Home

Tuesday, 20 June 2017

நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"


சமீபத்தில் வார இதழொன்றில் எள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா, மகள், குழந்தை என ஆறு தலைமுறைப்பெண்களை ஒருங்கே நிற்கவைத்து எடுக்கப்பட்ட படமொன்றைப் பார்த்தேன். அதைப் பார்க்கப்பார்க்க என் மனத்தில் ஒருவித நெகிழ்ச்சியுணர்வும் மகிழ்ச்சியும் எழுந்தன. எனக்கு என் பாட்டியிடம் பேசிச்சிரித்து கதைகேட்ட அனுபவம்மட்டுமே நினைவில் உள்ளது. பாட்டியின் பாட்டியைப்பற்றிய விவரம் கொஞ்சம்கூடத் தெரியாது. வேறு சிலருக்கு பாட்டியின் பாட்டிபற்றிய விவரம் தெரிந்திருக்கக்கூடும். ஒரு சிலருக்கு அவருடைய கொஞ்சல்களையும் செல்ல முத்தங்களையும் பெற்றிருக்கிற நற்பேறும் அமைந்திருக்கக்கூடும். ஆனால் நான்கு பாட்டிகளை ஒரே குடும்பத்தில் பெற்றிருப்பது என்பது மிகப்பெரிய அபூர்வமான பேறு என்றே சொல்லவேண்டும்.

படத்தில் காணப்பட்ட குழந்தை தனக்கு நான்கு பாட்டிகள் இருப்பதையொட்டி என்ன நினைக்கக்கூடும் என்று யோசித்தேன். மற்றவர்களிடம் உரையாடும்போது, "என்கிட்ட ரெண்டு சிப்பாய்பொம்மைங்க இருக்குது, நாலு கார்பொம்மைங்க இருக்குது என்று சொல்லி பெருமையடித்துக்கொள்கிறமாதிரி, எனக்கு நாலு பாட்டிங்க இருக்காங்க.." என்று சொல்லிப் பெருமைபபட்டுக்கொள்ளக்கூடுமோ என்று நினைத்துக்கொண்டேன். அந்த நான்கு பாட்டிகளில் எந்தப் பாட்டியை அக்குழந்தையை மிகவும் நெருக்கமாக உணரும் அல்லது எந்தப் பாட்டி அக்குழந்தையை மிகவும் நெருக்கமாக உணர்வார் என்றும் என்னை நானே கேட்டுக்கொண்டேன். தாய்க்கு உதவியாக குழந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ளத் தேவையான உடலாற்றலை முன்வைத்து முதல் பாட்டிக்கு சில முன்னுரிமைகள்  இருக்கக்கூடும். குழந்தைக்கும் அந்தப் பாட்டியே எல்லாவிதமான உதவிகளுக்கும் தேவையானவராக இருக்கக்கூடும். பார்க்கும் கண்களுக்கு அந்தப் பாட்டி-பேத்தியின் நெருக்கமே ஆழமான ஒன்றாகப் புலப்படக்கூடும்.  ஆனால் உண்மையில், மனஅளவில் மூத்த பாட்டிகளே கூடுதலான நெருக்கமுள்ளவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. குழந்தையைக் குறித்த பெருமிதம் சின்னப் பாட்டியைவிட மூத்த பாட்டியிடம் நிச்சயம் கூடுதலாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். தன் குழந்தைப்பருவத்தில் தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்றை தன் பரம்பரைத் தளிரொன்று கச்சிதமாகவும் எளிதாகவும் செய்வதைக் காண்கிறபோது அவர்களிடம் ஒருவித நிறைவுணர்ச்சி திரண்டெழக்கூடும். குழந்தை செய்வதை தானே செய்வதாக நினைத்து பூரிப்படையக்கூடும். பூரிப்பின் அளவு சின்னப் பாட்டியைவிட பெரிய பாட்டியிடமே அதிகமாக இருக்கக்கூடும்.

ஜெயகாந்தன் கதைகளில் இடம்பெறும் பாட்டி-பேத்தி உறவு கவனிக்கப்படவேண்டிய ஒன்று.  அவர் கதைகளில் பேத்தியின் நடவடிக்கைகளில் மொத்த குடும்பமே அதிருப்தியை வெளிப்படுத்தும்போது, பாட்டிமட்டுமே அவளுக்கு உற்ற துணையாக இருக்கிறாள். மாறிவரும் காலத்தின் கோலத்தை ஆண்களைவிட பெண்களால்மட்டுமே நுட்பமாக உணரமுடியும்.

மாலதி மைத்ரியின் கவிதையில் நான்கு தலைமுறைப் பெண்களின் கோட்டுச் சித்திரங்கள் இடம்பெறுகின்றன. ஒரு யானையின் கதை நான்கு தலைமுறைகளின் வழியாக இன்றும் உலவுகிறது. முதல் தலைமுறைப்பெண் தனக்குச் சொல்லப்பட்ட யானையின் கதையை இரண்டாவது தலைமுறைப் பெண்ணுக்குச் சொல்கிறாள்.  அக்கதையை சிறிதுகூட மாற்றமின்றி இரண்டாவது தலைமுறைப்பெண் மூன்றாவது தலைமுறைப்பெண்ணுக்குச் சொல்கிறாள். மூன்றாவது தலைமுறைப் பெண் அக்கதையோடு வெளியே செல்கிறாள். இந்த வெளியே செல்தல் என்பதுதான் பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம். புறஉலகம் என்பது முதல் இரண்டு தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்காத ஒன்று. அந்த வாய்ப்பு மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண்ணுக்குக் கிடைக்கிறது. வாழ்க்கை என்னும் கடலை அவள் நேருக்குநேர் பார்க்கிறாள். மோதவரும் அலைகளிடையே தடுமாறித்தடுமாறி நீந்திக் குளிக்கிறாள். அவளிடமிருந்த யானைக்கதை சிதறுகிறது. ஒரு பாதி கடலோடு போய்விடுகிறது. மிச்சமிருந்த மறுபாதியோடு அவள் வெளிப்படுகிறாள். நேரிடையான அனுபவங்கள் அவளைச் செம்மைப்படுத்துகின்றன.  அவள் பார்வைகளை மாற்றியமைக்கின்றன. அவள் பார்வை மாற்றமடையும்போது அவள் வைத்திருக்கும் கதையும் மாற்றமடைகிறது.  அடுத்த தலைமுறைப் பெண்ணிடம் வந்து சேரும் அக்கதை வெகுவிரைவில் வியக்கத்தக்க அளவில் வேறொரு மாற்றத்தை அடைகிறது. மாற்றமடைந்த கதையைப் பகிர்ந்துகொள்ள அவள் அடுத்த தலைமுறைவரை காத்திருக்கவில்லை. அதை ஊருக்கே அறிவித்து பகிர்ந்துகொள்கிறாள். 

ஒரு நாட்டுப்புறக்கதையைப் போன்ற விவரணையோடு முன்வைக்கப்படுகிற கவிதையில் செயல்படும் அழகியல் முக்கியமானது. யானை வலிமையுள்ள விலங்கு. தன் வலிமையை தானே அறியாத விலங்கு. அது குழந்தையைப்போல குழைந்துகுழைந்து ஆடக்கூடியது. வேகமெழும் கணத்தில் மிகவிரைவாக ஓடித் தாக்கி எதிர்ப்பை பூண்டோடு அழிக்கும் சக்தியையும் கொண்டிருக்கிறது. அது இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். தன் வலிமையை தானே அறியாத அல்லது தான் அறிந்துகொள்வதற்கான சூழல்களிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட பெண்களின் தலைமுறையைப்பற்றிப்பேச யானையைவிட சிறந்த படிமம் வேறெதுவும் இருக்கமுடியாது. தான் ஒரு யானை என்றுகூட அறியாமல் வளர்ந்த முதல்தலைமுறைப் பெண்களின் வாழ்வு அவலம் நிறைந்தது.  அவலத்தில் தொடங்கி குதூகலத்தில் முடிகிறது மாலதி மைத்ரியின் கவிதை. இருபது வரிகளுக்குள் நான்கு தலைமுறைகளிடையே நிகழ்ந்த மாற்றங்கள் உணர்த்தப்பட்டுவிடுகின்றன.

*

யானைக்கதை

மாலதி மைத்ரி

முன்பு ஒருநாள் தன் அம்மா சொன்ன
கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்குப் பரிசாகக் கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல்
யானையுடன் கடலுக்குச் சென்றேன்

மலைமலையாய் அலையெழுப்பி
நீருக்குள் புதைத்துப் புரட்டி
கிண்டிக் கிளறி வெளியே என்னைத்
தூக்கி எறிந்தது கடல்
கரைந்து மீந்த  பாதித் தும்பிக்கையுடன்

கடலும் வானமும் ஒன்றாகக் கலந்து பிளிறியது
சோகத்துடன் திரும்பினேன்
ஊரே கூடி என்னை வேடிக்கைப் பொருளெனப்
பார்க்க
குழம்பிப் பின் திரும்பினேன்
தெருவெல்லாம் அலையலையாய் என் பின்னே
தொடர்ந்து வர

கடலில் கரைந்த ஒற்றை யானைக்கு
ஓராயிரம் தும்பிக்கைகளென
என் மகள் ஊருக்கெல்லாம்
ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்.



*


தொண்ணூறுகளில் வெளிப்பட்ட முக்கியமான கவிஞர்களில் ஒருவர் மாலதி மைத்ரி. புதுச்சேரியைச் சேர்ந்தவர். மன உலகத்தின் சித்திரங்களுக்கு வசீகரமான சொல்வடிவங்களை உருவாக்கித் தரும் இவருடைய கவிதைகள் முதல் வாசிப்பிலேயே மனத்துக்கு நெருக்கமாக உணரவைப்பவை.  சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி இவருடைய கவிதைத் தொகுதிகள். தமிழ்க்கவிதையுலகின் முக்கியமான பெண்கவிஞர்களின் படைப்புகளைக் கொண்ட கவிதைத்தொகுதியை கிருஷாங்கினியும் இவரும் இணைந்து பறத்தல் அதன் சுதந்திரம் என்னும் தலைப்பில் தொகுத்திருக்கிறார்கள்.