என்னைக்கோ ஒரு மழைநாள்ல ஸ்டேஷன் பக்கத்துல திருதிருன்னு முழிச்சிகினு அழுதுகிட்டிருந்தான்னு ஒரு சின்ன புள்ளைய தூக்கியாந்தாங்க. இன்னைக்கு வாழைமரமாட்டம் வளர்ந்து நிக்கறா. படிக்க வச்சி ஆளாக்கனதுலாம் அவுங்கதான். இவளுக்கும் நான் பெரீம்மாதான்…..”
சங்கரியம்மாள் சில கணங்கள் பேசாமல் மெளனமாக இருந்துவிட்டு, “அடடா, இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சிருந்தா அவுங்க இருக்கும்போதே நாலுவார்த்தை பேசியிருந்திருப்பேன்…….” என்றார்.
அதுக்கென்ன இப்ப? நாளைக்கு வருவாங்கல்ல, அப்ப பேசுங்கஎன்றார் பெரியம்மா. அவருடைய மொட்டைத்தலைமீது குழல்விளக்கின் வெளிச்சம் பிரதிபலித்தது.
நாளைக்கா?”  என்று ஒருகணம் இழுத்தார் அவர். உடனே பேச்சை மாற்றும் விதமாகஅது சரி, இங்க எப்படி வந்து சேந்தீங்க? அத சொல்லவே இல்லியேஎன்று கேட்டார்.
அவுங்கதான் கொண்டாந்து சேத்தாங்க. ஆறேழு மாசமாவே வயித்துவலி. அப்பப்ப வரும். போவும். வீட்டுக்கு பக்கத்திலயே ஒரு டாக்டர்கிட்டதான் மொதல்ல காட்டனோம். வாயுவா இருக்கும், செரிமானம் சரியில்லாம இருக்கும்ன்னு சொல்லி ஏதேதோ ஊசிலாம் போட்டாரு அவரு. மாத்திரைகூட குடுத்தாரு. ஒரு பத்துநாள் நல்லா இருக்கும். அப்பறம் பழய குருடி கதவ தெறடின்னு வலி கொடச்சல் குடுக்கும். கடசியா ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துட்டா நல்லதுன்னுதான் இங்க வந்தம். மொதல்ல ஏதோ கட்டின்னு சொன்னாங்க. கடசியா புத்து நோய்னு சொல்லிட்டாங்க. கரண்ட் வச்சி கரண்ட் வச்சி என் தலை மொட்டையானதுதான் மிச்சம்.
பெரியம்மாவின் குரல் தேய்ந்துகொண்டே வந்து அப்படிச் சொன்ன விதத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. உடனே நான்நல்லாய்டும் பெரீம்மான்னு இதுவரைக்கும் ஆயிரம்தரம் சொல்லியாச்சி. அதுக்கப்புறமும் நீங்க இப்படிலாம் பேசலாமா?. இப்பவே நான் அம்மாகிட்ட சொல்லிடுவேன்என்று அதட்டும் குரலில் சொன்னேன்.
சரிடி தாயே. எனக்காக இல்லைன்னாலும் உனக்காகவாவது பொழச்சி எழுந்து வந்துடுவேன், போதுமா?” என்று சிரித்தார் பெரியம்மா. அந்தச் சிரிப்பைப் பார்த்தபிறகுதான் என் மனம் நிம்மதியடைந்தது.
எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டே, தாதிப்பெண்ணின்  துணையோடு சங்கரியம்மாள் கழிப்பறைக்குச் சென்று திரும்பினார். அவர் தோளைப்பற்றி மெதுவாக படுக்கையில் உட்காரவைத்துவிட்டு, பெட்டியைத் திறந்து ஒருமணிக்கு ஒருதரம் போடவேண்டிய மாத்திரையையும் தண்ணீரையையும் எடுத்துக் கொடுத்தாள் தாதிப்பெண். மாத்திரையை விழுங்கியபின்பு, பெரியம்மாவின் பக்கம் திரும்பி, ”ஒரு பாவமும் செய்யாத நம்மளமாதிரியான ஆளுங்கள ஏன் இந்த வியாதி இப்படி ஆட்டிவைக்கணுமோ? ஒவ்வொரு நிமிஷமும் உயிருபோய் உயிரு வருதுஎன்று சொன்னார்.
பழய ஜென்மங்களுடைய பாவங்கள்ளாம் நம்ம கணக்குல சேர்ந்து ஒன்னா வரும்ங்கறதுதான் நம்ம நம்பிக்கை. அத நம்மால எப்படிம்மா தெரிஞ்சிக்க முடியும்? புடிமானத்துக்கு நம்ம சுத்தி நாலு பேரு இருக்காங்களே, அது போதும் கடவுளேன்னு நெனச்சி நாம நிம்மதியா இருக்கணுமே தவிர கொறபடறதுல என்னம்மா அர்த்தம்……?”
புடிமானம்…?” என்றபடி ஒருகணம் பெருமூச்சு விட்டார் சங்கரியம்மாள். பிறகு மெதுவான குரலில்எனக்கு புடிமானமா யார் இருக்கா?” என சத்தமில்லாமல் சோகம்படர முணுமுணுத்ததை நான் காதால் கேட்டேன்.யாருக்கும் ஒரு கஷ்டமும் குடுக்காம சீக்கிரமா போய் சேர்ந்துட்டா நிம்மதியா இருக்கும்”  என்று சொன்னதும் காதில் விழுந்தது. கண்கள் கலங்க அவர் தரையையே சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டபோது என் நெஞ்சே அடைப்பதுபோல இருந்தது.
ஏதோ வேகத்தில் நான் கட்டிலைச் சுற்றியபடி அவர் அருகில் சென்று நின்றேன். மெலிந்து நீண்ட அவர் விரல்களை எடுத்து வருடியபடி, ”ஏன் அழறிங்க பெரீம்மா. புடிமானமா நாங்க இருக்கறோம் ஒங்களுக்கு. நீங்க எங்ககூட வந்து தாராளமா தங்கிக்கலாம். நான் சொன்னா அம்மா தட்டமாட்டாங்க பெரீம்மாஎன்றேன். சங்கரியம்மாள் தலைநிமிர்ந்து பெரியம்மாவின் பக்கம் பார்த்தபடி, வலிநிறைந்த ஒரு புன்னகையைச் சிந்தினார். என்னயும் பெரீம்மாவா ஆக்கிட்டியா?” என்று கேட்டபடி என் கன்னத்தைத் தொட்டார்.ஆமா, எனக்கு எல்லாருமே பெரீம்மாதான்என்று சொன்னதைக் கேட்டு, தலையசைத்தபடி சிரித்தார் அவர். பெரியம்மாவைத் திரும்பிப் பார்த்தபோது, அவரும் மொட்டைத்தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தார்.