Home

Monday, 30 May 2016

பாலகுமாரின் படைப்புகள்



ஒரு நல்ல சிறுகதை என்பது அதில் சொல்லப்பட்டதைவிட சொல்லாதவற்றை நினைத்துக்கொள்ளவும் அந்த நினைவுகளில் தோய்ந்திருக்கவும் ஒரு வாசகனைத் தூண்டும் தன்மையுடையதாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நவீனத்துவத்தின் பார்வை படிந்த சிறுகதை, நவீனத்துவத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சிறுகதை, குறியீடுகளாலான சிறுகதை, பின்நவீனத்துவத்தின் பார்வையை முன்வைக்கும் சிறுகதை என எந்தக் காலத்தைச் சேர்ந்த கதையாக இருந்தாலும், அவை சிறந்த படைப்பாக இருப்பதற்கு இந்தத் தன்மைதான் முக்கியமான காரணம். படிப்பதற்கு மிகமிக எளிமையானவையாக காட்சியளிக்கக்கூடிய அசோகமித்திரன் கதைகளில் சொன்னதைவிட சொல்லாத பல கூறுகள் அதன் உள்ளடுக்குகளில் நிறைந்திருப்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணரமுடியும்.

இன்று புதிதாக எழுதவரும் ஒரு படைப்பாளியின் முன் உள்ள மாபெரும் சவால் இதுதான். இதில் வெற்றியடைவதற்கான ஒற்றை வழிமுறை என எதையும் சுட்டிக்காட்டிவிட முடியாது. இயற்கையாகக் கைகூடி வரும் அளவுக்கு மனமும் உணர்வும் மொழியும் படைப்பூக்கத்துடன் ஒன்றிணைந்திருக்க வேண்டும். வீணைநரம்புகளை மீட்டமீட்ட அதிலிருந்து வெளிப்படும் இசைக்கும் மனவுணர்வுக்கும் உருவாகும் இணைப்பைப்போல ஒரு படைப்பிலும் ஒரு நல்லிசைவு உருவாகவேண்டும். அப்படிப்பட்ட படைப்பே காலத்தை விஞ்சி நிற்கும் வலிமையைக் கொண்டிருக்கும்.
சமீப காலமாக சிறுகதைத்துறையில் ஆர்வத்துடன் இயங்கிவரும் பாலகுமார் விஜயராமன் ஒரு தொகுப்பைப் பிரசுரிக்கும் அளவுக்கு பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவர் தன்னுடைய சிறுகதைகளில் எந்த அளவுக்கு சிறுகதை வடிவத்துக்குரிய சவாலை எதிர்கொண்டிருக்கிறார் என்னும் கேள்விக்குரிய விடை மிகவும் முக்கியமானது. சம்பிரதாயமாக பாலகுமாரை வாழ்த்தி நான்கு வரிகள் எழுதிவிட்டுச் செல்வது மிகவும் எளிது. ஆனால் அப்படிப்பட்ட வரிகளால் பாலகுமாருக்கு எவ்விதமான பயனுமில்லை. நான் அதைச் செய்ய விழையவில்லை. ஒருபோதும் என்னை நாடிவரும் இளைஞர்களுக்கு அதைச் செய்வதும் இல்லை.
பாலகுமார் எழுதியிருக்கும் பதினான்கு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அனைத்தையும் படித்துமுடித்த கணத்தில் அவர் கையாண்டிருக்கும் மொழி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அந்த மொழியின் வசீகரம் பாலகுமாரின் மிகப்பெரிய பலம். மன எழுச்சியை ஊட்டக்கூடிய படைப்புகளுக்கு, அந்த மொழி கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது. அதே சமயத்தில் பலவீனமான படைப்புகளில், அந்த வசீகரம் நிறம்குன்றி மங்கிவிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை. மொழியின் துணையோடு உச்சத்தை எட்டக்கூடிய வலிமை பொருந்திய கதைகளை முன்வைத்து, சிறுகதையாக்கத்துக்குரிய சவாலை பாலகுமார் எளிதாகக் கடந்துசெல்லும் விதத்தைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.
புறாக்காரர் வீடு இத்தொகுப்பின் முக்கியமான ஒரு சிறுகதை. பிள்ளைகளைப்போல புறாக்களை பாசத்துடன் வளர்க்கும் அப்பா. புறாக்காரர் வீடு என்று அவர் வாழும் வீட்டை ஊரார்கள் அடையாளப்படுத்தும் அளவுக்கு அவருடைய பாசம் பேர்போனது. வீட்டின் மாடிப்பகுதியில் ஒரு பக்கம் புறாக்கள் அடையும் கூடுகள். இன்னொரு பக்கம் அப்பாவின் அறை. புறாக்கள் மெல்லமெல்ல வளர்கின்றன. வானவெளியில் பறந்து திரிகின்றன. பொழுதெல்லாம் அலைந்து திரிந்துவிட்டு மாலையில் கூடடைகின்றன. புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்கின்றன. இரையெடுக்கவும் பறக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்த்து ஒதுங்கி நின்று மகிழ்கின்றன. அப்பா வளர்க்கும் புறாக்கள் வளர்ந்து பெரிதாவதுபோல பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பெரிய அக்கா வளர்ந்து மணம் முடித்துக்கொண்டு, ஒரு திசையில் சென்றுவிடுகிறாள். சின்ன அக்காவும் தனக்கு விருப்பமான மாப்பிள்ளையையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என பிடிவாதம் பிடித்து, மணம் முடித்துக்கொண்டு இன்னொரு திசையில் சென்றுவிடுகிறாள். தம்பி சென்றடையவும் கல்விக்கான தேடல் என ஒரு திசை கிடைத்துவிடுகிறது.  அண்ணனுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திசைதேடிச் செல்ல விரும்பாத அவன் வீட்டிலேயே இருந்து, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சிக்கு ஆளாகமல் மெல்ல மெல்ல அப்பாவின் இடத்தைக் கைப்பற்றி விடுகிறான்.
தனிமை வேண்டும் என்பதால் அப்பாவின் அறையை முதலில் எடுத்துக்கொள்கிறான் அவன். கவனிப்பாரில்லாத புறாக்கள் ஒன்றையடுத்து ஒன்றாக இறந்துபோகின்றன. புறாக்கள் அந்த வீட்டில் இருந்தன, அவற்றை அவர் வளர்த்தார் என்பதெல்லாம் இப்போது ஒரு பழங்காலத்து அடையாளம்  மட்டுமே. அப்பாவின் ஏக்கத்தையும் பெருமூச்சையும் மதிக்காத ஒரு புதிய காலம் எழுச்சி பெறுகிறது. கதைப்போக்குக்கு ஈடுகொடுத்து நிற்கிறது பாலகுமாரின் மொழி.
பாலகுமார் சொன்ன கதையிலிருந்து, சொல்லாத கதையை என் மனத்தால் உய்த்தறிய முடிகிறது. அப்பாவின் இறுதிக்காலம் வருத்தமளிப்பது உண்மை. புறாக்களையும் பிள்ளைகளையும் பாசத்துடன் வளர்க்கும் அப்பா, கடைசிக்கணம் வரைக்கும் அப்பா என்னும் மனிதராகவே இருக்க நினைக்கிறார். ஒரு கணமும் அப்பா புறாவாக அவர் மாறவே இல்லை. புறாக்களோடேயே வாழ்நாளைக் கழித்திருந்தும்கூட புறாக்களிடமுள்ள குணத்தை – குஞ்சுகளை விலக்கிவைக்கும் குணம் அல்லது குஞ்சுகளிடமிருந்து விலகிச் செல்லும் குணம்- அவர் அறிந்துகொள்ளவே இல்லை. ஒருவேளை, அறிந்தவராக இருந்தாலும் அதைத் தனக்குரிய குணமாக மாற்றிக்கொள்ளும் விழைவு அவரிடம்  உதிக்கவே இல்லை. ஏன் உதிக்கவில்லை? அவர் புறா இல்லை, எளிய மனிதர் என்பதே இதன் விடை. மனிதனாக இருப்பதாலேயே இந்தத் துயர். துயரற்று இருப்பதற்கான ஒரு வழிமுறை மிகத்தெளிவாக தனக்கு முன்னால் இருந்தும்கூட, அந்த வழியைத் தேர்ந்தெடுக்க மனிதன் தயங்குவது  ஒரு பெரிய புதிர். ஆதி காலத்திலிருந்து இன்றைய காலம்வரைக்கும் மனிதனை ஆட்டிப்படைக்கும் எல்லாத் துயரங்களுக்கும்  காரணமான மாபெரும் புதிர். 
மணமுறிவு நாள் சிறுகதையும் துயரம் படிந்த வரிகளால் ஆனது. கணவன் பெருநகரத்தைச் சேர்ந்தவன். மனைவி ஒரு சிறுநகரத்தைச் சேர்ந்தவள். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் மனைவிக்கு பெருநகரம் பிடிக்கவில்லை. பெருநகரத்தின் மீதான ஒவ்வாமை கணவன்மீதான ஒவ்வாமையாகவும் வளர்ந்துவிடுகிறது. கருவுற்றிருக்கும் மனைவி மனம் கசந்துவிடக்கூடாது என்பதற்காக அவளுடைய தாய்வீட்டிலேயே கொண்டு சென்று, ஓய்வுநாட்களில் சென்று பார்த்துவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொள்கிறான். குழந்தை பிறந்த பிறகும் அவள் தன் மனத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அவளுக்குச் சாதகமாக அவள் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் அவன் மீது குற்றம் சுமத்துகிறார்கள். மணவிலக்கு கோரி அவள் அனுப்பும் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு. அவள் வாழும் சிறுநகரத்திலேயே வழக்கு நடைபெறுகிறது. நீதிமன்றத்திலிருந்து அழைப்பு வரும் ஒவ்வொரு தருணத்திலும் சென்று கலந்துகொள்கிறான். மணமுறிவுக்கான ஆணை வழங்கப்படும் நாள்தான் கதையின் களன். அந்த ஆணை அறிவிக்கப்பட்ட கணத்தில் ஒரு மாபெரும் விடுதலை உணர்வை அவன் மனம் உணர்கிறது. இனி இந்தப் பயணம், இந்த ஊர், இதன் நினைவு அனைத்தின் பாரத்திலிருந்தும் விடுபட்டதுபோல இருக்கிறது. புறப்படுவதற்கு முன்பாக ஒரு தேநீர் அருந்துவதற்காக கடைக்குச் சென்று அமர்ந்த கணத்தில் ஏதோ ஒரு குழந்தை தன் அப்பாவைப் பார்த்து அப்பா என அழைக்கும் குரலைக் கேட்டு ஒரு கணம் திடுக்கிட்டு உறைந்துபோகிறான். லேசான மனத்தில் பாரங்கள் மீண்டும் ஏறி அழுத்தத் தொடங்குகின்றன. அவள் நினைவை வேண்டுமானால் அகற்றலாம். அந்தக் குழந்தையின் நினைவை எப்படி அகற்றமுடியும். இனி வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வரப்போகும் அந்தத் துயரை, காலமெல்லாம் காற்றில் கலந்து வரப்போகும் அந்த அழைப்போசையை எப்படி அகற்றமுடியும்? அவனுக்குக் கிடைத்தது விடுதலையா அல்லது தண்டனையா? விடுதலையையும் தண்டனையையும் ஒரே தட்டில் வைத்து வழங்கும் இந்த வாழ்க்கையின் புதிர் அவிழும் நாள் வருமா?
இவ்விரண்டு சிறுகதைகளைப் போல உருவாகவில்லை என்றாலும், இவற்றின் அருகில் வைத்து வாசிக்கத்தக்க கதைகளாக நினைவுப்பறவை, முதல் தாயம் ஆகியவற்றைச் சொல்லலாம். மற்ற கதைகள் முயற்சிகள் என்னும் அளவில் மட்டுமே நிற்பதாகச் சொல்லமுடியும். ஒருசில கதைகள் (உருவெளித்தோற்றம், சமிக்ஞை) சோதனை வடிவத்திலும் தன்னால் எழுத முடியும் என்று நிலைநிறுத்துவதற்கு எழுதியவைபோல உள்ளன. அதனாலேயே அவை உயிரற்ற சட்டைகளாக எஞ்சிவிட்டன. தொடக்க நிலையிலேயே தன் பலவீனங்களைக் களைந்துகொள்ளும் வழிமுறைகளில் பாலகுமார் தேர்ச்சி பெறுவது அவசியம். சுய வாசிப்புக்கும் சுய விமர்சனத்துக்கும் அவர் மனம் இடம் தருமெனில், அவரால் எந்தத் தடையையும் எளிதில் அகற்றிக்கொண்டு மேலெழமுடியும். அது நிகழவேண்டும் என்பதே என் விருப்பம். அவருக்கு என் வாழ்த்துகள்.

(புதிய எழுத்தாளர் பாலகுமாரின் முதல் தொகுப்பான ‘புறாக்காரர் வீடு’ தொகுதிக்கு எழுதிய முன்னுரை. நூல்வனம் பதிப்பகம் வழியாக இந்தத் தொகுதி வரவிருக்கிறது)