எண்பதுகளின் தொடக்கத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் எங்கள் முகாமிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் நாற்பது ஐம்பது பேர் வட்டமாகக் கூடியிருக்க ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவருடைய வசீகரமான குரலும் பாடலின் வரிகளும் தொடர்ந்து செல்லவிடாமல் என்னை அங்கேயே தடுத்துவிட்டன. கூட்டத்தில் ஒருவனாக நின்று நானும் அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். ஆறேழு பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் நூறு பேருக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து வீதி நாடகமொன்று நடைபெற்றது. ஏறத்தாழ அரைமணி நேரம். அது ஒரு சாதாரணமான பிரச்சார நாடகம். ஆனாலும், ஒருவர்கூட அங்கிருந்து நகராமல் அனைவரும் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகத்திலும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாடகம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் தருணத்தில் நாடகக்குழுவினரிடம் சிறிது நேரம் பேசினேன். கர்நாடகத்தில் அக்காலத்தில் வீதி நாடகங்களுக்குப் பேர்போன சமுதாயா குழுவின் பாதிப்பால் அவர்கள் ஒரு குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்கள். பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் கவிஞர் சித்தலிங்கையா எழுதியவை என்றும் குறிப்பிட்டார். அங்கேயே ’ஹொலெமாதிகர ஹாடு’ என்னும் சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அன்றைய பயணம் முழுக்க அவருடைய பாடல்களைப் படிப்பதிலும் நாடகக்குழுவினர் பாடிய தாளக்கட்டுக்கு இசைவாக அவ்வரிகளை வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதிலும் கழிந்தது. ’யாருக்கு வந்தது, எங்கே வந்தது, நாற்பத்தியேழின் சுதந்திரம்?’ என ஆவேசமும் அப்பாவித்தனமும் இணைந்து தொனிக்க, அன்று நான் கேட்ட பாட்டின் குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளது. சித்தலிங்கையா என்னும் ஆளுமையின் பெயரையும் அவருடைய கவிதையையும் இப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் நான் தெரிந்துகொண்டேன்.