Home

Saturday, 20 May 2017

அழியாத காதல் - ஞானக்கூத்தனின் "மணல் கோடுகள்"



ஓசூரில் சிதிலமடைந்த ஒரு கோட்டை இருக்கிறதுஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறவர்கள் அவசியமாக பார்க்கவேண்டிய கோட்டை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாக திட்டமிட்டு கட்டப்பட்ட கோட்டை அது. ஊரில் இருப்பவர்கள் அதைக் காதல் கோட்டை என்று அழைக்கிறார்கள்அங்குமிங்கும் விசாரித்து அக்கோட்டையின் கதையைத் தெரிந்துகொண்டேன்திடீர்திடீரென படையெடுத்துத் தாக்கவரும் முகம்மதியர்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு பெரிய ஏரியையும் அதன் நடுவில் ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டு வாழ்ந்தான் ராமநாயகன் என்கிற பாளையக்காரன்.  


கோட்டைக்கு உள்ளே ஒரு கிணறு உண்டுபாதாளக்குகை வழியாக அக்கிணற்றுக்கும் ஏரிக்கும் தண்ணீர் இணைப்பை உருவாக்கியிருந்தான்எல்லாப் பாதுகாப்பையும் முறியடித்து திப்பு சுல்தான் அந்தப் பாளையக்காரனைத் தோற்கடித்துவிட்டு கோட்டையைக் கைப்பற்றினான்.  கோட்டையின் அழகில் மயங்கிய திப்பு சுல்தான் தனக்கு நெருக்கமான பிரெஞ்சுப் பொறியாளர்களின் உதவியோடு கோட்டையை இன்னும் கூடுதலான அறைகளோடும் சுரங்க இணைப்புகளோடும் இன்னும் விரிவாக உருவாக்கினான்திப்பு சுல்தான் காலத்துக்குப் பிறகு அக்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்ததுசேலம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் தலைமையிடமாக  ஓசூர் இருந்த காலம் அதுபிரெக்ட் என்னும் கலெக்டர் தன் மாவட்ட அலுவலகமாகவும் வசிப்பிடமாகவும் அந்த மாளிகையை வைத்துக்கொண்டார்இங்கிலாந்தில் வாழ்ந்த மனைவி மார்கரெட்டை அந்த மாளிகைக்கு வரவழைக்க ஆவலுற்றார்ஸ்காட்லாந்தில் உள்ள கென்னல் ஒர்த் மாளிகையைப்போன்ற ஒன்று இருந்தால்தான் ஓசூர்க்கு வந்து இணைந்து வாழமுடியும் என்று நிபந்தனை விதித்தாள் மார்கரெட்.   மார்கரெட் மீது இருந்த காதலால் தான் வாழ்ந்த கோட்டையையே இரண்டு ஆண்டுகள் செலவிட்டு ஸ்காட்லாந்து மாளிகையைப்போல விரிவாக்கி உருமாற்றினார் ப்ரெக்ட்செலவுக்குத் தேவையான பணத்தை அரசுக் கருவூலத்திலிருந்து தாராளமாக எடுத்துச் செலவு செய்தார்மாளிகை தயாரான நேரத்தில், பணக்கையாடல் தொடர்பாக, ப்ரெக்ட் பதவிநீக்கம் செய்யப்பட்டார்பதவியை இழந்த வருத்தத்தாலும் மனைவியோடு சேர்ந்து வாழமுடியாத துயரத்தாலும் அதே மாளிகையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார் ப்ரெக்ட்

கதையைக் கேட்டு முடித்ததும் மனம் கனத்ததுகாலம் நாயக்கரை அழித்து, திப்பு சுல்தானை அழித்தது. கலெக்டரையும் அழித்தது. சிறுகச்சிறுக அந்தக் கோட்டையையும் அழித்தது. அதன் பழைய தோற்றம் முற்றிலும் மாறிவிட்டிருந்தாலும் சிதிலமடைந்த சுவர்கள் நூறாண்டுகளுக்குப் பிறகும் காதல் அடையாளமாக நின்றுகொண்டிருக்கின்றனகால ஓட்டத்தில்  அந்தக் கோட்டையே தரைமட்டமாகப் போய்விட்டாலும் காதல் கதையாக வரலாற்றின் நெஞ்சில் அழியாமல் நிற்கிற ஒரு சித்திரத்தை யாரால் அழிக்கமுடியும்அழியாத உணர்வாக வரலாற்றில் நிலத்தடி நீரோட்டமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல்.

ப்ரெக்ட் கதைக்கு இணையான அழியாத காதலைப்பற்றிய ஒரு சித்திரத்தைத் தருகிறது ஞானக்கூத்தனின் "மணல்கோடுகள்" கவிதைஇக்கவிதையில் காதலியின் பெயரை காவேரியாற்றில் கோடை மணலில் எழுதுகிறான் ஒருவன்ஆர்வத்தின் காரணமாக பெயரைச் சுற்றியும் மல்லிகை இலைகளால் ஒரு வட்டத்தை உருவாக்குகிறான்பிறகு நாணல்பூக்களால் கம்பம் நடுகிறான்அதற்குப் பிறகு நீல மலர்களையும் அங்கங்கு வைக்கிறான்எல்லாமே அழகுக்கு அழகு செய்யும் முயற்சிகள்திடுமென காற்று வருகிறதுகாற்றின் வேகத்தில் நீல மலர்கள் உருண்டோடுகின்றனகம்பம் சாய்கிறதுவட்டம் கலைகிறதுஇடைவிடாத காற்றின் வேகம் காதலியின் பெயரையும் அழிக்கிறதுகாற்றின் வலிமையையும் மீறி, பெயரில் அமைந்த பள்ளக்கோடுகள் முற்றிலுமாக அழியாமல் அரைகுறையாக எஞ்சுகின்றனசிதிலமடைந்த கோட்டைச்சுவர்களைப்போலதெளிவற்ற அந்த வளைவுகளைவைத்து எழுதப்பட்ட பெயரைப் படிப்பது என்பது இயலாத செயல்ஆனாலும் அது பெயரளவில் மணல்மடிப்பாக இருக்கிறது. காற்றால் அழிக்கமுடியாத பெயர்.

"வெட்கத்தைத் தந்தன மணலின் கோடுகள்" என்ற இறுதிவரி முக்கியமானதுஒருகணம் இந்த வெட்கம் எழுதியவனுக்கு உருவான வெட்கமா அல்லது சிதைக்கவந்து தோல்வியுற்ற காற்று அடைந்த வெட்கமா என்ற கேள்வி எழுகிறதுஎழுதியவனுக்கு வெட்கம் உருவாக வாய்ப்பில்லைஒருவித ஆற்றாமை, ஏக்கம், நிராசை என்ற உணர்வுகளையே இயற்கையாக அவன் வெளிப்படுத்தக்கூடும்அப்படியென்றால் இந்த வெட்கம் காலம் வெளிப்படுத்தும் வெட்கமே என்பதில் சந்தேகமே இல்லை. காலத்துக்கு  தன் தோல்வியை நினைத்து வேகமோ அல்லது சீற்றமோ அல்லவா வரவேண்டும்மாறாக, வெட்கம் எழக் காரணம் என்ன?

காற்று தன் இயல்பான வேகத்தில் கண்ணில் பட்டதையெல்லாம் அழித்துச் சிதைக்கிறதுஅது ஒரு கட்டம்இரண்டாவது கட்டத்தில் சிதைவுகளையெல்லாம் தொகுத்துப் பார்த்துக்கொள்கிறதுகாலத்தால் அழிக்கமுடியாத உணர்வு காதல். மனிதகுலம் தோன்றிய காலம்முதல் இந்த மண்ணில்  நிலைத்து வாழும் உணர்வு காதல்காதலின்   அடையாளமாக நிற்பவற்றை அழிப்பதன்மூலம் காதலை அழிக்கமுடியாதுபடிக்கவே முடியாத அடையாளமுடன் இருந்தாலும் மணல் மேடுகள் காதல் உணர்வின் அடையாளமாகச் சுடர்விடுவதை எப்படித் தடுத்துநிறுத்த முடியும்அந்தச் சுவடே  அழிந்து மறைந்தாலும் காவேரிக் கரைமணலுடன் இரண்டறக் கலந்துவிட்ட காதலை எப்படித் தடுக்கமுடியும்காதலின் நிரந்தரத்தையும் தன் துடுக்குத்தனத்தையும் புரிந்துகொள்கிறது காற்றுஇது மூன்றாவது கட்டம்தன்னிலை உணர்வதால் வெட்கம் கொள்கிறது காற்று.

காவேரிக் கரையோரம் எழுதி அழிக்கப்பட்ட ஒரு பெயர் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் மணற்பரப்புகள் உள்ள இடங்களிலெல்லாம் எழுதிஎழுதி அழிக்கப்படும் பெயராக மாறிவிடுகிறதுஅழியஅழிய இந்த மண்ணில் காதல் அரும்பியபடி இருக்கிறதுகாதலுக்கு மரணமில்லை.

*

மணல் கோடுகள்

ஞானக்கூத்தன்

காவேரியாற்றின் கோடை மணலில் என்
காதலியின் பெயரை நான் எழுதினேன்
மல்லிகை இலைகளால் அதனைச் சுற்றி
வட்டம் வரைந்தேன்நாணல் பூக்களை
நான்கு திசைக்கும் கம்பமாய் நட்டேன்
ஆரோக்ய சாலைக் குளத்தில் பூக்கும்
நீல மலர்களை அங்கங்கு வைத்தேன்
அப்போது வந்தது காற்று
மயானத்தில் திருடிய ஊதுவத்தி
புகையும் கையுடன் மற்றும்
கை கால் முறிந்த ஒப்பாரி வரிகளுடன்
வேகமாய் வந்தது காற்று
நாணல் கம்பங்கள் விழுந்தன
மல்லிகை வட்டம் கலைந்தது
துடைக்கும் துணிபோல் நீலமலர்களும்
தெலைவில் புரண்டு சென்றன
கொம்பும் காலும் சுழியும் உள்ள என்
காதலியின் பெயரைக் காற்று கலைத்தது
பெயரில் அமைந்த பள்ளக்கோடுகளை
முற்றிலும் காற்றால் அழிக்க ஆகலை
மணலில் இன்னமும் தெரிந்தது நான்
எழுதிய காதலியின் இனிய பெயர்
படிக்கும் லிபியாய் இல்லை என்றாலும்
வெட்கத்தைத் தந்தன மணலில் கோடுகள்

*

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதைத் துறையில் இயங்கி வருபவர் ஞானக்கூத்தன்புதுக்கவிதையின் வளர்ச்சியில் இரண்டாவது தலைமுறையின் முக்கியமான கவிஞர்வடிவ நேர்த்தியும் உள்அடுக்குகளும் நுட்பமான எள்ளலும் மிகஇயற்கையாகப் பொருந்தி மிளிரும் இவருடைய கவிதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குபவைகசடதபற, , கவனம் என கவிதை தொடர்பான எல்லாச் சிற்றிதழ்களிலும் ஆர்வத்துடன் பங்காற்றியவர்.