Home

Friday 13 March 2015

காட்சிச் சித்திரங்கள் - கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச்சிறகுகள்’

ழீன் காக்தே பிரெஞ்சு மொழியில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஓவியத்திலும் திரைப்படத்திலும் அளவற்ற நாட்டம் கொண்டவர்.கவிஞனின் குருதிஎன்னும் பெயரில் வெளிவந்த திரைப்படம் அவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தது. கடந்த நூற்றாண்டில் அறுபதுகளில் மறைந்துபோன அக்கலைஞன்  எழுதிய வாக்கியமொன்றை கலாப்ரியா தன்னுடைய கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் பயன்படுத்தியிருக்கிறார்.கவிஞன் கண்டுபிடிப்பதில்லை, அவன் கவனிக்கிறான்என்னும் அந்த வாக்கியம் அவர் நெஞ்சில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துபோயிருக்கிறது என்பதற்கு இத்தொகுதியின் கவிதைகளே பொருத்தமான சான்றுகளாகும். காக்தேயின் வாக்கியத்தை ஒட்டி அவர் எடுத்துக்காட்டாகச் சொல்லியிருக்கும் சம்பவமும் அதையொட்டி அவர் எழுதியிருக்கும் கவிதைவரிகளும் மறக்கமுடியாதவை.

என் வீட்டுத் திண்ணையில்
சற்றே தங்கி நீரருந்திச் சென்ற
நாடோடிப் பெண்ணின்
வியர்வை வாசனையை
வீட்டுக்குள் எடுத்து வந்தேன்
காலித் தம்ளருடன்

என்ற கலாப்ரியாவின் கவிதை இத்தொகுதியிலேயே மிகச்சிறந்த கவிதையாகும். ஒரு குறுந்தொகைச் செய்யுளின் சாயலோடு அமைந்திருக்கும் அக்கவிதை மீண்டும்மீண்டும் வாசிக்கத்தக்கதாக இருக்கிறது. ஒரு நாடோடிப்பெண்ணின் வியர்வை வாசனையை கவிதையின் மையமாக்கி, அப்பெண்ணின் அலைச்சல், களைப்பு, இடபெயர்ச்சி, இல்லாமை என கவிதையில் சொல்லப்படாத பல அம்சங்களை நோக்கி வாசகனின் கவனத்தைத் திருப்பிவிடுகிறார் கவிஞர்.  தாராளமயத்தின் விளைவாகவும் உலகமயமாக்கலின் விளைவாகவும் சமூகத்தில் நிகழ்ந்திருக்கும் மேன்மைகளையும் வளங்களையும் ஒருபக்கம் அரசின் புள்ளிவிவரங்கள் அடுக்கிக் காட்டும் தருணத்தில் மறுபக்கம் அவற்றின் கசப்பான விளைவுகளாக ஏழைகளின் தற்கொலைகள், இடப்பெயர்வுகள், அழிந்துபோகும் கைத்தொழில்களின் வாய்ப்புகள், பட்டினிச்சாவுகள், ஒருவேளைச் சோற்றுக்கு நாடோடியாக அலையநேர்ந்துவிட்ட அவலங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசவோ, நினைத்துப் பார்க்கவோ யாருமே இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யாருமற்ற அந்த மக்கள் கூட்டம் இப்படி சின்னச்சின்ன காட்சிகளாக கதைகளிலும் கவிதைகளிலும்தான் இடம்பெற்றிருக்கிறார்கள்.எம்பாவாய்காலத்திலிருந்து அத்தகு காட்சிகளை இடைவிடாமல் தன் கவிதைகளின் பேசுபொருளாக அமைத்துக் கட்டியெழுப்பி வரும் கலாப்ரியாவின் கலையாளுமை மகத்தானது. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் சூழலையும் இடைவிடாமல் கவனிக்கும் தன்மை, அவரை இடையறாது இயங்கும் கலைஞனாக வைத்திருக்கிறது.
இத்தொகுதியில் உள்ள கவிதைகள் அனைத்தும் அவருடைய முகநூலில் எழுதப்பட்டவை. அவருடைய காட்சிக்கவிதைகளுக்கு, அந்த முகநூல் வடிவம் மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. பத்து பன்னிரண்டு வரிகள். அதற்குள் கலாப்ரியா அழகான ஒரு காட்சியை அமைத்துவிடுகிறார்.

பூ வாடும் வரை
நாரைச் சூடிக்
கொண்டிருப்பதாய்
யாரும் நினைப்பதில்லை

என்பது ஒரு சின்ன கவிதைச் சித்திரம். முதல் வாசிப்பில் ஒரு மென்மையான புன்னகை நம் உதடுகளில் பரவி அடங்குகிறது. நாம் சூடிக்கொள்ளும் பூச்சரம் என்பது பூக்களையும் நாரையும் கொண்டது. ஆனால் பூச்சரத்தைச் சூடிக்கொண்டிருக்கும்போது, சூட்டிக்கொண்டிருப்பவரும் சரி, அவரைப் பார்த்துக்கொண்டிருப்பவரும் சரி, பூவைமட்டுமே நினைக்கிறார்கள். அது வாடி உதிர்ந்த பிறகுதான் நார் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. ஆனால் வெறும் நாருக்கு ஒரு மதிப்பும் இல்லை. அடுத்தடுத்த வாசிப்புகளில் நார் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத அம்சத்தின் அடையாளம் என்பதை உணர்ந்துகொள்ளலாம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது உண்மைதான். ஆனால் வாடிய பிறகு பூவையே வீசிவிடும்போது நாருக்கும் அதே நிலைமையே நேர்கிறது. நாரின் நிலைக்கு நிகரான மனித வாழ்க்கையின் திசையில் நம் எண்ணங்கள் திரும்பும் கணத்தில் கவிதையின் வட்டம் மேலும் விரிவடைவதை நம்மால் உணரமுடியும்.

சுற்றாத
காற்றாலைச் சிறகில்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு பறவை

கலாப்ரியாவின் கவனிப்பால் விளைந்த இன்னொரு கவிதை இது.  இரு பறவைகள் நெருங்கி உட்கார்ந்திருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஒரு கணம் உருவாக்கி மறைகிறது கவிதை. ஒன்று உண்மையான பறவை. இன்னொன்று சிறகுகளைக் கொண்டிருப்பதாலேயே பறவையென்றான பறவை. சுற்றாத பறவையோடு பறக்காத பறவை உட்கார்ந்திருக்கிறது.
ஒரு சின்னப் புன்னகையையும் வியப்பையும் கொடுத்து கற்பனையைத் தூண்டும் இத்தகு கவிதைகள் தொகுதி முழுதும் விரவியிருக்கின்றன.

ஊசியின் காதில்
ரகசியம் சொல்லத்
துடித்துக் காத்திருக்கிறது
நூல்கண்டின்
உள்நுனி

கவிதையைப் படித்துமுடிக்கும்போது ஒரு காதையும் ரகசியம் சொல்ல அதனருகில் குவியும் உதடுகளையும் மிக எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது.

வற்றிக்கொண்டிருக்கும்
குளச்சகதியில்
நீரருந்த வரும்
குட்டி ஆட்டைக்
கடைசிக் கனிவுடன்
பார்க்கிறது
மெலிந்த
ஒற்றைத் தாமரை

கிட்டத்தட்ட ஒரு கடைசிச்சந்திப்பைப்போல காட்சி தரும் இக்கவிதையைப் படித்து முடித்ததும் இயேசு தன் சீடர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கடைசி விருந்துக் காட்சியை நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. வற்றிக்கொண்டிருக்கும் குளத்தின் சகதிநீர் நாளை எஞ்சியிருக்குமா என்று சொல்லமுடியாது. அச்சேற்றில் உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் மெலிந்த ஒற்றைத் தாமரையும் நாளை உயிருடன் இருக்குமா என்றும் சொல்லமுடியாது. பழக்கத்தின் விளைவாக நீரருந்த வரும் குட்டி ஆட்டை நாளைக்குப் பார்க்கமுடியுமா என்பதும் தெரியாது. எதுவுமே நிரந்தரமற்ற சூழலில் தாமரையின் பார்வையில் கடைசிச் சந்திப்பின் பாரம் அழுந்தியிருக்கிறது.

நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு
எண்ணாமல்
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை.

விற்பனைக் காட்சியொன்றில் உருவாகும் மனநெருக்கத்தையும் நெகிழ்ச்சியையும் கச்சிதமாகச் சித்தரிக்கும் விதத்தில் கலாப்ரியாவின் கவித்துவம் மிளிர்கிறது. கேட்ட கணமும் கொடுத்த கணமும் ஒன்றாகவே இருக்க, கனிவு சுரந்த கணம் இவ்விரண்டுக்கும் இடைபட்ட பொழுதில் கரைந்துபோய்விட்டது. தன்னிச்சையாக எழும் அக்கனிவு மானுடத்தின் கொடை.நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழைஎன்று வள்ளுவர் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பாக எழுதிய வரியை கலாப்ரியாவின் கவிதை மீண்டும் எழுதிச் செல்கிறது.

நடைசாத்தும் முன்பே
தலைவைத்துத்
தூங்கிவிட்டான்
போலிருக்கிறது.
கோபுரவாசல் கதவில்
நசுங்கிக் கிடக்கிறது
வீடற்றவனின் தலை

கோவில் வாசலில் வந்து நித்தமும் தூங்குகிறவனுக்கு, தூங்குவதற்கான நேரம் எது என்ற தெளிவு இருந்திருக்கும். இடம் கிடைத்ததும் தூங்கலாம் என படுத்துவிட்டவன் புது ஆளாகத்தான் இருக்கவேண்டும். தூங்குவதற்கு கோபுரவாசலைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு விதியற்றவனாகவும் வீடற்றவனாகவும் இருக்கிறான். படமாடக் கோவிலையும் நடமாடக் கோவிலையும் இணைத்து எழுதப்பட்ட திருமந்திரச் செய்யுள் வரிகள் நினைவில் புரள்கின்றன.  திருமந்திரம் இணைத்துப் பார்த்த காலம் வேறு, இன்றைய எதார்த்தம் வேறு. வீடற்றவனுக்கு கோவில் வாசலும் இல்லாத காலமாக இன்றைய காலம் மாறிவிட்டது. எவ்வளவு பெரிய தீயூழ்.

தவம் செய்கிற புத்தனைப்
பார்த்துப்பார்த்து
பயந்தபடியே
உண்ணுகிறது
ஒரு கனிந்த பழத்தை
அரசம் பழத்தை
அணில் ஒன்று.

கருணையே வடிவான புத்தனின் சிலையைக் கண்டு அஞ்சுகிறது அணில். படித்த கணத்திலேயே அணிலின் சித்திரம் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடுகிறது. ஒரு பக்கம் கருணை. இன்னொரு பக்கம் அச்சம். கருணையையும் அச்சத்தையும் இரு சக்கரங்களாகக் கொண்டு ஓடும் வண்டிதானோ வாழ்க்கை என எண்ணத் தோன்றுகிறது.
இத்தொகுதியின் பக்கங்களைப் புரட்டப்புரட்ட இப்படி ஏராளமான காட்சிகள் தோன்றிப் பெருகியபடி இருக்கின்றன. வாசிக்கும் கணத்திலேயே நம் மனத்திலும் அது மெல்லமெல்ல காட்சியாக மாறி விரிகிறது. கலாப்ரியா தன் எழுத்தாளுமையால் ஒவ்வொரு காட்சியையும் ஓர் அழகான கவிதையாக மாற்றியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும்.

(தண்ணீர்ச்சிறகுகள். கவிதைகள். கலாப்ரியா. சந்தியா பதிப்பகம். 77, 53 வது தெரு, 9 வது அவென்யுஅசோக் நகர்சென்னை- 83. விலை.ரூ.70)