"குக்கூ
என்றது கோழி அதனெதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம்" என்னும் குறுந்தொகை வரிகள்
சுட்டிக்காட்டும் சித்திரம் உணர்வுமோதல்கள் மிகுந்த ஒன்று. ஒருபுறம் கோழியின் கூவல் இன்னொருபுறம் இளம்தலைவியின்
துணுக்குறலும் ஆற்றாமையும். ஒரு முழு இரவு
வேகவேகமாகக் கடந்து ஒரு முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒரு வாள் நெஞ்சில் இறங்குவதுபோல வைகறை இந்த மண்ணில்
இறங்கப் போகிறது. காதலனின் அருகாமையும் உற்ற
துணையும் ஒரு முடிவுக்கு வந்துவிமே என்கிற பதற்றம் அவளைப் பைத்தியமாக்குகிறது. இந்த
இரவு விடிந்துவிடக்கூடாதே என்று தவித்த தவிப்புகளை மீறி இரவு கரைந்து முடிந்துவிட்டது. தன் பிரார்த்தனைகள் பொய்த்துவிட்டதே என்னும் தன்னிரக்கம்
அவளை அலைக்கழிக்கிறது. இரவு துளித்துளியாக
கரைவதை தூக்கமின்றி விழித்தபடி துயரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.