ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது பிறகோ பொழிகிற அடைமழையில் எங்கள் ஊர் ஏரியில் நீர் நிரம்பத் தொடங்கி அடுத்த பத்து நாட்களில் நிறைந்து வழிவது வழக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் கண்ட எங்கள் கிராமத்து ஏரியின் சித்திரம் நிறம் மாறாமல் என் மனத்துக்குள் தொங்கிக்கொண்டிருக்கிறது. "ஆத்தாடி, சமுத்திரமாட்டம் பொங்கிங்கெடக்குது", "புள்ளகுட்டிங்கள பத்தரமா பாத்துக்குங்கடி, கரபக்கமா போயிடபோவுதுங்க", "ஐநாரப்பனுக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கணும்டி அவுரே இல்லன்னா இந்த ஏரிய காபந்து பண்றதுக்கு யாரு இருக்கா?" குடிப்பதற்கான தண்ணீரை அடிகுழாயில் அடித்து பாத்திரங்களில் நிரப்பியெடுக்கிற நேரங்களில் கூடியிருக்கிற பெண்கள் தமக்குள் மாறிமாறிப் பேசிக்கொண்டதெல்லாம் இன்னும் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளது. சின்ன வயதில் நாம் கண்ட ஒவ்வொன்றும் ஆழ்மனம் வரை சென்று அப்படியே புதைந்துவிடுகிறது. கிணற்றுக்குள் விழுந்துவிடும் மரப்பாச்சிப்பொம்மைபோல. நினைவுகளோடும் ரத்தத்தோடும் இரண்டறக் கலந்துவிடுகிறது. நிலத்தில் தூவப்பட்ட எருவைப்போல. அதனாலேயே நினைக்கும் நேரத்திலெல்லாம் அந்தச் சித்திரத்தை ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் பிரித்துப் பார்ப்பதுபோல நெஞ்சின் ஆழத்திலிருந்து பிரித்தெடுத்துப் பார்த்து மகிழ்கிறோம். தற்செயலாக, வேறொரு கிராமத்து ஏரியைப் பார்க்கநேர்கிற தருணங்களில் கூட அதன் உருவில் நம் மனம் நம் ஊர் ஏரியைத்தான் பார்க்கிறது.