”இரவும் பகலும் எப்படி மாறிமாறி உருவாகின்றன என்பதை நாளைக்கு உங்களுக்குச் செய்முறையின் வழியாக விளக்கப் போகிறேன்” என்று ஒருநாள் வகுப்பைமுடிக்கும் முன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார் எங்கள் ராமசாமி சார். அப்போதே மின்சாரம் பாய்ந்ததுபோல ஒருவிதமான பரபரப்பு எங்களிடம் தொற்றிவிட்டது. “சார் சார், இன்னைக்கே காட்டுங்க சார்” என்று கெஞ்சத் தொடங்கிவிட்டான் எனக்குப் பக்கத்தில் இருந்த கோவிந்தசாமி. ”அதுக்கு பொருளெல்லாம் வேணும்டா. எச்.எம்.கிட்ட சொல்லி நாளைக்குத்தான் எடுக்கமுடியும். நாளைக்கி கண்டிப்பா பார்க்கலாம்” என்று சிரித்தார் அவர். அவர் சொன்னதையே காதில் வாங்காமல் மாணவர்கள் “சார் சார்” என்று மறுபடியும் கெஞ்சத் தொடங்கிவிட்டார்கள். “பறக்காதிங்கடா பசங்களா, நாளைக்கு பார்க்கலாம்” என்று முடிவாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் அவர். அன்று இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அதே நினைவில் மூழ்கியிருந்தேன். ராமசாமியின் சொற்கள் காதில் ஒலித்தபடியே இருந்தன.