முடிவெடுப்பதில்
எப்போதும் இரண்டு வழிமுறைகள் உண்டு. எவ்வளவு சிக்கல்கள் நிறைந்த விஷயமானாலும் உடனடியாக ஒரு முடிவையெடுப்பது ஒரு வழிமுறை. உச்சத்திலிருக்கும் பிரச்சனையின் வெப்பம் தணியும்வரை
முடிவெடுப்பதை ஒத்திப்போடுவது என்பது இன்னொரு வழிமுறை. அரசியல் தளத்திலிருந்து குடும்பத்தளம்வரைக்கும்
எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் இந்த இரண்டு வழிமுறைகளையொட்டியே இருக்கும் .
இது சரி, இது தவறு என்று கறாரான விமர்சனத்தை இந்த வழிமுறைகள்மீது வைக்கமுடியாது. சில பிரச்சனைகளில் உடனடியாக எடுக்கப்பட்ட முடிவுகள்
விவேகம் நிறைந்ததாகவும் இருக்கலாம். சில முடிவுகளை
இன்னும் சிறிது காலம் கழிந்தபிறகு எடுத்திருக்கலாம் என்று சொல்லி ஆற்றிக்கொள்ளும் நிலைமையும்
வரலாம். இரண்டுக்குமே இவ்வாழ்வில் சாத்தியப்பாடுகள்
உண்டு. ஆத்திரத்தில் அறுத்துப்போட்ட மூக்கை
அன்பாகச் சொல்லி ஒட்டவைத்துவிடமுடியாது என்பது தினமும் நாம் கேட்கிற ஒரு பழமொழி. சொந்த வாழ்வில் எடுக்கப்படும் முடிவுகளையே ஒன்றுக்குப்
பலமுறை யோசித்துவிட்டு எடுக்கவேண்டும் என்கிற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின்
உயிர்ப்பிரச்சனையான யுத்தம்போன்ற செயல்பாட்டில் நூறுமுறை யோசித்தல் முக்கியம். முடிவெடுக்கும் கணத்தை எவ்வளவு முறை ஒத்திப்போட்டாலும்
தகும்.
ஒரு
யுத்தத்துக்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளையும் முறையாக நெடுங்காலமாக மேற்கொண்ட ஒருவனுடைய
குரலாக முன்வைக்கப்பட்டிருக்கும் "வருத்தம்" என்னும் கவிதை சுந்தர ராமசாமியின்
முக்கியக்கவிதைகளில் ஒன்று. வேட்டைக்கலையின்
சகல நுட்பங்களையும் தாய்ப்பாலருந்தத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து கற்றுக்கொண்டிருப்பதாக
அக்குரல் தெரிவிக்கிறது. வில்வித்தை, வாள்வீச்சு,
குதிரையேற்றம், மற்போர் என எல்லாவிதமான வீரக்கலைகளையும் கற்றுத் தேர்ந்த பின்னரும்
வேட்டைக்குரிய தினம் மட்டும் நாளை நாளை என தள்ளிப்போடப்படுகிறது. வாழ்வு ஆயத்தங்களில்மட்டும்
வீணாவதையொட்டி மனம் வருத்தத்தில் மூழ்குகிறது. "இனி ஆயத்தங்களைத் தின்று சாகும்
என் முதுமை, பின்னும் உயிர் வாழும் கானல்" என்னும் இறுதி வரிகளில் மிளிரும் கவித்துவமே
இக்கவிதையை உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறது. வேட்டைக்கான
கனவுகளிலேயே திளைத்துத்திளைத்து அயராமல் ஆயத்தங்களில் ஈடுபட்டவன் வேட்டையாடாமலேயே மறைந்துவிட
பின்னும் உயிர்வாழ்வதாக முன்வைக்கப்படும் கானல் யாருடைய கானல் என்பது வாசகமனத்தில்
ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கிறது. முதுமைவரை ஆயத்தங்களில் ஈடுபட்டும் வேட்டையையே நிகழ்த்தாதவனின்
கானலா? அல்லது வேட்டைக்குக் கிளம்பியிருக்கிற இன்னொரு தலைமுறையினரிடம் துளிர்விடும் கானலா? இந்தச் சந்தேக அம்சம் கவிதைக்கு மிகப்பெரிய வெற்றியைத்
தேடித் தருகிறது. வேட்டைக்காகவே தன்னைத் தயார்செய்துகொள்ளத்
தொடங்குகிற ஒருவன் எதற்காக இறுதிவரை அந்த வேட்டையை ஆட விரும்பாமல் ஆயத்தப்படுத்திக்கொள்வதிலேயே
பொழுதைக் கழிக்கிறான் என்பது முக்கியமான கேள்வி. கொஞ்சம் வித்தை தெரிந்தாலேயே போதும்
, மோதிப் பார்த்து வெற்றி வாகை சூடிவிடலாம் என்று எண்ணுகிற இந்த உலகத்திலே தன் ஆயுளின் கடைசிக்கட்டம் வரை ஆயத்தங்களில் மட்டுமே செலவழித்துவிட்டு மறைந்து போவது மிகப்பெரிய அதிசயம்.
இத்தகு
அதிசயங்கள் எப்போதே ஒருமுறைமட்டுமே அபூர்வமாக நிகழ்கின்றன. வேட்டை என்பது வெற்றிக்கான
நாட்டம். வெற்றி என்பது பெருமையை நிலைநிறுத்தும் முயற்சி. ஆயத்தம் என்பது இந்த வெற்றியைச்
சாத்தியப்படுத்த உதவும் ஒரு பயிற்சி. வெற்றிக்காக ஒரு பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கி
வெற்றியை விரும்பாமலேயே அல்லது நாடாமலேயே பயிற்சியுடன் நின்றுவிடுவது மிகஉயர்ந்த விவேகம்.
பயிற்சியின் தொடக்கத்தில் மனம் வெற்றிக்கான ஆவேசத்துடன் இயங்குகிறது. பயிற்சியின் முடிவில்
வெற்றியின் பொருளின்மையைக் கண்டடைந்ததைப்போல அமைதியடைகிறது. வெற்றி என்பது அடுத்த உயிரின்
மரணமல்லவா? ஒரு மரணத்தை நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நம்மால் உருவாக்கமுடியாத
ஒரு உயிரை நாம் எப்படி அழிக்கமுடியும்? எல்லாவற்றுக்கும் மேலாக, எதிரே நிற்கும் உருவம்
மாற்ற முடியாத நம்முடைய மறுபக்கமல்லவா? பயிற்சியின்போது இந்தத் தெளிவு பிறந்திருக்கலாம்.
தாமதமாகவாவது இத்தெளிவை மனம் கண்டடைந்து நேரடி வேட்டையைத் தவிர்த்து பயிற்சிகளோடு நின்றுவிடுகிறது.
மானுடனுக்கு மரணமுண்டே தவிர, கானலாகத் தோற்றம் தந்து அவனை உந்தித்தள்ளும் கனவுகளுக்கு
ஒருபோதும் மரணமில்லை. ஆசைகளே துன்பத்தின் காரணம்
என்ற உண்மை மிகத்தெளிவாக நிறுவிக்காட்டப்பட்ட பிறகும் மீண்டும்மீண்டும் போதிக்கப்பட்ட
பிறகும் ஆசைப்படுவதிலிருந்து யாராலும் விடுபட்டு
நிற்கமுடிவதில்லை. தெளிவில் நம் கனவுகள் பொசுங்கிச்
சாம்பலாகிவிடலாம். ஆனால் அடுத்தவர்களுடைய கனவுகளை
நம்மால் எப்படிச் சாம்பலாக்கமுடியும்? தத்தம் கனவுகளை ஒட்டிய தெளிவுகளை அவரவர்களே அடையும்வரை
அல்லது அவரவர்களே சாம்பலாக்குகிறவரை அவையும் வாழ்ந்தபடி அல்லவா இருக்கும்? வேட்டைப்பயிற்சிகளை
வெறும் பயிற்சிகளோடுமட்டுமே நிறுத்திக்கொள்ள இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்று
தோன்றுகிறது.
*
வருத்தம்
சுந்தர
ராமசாமி
வேட்டையாடத்தான்
வந்தேன்
வேட்டடைக்கலையின்
சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில்
உறிஞ்சத்தொடங்கினேன்
பின்
வில்வித்தை
பின்
வாள் வீச்சு
பின்
குதிரையேற்றம்
பின்
மற்போர்
நாளை
நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்துவைத்த
கற்பூரம்போல்
ஆயுளின்
கடைசித் தேசல் இப்போது
இனி
ஆயஹ்த்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும்
உயிர்வாழும் கானல்
*
பசுவய்யா
என்கிற பெயரில் கவிதைகளை அரைநூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவந்த சுந்தர ராமசாமி தமிழின்
புதுக்கவிதை முன்னோடிகளில் முக்கியமான ஒருவர். நடுநிசி நாய்கள், யாரோ ஒருவனுக்காக என்பவை
அவருடைய தொடக்கக்காலக் கவிதைத்தொகுதிகள். இப்பொழுது அவருடைய எல்லாக் கவிதைகளும் அடங்கிய
முழுத்தொகுப்பு வெளிவந்துள்ளது.