நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது குழந்தையின்
உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் ’தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் காண முடிகிறது.