வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நான்கு மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்துவந்த ஒரு பாட்டி இறந்துவிட்டாள். கம்பங்கள் நட்டு துணிக்கூரை விரித்து பாதையை அடைத்தபடி நீண்ட கண்ணாடிக் குளிர்ப்பெட்டிக்குள் அவளுடைய உடலை வைத்திருந்தார்கள். நடந்துசெல்ல
மட்டும் இரண்டடி அகலத்துக்கு இடைவெளி இருந்தது. கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி நூறு நூற்றைம்பது நாற்காலிகள் போடப்பட்டு உறவுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். காரை எடுக்க வழியே இல்லை.
மல்லேஸ்வரம் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதற்காக மஞ்சுளா வைத்திருந்த திட்டம் நடைபெறவில்லை. டில்லியில் பல ஆண்டுகளாக கார் ஒட்டிப் பழகியவளுக்கு பெங்களூர் தெருவில் ஓட்ட நடுக்கமாக இருந்தது. அதனால் அன்றைய தினம் அவளை அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லிவைத்திருந்தாள். ஆனால் பாட்டியின் மரணம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது.
“என்ன செய்யலாம் மஞ்சுளா? தெரு வரைக்கும் நடந்துபோய் ஆட்டோவுல போவலாமா?” என்று மெதுவாகக் கேட்டேன். ”வேணாங்க. சாவு எடுக்கட்டும். சாயங்காலமா போவலாம்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அவள். ”சொர்க்கவாசல் தெறக்கற சமயத்துல கோயில்ல இருக்கணும்” என்று ஒரு நாளைக்கு நூறுதரம் திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டே இருந்தவளா பற்றற்ற ஞானிமாதிரி பேசுகிறாள் என்று ஒருகணம் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. “பாட்டிக்கு அதிர்ஷ்டம் அதிகம். சரியா சொர்க்கவாசல் தெறக்கற சமயத்துல செத்திருக்குது. என்ன மாதிரியான தற்செயல் பாருங்க. சாவு எடுத்த பிறகு போகலாம். பரவாயில்லை” என்று சொன்னபடி பால்கனிக்கு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
”ஏகாதசியில சாகறவங்க எல்லாருமே சொர்க்கத்துக்கு போயிடுவாங்களா மஞ்சுளா?” அவள் அருகில் சென்று, தோளைத் தொட்டபடி மெதுவாகக் கேட்டேன்.
“நூத்துக்கு நூறு சதவீதம் சொர்க்கம்தான். சந்தேகமே இல்லை” என்றபடி என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள். வேறொரு தருணமாக இருந்திருந்தால் ”அதெல்லாம் கற்பனை” என்று விவாதத்தில் இறங்கியிருப்பேன். அவளைப் பேசவைத்து அந்தத் தருணத்தையே நகைச்சுவை மிக்கதாக மாற்றியிருப்பேன். ஆனால் அக்கணத்தில் அவள் முகத்தில் சுடர்விட்ட பிரகாசம் என்னை அமைதியாக்கிவிட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக நெஞ்சின் ஆழத்திலிருந்து ஒரு முகம் எழுந்துவந்து என் மனத்திரையில் விரிவடைவதை என்னால் உணரமுடிந்தது. அவர் குப்பாண்டித் தாத்தா. நரைத்து கலைந்த தலைமுடியும் தாடியுமாக இருந்த அவருடன் முப்பது வருஷங்களுக்கு முன்பாக கதை பேசி, சிரித்து விளையாடியதெல்லாம் என்னமோ ஒரு வாரத்துக்கு முன்பாக நடந்த சம்பவத்தைப்போல இருந்தது. என் மனம் உடைவதுபோல விம்மியது. சட்டென மஞ்சுளாவிடம் “குப்பாண்டி தாத்தாவ பத்தி உன்கிட்ட எப்பவாவது சொல்லியிருக்கேனா?” என்று கேட்டேன்.
“எந்தத் தாத்தா?”
”குப்பாண்டித் தாத்தா”
“யார் அவர்? ஒங்க சொந்தமா?”
”சொந்தம்லாம் கெடயாது மஞ்சுளா. எங்க ஊரு சுடுகாட்டுல பொணம் சுடறவர். ரொம்ப தங்கமானவரு. ரொம்ப அழகா பாட்டு கட்டி பாடுவாரு. சின்ன வயசுல எங்களுடைய கூட்டாளி.”
பரபரப்பாக வந்து விழுந்த என் சொற்களைக் கேட்டபடி அவள் முகம் அசைவில்லாமல் என்னையே பார்த்தது. ”உங்க கூட கூட்டாளியா இருக்கறதுக்கு வயசு வித்தியாசமே தேவையில்லை” என்று அவள் சொன்ன கேலிச்சொற்களை என் மனம் உள்வாங்கிக்கொள்ளவே இல்லை.
“எங்க பாண்டிச்சேரி வீடுதான் ஒனக்கு தெரியும். பாண்டிச்சேரிக்கு வரதுக்கு முன்னால நாங்க கிராமத்துல இருந்தம். நான் பள்ளிக்கூடம் படிச்சதுலாம் அங்கதான். அங்க இருந்த சமயத்துல எங்க வீட்டுக்கு பக்கத்துல சினிமா காட்டற ஒரு கீத்துக்கொட்டா இருக்கும். அதுக்கு பக்கத்துல சுடுகாடு. உண்மைய சொல்லணும்ன்னா அது ஒரு பெரிய தோப்பு. அங்க இல்லாத மரமே கெடயாது. அந்த காலத்துல அதுல யாரோ சுடுகாட்ட ஏற்படுத்திகிட்டாங்க. நான், நாகராஜன், சுப்பராயன், சேகர் நாலு பேரும் கூட்டாளிங்க. வேலை தேடிய பட்டதாரிகள். பகல்கணக்கு, ராக்கணக்கு தெரியாம நாங்க எல்லா நேரத்துலயும் அந்த தோப்புலதான் பேசிகினிருப்பம். வயசு வித்தியாசம் இல்லாம எங்கமேல தாத்தா பிரியமா பேசுவாரு. பழய பழய கதைங்களலாம் சொல்லுவாரு. யாராச்சும் பொணம் எடுத்துட்டு வராங்கன்னு வந்து சொன்னாதான் அவருக்கு வேல. அதுவரைக்கும் பேச்சுதான்……”
“பொணம் வந்துட்டா?”
“அது வேற ஒரு தனிஉலகம். அதுல எறங்கிட்டாருன்னா, ஒலகத்தயே மறந்துடுவாரு தாத்தா.”
“அப்ப நீங்க என்ன செய்வீங்க?”
“ஒதுங்கி நின்னு வேடிக்கை பாப்பம்.”
“குடும்பம் எதுவும் இல்லயா அவருக்கு?”
“ஏன் இல்ல? பெரிய சம்சாரியா இருந்த ஆளுதான். அஞ்சி ஆம்பளை, ஒரு பொண்ணுன்னு ஆறு புள்ளைங்க இருந்தாங்க. என்னமோ குளிர்காய்ச்சல் வந்து பொண்டாட்டி செத்துடுச்சி. அஞ்சி புள்ளைங்களும் வளந்து எங்க எங்கயோ போயிட்டாங்க. பொண்ண பாண்டிச்சேரி பக்கம் கட்டி குடுத்தாரு. அதுக்கு ஒரே ஒரு புள்ள. அதும் புருஷன் கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிட்டு போதையில ஒருநாளு கடல்ல உழுந்து செத்துட்டான். புள்ளய கூட்டிகினு அப்பாகிட்டயே வந்துட்டுது அந்த பொண்ணு.”
“அஞ்சி புள்ளைங்க இருந்தும் கைதூக்கி உட ஒரு புள்ள கூட பக்கத்துல இல்லைங்கற கொடும மாதிரி உலகத்துல வேற ஒன்னுமில்ல. ”
“ஒரே ஒரு பையன் பம்பாய்லேருந்து தாத்தாவுக்கு அம்பது நூறுன்னு எப்பவாச்சிம் மணியார்டர் அனுப்புவான். மத்த புள்ளைங்கள பத்தி ஒரு விவரமும் தெரியாது. ரேகை வச்சி பணத்த வாங்கற அன்னிக்கு தாத்தா மூஞ்சியில ஒரே பூரிப்பா இருக்கும். அன்னிக்கு பூரா ஒரே பாட்டும் கச்சேரியுமா இருக்கும்…..”
“தாத்தாவுக்கு பாட்டு கூட தெரியுமா?”
“என்ன அப்படி கேட்டுட்ட? பெரிய பாட்டு சொரங்கம் அவர். சுடுகாட்டுக்கு பக்கத்துலயே சினிமா கொட்டா இருந்திச்சின்னு சொன்னனே, மறந்துட்டியா? மொத்த சினிமாவயும் சுடுகாட்டுலேருந்து காதாலயே கேட்டுடலாம். அத கேட்டு கேட்டு ஒவ்வொன்னும் மனப்பாடமா வச்சிக்குவாரு தாத்தா. தனியா இருக்கும்போது அதுதான் அவருக்கு பொழுதுபோக்கு. அமைதியான நதியினிலே ஓடம் பாட்ட அவரு பாடினா கேக்கறவங்களுக்கு கண்ணு கலங்கிடும். தனியா இருக்கும்போது இதுதான் எங்களுக்கு வேலை. அவரு பாட, பதிலுக்கு நாங்க பாடன்னு நேரம் போவறதே தெரியாது. கூத்து வசனமா, சினிமா வசனமான்னு சரியா ஞாபகமில்லை, அரிச்சந்திரன் பேசற வசனம் ஒன்ன அவரு மனப்பாடமா சொல்வாரு. அருமையான கலைஞர்.”
“தாத்தாவுக்கு என்ன வயசிருக்கும்?”
“அப்பவே அறுவது எழுவது இருக்கும். இந்த அளவுக்கு மனப்பாட சக்தி இருக்கறவரு எழுத்தயும் சீக்கிரம் கத்துக்குவாருன்னு நாங்களா ஒரு முடிவ எடுத்துட்டு, அவருக்கு பேரெழுத கத்து குடுக்கறதுக்குள்ள எங்களுக்கு மயக்கமே வந்துட்டுது. ஒரே ஒரு எழுத்து கூட அவரு மனசுல பதியலை”
“அது ஏன் அப்படி?”
“அதான் புரிஞ்சிக்கமுடியாத விசித்திரம். மணியார்டர்ல ரேகை வைக்கிறாரே, குறைஞ்சபட்சமா அவருக்கு கையெழுத்து போடவாவது கத்துக் குடுத்துடலாம்ன்னு நெனச்சிதான் காரியத்துல எறங்கினம். ஆனா அவருக்கு விரலே வளையலை. என்னப்பா இது, ஒவ்வொரு எழுத்தும் பாம்பு சுருண்டுபடுத்தமாதிரி இருக்குதுன்னு அலுத்துபோயி விட்டுட்டாரு.”
“அவருக்கு கத்துக்க விருப்பமிருந்ததோ இல்லையோ?”
“அப்படியும் சொல்லமுடியாது. ஒரு எழுத்த எழுதிக் காட்டுனா அதப் பாத்து அப்படியே எழுதிடுவாரு. அந்த அளவுக்கு ஆசயாதான் இருந்தாரு. ஆனா அவரால மனப்பாடமா எழுத முடியலைங்கறதுதான் பிரச்சின.”
“கடசியா என்னதான் செஞ்சிங்க?”
“அவராவே ஒரு யோசனைய சொன்னாரு. தோப்புல தடியா ஒரு ஒதிய மரம் இருந்திச்சி. அவரு பேருக்குரிய எழுத்துங்கள அதுல செதுக்கி வைச்சிடுன்னு சொன்னாரு. நாங்களும் கல்வெட்டுமாதிரி குப்பாண்டின்னு செதுக்கி வச்சிட்டம். அதுக்கப்புறம் மணியார்டரு வந்தா போதும், ஒதிய மரத்துங்கிட்ட போயி, அத பாத்து அப்பிடியே எழுதி குடுத்து பணம் வாங்கிக்குவாரு.”
”இயற்கையிலயே சிலருக்கு சில திறமைகள் இருக்கும்ன்னு சொல்வாங்க. தாத்தாவுடைய திறமை இயற்கையிலயே வந்த திறமைன்னு நெனைக்கிறேன்”
“திறமை மட்டுமா இயற்கை. சரியான விடாக்கண்டன் கொடாக்கண்டன். அதுவும் இயற்கையான கொணம்தான். காசிபணம் விஷயத்துல ரொம்ப கறாரான ஆளு. பத்து பைசா கூட அவருகிட்டேருந்து வாங்க முடியாது. மணியார்டர் கொண்டாற போஸ்ட்மேனுக்கு ஒரு நாலணா குடு தாத்தான்னு சொன்னா குடுக்கமாட்டாரு. தானமா கொடுக்கறதுக்கு அவன் என்ன சம்பளம் இல்லாமயா வேல செய்யறான்னு வெடுக்குனு கேட்டுடுவாரு. அதே மாதிரி ஒரு பொணத்துக்கு நூறு ரூபாய்னு அந்த காலத்துல ஒரு கணக்கு. அதுல ஒரு ரூபா கொறஞ்சா கூட உடமாட்டாரு. முழுசா வாங்காம அந்த இடத்த உட்டு நவுறமாட்டாரு.”
“ஏன் அப்படி ஒரு புடிவாதம்?”
”அதான் அவரு கொணம்ன்னு சொன்னனே. ஒருதரம் யாரோ ஒரு இல்லாதபட்டவன் சுடுகாட்டுக்கு வந்தான். வழக்கமா எங்க ஊரு கணக்குபுள்ளதான் அவன்கிட்டேருந்து பணத்த வாங்கி மோளக்காரன், தாளக்காரன், பாடைக்காரன்ங்களுக்குலாம் பிரிச்சி குடுத்தாரு. வெட்டியான்ங்கற மொறையில தாத்தாவயும் கூப்ட்டு குடுக்கறத திருப்தியா வாங்கி வச்சிக்கன்னு சொல்லிட்டு எண்பது ரூபாய குடுத்தாரு. குடுத்தா நூறா குடுங்க, இல்லைன்னா வேணாம்ன்னு தாத்தா வாங்கவே மாட்டேன்னு நின்னுட்டாரு. இல்லாதவன போயி கொண்டாந்து குடுன்னு சொன்னா, அவன் எங்கேர்ந்து தாத்தா கொண்டாருவான்னு கணக்குபுள்ள சொல்றத அவரு காதுலயே வாங்கிக்கலை. இருக்கறவன் இல்லாதவன்னு வித்தியாசம் பார்த்தா நான் என் வேலைய செய்றேன்? எல்லாருக்கும் ஒரே மாதிரிதான செய்றேன். அப்ப எதுக்கு கூலியில மட்டும் வித்தியாசம்னு முணுமுணுத்தாரு. அதுக்கப்புறம் கணக்குப்புள்ளயும் வண்டிக்காரரும் ஆளுக்கு பத்து ரூபா சொந்த பணத்த சேத்து தாத்தாவுக்கு குடுத்தாங்க. அதுக்கப்பறம்தான் அவரு மொணறல் அடங்கிச்சி. ராத்திரி குண்டான எடுத்துகினு பேரன ஊட்டுப்பக்கம் வரச்சொல்லு தாத்தான்னு சொல்லிட்டு போயிட்டாங்க”
“மொரட்டுத்தனமான தாத்தாவா இருப்பாரோ?” மஞ்சுளாவின் புருவங்கள் உயர்ந்தன.
“இரு.இரு. அவசரப்படாத. இதுவரைக்கும் கேட்டது தாத்தாவுடைய பாதி கதைதான். மீதி கதைய கேட்டாதான் அவர் மனசுக்குள்ள இருக்கற ஈவுஇரக்கத்தை புரிஞ்சிக்கமுடியும்?”
“தீபாவளி, பொங்கல் சமயத்துல எங்க ஊரு கீத்துகொட்டாய்ல ஒரு நாளைக்கு நாலு ஷோ போடுவாங்க. பகல்ல ராமாராவ், காந்தாராவ்னு தெலுங்கு நடிகர்ங்க நடிச்ச டப்பிங் படம். ராத்திரியில எம்.ஜி.ஆர்., சிவாஜி நடிச்ச படம். ஒரே கொண்டாட்டமா இருக்கும். ஆனா வைகுண்ட ஏகாதசி அன்னைக்குமட்டும் ராத்திரி பூரா படம் காட்டுவாங்க. ஏகாதசிக்கு கண்முழிக்கற வயசானவங்கள்ளாம் கோயில்ல பஜனை கேப்பாங்க. சின்ன பசங்கள்ளாம் சினிமா கொட்டாய்க்கு ஓடியாந்துடுவாங்க. ஒரே டிக்கட்டுல மூணு படம். எல்லாமே பக்திப்படம்ங்க. ராத்திரி ரெண்டாவது ஆட்டத்துக்கு டிக்கட் வாங்கிகினு உள்ள போனா, மூணு படங்க பாத்துட்டு காலையில வரலாம். அப்புறம் குளிச்சிட்டு நேரா கோயிலுக்கு ஓடுவாங்க பசங்க.”
“நீங்களும் போவீங்களா?”
“பத்து பைசா சம்பாதிக்க துப்பில்லாத பசங்களாச்சே நாங்க. எங்களுக்கு யாரு பணம் குடுத்து கொட்டாய்க்கு அனுப்புவாங்க? எங்களுக்கும் வாய தெறந்து காசி கேக்க கூச்சம். அப்படியே ஆசய அடக்கிகினு சுடுகாட்டு தோப்புக்கு போயிடுவம். தாத்தாவும் வந்துடுவாரு. அங்க கத பேசிகினே, ஓடற படத்தயெல்லாம் காதால கேட்டுக்குவோம். ரேடியோவுல ஒலிச்சித்திரம் கேக்கறமாதிரி இருக்கும். மொதல் படம் மீரா. இரண்டாவது படம் கிருஷ்ணாவதாரம். மூணாவது படம் திருமால் பெருமை.”
“கண்முழிக்கறதுக்காக இப்படிலாம் செய்வாங்களா? எங்க ஊருல ஆறேழு மண்டபங்கள் இருக்கும். ஒவ்வொன்னுலயும் ஒரொரு கதாகாலட்சேபம் நடக்கும். அதுல போயி ஒக்காந்து கேப்பம் நாங்க.”
”எங்க ஊருல எல்லாத்துக்கும் சினிமாதான். மொதல் படம் மீரா ஓடும்போது பாட்டு வந்தாவே போதும், தாத்தாவும் கூடவே பாட ஆரம்பிச்சிட்டாரு. அந்த ராத்திரி நேரத்து குளுர்ல தாத்தா பாடறத கேக்கக்கேக்க யாரோ ஒரு துறவி உக்காந்து பாடறமாதிரி இருந்திச்சி. எம்.எஸ்.சுப்புலட்சுமின்னு ஒரு பெரிய பாடகி அந்த காலத்துல பாடி நடிச்ச படம் இது. ஒவ்வொரு பாட்டும் உருக வச்சிடும். அந்த படம் முடிஞ்சதும் விநாயகனே வினை தீர்ப்பவனேன்னு பாட்டு போட்டாங்க. அந்த நேரத்துல தாத்தா எங்களுக்குலாம் சுக்கு காப்பி போட்டாந்து குடுத்தாரு. குளுருக்கு அது ரொம்ப இதமா இருந்தத மறக்கவே முடியாது. உஸ்உஸ்னு ஒரே ஊதக்காத்து. குளுருல கைகாலு வெறச்சிடும்போல இருந்திச்சி. கிருஷ்ணாவதாரம் ஆரம்பிச்சதுமே தாத்தா கிருஷ்ணனை திட்ட ஆரம்பிச்சிட்டாரு. அவன் பெரிய தந்திரசாலின்னு திருப்பித்திருப்பி சொன்னாரு. நேர்மை இல்லாத மொறையில பாரதக் கதையில ஒவ்வொரு வீரனயும் சாவடிச்சிட்டாங்கன்னு நிறுத்திநிறுத்தி எங்களுக்கு கத சொன்னாரு. நாங்க சினிமா கதயயே கேக்கலை, அவரு சொன்ன கதையத்தான் கேட்டம். கடவுளா பொறந்த அந்த காலத்து அரசியல்வாதி கிருஷ்ணன்னு சொல்லிட்டு அவரு சிரித்த சிரிப்பு இருக்குதே, அது இன்னும் என் நெஞ்சில எதிரொலிச்சிகிட்டே இருக்குது.” என் நெஞ்சில் கைவைத்துக் காட்டிவிட்டு ஒருகணம் இலக்கில்லாமல் தெருவைப் பார்த்தபடியே சொன்னேன். அந்தப் பழைய காலத்து சிரிப்பொலி என் நெஞ்சில் அதிர்வதை என்னால் உணரமுடிந்தது.
”படிப்பறிவே இல்லாத ஒரு ஆளு கேள்வி ஞானத்துலயே பாரதக்கதய சொல்றது பெரிய ஆச்சரியம்.”
“சந்தேகமே இல்லை மஞ்சுளா, அவர் ஒரு பிறவிக்கலைஞர். கிருஷ்ணாவதாரம் முடிஞ்சி திருமால் பெருமை தொடங்கி ஒரு பத்து நிமிஷம்கூட இருக்காது. சினிமா கொட்டாய் பக்கத்துலேருந்து ஐயோ ஐயோன்னு ஒரே சத்தம் கேட்டுது. மொதல்ல எங்களுக்கு எதுவுமே புரியலை. என்னமோ சினிமா சத்தம்னுதான் நெனச்சோம். அப்பறமாதான் ஜனங்க போடற கூச்சல்னு புரிஞ்சிது. என்னமோ ஆபத்துன்னு மனசுல பட்ட நிமிஷத்துலயே கீத்துக்கொட்டா நெருப்பு புடிச்சி எரியறத பாத்துட்டேன். டேய், நெருப்புடான்னு தாத்தாவும் அதே நேரத்துல சத்தம் போட்டாரு. உடனே நாங்க எல்லாருமே எரிஞ்சிட்டிருந்த கொட்டாய் பக்கமா ஓடனோம். காத்து வேகத்துக்கு நெருப்பு எல்லாப் பக்கத்துலயும் பரவிட்டுது. நாங்க போயி சேரதுக்குள்ள நெருப்பு இல்லாத இடமே இல்லைன்னு ஆயிட்டுது. திகுதிகுன்னு கொட்டா எரிஞ்சது. படால் படால்னு மூங்கில் வெடிக்குது. உள்ள போயி காப்பாத்தலாம்ன்னா எங்களால உள்ள போகவே முடியலை. உத்திரம் வெடிச்சி அப்படியே ஒருபக்கம் உள்ள வாங்கிகிச்சி. ஜனங்களுக்கு வெளிய ஓடியாற இருந்த ஒரே வழி டிக்கட்டு கேட் மட்டும்தான். அது பத்தலை. முட்டி மோதி வெளிய வர முடிஞ்சவங்க எப்படியோ வந்துட்டாங்க. கீழ உழுந்தவங்களால எழுந்திருக்கவே முடியலை. எல்லாரும் அவுங்கள மிதிச்சிகிட்டே ஓடறாங்க. கொட்டாய சுத்தி வச்சிருந்த மறப்பு தட்டிய புடுங்கிட்டு கொஞ்ச ஜனங்க தப்பிச்சாங்க. நெருப்புவேகம் எப்படிப்பட்டதுன்னு அன்னைக்கு நான் நேரா பார்த்தேன். அரமணி நேரத்துல கொட்டா அப்படியே அமுங்கிடுச்சி. தாத்தா தலயில அடிச்சிகிட்டு அழுதாரு”
”ஃபயர் சர்வீஸ் வரலையா?”
“டவுன்லேருந்து வரதுன்னா அவ்ளோ சுலபமான வேலையா? எல்லாம் எரிஞ்சி முடிஞ்சதும் காலையிலதான் வந்தாங்க. தண்ணிய பீய்ச்சி அடிச்சி நெருப்பும் அனலும் அடங்கினதும் செத்து கெடந்தவங்கள எடுத்து வரிசையா வச்சாங்க. மொத்தம் நூத்தி முப்பத்தேழு பேரு. கரிக்கட்டய அடுக்கி வச்ச மாதிரி இருந்திச்சி. பஞ்சம் பட்டினியில, மழ வெள்ளத்துல கூட இந்த அளவுக்கு செத்ததில்லைன்னு பேசிகிட்டாங்க. ஊரே கூடி நின்னு அழுதது. பெரிய ஆஸ்பத்திரிலேருந்து டாக்டருங்க வந்து, அங்கயே தனியா கூடாரம் போட்டு, போஸ்ட் மார்டம் பண்ணி ரிப்போர்ட் எழுதிகிட்டு பொணங்கள குடுத்தாங்க.”
மஞ்சுளா கன்னங்களை கைகளிடையே தாங்கியபடி மிரண்டுபோன கண்களோடு என்னையே பார்த்தபடி இருந்தாள்.
“எல்லாருமே பொணத்த சுடுகாட்டுக்குத்தான் தூக்கியாந்தாங்க. தாத்தா ஒத்த ஆளு. வயசானவரு வேற. ஆனா சக்திக்கு மீறி ஓடி ஓடி வேல செஞ்சாரு. தகன மேடையில ஒரு பொணத்தத்தான் ஒரு நேரத்துல எரிக்கமுடியும். எல்லாப் பொணத்துக்கும் எடம் கெடயாது. அதனால எடம் கெடச்ச பக்கத்துலயெல்லாம் கட்டயை அடுக்கி மேடையா மாத்தினாரு. பொணத்துக்கு சாங்கியம் பண்ற சொந்தக்காரங்க அங்கயே வந்து பண்ணாங்க. அவருகிட்ட இருப்புல இருந்த கட்டைலாம் தீந்துபோயிட்டுது. கணக்குப்புள்ள ஊட்டுலேருந்து வண்டிவண்டியா கட்டைங்க வந்தது. ஊரு ஜனங்க, ஊட்டுக்குள்ள வச்சிருந்த வெறவுக்கட்ட, எருமுட்டை, மண்ணெண்ணெய்ன்னு எல்லாத்தயும் கொண்டாந்து குடுத்தாங்க. தாத்தாவுக்கு கூடமாட எல்லாருமே வேல செஞ்சம். தாத்தா அழுதுகிட்டே வேல செஞ்சாரு. ஒவ்வொரு பொணத்துங்கிட்டயும் நின்னு கெளறிவிடறது, தள்ளிவிடறதுன்னு ஒழுங்கு பண்ணிகிட்டே இருந்தாரு. பொணம் எரியும்போது பார்க்கக்கூடாதுன்னு பொதுவா சொல்வாங்க. ஆனா அன்னைக்கு ஊரு ஜனம் முழுக்க பொணம் எரியறத பார்த்துதுங்க. அன்னிக்கு முழுக்க தாத்தா ஒரு வாய் தண்ணிகூட குடிக்கலை.”
“அடுத்த நாள் காலையில சுடுகாட்டுக்கு போன சமயத்துல பொணம் எரிச்ச எடத்துக்குப் பக்கத்துலயே தனித்தனியா எலும்பயும் சாம்பலயும் எடுத்து குமிச்சி வச்சிருந்தாரு. பால் ஊத்தி சடங்கு செய்றவங்க, அங்கங்க ஓரமா இருந்து செஞ்சி முடிச்சிட்டு போனாங்க. சுடுகாட்ட நிமுந்து பாக்கவே முடியலை. திரும்பன பக்கம்லாம் சாம்பலா கெடந்தது. பத்திரிகைகாரங்களாம் வந்து படம் புடிச்சிகினு போனாங்க. சடங்கு முடிஞ்சி ஆளுங்கள்ளாம் போனதும் காடே வெறிச்சினு ஆயிட்டுது.”
“ரெண்டு நாளா தாத்தா ஒன்னுமே சாப்படலைன்னு அவரு பொண்ணு வந்து சொன்னதுக்கப்புறம்தான் எங்களுக்கும் அந்த விஷயம் தெரிஞ்சிது. அவர பாக்கவே பாவமா இருந்திச்சி. கஞ்சி சொம்ப எடுத்து நான்தான் அவருகிட்ட குடுத்து குடி தாத்தான்னு சொன்னன். அவரு சட்டுனு ஓன்னு ஒடஞ்சி அழ ஆரம்பிச்சிட்டாரு. என்னால தாங்கிக்க முடியலைடா என்னால தாங்கிக்க முடியலைடான்னு தேம்பித்தேம்பி அழுதாரு. நாங்க மூணு பேரும் அவர் பக்கத்துலயே உக்காந்து மார தடவி குடுத்தம். மெதுவா பேசிபேசி அமைதியாக்கிட்டு கஞ்சிய குடிக்க வச்சம். நாலஞ்சி வாய்தான் குடிச்சாரு. வேணாம்டா வாந்தி வரமாதிரி இருக்குதுன்னு சொம்ப கீழ வச்சிட்டாரு. வேணாம்ன்னா உட்டுடு தாத்தான்னு சொல்லிட்டு, அவர அப்படியே மரத்தடியில படுக்க வச்சிட்டம். அசதியில அவரு அப்படியே தூங்கிட்டாரு.”
”தாத்தாவ தனியா உட்டுட்டு போவ மனசு வரலை. அதனால ஒரொரு ஆளா ஊட்டுக்குப் போயி சாப்ட்டுட்டு வந்தம். என்னென்னமோ கதைங்கள பேசிகினே ஒக்காந்திருந்தம். சாய்ங்காலமாதான் தாத்தா மெதுவா கண்ண தெறந்தாரு. மூஞ்சி கொஞ்சம் தெளிச்சியா இருந்திச்சி. அவுரு முழிச்சிட்டாருன்னு தெரிஞ்சதும் சுக்கு காப்பி கொண்டாந்து குடுத்திச்சி அவரு பொண்ணு. அவுங்களுக்கும் குடும்மான்னு கை காட்டனாரு தாத்தா. அந்த பொண்ணுக்கு என்னமோ தயக்கம். எல்லாம் நம்ம புள்ளைங்கதான். ஒன்னும் யோசிக்காத, ஊத்தியாந்து குடுன்னு சொல்லி அனுப்பனாரு. அதுக்கப்பறம் நாங்களும் சுக்கு காப்பிய குடிச்சோம். அனுமாரு வால்ல நெருப்ப சுத்திகிட்டு போயி இலங்கைய எரிச்சாருன்னு கூத்துல சொல்வானுவோ. சின்ன வயசுல அத கேட்டுட்டு சிரிப்பேன். இலங்கை எப்படி எரிஞ்சி அழிஞ்சிருக்கும்ன்னு இப்ப தெளிவா புரிஞ்சிகிட்டேன்னு பெருமூச்சு உட்டாரு தாத்தா. அவர் பேச்ச எப்படி நிறுத்தறதுன்னு தெரியாம அவர் பேசறத கேட்டுகிட்டே இருந்தம். அழாம இருக்காறே, அதுவே போதும்ன்னு சும்மா இருந்துட்டம்.”
“சாய்ங்காலமா கணக்குப்புள்ளயும் ஊரு ஜனங்களுமா சேர்ந்து சுடுகாட்டு பக்கமா வந்தாங்க. என்ன ஏதுன்னு புரியாம தாத்தா எழுந்து நின்னு கும்புட்டாரு. எப்படி பேச்சை தொடங்குவதுன்னு தெரியாதமாதிரி மோவாய தேச்சிகிட்டே நின்ன கணக்குபுள்ள மெதுவா ஒரு துண்டால சுத்தன பொட்டலத்த தாத்தா பக்கமா நீட்டி இத வச்சிக்கன்னு சொன்னாரு. என்னா சாமின்னு கேட்டாரு தாத்தா. இங்க பாரு தாத்தா, நடக்க கூடாத விபத்து நம்ம ஊருல நடந்துட்டுது. ஊருல ஒரு ஆளா இருந்து நீ சாவு காரியத்த பாத்துகிட்ட. யாராலயும் அத மறக்கமுடியாது. அதுக்காக ஒன் ஒழப்புக்கு ஒரு மரியாத செய்யாம உடறது நாயம் கெடயாது. இருக்கறவன் இல்லாதவன்னு வித்தியாசம் பார்த்தா நான் என் வேலைய செய்றேன், எல்லாருக்கும் ஒரே மாதிரிதான செய்றேன். அப்ப எதுக்கு கூலியில மட்டும் வித்தியாசம்னு நீயே பலமுறை கேட்டிருக்க. இதுல ஒரு பத்தாயிரம் ரூபா வசூல பண்ணி கொண்டாந்திருக்கேன். கொறவோ நெறவோ, மனசு நோவாம நீ வாங்கிக்கனாதான் எங்களுக்கு நிம்மதின்னு சொன்னாரு கணக்குப்புள்ள”
“ஆனா கணக்குப்புள்ள சொன்னத கேட்டதும் தாத்தா பொங்கி எழுந்துட்டாரு. சாமி வந்தமாதிரி ஒரே சத்தம். என்னிய என்ன கூலிக்கு வேல செய்ற ஆளுன்னு மட்டும் நெனச்சிட்டியா சாமி? நான் என்ன மனசாட்சி இல்லாத ஆளா? செத்தவங்கள்ளாம் ஒனக்கு அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, பேரன் பேத்தி மொறைன்னா எனக்கும் அந்த மொறைதான் சாமி. நான் எதயும் காசிக்காக செய்யலை, தெரிஞ்சிக்க சாமி. இன்னும் என் ரத்தத்துடிப்பு அடங்கலை. செத்தவங்களுக்கு செய்ய கடமப்பட்டவன் நான். என்கிட்ட எதுவும் பேசாத, போயிடு சாமி. போயிடு. காசி பணம்லாம் ஒன்னும் வேணாம், போயிடுன்னு அழுதுகினே சத்தம் போட்டாரு. கணக்குப்புள்ளயால ஒரு வார்த்த கூட பேசமுடியலை. அப்படியே செலயாட்டம் நின்னுட்டாரு. யாரோ ஒருத்தவங்க அவருக்கு பதிலா பேச போனாரு. கணக்குப்புள்ள அவரு கைய புடிச்சி தடுத்துட்டு வாங்க போவலாம்ன்னு திரும்பி எல்லாரயும் கூப்ட்டுக்னு போயிட்டாரு.”
பேச வார்த்தை கிடைக்காதவளாக ஒருகணம் மஞ்சுளா என்னையே பார்த்தபடி இருந்தாள். பிறகு மெதுவான குரலில் “உண்மையிலேயே பெரிய மனுஷன்தான் அந்த தாத்தா” என்றாள். சில கணங்களுக்குப் பிறகு, “ஊரவிட்டு வந்த பிறகு தாத்தாவ நீங்க பாக்கவே இல்லயா?” என்றாள். நான் உதட்டைப் பிதுக்கியபடி தலையசைத்தேன்.
“அதுக்கு வாய்ப்பே இல்லாம போயிட்டுது மஞ்சுளா. வேலை கிடைச்சி நான் டில்லிக்கு வந்தேன். வரும்போது தாத்தாவ பாத்து சொல்லிட்டுதான் வந்தன். அங்க ரெண்டு வருஷம் இருந்துட்டு சிங்கப்பூர் போயிட்டேன். அங்க ரெண்டு வருஷம். அதுக்கப்புறம் அமெரிக்கா. மறுபடியும் டில்லி. எங்க குடும்பமும் பாண்டிச்சேரி, பெங்களூர்ன்னு எங்கெங்கயோ திசைமாறி போயிட்டுது. த்ச்.” என்னால் தொடர்ந்து பேசமுடியவில்லை.
“அதனால என்ன ராம்? ஒரு தரமாச்சிம் கிராமத்துக்குப் போயி எல்லாரயும் பார்த்துட்டு வந்திருக்கலாம்.” குரலில் ஒருவித அழுத்தம் தொனிக்கும் வகையில் கேட்டாள் மஞ்சுளா.
“போகாம இல்லை மஞ்சுளா. அம்மா அப்பா பாண்டிச்சேரியில இருந்த சமயத்துல போயிருந்தேன். ஆனா கிராமமே மாறி போயிருந்திச்சி. என் பழைய கூட்டாளிங்கள கூட கண்டுபிடிக்கவே முடியலை. என்ன யாருக்குமே அடயாளம் தெரியலை. தாத்தாவ பாக்கலாம்ன்னு சுடுகாட்டு தோப்பு பக்கமா போனன். அங்க தாத்தா இல்ல. வேற யாரோ புதுசா இருந்தாங்க. அவுங்களுக்கு விஷயம் எதுவும் தெரியலை. திரும்பி வர சமயத்துல அந்த ஒதிய மரம் கண்ணுல பட்டுது. தாத்தாவுக்காக அவரு பேர செதுக்கி வச்ச மரம். அந்த செதுக்கலயே ஒரு நிமிஷம் தொட்டு பார்த்துட்டு திரும்பிட்டேன்.”
மஞ்சுளா என்னைப் பார்த்தாள். சில கணங்களுக்கு முன்பாக கேள்வி கேட்டபோது இருந்த முகம் மாறியிருந்தது. என்னிடம் எதையும் சொல்லாமல் கழுத்துச் சங்கிலியை உருட்டியபடி சிறிது நேரம் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். நான் பார்வையைத் திருப்பி தெருவை அடைத்திருந்த துணிக்கூரையைப் பார்த்தேன். அந்தப் பாட்டியின் இறுதி ஊர்வலம் தொடங்கவிருப்பதுபோலத் தெரிந்தது.
(கூடு - இணைய இதழுக்காக எழுதப்பட்டது)