கன்னட வசன இலக்கியத்தில் முக்கியமான ஒரு பெயர் அக்கமகாதேவி. அல்லமப் பிரபு, அக்கமகாதேவி, பசவண்ணர், மடிவாளர் என ஒரு பெரிய நீண்ட வரிசையே உண்டு. இவர்கள் அனைவரும் வசனகாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வனுபவங்களையும் ஆன்மிக அனுபவங்களையும் முன்வைத்து அவர்கள் மொழிந்தவற்றுக்கு வசனங்கள் என்று பெயர். பாட்டுத்தன்மை மிகுந்த வசீகரமான பேச்சுமொழியால் அமைந்தவை இவ்வசனங்கள். சிற்றெறும்பும் சிவமாகும் என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டு. இடைவிடாமல் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் சிற்றெறும்புகூட ஒருநாள் சிவனாக மாறமுடியும். நம்பிக்கையும் பற்றும் ஈடுபாடும் நெகிழ்ச்சியும் தன்னையே அர்ப்பணிக்கிற குணமும் எல்லாவற்றையும் துறந்து சரணடைகிற மனமும் வாய்க்கப்பெற்றவர்களுக்கு சிவனருள் சாத்தியம். சிவன் வெறும் இறையுருவம் மட்டுமல்ல. அவன் நல்ல தோழன். நல்ல வழிகாட்டி. நல்ல ஆசான். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிற சக்தி.