நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் தமிழிலக்கியத்துக்குக்
கிடைத்த நல்ல வாசகர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என தேடித்தேடிப்
படிப்பவர். படைப்புகளின் அழகைப் பேசிப்பேசி தம் குடும்பத்தினர் அனைவரையும் இலக்கிய
வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்டவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேவதேவன்
கவிதைகளில் மூழ்கியிருந்தார்.
தேவதேவனின் படைப்புலகிலிருந்து அபூர்வமான நூறு
வரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்குப் பொருத்தமான ஓவியங்களோடு இணைத்து
கணினித்திரையில் பயன்படுத்தும் விதமாக அழகாக வடிவமைத்துள்ளார். வாசகர்கள் அத்தொகுப்பை கீழ்க்கண்ட இணைப்பில்
காணலாம்.
இரண்டு நாட்களாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப்புரட்டி கவிதை வரியையும் படத்தையும் பார்த்தபடி இருக்கிறேன். மிகப்பொருத்தமான வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். பாதத்தில் ஒரு முள் தைத்து முள்ளில்லா பாதையெல்லாம் முள்ளாய்க் குத்தும் - எனக்கும் பிடித்தமான வரி. வரிகளை இப்படி அசைபோடுவதும் நம் அன்றாட அனுபவங்களை அதையொட்டி மதிப்பிட்டுப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் ஒருவிதமான மனப்பயிற்சி. இவ்வனுபவம் அளிக்கும் புதுமையான நிறைவை வேறு எதுவும் நமக்கு அளிக்காது. ஒருவகையில் தேவதேவனை உள்வாங்கிக்கொள்ள இதுவும் ஓர் எளிய வழிமுறை. ஸ்ரீநிவாச கோபாலனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.