"கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே" என்பது குறுந்தொகைப் பாடலொன்றின் வரி. "தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணன் உலகு" என்பது திருக்குறள். ஆணும் பெண்ணும் காதலோடு இணைந்து வாழ்கிற இன்பத்துக்கு இணையான ஒன்று இவ்வுலகிலேயே இல்லை என்பதுதான் இவ்வரிகளின் சாரம். ஒருவர் அன்பில் மற்றவர் கரைந்து, ஒருவர் சொல்லில் மற்றவர் துன்பமும் சோர்வும் நீங்கி, ஒருவர் மனம் மற்றவர் இளைப்பாறும் இடமாக மாறி வாழ்கிற வாழ்வில் கிட்டுகிற அமைதியும் இன்பமும் மிகப்பெரிய மரத்தின் இனிய நிழலில் இளைப்பாறும்போது கிட்டுகிற அமைதிக்கும் இன்பத்துக்கும் இணையானவை. இருந்தபோதிலும் எல்லாருடைய இல்வாழ்வும் இளைப்பாறும் நிழலாக இருப்பதில்லை. மாறாக, வெப்பம் மண்டிய பாதையாக மாறிவிடுகிறது.