Home

Friday 13 March 2015

தமிழகத்துக்கு வெளியே


இந்திய மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் உலக மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பாரதியார், க.நா.சு., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்.ஷண்முகசுந்தரம், திருலோக சீதாராம், கரிச்சான் குஞ்சு, சுந்தர ராமசாமி போன்ற பல இலக்கியப்படைப்பாளிகள் தம் சொந்த இலக்கிய முயற்சிகளைக் கடந்து மொழிபெயர்ப்பிலும் அக்கறை கொண்டிருந்தனர்.  த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி.ராம்னாத், தி.சு.சதாசிவம்,  சு.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் மொழிபெயர்ப்புகாகவே வாழ்ந்தவர்கள். ஆர்.ஷண்முகசுந்தரம் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாளுமைகளால் தமிழுக்குக் கிடைத்த படைப்புகள் ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழிலிருந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. தமிழ்ப்படைப்புகள் ஏன் தமிழகத்துக்கு வெளியே பிறமொழிகளுக்குச் செல்வதில்லை என்பது முக்கியமான ஒரு கேள்வி.
இந்திய மொழிகளில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும்கூட தமிழிலக்கியம் பற்றித் தெரியவில்லை. இலக்கியம் கற்பிக்கும் அயல்மொழி ஆசிரியர்களுக்கும்கூட அதிக அளவு தெரியவில்லை. திருவள்ளுவர், பாரதியார் என்கிற ஆளுமைகளைமட்டுமே அவர்கள் பெயரளவில் தெரிந்துவைத்திருக்கிறார்கள். திருக்குறள்பற்றியோ, பாரதியாரின் படைப்புகள் பற்றியோ ஆழமாகத் தெரிந்துவைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். இது ஏமாற்றத்துக்குரிய உண்மை.

புதுமைப்பித்தன், மெளனி, ஜெயகாந்தன் ஆகியோரின் ஒருசில படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைப்பதன் காரணமாக அப்படைப்பாளிகளின் பெயர்கள் ஒருசிலருக்கு அறிமுகமாயிருக்கிறதே தவிர, அவர்களுடைய படைப்புகளுக்குரிய கவனம் எந்த மொழியிலும் கிடைத்ததில்லை. பஷீரைப்போலவோ, சிவராம காரந்தைப்போலவோ அவர்கள் எந்த மொழியினராலும் கொண்டாடப்படுவதில்லை. சமீபத்தில் தாகூரின் கோரா நாவல் எழுதப்பட்டு வெளிவந்து நூறாண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி, நாடெங்கும் அந்நாவலை ஒட்டி விவாத அரங்குகள் நடைபெற்றன. மறைந்த கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தியை நினைத்துக்கொள்ளும் விதமாக, அவருடைய சம்ஸ்கார நாவலைப்பற்றிய உரையாடல்கள் பல இடங்களிலும் நடைபெற்றன. பிரேம்சந்த், சரத்சந்திரர் எழுத்துகளைப்பற்றிய மதிப்பீட்டு நிகழ்ச்சிகளை ஏதேனும் ஒரு இலக்கிய அமைப்பு, நாட்டின் எங்கோ ஒரு மூலையில் எப்போதும் நடத்தியபடியே உள்ளது. பஷீரின் சிறுகதைகளைப்பற்றிய நயம் பாராட்டும் நிகழ்ச்சிகளுக்கு எல்லா மொழி மேடைகளிலும் இடம் இருக்கிறது. இத்தகு உரையாடல்கள் நிகழும் அளவுக்கு, தமிழ்ப்படைப்புகள் பற்றிய உரையாடல்கள் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய அளவில் எந்தத் தமிழ் எழுத்தாளரின் படைப்பும் பொருட்படுத்தப்படுவதில்லை. தமிழ் நாவல்களின் அறிமுகம் இல்லாததாலேயே, பிறமொழிக்காரர்கள் தயாரிக்கும் இந்தியாவின் தலைசிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் தமிழ்நாவலின் பெயர் இல்லை. இந்திய மொழிகளிலேயே தமிழின் படைப்புகள்பற்றிய உரையாடல் நிகழாத நிலையில், உலக மொழிகளில் நம் படைப்புகள் சென்று சேர்ந்து, அவற்றைப்பற்றிய உரையாடல் நிகழக்கூடும் என நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை கனவாகவே கரைந்துபோகும்.
இந்தி, வங்காளம், குஜராத்தி, அசாமி போன்ற வட இந்திய மொழிகளைப் பேசுகிறவர்களும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளைப் பேசுகிறவர்களும் நேரிடையாக தமிழை அறிந்துகொள்ளும் நிலை இன்று இல்லவே இல்லை. பிற மாநிலங்களில் இயங்கக்கூடிய மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமலேயே உள்ளன. ஒரு மொழியை அறிந்துகொள்ள கல்விக்கூடம் என்பது முதல் வாய்ப்பு. அதை நாம் இழந்துவிட்டோம்.
வேலை நிமித்தமாக பிற மொழியினர் வந்து செல்கிற, வாழ்கிற இடமாக ஆதி காலத்திலிருந்தே தமிழகம்  இருந்துவந்த போதும், அவர்களை தமிழிலக்கியம் ஈர்க்கவில்லை. தினசரி வாழ்க்கைத்தேவைக்குப் போதுமான அளவு தமிழை அவர்கள் அறிந்து நிறைவுற்றார்களே தவிர, இலக்கியவேட்கை அவர்கள் நெஞ்சில் உருவாகவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் எல்லையோரப்பகுதிகளில் வாழ்கிறவர்களுக்கு தன் மொழியையும் அயல்மாநிலத்தின் மொழியையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இயற்கையாகவே இருந்தும்கூட, தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளிலிருந்து தமிழிலக்கியத்தைநோக்கி விருப்பத்துடன் வரும் ஆர்வலர்கள் இல்லை. கர்நாடகத்தின் எல்லைப்பகுதிகளில் வாழும் இலக்கிய ஆர்வலர்கள், மராத்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து நல்ல இலக்கியப்படைப்புகளை கற்றுத் தேர்ந்து கன்னடத்தில் மொழிபெயர்த்துக்கொள்வதை என்னால் கவனிக்கமுடிகிறது. அத்தகு முயற்சிகள், தமிழகத்தை ஒட்டியுள்ள கன்னட எல்லைப்பகுதியில் நடக்கவில்லை. இலக்கிய ஆர்வலர்கள் என்றதும் ஆயிரக்கணக்கிலோ, நூற்றுக்கணக்கிலோ அவர்கள் இருக்கவேண்டும் என கருதத் தேவையில்லை. இருபது முப்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு குழுவில் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தாலேயே போதும். அந்த அளவுக்குக்கூட ஆர்வலர்கள் உருவாகவில்லை. ஆகவே, இந்த இரண்டாவது வாய்ப்பும் நமக்கு சரியான வகையில் அமையவில்லை என்பது கசப்பான உண்மை. இரண்டு பாதைகளும் அடைபட்ட நிலையில் நம் மொழி நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது.
மூன்றாவதாக ஒரு பாதையை உண்மையான அக்கறையோடு உருவாக்கினால் நம் கனவின் ஒரு சிறிய பகுதியாவது சற்றே சுற்றுவழியில் நிறைவேற வாய்ப்புண்டு. அது ஆங்கிலத்தின் ஊடாக உருவாக்கக்கூடிய பாதை. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலம் ஒரு தாய்மொழியைப்போல கற்பிக்கப்படுகிறது. பேசவும் படுகிறது. இச்சூழலில் ஒரு தமிழ்ப்படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதன் வழியாக, இந்தியாவில் வாழும் பிற மொழியினரிடம் சிறப்பான ஒரு அறிமுகத்தை உடனடியாக உருவாக்கமுடியும். மற்ற மொழியினரின் துணையில்லாமல் நம் மண்ணில் ஆங்கிலத்தை நன்றாக எழுதத் தெரிந்தவர்களே இம்முயற்சிகளில் இறங்கலாம். அத்தகு முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கவேண்டும், இலக்கியமும் தெரிந்திருக்கவேண்டும் என்பதே முக்கியமான தகுதி. ஆங்கில மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி மொழிபெயர்த்துவிடுவதால் கிடைக்கக்கூடிய வெற்றி அல்ல. தமிழின் இலக்கியவீச்சை ஆங்கிலத்தில் கொண்டுவருவது மிகவும் அவசியம். இலக்கிய வீச்சுடன் ஆங்கில மொழியை கையாளத் தெரிந்திருத்தல் மிகமிக முக்கியம். ஆங்கிலத்தில்தான் அறிவுச்செல்வம் கொட்டிக் கிடக்கிறது என்கிற நம்பிக்கையில் ஆங்கிலத்தை விரும்பிக் கற்கிற இந்த மண்ணில் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய ஆளுமைகள் உருவாகவே இல்லை. அவர்கள் கற்கிற ஆங்கிலம் வெறும் பிழைப்புக்காக கற்கிற ஆங்கிலமாக இருக்கிறதே தவிர, இலக்கியத்தை உள்வாங்கிக்கொள்ளும் ஆங்கிலமாக இல்லை. அலுவலகக் கோப்புகளில் குறிப்பெழுதும் அளவுக்குமட்டுமே அவர்களுடைய ஆங்கிலம் தகுதியுடன் உள்ளது. ஆங்கில வாசகர்களும் விரும்பிப் படிக்கிற அளவுக்கு ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.  ஆங்கிலமும் தெரிந்த, நவீன இலக்கியமும் தெரிந்த கல்யாணராமன் போன்றவர்கள் மிகமிக அபூர்வமாகவே இருக்கிறார்கள். அவர்கள் மிகமிகக் குறைவாகவே மொழிபெயர்க்கிறார்கள்.
இந்தப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றும் கனவை, தமிழகத்தில் இயங்கும் ஆங்கிலச் செய்தித்தாட்கள் ஓரளவு நிறைவேற்றமுடியும். விடுமுறை இணைப்புகள், விழா சிறப்பிதழ்கள், ஞாயிறு மலர்கள் போன்றவற்றில் வளர்ந்துவரும் தமிழிலக்கியம்பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து எழுதுவதன் மூலம் இக்கனவை மலர வைக்கமுடியும். ஒரு பெரிய வாசகர் கூட்டத்தை உருவாக்கி, அவர்கள் மனத்தில் தொடர்ந்து கவனிக்கும் தூண்டுதலை ஏற்படுத்தமுடியும். நாளேடுகள் மட்டுமன்றி, தேசிய அளவில் வெளிவரும் இலக்கிய இதழ்களிலும் தமிழ்ப்படைப்புகள் பற்றிய அறிமுகங்கள் தொடர்ந்து இடம்பெறவேண்டும். இந்த அறிமுகங்கள் வழியாகவே, ஓர் அயல்மொழி வாசகன் தமிழ்ப்படைப்பை நெருங்கி வரமுடியும்.  அத்தகையோரில் நூறில் ஒரு வாசகன் நிச்சயமாக தமிழை சொந்தமாகவே கற்றுக்கொள்ள நினைப்பான். அப்படி சில வாசகர்கள் உருவாகும்போது, அவர்களில் ஒருசிலர் மொழிபெயர்ப்பாளர்களாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
என் கனவு சார்ந்துமட்டுமே, நான் இந்த வரிகளை எழுதவில்லை. எதார்த்தத்திலேயே, இதற்கு எடுத்துக்காட்டாக இயங்குபவர்கள் உண்டு.  யூமா.வாசுகி என்கிற கவிஞரை நாம் எல்லோரும் அறிவோம். ஒரு தருணத்தில் மலையாள இலக்கியத்தின் மீது பிறந்த ஆர்வத்தால் சொந்த முயற்சியால் மலையாளத்தைக் கற்றுத் தேர்ந்தார் அவர். சொந்தமாகவே இலக்கியப்ப்டைப்புகளைப் படிக்கும் அளவுக்கு மிகக்குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டார். இன்று மலையாளத்திலிருந்து தமிழுக்கு நேரிடையாக மொழிபெயர்க்கும் அளவுக்கு மிகமுக்கியமான மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். அப்படிப்பட்ட அதிசய ஆளுமைகள் கன்னடமண்ணிலோ, தெலுங்கு மண்ணிலோ தோன்றி, அவர்கள் என்றேனும் நம் தமிழ்ப்ப்டைப்புகளை தத்தம் மொழிகளுக்குக் கொண்டுசெல்லக்கூடும்.
நான் நேருக்குநேர் பார்க்கும் ஓர் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். கன்னடத்தின் மூத்த படைப்பாளியான பைரப்பாவின்யானாஎன்னும் புதிய நாவல் வெளிவந்த மூன்று மாதங்களுக்குள், அந்த நாவலைப்பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான கட்டுரைகள் வந்தபடியே இருக்கின்றன. அந்த நாவலையொட்டி பைரப்பாவுடன் நிகழ்த்தப்படும் நேர்காணல்களும் வெளிவந்தபடி இருக்கின்றன. வைதேகியின் சிறுகதைத்தொகுதி பற்றி ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆங்கிலத்தில் இத்தகு அறிமுகங்களை எழுதும் எண்ணற்ற கட்டுரையாளர்கள் வழியாக, கன்னட இலக்கியத்தைப்பற்றிய உரையாடல்களை, கர்நாடகத்தின் எல்லையைத் தாண்டி எளிதாக ஒலிக்கவைக்கமுடிகிறது. அத்தகு கட்டுரையாளர்களின் வரிசை தமிழில் உருவாகவே இல்லை.
தமிழிலக்கியமும் தமிழிலக்கியம்பற்றிய உரையாடல்களும் தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து செல்வதற்கான மூன்று பாதைகளும் மண்ணும் கல்லும் முள்ளும் அடர்ந்து மூடியிருப்பதை தமிழின் தீயூழ் என்றே சொல்லவேண்டும். அவற்றை அகற்றி செம்மைப்படுத்தாமல், தமிழின் ஆக்கங்கள் பிறமொழிகளுக்குச் செல்வது முடியாத செயல்.


(தீராநதி  - பிப்ரவரி மாத இதழில் பிரசுரமான கட்டுரை)