Home

Showing posts with label பசுவய்யா. Show all posts
Showing posts with label பசுவய்யா. Show all posts

Monday, 20 March 2017

காத்திருத்தலும் ஒத்திப்போடுதலும் - சுந்தர ராமசாமியின் "வருத்தம்"



     முடிவெடுப்பதில் எப்போதும் இரண்டு வழிமுறைகள் உண்டு.  எவ்வளவு சிக்கல்கள் நிறைந்த விஷயமானாலும் உடனடியாக ஒரு முடிவையெடுப்பது ஒரு வழிமுறை.  உச்சத்திலிருக்கும் பிரச்சனையின் வெப்பம் தணியும்வரை முடிவெடுப்பதை ஒத்திப்போடுவது என்பது இன்னொரு வழிமுறை.  அரசியல் தளத்திலிருந்து குடும்பத்தளம்வரைக்கும் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் இந்த இரண்டு வழிமுறைகளையொட்டியே இருக்கும் . இது சரி, இது தவறு என்று கறாரான விமர்சனத்தை இந்த வழிமுறைகள்மீது வைக்கமுடியாது.  சில பிரச்சனைகளில் உடனடியாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவேகம் நிறைந்ததாகவும் இருக்கலாம்.  சில முடிவுகளை இன்னும் சிறிது காலம் கழிந்தபிறகு எடுத்திருக்கலாம் என்று சொல்லி ஆற்றிக்கொள்ளும் நிலைமையும் வரலாம்.  இரண்டுக்குமே இவ்வாழ்வில் சாத்தியப்பாடுகள் உண்டு.  ஆத்திரத்தில் அறுத்துப்போட்ட மூக்கை அன்பாகச் சொல்லி ஒட்டவைத்துவிடமுடியாது என்பது தினமும் நாம் கேட்கிற ஒரு பழமொழி.  சொந்த வாழ்வில் எடுக்கப்படும் முடிவுகளையே ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு எடுக்கவேண்டும் என்கிற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்ப்பிரச்சனையான யுத்தம்போன்ற செயல்பாட்டில் நூறுமுறை யோசித்தல் முக்கியம்.  முடிவெடுக்கும் கணத்தை எவ்வளவு முறை ஒத்திப்போட்டாலும் தகும்.