Home

Friday 30 January 2015

’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச் சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில் நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை.  திறக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.

ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.

ஒரு பயணத்தின்போது, உருமாறும் ஊரின் முகத்தையும் மனிதர்களின் முகங்களையும் தொடர்ந்து கவனித்தபடியே இருந்த ஒரு கணத்தில் அம்மாற்றத்தை எழுத்தில் வடிக்கும் விருப்பம் துளிர்த்தது. மூத்த தலைமுறை மனிதர்கள் முதல் இளைய தலைமுறை மனிதர்கள் வரைக்கும் ஒவ்வொருவராகவும் நான் சில கணங்கள் வாழ்ந்துபார்த்தேன். அந்த எண்ணச்சரடுகள் விசித்திரமாகவும் புது அனுபவமாகவும் இருந்தன. முத்துசாமி ஒரு புள்ளி. முழுக்கமுழுக்க ஒரு விவசாயியாகமட்டுமே தன்னை கனவு கண்டு, அவ்விதமாகவே தன்னைத்தானே வளர்த்துக்கொண்டு வாழ்கிறவர். மண்ணைத்தவிர வேறெதுவும் அவர் வாழ்விலும் இல்லை. கனவிலும் இல்லை. இருபது காணி நிலப்பரப்பில் விவசாயம் செய்து வாழ்ந்த அவர் வாழ்க்கை ஒரு முனை என்றால் ஒரு தென்னங்கன்றை நட்டு வளர்க்க விரும்புவதன்மூலம் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளச் செய்யும் முயற்சி மற்றொரு முனை. அனைத்தையும் இழந்து, தத்தளித்து, ஏதோ ஒரு கணத்தில் தன் மீட்சிக்கான வழியை தானே கண்டடைந்து நிறைவும் நிம்மதியும் கூடிய பெருமூச்சோடு நிமிரும்போது அவர் வாழ்க்கை முழுமை அடைந்துவிடுகிறது. அவருக்குத் தேவையான வெளிச்சத்தை அவரே கண்டடைகிறார். விவசாயத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு கட்சி அரசியலிலும் கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ளும் சாராய வணிகத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் துரைசாமி நாவலின் இரண்டாவது புள்ளி. ஓர் இலட்சியவாதிக்கு மகனாகப் பிறந்து, சினிமா ஆசையால் ஊரைவிட்டுச் சென்று, அடைய நினைத்த இடத்தை அடையவும் முடியாமல் திரும்பி வரவும் முடியாமல் தடுமாறித் தவிக்கும் சத்தியசீலன் மூன்றாவது புள்ளி. எதிரெதிராக உள்ள இம்மூன்று புள்ளிகளுக்கிடையே நிகழும் வாழ்க்கை மோதல்களை முன்வைத்து இந்தக் காலத்துக்கும் வாழ்க்கைக்கும் உரிய கனவுதான் என்ன என்பதை எழுதிப் பார்க்கும்
வேகத்தில் இந்த நாவலை எழுதிமுடித்தேன். இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், மன எழுச்சியைக் குன்றாமல் வைத்திருக்கும்பொருட்டு சித்தர் பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதியை அடிக்கடி படித்துவந்தேன். நான் எழுத நினைத்த வாழ்க்கை முரண்களை வேறொரு கோணத்தில் முன்வைத்த ஒரு பாட்டு அப்போது என்னை மிகவும் கவர்ந்தது. அதை ஒவ்வொரு நாளும் அசைபோட்டபடி இருந்தேன்.
பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து
பாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி
நெஞ்சுமனம் புத்தி ஆங்காரம் சித்தம்
மானாபிமானம் கயிறாகச் சேர்த்து
ஐந்தெழுத்தைக் கட்டி சரக்காக ஏற்றி
ஐம்புலந்தனிலே சுக்கானிருத்தி
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து
நிற்குனந் தனிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணை முன்றையுந் தள்ளுடா தள்ளு
முப்பாலுக்கப்பால் தள்ளுடா தள்ளு


அந்த வரிகளைப் படிக்கும்போதே என் மனம் பாய்மரக்கப்பல் என்னும் சொல்லை பரவசத்துடன் உருவாக்கிக்கொண்டது. அச்சொல்லை மீண்டும்மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். தன் உடலைக் குறிப்பிடும் படிமமாகவே சித்தர் பாய்மரக்கப்பலை அந்தப் பாடலில் சமைத்திருந்தார். நான் அதை உடனே வாழ்க்கையைக் குறிப்பிடும் படிமமாக மாற்றிக்கொண்டேன். பாய்மரக்கப்பலின் பயணத்துக்கு காற்றின் வேகத்துக்குத் தகுந்தவிதமாக பாயைச் சுருட்டுவதும் விரிப்பதும்  சுக்கானை சரியான திசையில் திருப்புவதும் அவசியம். வாழ்க்கையில் பாயாகவும் சுக்கானாவும் இருக்கும் அம்சங்களே இந்த நாவலின் மையமாக இருக்கின்றன என்பதால், இந்த நாவலுக்கு இதுவே பொருத்தமான தலைப்பு என்று அக்கணத்திலேயே முடிவு செய்துவிட்டேன். நாவலை முடிக்கும் முன்பாகவே தலைப்பு முடிவாகிவிட்டது. எந்தத் திசையை நோக்கி நாவல் செல்லவேண்டும் என்கிற வெளிச்சத்தையும் அதைநோக்கி நகரும் வேகத்தையும் இத்தலைப்பே எனக்கு வழங்கின என்றும் சொல்லலாம். இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்ததொரு தலைப்பு பாய்மரக்கப்பல்.

எழுதிமுடித்த பின்னரும் இதன் வடிவத்தைப்பற்றி சற்றே தயக்கமாக இருந்தது. நான் சகோதரராக நினைக்கும் நண்பர் வளவ.துரையன் அவர்களுக்கு கையெழுத்துப் பிரதியை அனுப்பி, படித்து கருத்துரைக்குமாறு  கேட்டுக்கொண்டேன். ஒரு சில நாட்களிலேயே அவர் எழுதியனுப்பிய கடிதம் எனக்கு மிகவும் ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டியது. அப்போதும் முழுமையான அளவில் என் தயக்கம் நீங்கவில்லை. மும்பையிலிருந்து கோவைக்கு இடமாற்றம் பெற்று வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடனுடன் தொடர்புகொண்டு புதிதாக ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் படித்துப் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் தெம்பாக இருக்குமென்றும் தயங்கித்தயங்கிக் கேட்டேன். அவருடைய கருத்தின்மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். என் தயக்கத்தை அகற்றி கையெழுத்துப்பிரதியை அனுப்பிவைக்கும்படி அவர் சொன்னதும் நான் அடைந்த
உற்சாகத்துக்கு அளவே இல்லை. அன்றே அனுப்பிவைத்தேன். இரண்டு வார இடைவெளியிலேயே நாவலைப் படித்துவிட்டு நாவலைப்பற்றி விரிவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த வரிகளைப் படித்த பிறகுதான் நாவலின் தகுதிபற்றி நான் மகிழ்ச்சியடையமுடிந்தது. அதன் பிறகே நான் கையெழுத்துப்பிரதியை பிரசுரிப்பதற்காக நண்பர் காவ்யா சண்முகசுந்தரத்திடம் கொடுத்தேன். பதினெட்டாண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் மீண்டும் வெளிவரும் இவ்வேளையில் நண்பர்கள் வளவ.துரையனையும் நாஞ்சில் நாடனையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். என் மனைவி அமுதாவின் நேசமும் துணையும் எப்போதும் எனக்குரிய ஊக்க சக்திகள். நம்பிக்கையூட்டும் அவருடைய சொற்களே என்னை இடைவிடாமல் இயங்கவைத்தபடி இருக்கின்றன.  அவரையும் அன்புடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.  

என் பெரியப்பா இந்த நாவலில் இடம்பெற்றுள்ள முத்துசாமியின் சாயலை உடையவர். நல்ல விவசாயி. ஆனாலும் வாழ்க்கைச்சூழலின் நெருக்கடிகளால் நிலத்தை அவர் இழக்கவேண்டியிருந்தது. பிறகு வாழ்க்கைக்காக வீடு கட்டும் தொழிலாளியாக வேலை செய்தார். இடையிடையில் தறி நெய்தார். மூலிகை மருத்துவம் கற்று மருத்துவம் பார்த்தார். பசுக்களை வாங்கிவந்து வளர்த்தார்.
சில சமயங்களில் எந்த வேலையும் செய்யாமல் ஊரைச் சுற்றி பொழுதுபோக்கவும் செய்தார். தன் அடையாளத்தை அவர் மாற்றிமாற்றி உருவாக்கியபடி இருந்தார். இறுதிநாட்களில்  நோய்வாய்ப்பட்ட சில மாதங்களைத் தவிர, வேறெந்த கட்டத்திலும் தன்னை சலிப்பு அண்டிவிடாமல் உற்சாகமாகவே வாழ்ந்து மறைந்தார். முத்துசாமியின் பாத்திரப்படைப்பில் அவருடைய சாயலும் இணைந்திருக்கிறது. அவர் நினைவுக்கு இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  மிகச்சிறந்த முறையில் இந்த நாவலை வெளிக்கொண்டு வந்திருக்கும் காவ்யா நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி. 



மிக்க அன்புடன்,
பாவண்ணன்