எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் அனுபவங்கள் ஏராளமாக உண்டு. அவையனைத்தும் எச்சரிக்கைமணிபோல காலைவேளையில் ஒவ்வொரு கணமும் புற ஊக்கியாக ஒலித்து என்னை வீட்டைவிட்டுத் தள்ளிவிடும்.