எண்பதுகளின் தொடக்கத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் எங்கள் முகாமிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் நாற்பது ஐம்பது பேர் வட்டமாகக் கூடியிருக்க ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவருடைய வசீகரமான குரலும் பாடலின் வரிகளும் தொடர்ந்து செல்லவிடாமல் என்னை அங்கேயே தடுத்துவிட்டன. கூட்டத்தில் ஒருவனாக நின்று நானும் அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். ஆறேழு பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் நூறு பேருக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து வீதி நாடகமொன்று நடைபெற்றது. ஏறத்தாழ அரைமணி நேரம். அது ஒரு சாதாரணமான பிரச்சார நாடகம். ஆனாலும், ஒருவர்கூட அங்கிருந்து நகராமல் அனைவரும் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகத்திலும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாடகம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் தருணத்தில் நாடகக்குழுவினரிடம் சிறிது நேரம் பேசினேன். கர்நாடகத்தில் அக்காலத்தில் வீதி நாடகங்களுக்குப் பேர்போன சமுதாயா குழுவின் பாதிப்பால் அவர்கள் ஒரு குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்கள். பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் கவிஞர் சித்தலிங்கையா எழுதியவை என்றும் குறிப்பிட்டார். அங்கேயே ’ஹொலெமாதிகர ஹாடு’ என்னும் சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அன்றைய பயணம் முழுக்க அவருடைய பாடல்களைப் படிப்பதிலும் நாடகக்குழுவினர் பாடிய தாளக்கட்டுக்கு இசைவாக அவ்வரிகளை வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதிலும் கழிந்தது. ’யாருக்கு வந்தது, எங்கே வந்தது, நாற்பத்தியேழின் சுதந்திரம்?’ என ஆவேசமும் அப்பாவித்தனமும் இணைந்து தொனிக்க, அன்று நான் கேட்ட பாட்டின் குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளது. சித்தலிங்கையா என்னும் ஆளுமையின் பெயரையும் அவருடைய கவிதையையும் இப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் நான் தெரிந்துகொண்டேன்.
Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts
Monday, 2 March 2015
Friday, 20 February 2015
நம்பிக்கை மிகுந்த பயணம்
‘எங்கே நிறுத்திக்கொள்வது என்று ஒருவன் தெரிந்துகொள்ளும்போது அவன் அழிவற்றவன் ஆகிறான்’ என்பது தாவோ தே ஜிங் நூலில் இடம்பெறக்கூடிய ஒரு வரி. சீன மொழியில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட வரி இது. பல தளங்களில் இவ்வரியைப் பொருத்திப் பொருள்கொள்ள முடியும். சாதாரண உரையாடலில் தொடங்கி உறவு, நட்பு, விருப்பம், வெறுப்பு, ஆசை, சீற்றம் என வாழ்வின் பல்வேறு தளங்களில் இவ்வரியின் வழியாக ஒரு புதிய பொருளும் புதிய வெளிச்சமும் கிடைக்கின்றன.
ஓர் எழுத்தாளனாக, ஒரு படைப்பை எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் என் ஆழ்மனத்தில் இவ்வரி என்னைச் செலுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வாசகனாக, ஒரு படைப்பை மதிப்பிடவும் இவ்வரி எனக்குத் துணையாக உள்ளது. ஒரு படைப்பின் தொடக்கம் என்பது அப்படைப்பை எழுதும் படைப்பாளி அடையும் உத்வேகத்தின் அடிப்படையில் எந்தக் கோணத்திலிருந்துவேண்டுமானாலும் அமையலாம். அது படைப்பாளியின் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தில் எந்த வாசகனுக்கும் இடமில்லை. ஆனால் படைப்பின் முடிவுப்புள்ளி என்பது மிகவும் முக்கியம். எங்கே நிறுத்தவேண்டும் என்பதை படைப்பின் போக்கு மானசிகமாக உணர்த்திவிடும். அதைக் கடந்து எழுதப்படும் சொற்கள் ஒரு படைப்புக்குச் சுமையாக மாறும். இந்த அளவுகோல் ஒரு படைப்பை மதிப்பிட நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த கருவியாகும்.
Friday, 13 February 2015
அணிதிரட்டிய கவிதைகள்
சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய
முன்னுரை
கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசனக்காரர்களின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. சாதிகளைத் துறந்த ஒரு மேலான சமூகத்தைக் கனவு கண்டார் பசவண்ணர். அதற்காக எல்லாச் சமூகத்தினரையும் அரும்பாடுபட்டு ஒருங்கிணத்தார். அவர் முன்னெடுத்துச் சென்ற சரணர் இயக்கம் உழைப்பின் வழியாகவும் மானுட உறவுகள் வழியாகவும் சமூகமாற்றத்தைச் சாத்தியப்படுத்த முயற்சி செய்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமகார ஹரலய்யா, காக்கய்யா, மாதார சென்னய்யா போன்றோர் அவருடைய சமகாலத்தில் இயங்கிய வசனக்காரர்கள். வசன இலக்கியம் என்னும் பெருந்தொகுதியில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் இவ்வியக்கம் வீரசைவத் தத்துவமாக பெயர்பெற்றாலும், அது உருவாகி நிலைபெற்ற காலத்தில் உயர்ந்த நெறிகளைக் கொண்ட நீதிமுறையை நிறைவேற்ற அவ்வியக்கம் பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக, அதன் இறுதிக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீண்டும் விளிம்பைநோக்கித் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பது வரலாறு. பக்தி இலக்கியக் காலகட்டத்தில் கனகதாசரின் பங்களிப்பு போற்றுதற்குரியதென்றாலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் அது எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியும் தன் நிரந்தரத்துவத்துக்காக இந்தியர்களின் சாதிமத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற நிலைபாட்டில் உறுதியாக நின்றுவிட்டது. மேற்கத்திய கல்வியின் தாக்கத்தால் உருவான ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் பல சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்போடு இயங்கியபோதும், அவை எதுவுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைகளில் எவ்விதமான மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
Labels:
கவிதைத்தொகுதி,
சித்தலிங்கையா,
முன்னுரை
Monday, 9 February 2015
‘கனவுகளும் கண்ணீரும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை
சமீபத்தில் ஒரு
பகல்நேரத் தொடர்வண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக ஜென் கவிதைப் புத்தகமொன்றை
எடுத்துச் சென்றிருந்தேன். ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்து வரிகள்மட்டுமே கொண்ட
கவிதை. ஆனால், சட்டென்று கடந்துசெல்லமுடியாதபடி ஒவ்வொரு கவிதையும்
இழுத்துவைத்துக்கொள்ளும் சக்தியுள்ளதாக இருந்தது. ஒரு கவிதையைப் படிப்பது, அப்புறம் ஒவ்வொரு
வரியாக அதையே மீண்டும் படிப்பது, பிறகு மனம்போன போக்கில் ஒவ்வொரு சொல்லாக பிரித்தும் இணைத்தும்
புதுப்புது பொருளை உருவாக்கியபடி படிப்பது என அச்சொற்களின் உலகிலேயே
திளைத்திருந்தேன். பிறகு திரும்பி ஜன்னல்வழியாகத் தெரியும் நீலவானத்தையும்
பின்னோக்கி நகரும் மரங்களையும் புதர்களையும் பாதைகளையும் பார்த்தபடி அதே வரிகளை
மீண்டும் மனத்தில் மிதக்கவிட்டு அசைபோட்டபடி இருந்தேன். அப்போது நெஞ்சிலிருந்து
பொங்கிவந்த நினைவுகளெல்லாம் அந்தக் கவிதை வரிகளின் பொருளாக மாறித் தோன்றிய
அதிசயத்தை உணர்ந்தேன்.
உனது மரணகாலம்
நெருங்குகிறது
நீ இறந்துவிடுகிறாய் என்றால்
மிக நல்லது.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறக்காதிருக்கிறாய் என்றால்
மிகமிக நல்லது.
Labels:
கனவுகளும் கண்ணீரும்,
முன்னுரை
Friday, 30 January 2015
’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை
எண்பதுகளின்
தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான
பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல்
ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச்
சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில்
நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே
மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த
மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை. திறக்கும் சமயத்தில்
உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு
விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக்
கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக்
கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.
ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.
Labels:
Kaavya,
Novel,
Paaimarakkappal,
காவ்யா,
நாவல்,
பாய்மரக்கப்பல்,
முன்னுரை
Subscribe to:
Posts (Atom)