காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றை ‘சத்திய சோதனை’ என்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒருசில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் சத்தியமே தனக்குரிய வழி என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.