Home

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, 16 June 2015

மறைந்துபோன வரலாறு

நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில்  பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்கஎன்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போலஎன்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.

Friday, 13 February 2015

உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’


நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது  குழந்தையின் உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும்தோட்டாக்கள் பாயும் வெளிதொகுப்பில் காண முடிகிறது.