கடந்த ஒன்றிரண்டு
ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதி வாசகர்களின் கவனத்தை
ஈர்த்திருப்பவர் தூயன். பலவிதமான கூறுமுறைகளுக்கு ஏதுவாக கதைக்களங்களைக் கட்டமைக்கும்
விதங்களில் தூயனின் ஆர்வமும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வடிவப்பிசகில்லாதபடி ஒரு கதையைத்
தொடங்கும் கலையும் சரியான புள்ளியில் முடிக்கும் கலையும் தூயனுக்கு இயல்பாகவே கைகூடி
வரும் அம்சங்களாக உள்ளன.
எட்டுச் சிறுகதைகளை
உள்ளடக்கி இருமுனை என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும்
தொகுப்பில், எட்டுமே எட்டுவிதங்களில் உள்ளன. எல்லாவிதமான வகைமைகளையும் தேர்ச்சியோடு
கையாண்டிருக்கிறார் தூயன். பால்யத்தின் கனவுகளை முன்வைத்து பள்ளிச்சிறுவர்களின் அனுபவங்களாக
மலரும் மஞ்சள்நிற மீன், வரலாற்று மனிதர்களின்
சாயலில் பாத்திரங்களைப் படைத்து கனவையும் காமத்தையும் முன்வைத்து வளர்ந்து செல்லும்
பேராழத்தில், இல்வாழ்க்கையில் ஒரு புதுமனைவியின்
நிறைவேறாத கனவைச் சார்ந்த எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் எதார்த்தமும் ஒருவித மாயத்தன்மையும்
இணைந்த வசீகரமானதொரு சித்தரிப்போடு முன்வைத்து நீளும் எஞ்சுதல், எப்போதோ நிகழ்ந்துபோனதொரு தொன்மக்கதையையும் எதார்த்தக்கதையையும்
இணைத்துக் கட்டியெழுப்பும் முயற்சியாக விரிவடையும் ஒற்றைக்கைத் துலையன், மிகச்சிறு வயதிலேயே குடும்பம் சார்ந்த ஏராளமான கசப்புகளில்
மூழ்கியெழுந்த பாரம் தாங்காது தன்னைத்தானே தொலைத்துக்கொள்வதற்காக பீகாரிலிருந்து ஓடி
வந்து ஏதோ ஒரு ஓட்டலில் வேலைசெய்துகொண்டு ஒரு மேன்ஷனில் தங்கியிருக்கும் பீகார் இளைஞனுக்கும்
தன் தந்தைசார்ந்த கசப்பிலிருந்து விடுபடுவதற்காக அதே மேன்ஷனில் தங்கியிருக்கும் தமிழ்நாட்டு
இளைஞனுக்கும் இடையில் மெல்ல மெல்ல உருவாகி வளரும் நட்பையும், உணர்வு நிலையில் அவ்விருவரும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் விசித்திரத்தைச்
சுட்டும் இன்னொருவன், தீவிரமான மனச்சிதைவுக்கு
ஆட்பட்டு ஆழ்ந்த மருத்துவத்தின் பயனாக குணமடைந்த இரு வெவ்வேறு பாத்திரங்கள் ஒரு புதிய இடத்தில் புதிய சூழலில் முதன்முறையாக
அறிமுகமாகிப் பழக நேரும் தருணத்தை கூர்முனை கொண்ட இரு ஊசிகள் உரசி விலகும் நுட்பத்துடன்
விவரிக்கும் இருமுனை என ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும் விதத்தில்
அமைந்துள்ளது. கனவுகளின் பல அறைகளைக் காட்டுபவையாக தம் கதைகளை அமைக்க விழைவதாக தன்
முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் தூயன் தன் முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறார்
என்றே சொல்லவேண்டும்.
வாசிப்பனுபவம்
என்னும் கோணத்தில் மஞ்சள்நிற மீன் சிறுகதையே
இத்தொகுதியின் மிகச்சிறந்த படைப்பாகும். தன் நண்பனைப்பற்றிய ஏக்கம் நிறைந்த நினைவுகளால்
நிறைந்திருக்கும் இக்கதையை வாசிக்கும்போது நம்மையறியாமல் நம் பால்யகால நண்பன் அல்லது
தோழியின் ஞாபகமும் பள்ளிக்கால அனுபவங்களும் நினைவில் மிதக்கத் தொடங்கிவிடுகின்றன. கதைக்குள் செவந்தியான் என்கிற செபாஸ்டினின் கனவு
விசுவநாதனின் கனவாக மாறும் விசித்திரத்தைப்போல, கதைக்கு வெளியே அது நம் கனவாக மாறிவிடும்
விசித்திரம் நிகழ்வதை ஒரு வாசகனால் உணரமுடியும். கதையின் வழியாக நிகழும் இந்த மாயம்
இக்கதைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. மீன்கள், மீன்முட்கள், கடல் என எப்போதும் தன்னைக்
கனவுகளுக்குள் ஆழ்த்தியிருக்கும் செவந்தியான் ஒரே நேரத்தில் பள்ளிப்பிள்ளைகளின் நேசத்துக்கும்
கிண்டலுக்கும் உரிய பாத்திரமாக விளங்குகிறான். அவனுக்குப் படிப்பு வரவில்லை. ஆனால்
பதினொன்று மணிக்கு மேல் பள்ளிக்கு வந்து உணவு வேளைக்குப் பிறகு காணாமல் போகும் அவனால்
எட்டிப் பிடிக்க முடிந்த கற்பனையின் உயரம் யாராலும் தொடமுடியாத ஒன்று. அவனுக்கு வாழ்க்கை
வழங்கியிருக்கும் பரிசு அது.
செபாஸ்டின்
சொல்லும் கதையில் இடம்பெறும் மஞ்சள்மீன் மிகவும் அழகானது. அதே சமயத்தில் தன்னை நோக்கி
வரும் முரட்டுமீன்களையெல்லாம் அச்சுறுத்தி விலகியோடவைக்கும் சக்தியும் உடையது. ஒருகணம்
எல்லோரும் பார்க்கும் வகையில் நீந்தி ஆட்டம் போடும். மறுகணமே பவளப்பாறைகளுக்கடியில்
புகுந்து மறைந்துகொள்ளும் தன்மையும் உடையது. கடலுக்குச் சென்று மஞ்சள் மீனைப் பார்ப்பது
அவனுடைய மிகப்பெரிய கனவு. ஒருநாள் பள்ளியில் பிள்ளைகள் அனைவரும் சிரித்தும் பேசியும்
விளையாடியும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் அற்பக் காரணத்துக்காக
சண்டை மூண்டுவிடுகிறது. விசுவநாதனும் செபாஸ்டினும் குற்றவாளிகளாக ஆசிரியர் முன்னால்
நிறுத்தப்படுகிறார்கள்.
மறுநாள் பள்ளிக்குக்
கிளம்பும் விசுவநாதன் தன் நண்பனை அழைத்து வருவதற்காக கடல்புறத்துக்குச் செல்கிறான்.
பள்ளிக்குக் கிளம்ப மறுக்கும் அவனை, அவனுடைய தாய் கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறாள்.
ஆனால் வழியில் கடலையும் படகுகளையும் பரவசத்தோடு பார்க்கும் விசுவநாதனுக்கு கதைசொல்லும்
ஆர்வத்தில் செபாஸ்டினுக்கு பள்ளி மறந்துபோகிறது. இருவரும் கரையில் நிற்கும் ஒரு நாட்டுப்படகின்மீது
ஏறி நின்று தொலைவில் வரும் கப்பலைப் பார்த்து நின்று உரையாடலில் திளைக்கத் தொடங்குகிறார்கள்.
படகுக்காரன் அவர்களை அடித்து விரட்டுகிறான். பையை வீசியெறியும் செபாஸ்டின் அன்று இரவு
தன் சித்தப்பாவுடன் கடலுக்குப் போகப் போவதாகவும் மஞ்சள்மீனைப் பார்க்கப் போவதாகவும்
சொல்லிவிட்டு ஓடிவிடுகிறான். அவன் இல்லாமலேயே பள்ளிக்கு வரும் விசுவநாதனைத் தண்டிக்கும்
ஆசிரியர் அடுத்த நாள் காலையில் பெற்றோருடன் வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பிவைத்துவிடுகிறார்.
அச்சத்தின் காரணமாக காய்ச்சலில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவன் குணமடைய
இரண்டு வாரங்களாகின்றன. உடல்நலம் தேறி பள்ளிக்கு வரும் அவன் தன் நண்பன் செபாஸ்டினும்
இருவாரங்களாக வரவில்லை என்று தெரிந்துகொள்கிறான். அவன் இல்லையென்றாலும் அவன் சொல்லும்
கதைகள் இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதத்தில் திரும்பத்திரும்பச் சொல்லப்படும் கதைகள் அவன்
அங்கே இருப்பதைப்போன்ற உணர்வையே வழங்குகிறது. மனத்தின் வழியாக மட்டுமே உணரமுடிந்த மீன்வாடையின்
வழியாக செபாஸ்டின் எப்போதும் அங்கே உலவிக்கொண்டே இருக்கிறான்.
செபாஸ்டினைத்
தேடி அவனுடைய வீட்டுக்குச் செல்லும் விசுவநாதன் பார்க்க நேர்வதாக ஒரு காட்சி கதைக்குள்
இடம்பெறுகிறது. செபாஸ்டினின் அம்மா கையில் ஒரு பெரிய கருத்த மீனுடன் நிற்கிறாள். “அது
என்னம்மா?” என்று கேட்கும் செபாஸ்டினை வசைபாடியபடி துடிக்கும் மீனின் தலையில் அடித்து
ஒரு சிமெண்ட் தொட்டியில் போடுகிறாள் அவள். மீன் வாலை அடித்து தொட்டியை முட்டுகிறது.
தொட்டியை உடைத்துவிடும் என்னும் அச்சத்தால் அதன் தலையிலேயே சாவு சாவு என்று கம்பியால்
அடிக்கிறான். அடிபட்டு உயிர்விடும் அந்தச் சுறாமீன் ஒருவகையில் செபாஸ்டினுக்கான படிமமாகவும்
இன்னொருவகையில் நொறுக்கப்படும் சுதந்திரத்தின் படிமமாகவும் இயல்பாகவே அமைந்திருக்கிறது.
எஞ்சுதல் கதையில் அம்மன் திருவிழாவைக்
காணச் செல்லும் மஞ்சு வலிமையானதொரு பாத்திரம்.
இரண்டு மாதங்களாக அவள் வயிற்றில் நிலைத்து கனவுகளை ஊட்டி ஒவ்வொரு கணமும் இன்பத்தில்
திளைக்கவைத்த கரு உயிர்த்துடிப்பற்ற சதைப்பிண்டமென கண்டறிந்த மருத்துவரால் அகற்றப்பட்டுவிடுகிறது.
அதற்குப் பிறகு கருவுறும் வாய்ப்பு தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள்
கரைகின்றன. வீட்டு வாசலில் தொடங்கும் கதை அம்மன் கோவில் வாசலில் வந்து நிற்கிறது. அவள் வாழ்க்கை, கனவு, விருப்பம், இன்பம் துய்த்த
கணங்கள் அனைத்தும் சிறுசிறு நினைவுகளாக கச்சிதமாக
நெய்யப்பட்டிருக்கின்றன. கருவறையில் அம்மனின்
சொரூபத்தைப் பார்த்து மனத்திலிருக்கும் கனம் உடையவேண்டும் என எண்ணுகிறாள் அவள். என்றைக்கும்
கருவறையில் அமைதியாக அமர்ந்திருக்கும் அம்மனைப் பார்க்க அன்றுமட்டும் ஏன் அத்தனை கூட்டம்
கூடுகிறது என்னும் கேள்வி அவளைத் திகைக்கவைக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் அம்மனின் தனிமை
ஓர் அழியாச்சித்திரமாக அவள் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோய்விடுகிறது. அம்மனின் வாழ்வில்
எஞ்சுவது அத்தனிமை மட்டும்தானா என்றொரு ஐயம் அவளை நடுங்கவைக்கிறது. தேர் முடிந்து வீட்டுக்குத்
திரும்பி, உடைமாற்றிய பிறகு அறையிலிருந்து ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி
நிற்கும்போது அந்த ஐயம் மீண்டும் முளைத்தெழுகிறது. அந்த ஐயத்திலிருந்து விடுபட முடியாதபடி
வானம், நிலா, கிணறு, தென்னைமரம் என அவள் பார்வை பல இடங்களை நோக்கி மாறிமாறித் தாவுகிறது.
குருத்துவிட்டிருக்கும் தென்னம்பாளையில் சட்டென பதியும்போது அவள் மனம் ஒரு துளி நம்பிக்கையைப்
பெறுகிறது. ஐயத்துக்கும் நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் அவள் கனவின் சித்திரத்தை
தூயன் இச்சிறுகதையில் மிக நேர்த்தியாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.
எல்லாவிதமான
வகைமைகளிலும் நேர்த்தியாக கதையை நெய்து செல்லும் தூயனின் திறமை மிகவும் நம்பிக்கையளிக்கிறது.
படைப்பூக்கம் மிக்க அவருடைய கதைமொழியை வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சித்தரிப்பு
மொழியையும் உரையாடல் மொழியையும் இயற்கையாகவும் அழுத்தமாகவும் அவர் பயன்படுத்துகிறார்.
இத்தொகுதியின் வழியாக இலக்கியத்தளத்தில் அடைந்திருக்கும் இடத்தை எதிர்காலத்தில் இன்னும்
அழுத்தமான படைப்புகள் வழியாக அவர் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
(இருமுனை – சிறுகதைகள்.
தூயன், யாவரும் பதிப்பகம், சென்னை. விலை.ரூ.140)