Home

Monday, 12 June 2017

வாழ்க்கையும் வன்முறையும்- மனுஷ்யபுத்திரனின் "நீரடியில் கொலைவாள்"



கோடை விடுமுறையில் ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்த ஒருநாள் தற்செயலாக சோளிங்கபுரம் நரசிம்மர் கோயிலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே இருந்த ஒரு குளத்துக்கு சக்கரத்தீர்த்தம் என்று பெயர். பெயரின் புதுமை உருவாக்கிய ஆர்வத்தால் கோயில் நடையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவரிடம் விவரம் கேட்டேன். முன்னொரு காலத்தில் அசுரர்களின் தொல்லை அதிகமான சமயத்தில் அவர்களை அழிப்பதற்காக மகாவிஷ்ணு ஆஞ்சநேயரை அனுப்பியதாக ஒரு கதை இருக்கிறது.  ஆயுதமாகப பயன்படுத்திக்கொள்ள தன் சக்கரத்தையே ஆஞ்சநேயரிடம் கொடுத்தனுப்புகிறார் விஷ்ணு. யுத்தத்தில் அசுரர்களை அழிக்கிறார் ஆஞ்சநேயர். வெற்றியுடன் திரும்பிய அவர் ரத்தம் படிந்த சக்கரத்தை குளத்தில் போட்டுவிட்டு விஷ்ணுவைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறார். நீரடியிலேயே சக்கரம் கிடந்த குளம் சக்கரத்தீர்த்தமாகப் பெயர்பெற்றுவிட்டது. ஆழ்ந்து அமைதியாகப் பரந்திருக்கும் குளம். அதனடியில் கொலைஆயுதமாகப் பயன்பட்ட சக்கரம். நினைத்துப் பார்த்த கணத்தில் உடல் சிலிர்த்தது.


குளம் என்பதை மனத்தின் படிமமாகவும் கொலைவாளை வன்முறையின் படிமமாகவும் பார்க்கும்போது பல உண்மைகளை தௌiவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அமைதி, அன்பு, நேசம், குறும்பு, சீற்றம், எரிச்சல், கருணை ஆகியவற்றைப்போலவே வன்முறையும் மனத்தின் ஒரு குணம். அமைதியாக இருப்பவர்களே தேவையின் பொருட்டு வன்முறையை வெளிப்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.  காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள ஒரு தெய்வம் தாக்கவருகிறவர்களைக் கொல்லாமல் தம் மக்களைக் காப்பது எப்படி? வன்முறை அப்போது தவிர்க்கப்படமுடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.

மனுஷ்யபுத்திரனின் "நீரடியில் கொலைவாள்" கவிதை மானுடமனத்தைப் படிமமாக்கி முன்வைத்துள்ள கவிதை. நீருக்கடியில் உள்ள வாளை அறிந்துகொண்ட தௌiவு இக்கவிதையில் உள்ளது. வாள் தவிர்க்க முடியாத ஒரு ஆயுதம் என்னும் தௌiவும் இருக்கக்கூடும். அதன் நுனியில் படிந்த ரத்தக்கறையையும் அறிந்திருக்கக்கூடும். வாள் எடுக்கப்படாமலேயே இருக்கப்படவேண்டும் என்பது ஒரு விழைவு.  அப்படி ஒரு தருணம் வாழ்வில் நேராமலேயே இருக்கவேண்டும் என்பதும் ஒரு விழைவு. வாளை எடுக்கத் தூண்டுகிற நெருக்கடியான தருணத்தை மனத்தில் கருணை ஊற்றெடுத்துத் தடுக்கவேண்டும் என்பதும் ஒரு விழைவு. நெருக்கடித் தருணங்களில் வாளின் நினைவே எழாதபடி, மற்ற குணங்கள் பொங்கி எதிர்கொள்ளவேண்டும் என்பது இன்னொரு விழைவு.  வாளின் ரத்தக்கறையை கழுவி முடித்து, இயல்பாக நீருக்கடியில் காணப்படக்கூடிய கூழாங்கற்களைப்போலவும் நீர்த்தாவரத்தைப்போலவும்  உயிர்த்திருக்கக்கூடிய ஒன்றாக வாளும் மாறிக்கிடக்கவேண்டும் என்பதுதான் அவ்விழைவின் சாரம். அதாவது வன்முறை என்பது சொல்லளவில்மட்டுமே இருக்கும், செயல்படாத ஒரு மின்கலத்தைப்போல.

வாழ்விலிருந்து வன்முறையைப் பிரித்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவால்.    சவால் என்தாலேயே நாம் அதை இயல்பாக எடுத்துக்கொண்டு வன்முறைக்கு அடிபணிந்துவிடக்கூடாது. சவாலை எதிர்கொண்டு வெற்றியடைவது முக்கியம்.  வெற்றிகொள்ள முடியாத தருணத்திலும் முயற்சியைக் கைவிடாமல் இருப்பதுவும் முக்கியம். கொலைக்குற்றத்தின் அடிப்படையில் தண்டனைக்கு ஆளானவர்கள் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில் நிதானமிழந்து செயல்படத் தூண்டிய ஆத்திரத்துக்கு ஆளாகி கொலை செய்வதாகவே சொல்கிறார்கள்.  விளிம்புவரை பொங்கிவழியும் அக்கணத்தின்முன் நாம் அடிபணிந்துவிடக் கூடாது. நாம் கற்ற கல்விக்கும் வளர்த்துக்கொண்ட பண்புக்கும் நாள்முழுக்க பேசுகிற அறத்துக்கும் பொருளில்லாமல் போய்விடும். அதை வென்றெடுப்பது முக்கியம்.


*

நீரடியில் கொலைவாள்

மனுஷ்யபுத்திரன்


நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்

இன்று இரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும்
ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி
இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்

*

எண்பதுகளில் எழுதவந்த கவிஞர்களில் முக்கியமானவர் மனுஷ்யபுத்திரன். செறிவான சித்தரிப்புகளாலும் ஆற்றோட்டமான மொழியாற்றலாலும் அபூர்வமான படிமங்களாலும் இவருடைய கவிதைகள் மறக்கமுடியாதவையாகின்றன.  'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' என்பது இவருடைய முதல் தொகுப்பு. நிழல் இதழில் வெளிவந்த ‘கால்களின் ஆல்பம்’ என்னும் கவிதைக்குக் கிடைத்த வரவேற்பு தமிழ்க்கவிதையுலகில் இவரை முக்கியமானவராக்கியது. இதுவரை நான்கு தொகுதிகள் வந்துள்ளன. தற்போது உயிர்மை இதழின் ஆசிரியராக இருக்கிறார்.


*