Home

Wednesday, 10 May 2017

தனிமை என்னும் துயரம் - பிரம்மராஜனின் "அறிந்த நிரந்தரம்"



"குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றன்று என் தூய நெஞ்சம்" என்னும் குறுந்தொகை வரிகள் சுட்டிக்காட்டும் சித்திரம் உணர்வுமோதல்கள் மிகுந்த ஒன்று.  ஒருபுறம் கோழியின் கூவல் இன்னொருபுறம் இளம்தலைவியின் துணுக்குறலும் ஆற்றாமையும்.  ஒரு முழு இரவு வேகவேகமாகக் கடந்து ஒரு முடிவை நோக்கி நெருங்குகிறது.  ஒரு வாள் நெஞ்சில் இறங்குவதுபோல வைகறை இந்த மண்ணில் இறங்கப் போகிறது.  காதலனின் அருகாமையும் உற்ற துணையும் ஒரு முடிவுக்கு வந்துவிமே என்கிற பதற்றம் அவளைப் பைத்தியமாக்குகிறது. இந்த இரவு விடிந்துவிடக்கூடாதே என்று தவித்த தவிப்புகளை மீறி இரவு கரைந்து முடிந்துவிட்டது.  தன் பிரார்த்தனைகள் பொய்த்துவிட்டதே என்னும் தன்னிரக்கம் அவளை அலைக்கழிக்கிறது.  இரவு துளித்துளியாக கரைவதை தூக்கமின்றி விழித்தபடி துயரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.


இரவு முழுக்க தூங்கி விழித்த கோழி கொக்கரக்கோ என்று கூவும் ஒலியைக் கேட்டு அவள் நெஞ்சம் துணுக்குற்று தவிக்கிறது.  மொத்த உலகமும் அதன் இயல்பில் இயங்க, அவள் ஒருத்திமட்டும் இயல்பிலிருந்து பிறழ்ந்து பதறிக்கொண்டிருக்கிறாள்.  தனிமையின் துயரைத் தாங்கிக்கொள்ள இயலாத ஆற்றாமையின் உச்சத்தின் சொல்லிப் புலம்பும்படி நேர்கிறது.  ஒரு புறக்காட்சியையும் ஓர் அகக்காட்சியையும் அருகருகே காட்டி மனத்தில் பொங்கும் வேதனையை உணர்த்துகிறது பாடல்.  காலம்காலமாக கவிதைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் உத்தி இது. அகத்துறையில் மட்டுமல்ல, புறம் சார்ந்த பாடலிலும் இந்த உத்தியைச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும் பாடல் உண்டு.  எடுத்துக்காட்டாக "உன் புத்தம்புதிய ஆயுதக்கிடங்கில் அடுக்கப்பட்டு வைத்திருக்கும் ஆயுங்கள் பளபளப்பாக, படடை தீட்டைப்பட்டவையாக உள்ளன.  ஆனால் என் அரசனின் ஆயுதக்கிடங்கு ஒழுங்கின்றி சிதறிக்கிடக்கிறது.  ஆயுதங்களும் பழையனவாக, மொட்டையாக உள்ளன. கொல்லர்கள் அவற்றையெல்லாம் சரிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று பொருள்படும் வரிகளைச் சொல்லலாம்.

பிரம்மராஜனின் "அறிந்த நிரந்தரம்" கவிதையில் அப்படிப்பட்ட ஓர் உத்தி பயன்படுத்தப்படுகிறது.  இங்கு முழுக்கமுழுக்க புறக்காட்சிகள் மட்டுமே உள்ளன.  முற்றிலும் இரவுக்காட்சி.  அடர்த்தியான இரவு. பொழுது நகரவில்லை.  ஒவ்வொரு கணம் நகர்வதையும் ரேடியம் பூசப்பட்ட கடிகார முட்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன.  அரைத் தூக்கத்தில் விழித்த காகம் மறதியில் கரைகிறது. நத்தைபோல நகர்ந்த இரவ, சேவலின் கூவலோடு மெல்ல முடிவுக்கு வருகிறது.  அடர்ந்த இரவு கரைந்துகரைந்து விடிவதுவரைக்குமான காலம் ஒரு காட்சித்தொகுப்பாக முன்வைக்கப்படுகிறது.  இது எல்லாம் ஒரு பக்கம்.  இன்னொரு பக்கத்தில் வீற்றிருக்கிறது ஆசுவாசம் அடைய முடியாத ஒரு மனம். அதுதான் இக்காட்சிகளை ஒன்றையடுத்து ஒன்றாக நமக்கு அடுக்கிக்காட்டுகிறது.  ஆணோ, பெண்ணோ, அந்த நபர் கவிதைவரியில் இல்லை.  ஆனால் அவர்தான் கவிதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.  விழித்தவண்ணம் இரவைக் கடக்கும்படி அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்னும் கேள்வி கவிதையின்மீது மேலும் விரிவான வகையில் வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடும்.  தனிமையின் வெப்பம் என்பது ஒரு காரணம்.  அந்தத் தனிமை இனி என்றும் நிரந்தரம் என்கிற அறிதல் இன்னொரு காரணம்.  தனிமை என்கிற உணர்வேயில்லாமல் ஆனந்தமயமான வாழ்வில் திளைத்தபின் உருவாக நேரும் தனிமையில் ஒருவித ஏக்கம் உண்டு. ஆனந்தத்தை, ஏதோ விளையாட்டாக தொலைத்துவிட்ட  குற்ற உணர்விலும் உறுத்தலிலும் அந்த ஏக்கம் பல மடங்காகப் பெருகும்.  ஏக்கம் பெருகப்பெருக இயலாமையும் தனிமைத்துயரும் பலநூறு மடங்காகப் பெருகும்.  இனி ஒருபோதும் பழைய ஆனந்தத்தை மீட்டெடுக்க இயலாது என்றால் அந்தத் துயரம் இன்னும் பலநூறு மடங்காக  மாறிப் போகும்.  துயரத்தின் சாயலை உணர்வின் அலைமோத உருகித் தழுதழுக்க முன்வைப்பது ஒரு வகை.  அதையே  உணர்வின் சாயலே தோன்றாதபடி உலர்ந்த வரிகளால் முன்வைக்கப்படுவது இன்னொரு வகை.  பிரம்மராஜன் கவிதை இரண்டாவது வகைப்பட்டது. 

தனிமையுணர்வு என்பது துணையற்ற நிலைமட்டுமல்ல.  வெறுமை மிகுந்த, உறுதியில்லாத, பிடிப்பில்லாத, ஈடுபாடில்லாத, விரக்தி மிகுந்த ஒரு நிலையையும்கூட ஒரு விதத்தில் தனிமை உணர்வாகவே கருத வேண்டும்.  தனிமையை வென்றெடுக்க அல்லது தனிமையைப் போக்கிக்கொள்ள விழையும் நாட்டம் கவிதையில் தென்படவில்லை.  தன் தனிமை நிரந்தரம் என உணர்ந்துவிட்ட சுயஅறிதலே கவிதையில் வெளிப்படுகிறது.  இருப்பதை உணரவும் புரிந்துகொள்ளவும் அளப்பரிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.  பிரம்மராஜனின் கவிதை முன்வைப்பது அத்தகைய விழிப்பால் விளைந்த ஓர் அறிவிப்பு.

*

அறிந்த நிரந்தரம்

பிரம்மராஜன்

ரேடியம் முட்களெனச் சுடர் விடுகிறது விழிப்பு
இரவென்னும் கருப்புச் சூரியன்
வழிக்குகையில் எங்கோசிக்கித் தவிக்கிறது
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக


*

எழுபதுகளின் இறுதியில் கவிதைத்துறையில் பிரவேசித்த பிரம்மராஜன்  தன் ஆற்றல் மிகுந்த கவிதைகள்வழியாக வெகுவிரைவாகவே நவீன கவிஞராக தன்னை நிறுவிக்கொண்டவர். முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவரும் பிரம்மராஜன் உருவசோதனைகளுக்கு அர்ப்பணிப்புணர்வுடன் முக்கியத்துவம் வழங்கியவர். மீட்சி என்னும் சிறுபத்திரிகையை நீண்ட காலமாக நடத்தியவர்.