பொதுவான மக்கள் உரையாடல்களில் காந்திய வழியை அகிம்சைப் போராட்ட வழியென்றும் இலட்சிய வழியென்றும் குறிப்பிடுவதையே நான் கேட்டிருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழி என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. அதனால் ’வெற்றி பெற காந்திய வழி’ என்னும் புத்தகத்தின் தலைப்பைக் கண்டதும் மிகவும் புதுமையாகத் தோன்றியது. அந்த ஈர்ப்புதான் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. புத்தகத்தை மூல மொழியான ஆங்கிலத்தில் எழுதியவர் ஆலன் ஆக்ஸல்ராட் என்னும் அமெரிக்கர். நடுவயதைக் கடந்த வரலாற்று ஆய்வாளர். வணிகவியல், மேலாண்மையியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதியிருக்கிறார். காந்தியின் கடிதங்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் முக்கியமான சில தொடர்களை எடுத்துக்கொண்ட ஆக்ஸல்ராட், அவற்றை விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எந்த நோக்கத்துக்காக அந்தச் சொற்கள் எழுதப்பட்டதோ, அதைப்பற்றிய சுருக்கமாக ஓர் அறிமுகத்தை முதலில் வழங்குகிறார். பிறகு, அதன் தொடர்ச்சியாக அந்தக் கருத்தின் மையத்திலிருந்து மேலாண்மை தொடர்பான சிக்கல்களின் மையத்துக்குச் சென்று, அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்துவைக்க காந்தியின் கருத்து உதவும் விதம் பற்றி ஒரு சிறிய வரையறையைக் கொடுக்கிறார். அவ்வரையறைகள் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும் கொள்கைகளாக விளங்கக்கூடியவை என்றொரு முடிவை நெருங்குகிறார். இறுதியில் காந்திய வழியை வெற்றிக்கான வழியாக வகுத்துச் சொல்கிறார்
ஆக்ஸல்ராட்.