Home

Sunday, 4 June 2017

நம்பிக்கையின் ஊற்று- கி.விஜயலட்சுமியின் "நான் இளைப்பாற"



"கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே" என்பது குறுந்தொகைப் பாடலொன்றின் வரி.  "தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணன் உலகு" என்பது திருக்குறள்.  ஆணும் பெண்ணும் காதலோடு இணைந்து வாழ்கிற இன்பத்துக்கு இணையான ஒன்று இவ்வுலகிலேயே இல்லை என்பதுதான் இவ்வரிகளின் சாரம்.  ஒருவர் அன்பில் மற்றவர் கரைந்து, ஒருவர் சொல்லில் மற்றவர் துன்பமும் சோர்வும் நீங்கி, ஒருவர் மனம் மற்றவர் இளைப்பாறும் இடமாக மாறி வாழ்கிற வாழ்வில் கிட்டுகிற அமைதியும் இன்பமும் மிகப்பெரிய மரத்தின் இனிய நிழலில் இளைப்பாறும்போது கிட்டுகிற அமைதிக்கும் இன்பத்துக்கும் இணையானவை. இருந்தபோதிலும் எல்லாருடைய இல்வாழ்வும் இளைப்பாறும் நிழலாக இருப்பதில்லை. மாறாக, வெப்பம் மண்டிய பாதையாக மாறிவிடுகிறது.


தன் மனம் உணர்கிற வெப்பத்தைத் தணித்துக்கொள்ள ஓர் ஆணுக்கு இவ்வுலகில் பல வழிகள் இருப்பதுபோல, ஒரு பெண்ணுக்கு இருப்பதில்லை. வீடு என்கிற சதுரங்களுக்கு இடையே உழல்கிற பெண்ணுக்கு இவ்வெப்பத்தின் கடுமை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இக்கடுமையில் இருந்து மீண்டெழும் முயற்சியாக பலர் புத்தகங்கள் படிக்கிறார்கள். பலர் தெய்வநம்பிக்கையிலும் சடங்குகளிலும் தம்மை இழந்துவிடுகிறார்கள். படிப்பையும் தெய்வத்தையும் புகலிடமாகக் கொள்ள முடியாதவர்கள் செடிகொடி வளர்க்கிறார்கள். மரம் வளர்க்கிறார்கள். வீட்டு விலங்குகளுடன் பேசி மகிழ்ந்து அமைதியைத் தேடுகிறார்கள்.  துன்பம் மிகும் நேரங்களில் எல்லாம் தம் வீட்டுமுன்னால் வளரும் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து புலம்பி அழுகிற அம்மாவின் சித்திரத்தை பழமலையின் ஒரு கவிதையில் காணலாம்.  அம்மாவின் சோகத்தைக் கேட்டுக்கேட்டுத்தான் வேப்பமரமே கசப்புடையதாக மாறியது என்று முடிகிறது அக்கவிதை.  வாழ்க்கையில் இளைப்பாற இடமில்லாதபோது, மரம் இளைப்பாறுகிற இடமாக மாறுகிறது.

அது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான ஊக்கத்தை ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியும். மரத்தோடு பழகப்பழக மரத்தின் குணம் தானாகவே நம் மனத்திலும் பதியக்கூடும். "மாந்தர் குறைக்குந்தனையும் குளிர்நிழலைத் தந்து மறையும்" மரம் மனித வாழ்வுக்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. மரம்போல் வாழும் பேறு தனக்கு வாய்க்காதா என்னும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது சுந்தர ராமசாமியின் ஒரு கவிதை.

ஓ ஹென்றியின் "இரு இலைகள்" என்னும் சிறுகதையில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கிற ஒரு பெண்ணின்  சித்திரம் இடம்பெறுகிறது. அவள் படுத்திருக்கும் அறையின் ஜன்னல் வழியாக எதிர்வீட்டு மதிலோரம் இலைகளை உதிர்த்துக்கொண்டிருக்கும் மரமொன்று தெரிகிறது. அவள் பார்வையில் தெரியும் மரக்கிளையில் இலைகள் எல்லாம் உதிர்ந்துவிடும் நாளில் தன் மரணம் நிகழும் என்று எண்ணுகிறது அவளுடைய கோழைமனம். காலத்தால் அழிக்கமுடியாத ஓர் ஒவியத்தை என்றாவது தீட்டிவிடமாட்டோமா என்று எண்ணி ஏங்குகிற ஓர் ஓவியனைக்கொண்டு யாருமறியாத நள்ளிரவில் குளிரில் அந்த மதிலில் மரக்கிளையின் இலைகள் தீட்டப்படுகின்றன. ஓவிய இலைகள் உண்மை இலைகளைப் போலவே ஒளிபொருந்தியவையாக உள்ளன. குளிர்க்காய்ச்சலால் அந்த ஓவியன் மறைந்துவிடுகிறான்.  உதிராத அந்த இலைகளின் தோற்றம் தந்த ஊக்கத்தாலும் நம்பிக்கையாலும் அவள் உயிர்பிழைத்துவிடுகிறாள்.

மரத்தை இளைப்பாறும் ஓர் இடமாக நினைத்துக்கொள்கிற ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் குரலை நான் இளைப்பாற என்னும் கவிதையில் ஒலிக்கவைக்கிறார் கி.விஜயலட்சுமி. எழுதியவர் பெண் என்பதால் கவிதையில் இடம்பெறும் குரலுக்குரியவர் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அது ஆணின் குரலாகவும் இருக்கலாம். வாழ்வின் வெப்பத்திலிருந்தும் விரக்தியிலிருந்தும் மீண்டெழுவதற்கான ஒரு வழியாக ஒரு கன்றை நட்டு வளர்க்கிற ஒருவர், சரியாகப் பச்சை பிடிக்காமல் வாட்டமுற்றுச் சரியத் தொடங்குiற அக்கன்றைப் பார்த்து வருத்தமடைகிறார். அதன் வாட்டம் தன் வாட்டத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.  அது துளிர்த்தெழ தன் உயிரையே ஜீவநதியாகப் பாய்ச்சுவதாக உரைக்கிறார்.  அக்கன்று எப்படியாவது பச்சைபிடித்து உயர்ந்தெழ வேண்டும் என்பதுதான் ஒரே ஆவல். அப்பசுமையில் சரிந்து இளைப்பாறுவது ஒரு மாபெரும் கனவு என்பதையும் முன்வைக்கிறார்.

இனியாவது என்னும் சொல் கவிதைக்கு கூடுதலான அழுத்தத்தைக் கொடுக்கிறது. இனியாவது இளைப்பாறவேண்டும் என்றால் இன்றுவரை இளைப்பாறுதல் இல்லா வெப்பத்தில் புழுங்கும் வாழ்க்கையை வாழ்ந்ததாகவே பொருளாகிறது.  தாமரைக்கண்ணன் உலகைவிட ஒருவர் மடியில் இன்னொருவர் இளைப்பாறுகிற தருணங்களே இன்பம் மிகுந்ததென்னும் எண்ணத்தோடு தொடங்குகிற இல்வாழ்க்கை, நாளடைவில் இளைப்பாறலே இல்லாத பாலையாக மாறிவிடுவது மிகப்பெரிய துரதிருஷ்டம். கற்ற கல்வியாலும் செல்வத்தாலும்கூட அந்த இளைப்பாறலைத் தரமுடியவில்லை. உற்றார் உறவினர்களாலும் நட்புகளாலும்கூட நல்ல இளைப்பாறல் அமையவில்லை. தொலைந்துபோன  அந்த இளைப்பாறலை வேறு விதத்தில் மீட்டெடுக்கமுடியாத அவலநிலையில் மனம், தான் நட்டுவளர்க்கும் மரநிழலில் இளைப்பாறவாவது வழியமைய வேண்டும் என்று விரும்புகிறது. மனிதர்கள் ஏமாற்றலாம், மரங்கள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. "தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு.." என்ற திரைப்படப் பாடல்வரியை இந்த இடத்தில் நினைத்துக்கொள்ளலாம். வாட்டமுற்று மரக்கன்று தலைசாய்வதைக் காணும்போது தன் நம்பிக்கை குலைந்துவிடுமோ என ஒருகணம் அச்சமெழுவதில் நியாயமிருக்கிறது. கைவிட்டுவிடாதே என்ற கோரிக்கையோடு கவிதையின் வரிகள் முன்வைக்கப்படுகின்றன.


*

நான் இளைப்பாற

கி.விஜயலட்சுமி

பொறு
வாடிவாடி என்னை
வாட்டமுறச் செய்யாதே
குடம்குடமாய்
ஓயாமல் ஊற்றுவேன்
அதுவும் போதாவிட்டால்
உயிரையே பெருக்கெடுத்துப்
புரளும் ஜீவநதியாக
உன் அடிவாரத்தில்
பாயச் செய்வேன்
நான் திரியும் வனத்தில்
துளிர்த்துத் தழைத்து
பரந்து பசுமை காட்டு
இனியாவது
நான் இளைப்பாற


*

கிவி என்றழைக்கப்படுகிற கி.விஜயலட்சுமியின் கவிதையுலகம் ஆரவாரமற்ற எளிய சொற்களால் தீட்டப்பட்ட கவிதைகளால் நிறைந்தது. அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்த இவருடைய "காற்றின் சந்தேகம்" நல்ல வாசககவனத்தைப் பெற்றது. இத்தொகுப்பின் கவிதைகள், கவிதைத்துறையில் இவருடைய இடத்தை உறுதிசெய்தன. "விடைபெறா வினாடிகள்" என்றொரு தொகுப்பும் வெளிவந்தது.