Home

Monday 2 March 2015

‘ஊரும் சேரியும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் எங்கள் முகாமிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் நாற்பது ஐம்பது பேர் வட்டமாகக் கூடியிருக்க ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவருடைய வசீகரமான குரலும் பாடலின் வரிகளும் தொடர்ந்து செல்லவிடாமல் என்னை அங்கேயே தடுத்துவிட்டன. கூட்டத்தில் ஒருவனாக நின்று நானும் அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். ஆறேழு பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் நூறு பேருக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து வீதி நாடகமொன்று நடைபெற்றது. ஏறத்தாழ அரைமணி நேரம். அது ஒரு சாதாரணமான பிரச்சார நாடகம். ஆனாலும், ஒருவர்கூட அங்கிருந்து நகராமல் அனைவரும் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகத்திலும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாடகம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் தருணத்தில் நாடகக்குழுவினரிடம் சிறிது நேரம் பேசினேன். கர்நாடகத்தில் அக்காலத்தில் வீதி நாடகங்களுக்குப் பேர்போன சமுதாயா குழுவின் பாதிப்பால் அவர்கள் ஒரு குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்கள். பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் கவிஞர் சித்தலிங்கையா எழுதியவை என்றும் குறிப்பிட்டார். அங்கேயேஹொலெமாதிகர ஹாடுஎன்னும் சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அன்றைய பயணம் முழுக்க அவருடைய பாடல்களைப் படிப்பதிலும் நாடகக்குழுவினர் பாடிய தாளக்கட்டுக்கு இசைவாக அவ்வரிகளை வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதிலும் கழிந்தது.யாருக்கு வந்தது, எங்கே வந்தது, நாற்பத்தியேழின் சுதந்திரம்?’ என ஆவேசமும் அப்பாவித்தனமும் இணைந்து தொனிக்க, அன்று நான் கேட்ட பாட்டின்  குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளது. சித்தலிங்கையா என்னும் ஆளுமையின் பெயரையும் அவருடைய கவிதையையும் இப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் நான் தெரிந்துகொண்டேன்.

பெங்களூருக்கு மாறுதல் கிடைத்து குடியேறியபிறகு மறைந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்னாத் அவர்களுடைய தூண்டுதலால் ஒரு நாடகத்தை முதன்முதலாக மொழிபெயர்த்தேன். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு என் படைப்பு முயற்சிகளில் ஒரு பகுதியாகிவிட்டது. நவீன கன்னடக் கவிதைத்தொகுதிக்காக குவெம்பு, அடிக, த.ரா.பேந்த்ரெ தொடங்கி பல ஆளுமைகளின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தபோது சித்தலிங்கையாவின் கவிதைகளையும் இணைத்துக்கொண்டேன். நேரடியான பேச்சுமுறையைப் பின்பற்றியபடியே, நெஞ்சில் பதிவதுபோல அழுத்தமான சொற்களை முன்வைப்பவை அவருடைய கவிதைகள். நண்பர் தமிழவன் உதவியால் ஒருமுறை அவரை நேரில் சந்தித்து ஒரு சில மணிநேரங்கள் உரையாடிய அனுபவத்தை மறக்கமுடியாது. நிறப்பிரிகை இதழுக்காக அவரிடம் ஒரு நீண்ட நேர்காணலை எடுத்தேன். நண்பர்கள் ஜி.கே.ராமசாமியும் தேவராஜனும் அப்போது எனக்குத் துணையிருந்தார்கள்.
யு.ஆர்.அனந்தமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டிருந்த ருஜுவாது என்னும் இதழில்என் இளமைக்காலம்என்னும் தலைப்பில் சித்தலிங்கையா சில அத்தியாயங்கள் எழுதியிருந்தார். அவற்றில் குறிப்பிட்டிருந்த பல சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன எழுச்சியை அளித்தன. அவர் விவரித்திருந்த பல சம்பவங்கள் சிறுகதைகளாகவும் நீள்கதைகளாகவும் விரித்தெழுதத் தகுதியுடையவை என்பதை என்னால் உணரமுடிந்தது. மாட்டுக்குப் பதிலாக மனிதர்கள் நுகத்தடியைச் சுமந்திருக்க, ஒருவர் ஏர்க்கலப்பையை
அழுத்தி உழுதபடி செல்லும்  காட்சி என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. சித்தலிங்கையாவைத் தொடர்புகொண்டு அனுமதி பெற்று, அந்த அத்தியாயங்களை மொழிபெயர்த்தேன். அவற்றின் ஒரு பகுதி சுபமங்களா இதழில் வெளிவந்து பரவலாக கவனத்தைப் பெற்றது. ருஜுவாது இதழில் அடுத்தடுத்து வரவுள்ள அத்தியாயங்களைப் படிப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், அப்பகுதி இல்லாமலேயே அடுத்தடுத்த இதழ்கள் வெளிவந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ருஜுவாது இதழில் எழுதியதைப் போன்ற ஏராளமான அத்தியாயங்களோடு அவர் தன் சுயசரிதையின் ஒரு பகுதியை எழுதி முடித்துவிட்டார். ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் வெளிவந்த அந்தச் சுயசரிதை கன்னட இலக்கிய உலகத்தில் ஒரு புதிய தடத்தையே பதித்தது.

பிரசுர சாத்தியம் பற்றிய எந்த யோசனையும் இல்லாமலேயே சித்தலிங்கையா அவர்களின் அனுமதியுடன் அந்தச் சுயசரிதையை நான் மொழிபெயர்த்தேன். ஒருநாள் புதுவையில் நண்பர் ரவிக்குமாருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, சுயசரிதையைப் பற்றியும் சொன்னேன். ஏற்கனவே சுபமங்களா இதழில் வெளிவந்திருந்த அத்தியாயங்கள் சித்தலிங்கையாவுக்கு தமிழ்வாசக உலகில் பரவலான அறிமுகத்தை வழங்கியிருந்தது. அதனால் புதிய அத்தியாயங்களின் தகவல்களைச் சொன்னதுமே அதை உடனே படிக்கும் விருப்பத்தைத் தெரிவித்தார் ரவிக்குமார்.  பெங்களூருக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அவருக்கு அனுப்பிவைத்தேன். முதல் வாசகராக கையெழுத்துப் பிரதியைப் படித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தன. விடியல் வழியாக நூல் பிரசுரம் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் அவரே மேற்கொண்டார். ரவிக்குமார், சிவா இருவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இதை மொழிபெயர்க்க அன்புடன் அனுமதியளித்த சித்தலிங்கையாவும் நன்றிக்குரியவர். என் எல்லாச் செயல்களிலும் எனக்கு உற்ற துணையாக விளங்குபவர் என் அன்புத்துணைவி அமுதா. அவர் அளிக்கும் ஊக்கமே எனக்கு மிகப்பெரிய பலம். முதன்முதலாக இந்தச் சுயசரிதையை புதுவையில் வெளியிட்டுப் பேசியவர் மறைந்த விமர்சகரான டி.ஆர்.நாகராஜ். தன் சுயசரிதையில் இவரைப்பற்றி பல தருணங்களில் சித்தலிங்கையா குறிப்பிட்டிருக்கிறார். தம் இளமை நினைவுகளை அசைபோட்டபடி உணர்ச்சிப்பெருக்கோடு அவர் நிகழ்த்திய அன்றைய உரை மறக்கமுடியாத அனுபவம். இன்று அவர் உயிருடன் இல்லை. மரணம் அவரை நடுவயதிலேயே அள்ளிக்கொண்டுபோய்விட்டது. அவரையும்
இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இந்தப் புதிய பதிப்பை மிகச்சிறப்பான
வகையில் வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி.


மிக்க அன்புடன்
பாவண்ணன்