Home

Saturday, 20 May 2017

சீற்றமும் மௌனமும்- சமயவேலின் "எதிர்கொள்ளுதல்"


கோடிக்கணக்கான தற்செயல்கள் நிறைந்த அற்புதம் இந்த வாழ்க்கை.  நீளவாக்கிலும் குறுக்குவாக்கிலும் இழைகளை இணைத்து நெய்யப்படும் துணியைப்போல.  பிறந்ததிலிருந்து இறப்பதுவரை ஏராளமான தற்செயல்கள். தேவாலயத்தில் மணியடிக்கும் வேலை செய்கிற இளைஞனொருவனைப்பற்றிய ஒரு சிறுகதையை எல்லாரும் படித்திருக்கலாம்.  அவன் வாழ்வில் நிகழும் தற்செயல்கள் அக்கதையில் மிகவும் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். படிப்பறிவு உள்ளவர்களுக்குமட்டுமே வேலை என்ற புதுவிதியை அறிமுகப்படுத்துகிற புதிய பாதிரியார் தற்செயலாக அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றிவிடுகிறார்.  இனி எப்படி பிழைப்பது என்னும் குழப்பத்தோடு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது தற்செயலாக தன் பதற்றத்தைத் தணித்துக்கொள்ள புகைக்க வேண்டும் என்று நினைக்கிறான் அவன்.  அந்தத் தெருவில் நெடுந்தொலைவு முன்னும்பின்னுமாக நடந்த பிறகும் ஒரு விற்பனைக்கடைகூட இல்லை என்பதைக் கவனிக்கிறான்.  அப்போதுதான் தற்செயலாக தானே அங்கு அப்படி ஒரு கடையைத் திறந்தால் என்ன என்ற யோசனை எழுகிறது.  வேகவேகமாக அதைச் செயல்படுத்த, அவன் வருமானம் மெல்லமெல்ல உயர்கிறது.  வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. தற்செயலாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவன் தற்செயலாக உதித்த யோசனையைப் பின்பற்றி நல்ல நிலைக்கு உயர்ந்துவிடுகிறான். 


கதைகளில் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கிற பல சம்பவங்களில் தற்செயல்களின் சாயல் படிந்திருப்பதை உற்று நோக்கினால் அறியமுடியும்.  விற்பனையாளனின் தொல்லை தாளாமல் தற்செயலாக பரிசுச்சீட்டு வாங்கியவருக்கு பெருந்தொகை பரிசாக விழுகிறது.  வாகனத்தை ஓட்டிச் சென்றவன் பிழைத்துவிட, தற்செயலாக பேச்சுத்துணைக்காக அவனோடு பின்னால் உட்கார்ந்து சென்ற நண்பன் மரணமெய்திவிடுகிறான்.  வாத்தியங்களின் சத்தத்தால் தற்செயலாக மிரண்டு கட்டறுத்துக்கொண்டு ஓடிவந்த காளை ஊர்வலமாக வந்துகொண்டிருந்த மாப்பிள்ளையை கொம்பால் குத்திக் குதறிவிடுகிறது.  வழக்கமாக பழங்களையும் தேங்காயையும் பாரதியாரிடமிருந்து வாங்கி உண்ணுகிற யானை தற்செயலாக மதப்பிடித்த நிலையில் அவரையே துதிக்கையால் தூக்கி வீசி விடுகிறது. அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் மீது தற்செயலாக கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த வாகனம் மோதி எல்லாரையும் பலி வாங்கிவிடுகிறது.  மருத்துவமனைக்கு யாரோ நண்பரைப் பார்க்க வந்த ஒருவர், ஆபத்து நேரத்தில் ரத்ததானம் வழங்க யாருமே இல்லையே என்று புலம்பியழுத பாட்டியின் ஒப்பாரியை தற்செயலாக கேட்டு தானாகவே முன்வந்து ரத்ததானம் செய்து, பாட்டியின் பேத்தியை பிழைக்கவைத்த சம்பவம் செய்தியாக வந்ததுண்டு.  நாள்தோறும் இப்படி நிகழும் தற்செயல்களின் வரலாறு மிக நீண்டது. 

தற்செயல்களின் இணைவைச் சித்தரிக்கும் சமயவேலின் கவிதைகளில் "எதிர்கொள்ளுதல்" மிகவும் முக்கியமானது.   ஒரு மரத்தடியில் பழம்பொறுக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்.  எப்போதோ யாரோ பழத்தை அடித்து வீழ்த்துவதற்காக எறிந்து கிளையிடுக்கிலேயே சிக்கிவிட்ட ஒரு கல் தற்செயகலாக கிளையின் அசைவால் தரையைநோக்கி விழுகிறது.  தற்செயலாக அந்தக் கல் அவன் முதுகைத் தாக்கிவிட்டு கீழே உருள்கிறது. ஒரு கணம் யாரோ தன்னைநோக்கி எறிந்த கல் என்ற எண்ணத்தால் சீற்றமடைகிறான் அவன்.  மறுகணமே அது தற்செயலாக விழுந்த கல் என்று புரிந்து அமைதிகொள்கிறான்.  கல்லையே ஒரு கணம் குனிந்து பார்க்கிறான்.  வலி, எரிச்சல், கோபம் எல்லாம் படிப்படியாக குறைகின்றன.  கல்லை கீழே நழுவவிட்ட பிறகு மீண்டும் பழம்பொறுக்கத் தொடங்குகிறான்.  கல்லுக்கும் அவனுக்கும் இடையே பார்வைப் பரிமாற்றம் நிகழ்வதுபோலவும் அவனுடைய எல்லாவிதமான கேள்விகளுக்கும் பார்வைகளுக்கும் கல் மௌனமாக இருப்பதுபோலவுமான ஒரு தோற்றம் கவிதையில் செதுக்கப்பட்டிருக்கிறது.  கல்லின் மௌனம் கவித்துவம் மிகுந்த ஒரு கணம்.  பழம் எடுக்கிறவன் தற்செயலாக முதுகில் விழுந்த கல்லை எதிர்கொள்வது என்கிற கட்டத்திலிருந்து ஒரு கல் தன் மௌனத்தின்மூலம் ஒரு மனிதனுக்குள் பொங்கியெழும் சீற்றத்தை எதிர்கொள்வது என்கிற கட்டத்துக்கு நகர்ந்துவிடுகிறது.  மௌனம் ஓடை நீராகப் பரவி சீற்றத்தின் நெருப்பைத் தணிக்கிறது.  எல்லாமே சில கணங்கள். 

மௌனமும் சீற்றமும் எதிர்எதிர்ப் புள்ளிகள். சீற்றம் எப்போது எழுகிறது? நான் அவமானப்படுத்தப்பட்டேன், நான் தாக்கப்பட்டேன், நான் கேள்விக்குட்படுத்தப் பட்டேன், நான் ஏமாற்றப்பட்டேன் என்கிற சூழலில்தான் ஒருவன் சீற்றமடைகிறான்.   அதாவது மனிதனின் 'நான்' என்னும் உணர்வு புண்படும்போது. புண்படுவதற்குக் காரணம் இன்னொருவர் நடவடிக்கை என்பதால் அந்தச் சீற்றம் பலமடங்காகப் பெருகுகிறது. அந்த இன்னொருவரை முன்னிறுத்தி, தனக்கு நிகழ்ந்த களங்கத்தை அகற்றிக்கொள்கிறவரை அந்தச் சீற்றம் ஓயாது. தன் தரப்பு நியாயங்களைச் சொல்லிச்சொல்லி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அது ஓயாமல் முயற்சி செய்கிறது.  எதிர்த்தரப்பிலும் இதேபோன்ற வேகமும் சீற்றமும் வெளிப்படுமெனில், அது விவாதமாக மாற்றமடைகிறது. விவாதங்கள் உண்மையை அறிவதற்கான ஒரு முயற்சியாக இருப்பின், அதனால் பயன் விளையக்கூடும்.  மாறாக, ஒவ்வொருவரும் தன்னை நிறுவிக்கொள்வதற்கான வழியாகமட்டுமே விவாதித்துக்கொள்ளத் தொடங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே செல்லும்.  சொற்களின் வெப்பம் உயர்ந்துஉயர்ந்து வெடிப்பதும் தவிர்க்கமுடியாமல் போய்விடும். 

சீற்றத்துக்கு எதிராக சீற்றம் என்கிற நிலையிலிருந்து சீற்றத்துக்கு எதிராக மௌனமாக இருத்தல் என்னும் நிலையில் நிகழக்கூடியவற்றையும் நாம் யோசிக்கவேண்டும். ஒருவர் பொறை இருவர் நட்பு என்னும் பழைய வாக்கியத்தையும் நினைத்துக்கொள்ளவேண்டும். மாற்றுத்தரப்பின் மௌனம்  சொல்லுக்குச் சொல் என நீளும்  விவாதத்தை உடனடியாக நிறுத்துகிறது. சீற்றமெல்லாம் சொற்களாக மாறி ஆவியான பிறகு உருவாகிற மன வெறுமை எல்லாவற்றையும் ஒரு மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. சீற்றம் தணிந்து, ஒரு கசப்பாக எஞ்சுகிறது. பிறகு, கசப்பு தன்மீது தொடர்ச்சியாக விழுகிற மற்ற அனுபவங்களின் அழுத்தத்தால் ஆவியாகி மறைந்துபோகிறது.

சீறுவதற்கல்ல, மௌனமாக இருப்பதற்குத்தான் அதிகமான நெஞ்சுரம் வேண்டும். மௌனம் என்பது விடை தெரியாதவன் எடுக்கிற ஆயுதமோ அல்லது மோதத் தெரியாதவன் தன்னைத் தற்காத்துக்கொள்ள எடுக்கிற கேடயமோ அல்ல. மௌனம் என்பது ஓங்கியெரிகிற அணையாத சுடர். அது தன்னையும் ஒளியுடன் வைத்துக்கொள்கிறது. தனக்கு எதிரில் நிற்பவரையும் ஒளிபொருந்தியவனாக மாற்றுகிறது.

சமயவேல் சுட்டிக்காட்டுகிற கல்லின் மௌனம் அணையாத உண்மைச்சுடரின் தரிசனத்தை நமக்கு வழங்குகிறது.

*
எதிர்கொள்ளுதல்

சமயவேல்

ஒரு கல்
என் முதுகில் விழுந்தது

வலியோடு நிமிர்ந்து
மரத்தைப் பார்த்தேன்
காற்றில் கிளைகள்
ஆடிச் சிரித்தன

எவரோ எப்போதோ எறிந்து
சிக்கிப் போன கல்லுக்கு
விடுதலை

குனிந்து கல்லை எடுத்தேன்
என் வலி, விசாரம்
வழியற்ற கோபம் எல்லாம்
கல்லின் முழுமுற்றான மௌனத்தில்
கரைந்துபோயின

ஒரு குழந்தையென
கல் கைவிட்டு இறங்கிக்கொள்ள
நான் மீண்டும்
பழம் பொறுக்கத் தொடங்கினேன்

*

எண்பதுகளில் எழுதத் தொடங்கிய முக்கியக் கவிஞர் சமயவேல். உண்மை நமது இதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்துநினைத்து மகிழ்ச்சியடைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.  எளிய வாழ்க்கைத் தருணங்களை கச்சிதமான சொற்சித்தரங்களாக மாற்றியமைக்கும் சமயவேலின் கவிதைகள் முக்கியமானவை.