Home

Saturday, 2 December 2017

கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி


உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை ஒரே கட்டாக வண்ணக்காகிதத்தில் சுற்றிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் எங்கள் அம்மா அந்தக் கட்டைப் பிரித்தார். “எல்லாமே ஒரே எழுத்தாளர் எழுதிய புத்தகமா இருக்குதுடா” என்றார். நான் அவற்றை எடுத்துப் பார்த்தேன். எல்லாமே மு.வரதராசனார் எழுதியவை. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு ஆகியவை. அந்த வாரத்திலேயே அவை அனைத்தையும் படித்துமுடித்தேன். கடித வடிவத்தில் கூட ஒரு புத்தகத்தை எழுதமுடியும் என்னும் அம்சம் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. அறிவுரைகள், வாழ்க்கைச்சம்பவங்கள், சின்னச்சின்ன கதைகள், எடுத்துக்காட்டுகள் என ஏராளமான விஷயங்களின் கலவையாகவும் தொகுப்பாகவும் இருந்தது. ஒரு பயணம் போய்வந்த அனுபவத்தைக்கூட அவர் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். ஏதோ ஒரு கடிதத்தில் அன்று படித்து மனத்தில் பதியவைத்துக்கொண்ட ஒரு கருத்து, (சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாத நிலையில் புறக்கணிக்கக் கற்றுக்கொள்) இன்றும் என் நெஞ்சில் பசுமரத்தாணியென பதிந்திருக்கிறது.


அதே ஆண்டு பொதுத்தேர்வு விடுமுறைநாளில் எங்கள் நூலகத்தில் இதேபோல கடிதங்களாலான வேறொரு புத்தகத்தைத் தற்செயலாகப் பார்த்தேன். அது நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இந்த உலகத்தையும் வரலாற்றையும் ஒரு புதிய கண்கொண்டு பார்க்கப் பழக்கும் தொகுப்பு. அதே வரிசையில் இன்னொரு புத்தகத்தையும் வேறொரு நாளில் கண்டெடுத்தேன். அது வெ.சாமிநாத சர்மா எழுதிய அவள் பிரிவு. தன் மனைவியைப் பிரிந்த துயரத்தையும் பாரத்தையும் நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையனுபவங்களை கடிதங்கள் வழியாக முன்வைத்துத் தொகுத்துக் கொள்வதன் வழியாக கரைத்துக்கொள்ளலாம் என்னும் நோக்கத்துடன் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது. தன்னுடைய நூல்களின் பதிப்பாசிரியரும் உற்ற நண்பருமான சொக்கலிங்கம் அவர்களுக்கு எழுதும் பாணியில் எல்லாக் கடிதங்களும் எழுதப்பட்டிருந்தன. தன் மனைவியான செல்லம்மாள் மீது பாரதியார் கொண்டிருந்த அன்பைப்பற்றிய பதிவையடுத்து, அதற்கு நிகரான அன்பையும் பாசத்தையும் சாமிநாத சர்மாவின் கடிதங்களில் உணர்ந்தேன். வெ.சாமிநாத சர்மா – மங்களம் இருவரையும் இலட்சியத்தம்பதியராக மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன்.

இதையெல்லாம் இப்போது எண்ணி அசைபோடுவதற்குக் காரணம் இருக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை மீண்டும் இப்போது படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தியா பதிப்பகத்தின் புதிய பதிப்பாக அது இப்போது வெளிவந்திருக்கிறது. ஒரு கணம் எனது இளம்பருவத்து வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து மீண்டதுபோல இருக்கிறது.

 திருமண வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பாகவே சாமிநாத சர்மா எழுதத் தொடங்கிவிட்டார்.  ஆரம்பக் காலத்தில் அவர் எழுதிய நூல்கள் அவருக்கு சிறந்த எழுத்தாளர் என்னும் நன்மதிப்பைத் தேடித் தந்தன. உலக ஆளுமைகளுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேர்ந்தெடுத்து தமிழ் வாசகர்களுக்கேற்ற வகையில் அவற்றை மொழிபெயர்த்தளித்தவர் அவர். பிளாட்டோவின் மூல நூலையும் ரூஸோவின் நூலையும் அழகான தமிழில்  மொழிபெயர்த்தளித்தார். அரசுக்கும் மானுடகுலத்துக்கும் உள்ள உறவையும் உடன்படிக்கையையும் விளக்கும் சமுதாய ஒப்பந்தம் நூல் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள விழைவோருக்கு ஒரு கைவிளக்கு. அதைத் தொடர்ந்து அவர் மொழிபெயர்த்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிகச்சிறந்த உலக ஆளுமைகளை தமிழுலகத்துக்கு அறிமுகப்படுத்துபவை. கார்ல்மார்க்ஸ், மாஜினி, இட்லர், காந்தி, நேரு போன்றோரைப்பற்றிய நூல்கள் ஒருபுறம், ரமணர், விவேகானந்தர் போன்ற துறவியரைப்பற்றிய நூல்கள் மறுபுறம், டார்வின், நியூட்டன், சி.வி.ராமன், எடிசன் போன்ற அறிவியலாளர்களைப் பற்றிய நூல்கள் இன்னொருபுறமென அவர் எழுதிக் குவித்த நூல்கள் ஏராளம். மேலை உலகத்துக்கும் தமிழுலகத்துக்கும் ஓர் அறிவுப்பாலமாக அவர் விளங்கினார். தமிழகத்திலிருந்து பர்மாவுக்குச் சென்ற குழுவில் அவரும் இருந்தார். பிறகு போர் மூண்டதும் அங்கிருந்து நடைபயணத்திலேயே தாயகம் திரும்பினார். இறுதியில் சென்னை வந்து தங்கியிருந்து தன் எழுத்துப்பணியில் இடைவெளியின்றி இயங்கினார். தமிழுலகத்தில் அவர் ஓர் அறிவுச்சுரங்கமாக விளங்கினார்.

நூலில் பத்துக் கடிதங்கள் உள்ளன. சாமிநாத சர்மாவுடைய மனைவியின் பெயர் மங்களம். ஓர் ஓவியனின் முன்னால் இருக்கும் திரைச்சீலையில் அவனுடைய தூரிகை வழியாக, அவன் நெஞ்சிலிருக்கும் உருவம் மெல்ல மெல்ல உருவாகி வருவதைப்போல சர்மா எழுதிய ஒவ்வொரு கடிதத்தின் வழியாகவும் மங்களம் அம்மையாரின் கோட்டோவியம் கொஞ்சம் கொஞ்சமாக திரண்டு வருவதை ஒரு வாசகனால் எளிதில் உய்த்துணர முடியும்.

அம்மையாரின் மரணக்குறிப்புடன் தொடங்குகிறது முதல் கடிதம். அம்மையார் சர்மாவைவிட நான்கு ஆண்டுகள் வயதில் இளையவர். இருவரும் இணைந்து இல்லற வாழ்வைத் தொடங்கிய ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே சாமிநாத சர்மாவுடைய சகோதரி மறைந்துவிடுகிறார். அவரைத் தொடர்ந்து அவருடைய தந்தையாரும் தாயாரும் அடுத்தடுத்து மறைந்துவிடுகிறார். மரணங்கள் அளித்த திகைப்பிலிருந்து அவரை மெல்ல மெல்ல விலக்கி, தெம்பூட்டி, அவருடைய துறையில் அவர் தொடர்ந்து இயங்கும் வகையில் ஊக்கமூட்டி உறுதுணையாக விளங்குகிறார் மங்களம். நாற்பத்திரண்டு ஆண்டுகள் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்கின்றனர். எதிர்பாராமல் தாக்கிய புற்றுநோய்க்கு அவர் பலியாகிவிடுகிறார். திடீரென கவிந்த தனிமையை அவரால் தாங்கமுடியவில்லை. அந்தச் சோக சமுத்திரம் ஆழமாகவும் பயங்கரமாகவும் இருப்பதாக உணர்ந்து நடுக்கம் கொள்கிறார். அதிலிருந்து எழுந்து வீசும் அலைகள் தன்னைத் தாக்கியபடி இருப்பதாக உணர்கிறார். தனிமை என்னும் பாறையில் நிற்க நேர்ந்துவிட்ட விதியை எண்ணி வருந்துகிறார். வீடிருக்கிறது, வாசலிருக்கிறது, உண்ணு்வதிலோ, உடுத்துவதிலோ, உறங்குவதிலோ ஒரு குறைவுமில்லை. ஆயினும் உயிரற்ற இயந்திரமாக விதி தன்னை முடக்கிவிட்டது என வருத்தத்தில் மூழ்கிவிடுகிறார். தனிமையிலிருந்து மீண்டெழுவதற்காக அவர் உருவாக்கி அசைபோடும் தத்துவ வரிகளில் மெல்ல மெல்ல அவரே ஒரு பள்ளத்தைக் கண்டடைந்து விழுந்துவிடுகிறார். விழுதலும் எழுதலுமாக விரிகிறது அக்கடிதம். தன் மனைவி கையாண்டுவந்த எந்தப் பொருளின் மீது கை பட்டாலும் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரைக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல அதிர்ச்சியடைவதாகக் குறிப்பிடுகிறார் சர்மா. அறுபது வயதைக் கடந்த நிலையில் கூட, துக்கத்தைக் கடக்கக்கூடிய பக்குவத்தை தான் அடையவில்லையே என நினைத்து அடிக்கடி தன்னிரக்கத்தில் மூழ்கிவிடுகிறார். ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு அழுது அழுது துக்கத்தைத் தணித்துக்கொள்வதற்குப் பதிலாக எழுதி எழுதி தணித்துக்கொள்ளலாம் என்ற முடிவை அடைகிறார். அவருக்கு உற்றார், உறவினர் என எவரும் இல்லை. பிள்ளைகளும் இல்லை. அதனால் உற்ற நண்பரான சொக்கலிங்கத்துக்கு கடிதங்கள் எழுதி தன் மனச்சுமையை இறக்கிவைக்க முயற்சி செய்கிறார்.

இரண்டாவது கடிதத்தில் தன் மனைவியின் பிறப்பு வளர்ப்பைப்பற்றிய விரிவான குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார் சர்மா. சென்னையை அடுத்த பாடி என்னும் ஊரில் சுப்பிரமணி ஐயர் – வேங்கடலட்சுமி தம்பதியினருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர் மங்களம். அவருக்கு இளமையிலேயே நல்ல இசையார்வம் உண்டு. ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவர். கணவரை இழந்த பிறகு, வேங்கட லட்சுமி அம்மையார் தமது குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் குடியேறி வசித்துவருகின்றனர். அவர்கள் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் சர்மாவின் சித்தப்பா வீடு இருக்கிறது.  அடிக்கடி அங்கு சென்று வரும் பழக்கம் இருந்ததால் இரு குடும்பங்களிடையே நல்ல அறிமுகம் உருவாகிறது. பழக்கத்தின் வழியாக உருவாகும் அன்பு இரு குடும்பங்களையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.

மூன்றாவது கடிதத்தில் மங்களம் அம்மையார் கல்வி கற்ற வரலாற்றை எழுதியிருக்கிறார் சர்மா. காஞ்சிபுரத்தில் அக்காலத்தில் சோமசுந்தர  பாடசாலை என்னும் பள்ளி இயங்கிவருகிறது. பெரும்பாலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளே அப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் தில்லியில் செயல்பட்டு வந்த இந்திரப்பிரஸ்த பெண் பள்ளிக்கு இணையான ஒன்றென இப்பள்ளி பெயர்பெற்றிருந்ததாக சர்மா குறிப்பிடுகிறார். அப்பள்ளியின் தலைமையாசிரியர் பர்வதம்மாள் மாணவிகளிடம் பெரிதும் அன்புடன் விளங்கியவர். மங்களம் அந்த ஆசிரியருக்குப் பிரியமான மாணவியாக இருக்கிறார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பெற்று எல்லோருடைய பாராட்டையும் பெற்று வளர்கிறார். நாடக நடிப்பிலும் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆண்டு விழா சமயங்களில் அவர் நடிக்கும் நாடகங்களை அனைவரும் ரசிக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு சர்மாவைப் பார்ப்பதற்காக அவருடைய அலுவலகதுக்கு வந்த ஒருவர் அவருடைய மனைவி மங்களத்தைப்பற்றி அறிந்துகொண்டதும், அவர் படிக்கிற காலத்தில் மேடையேறி நடித்த நளன் நாடகத்தைப் பாராட்டிச் சொன்ன சம்பவத்தை சுவைபடக் குறிப்பிட்டிருக்கிறார் சர்மா.

நான்காவது கடிதத்தில் சாமிநாத சர்மா- மங்களம் தம்பதியினரின் திருமணத்தைப்பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. தொடக்கத்திலேயே ஜாதகங்கள் பொருந்திவரவில்லை என்ற பேச்செழுகிறது பெற்றவர்களின் முடிவைக் கலைக்க பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் முன்பே இருதரப்பு பெற்றோர்களும் தமக்குள் பேசி முடிவு செய்ததோடு மட்டுமின்றி, அதில் உறுதியாகவும் இருக்கிறார்கள். ஆயினும் அடுத்தடுத்து பல தடைகள நிகழ்கின்றன. மாப்பிள்ளை அழைப்பின்போது எதிர்பாராத விதமாக மாப்பிள்ளையின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுவிடுகிறது. முறையான அனுமதியை உரிய நேரத்தில் பெறாததால் திருமண ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டுவிடுகிறது. இப்படி ஏராளமான சம்பவங்கள். அனைத்தையும் மீறி திருமணம் நிகழ்கிறது. அதுவும் ஐந்து நாள் திருமணம். திருமணத்துக்குப் பிறகு மணமகனும் மணமகளும் மட்டும் இடம்பெற்றிருக்கும் வகையில் ஒரு புகைப்படம் எடுக்க ஏற்பாடு நடைபெறுகிறது. மங்களம் பயின்ற சோமசுந்தரம் பள்ளியில் வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்று அனைவரும் முடிவு செய்கிறார்கள். தான் படித்த பள்ளிக்கூடத்தில் தன் ஆசிரியர்கள் முன்னிலையிலும் பிள்ளைகள் முன்னிலையிலும் கணவன் பக்கத்தில் நின்று எப்படி படம் எடுத்துக்கொள்வது என்னும் குழப்பத்தாலும் வெட்கத்தாலும் அம்மையாரின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கவே முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் சேர்ந்து அம்மையார் கோபம் கொண்ட தோற்றத்தோடு காட்சியளிக்கும்படி வைத்துவிடுகிறது. ஒரு சிறுகதைக்குரிய சித்தரிப்போடு இச்சம்பவத்தைப்பற்றி எழுதிச் செல்கிறார் சர்மா. சர்மாவுடைய சகோதரிக்கும் மங்களத்துக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. ஆயினும் திருமணம் நிகழ்ந்த பத்து மாத கால இடைவெளியில் அந்தச் சகோதரி இயற்கையெய்திவிடுகிறார்.

ஐந்தாவது கடிதத்தில் தன் மனைவிக்கும் தன் பெற்றோர்களுக்கும் இடையிலான நெருக்கத்தின் பெருமையை பல சம்பவங்கள் வழியாக பகிர்ந்துகொள்கிறார் சர்மா. சர்மாவின் தாயார் மங்களத்தை தன் மகளாகவே கருதுகிறார். மங்களத்துக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அக்கறையோடு செய்கிறார். படித்த பெண்ணென்று கேலி செய்தவர்கள் எல்லோரும் சிறிது காலம் கடந்ததும் மங்களம் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். தம்மைக் காட்டிலும் வீட்டுக் காரியங்களைச் செம்மையாகவும் துப்புரவாகவும் செய்வதைக் கண்டு வெட்கமுறுகிறார்கள். பூத்தொடுப்பதுமுதல் பாட்டு பாடுவதுவரை , எந்திரத்தில் மாவு அரைப்பதுமுதல் கடிகாரத்தைப் பழுது பார்ப்பதுவரை எல்லாம் இந்தப் படித்த பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறதே என்று வியந்து பேசும் காலம் வருகிறது. ஒரு துளியும் கர்வமோ, தற்பெருமையோ இல்லாமல் பழகும் மங்களத்தின் அன்பை நினைத்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். வீட்டுக்கு வரும் அனைவரும் இப்படி ஒரு மருமகளை அடைவதற்கு எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று பாராட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

1918-19 காலகட்டத்தில்  எங்கெங்கும் கதர் இயக்கம் ஊக்கமுடன் பரவி வந்த காலத்தில் சர்மாவும் கதர் உடுத்தத் தொடங்குகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மங்களம் அம்மையாரும் கதர்ச்சேலையை விரும்பி உடுத்துகிறார். பதினாறு முழமுள்ள முரட்டுச் சேலை அது. எடை மிகுந்தது. சுமை தூக்கும் மாட்டைப்போல இப்படி ஒரு புடவையைக் கட்டிக்கொள்ள வைத்துவிட்டானே என சர்மா மீது அவருடைய தாயாருக்கு வருத்தம் இருக்கிறது. ஆயினும் அம்மையாரே தன் விருப்பப்படியே அணிந்துகொள்வதாகச் சொல்லி அவரை அமைதிப்படுத்துகிறார். ஏதோ ஒரு காரணத்துக்காக 1926-27 காலகட்டத்தில் சர்மாவுடைய குடும்பம் மைசூர் சென்று வசிக்க நேர்கிறது. அப்போது சர்மா, மங்களம் இருவருமே இந்தி மொழியைக் கற்றுக்கொண்டு தேர்வெழுதுகிறார்கள். தேர்வில் மைசூர் மாநிலத்திலேயே 121/150 பெற்று முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார் சர்மா. 120 மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் தேர்ச்சி பெறுகிறார் மங்களம். “நீ ஏன் முதல் மதிப்பெண் எடுத்தாய்? அவள் அல்லவோ முதலாவதாகத் தேறியிருக்கவேண்டும்?” என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்ட தன் தாயாரை சர்மா நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் சர்மா. அந்த அளவுக்கு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது.

ஆறாவது கடிதம் அம்மையாரின் மன உறுதியைப்பற்றி விவரிக்கும் பகுதியாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவோ மேடுபள்ளங்களையும் திருப்பங்களையும் கண்டிருந்தபோதும் எந்த நிலையிலும் அவர் நிலைகுலைவதுமில்லை அல்லது ஆனந்தப் பரபரப்பில் திளைப்பதுமில்லை என்கிறார் சர்மா. எல்லாத் தருணங்களையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்ளும் பண்பு இளமையிலிருந்தே அவரிடம் குடிகொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். சூறாவளிக்கு நடுவே அசையாது நிற்கும் கொடிக்கம்பம்போல எப்போதும் ஒரே நிதானத்துடன் இயங்கும் ஆற்றல் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் அம்மையார். 1940 ஆம் ஆண்டில் ரங்கூனில் வசித்துவந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நோயுற்று படுத்த படுக்கையாகிவிடுகிறார் சர்மா. ஏறத்தாழ நாற்பது நாட்களுக்குப் பிறகுதான் அவர் குணமடையத் தொடங்குகிறார். நாற்பது நாட்களிலும் தனக்கு அருகிலேயே அமர்ந்து ஒரு தாதியைப்போல அம்மையார் கவனித்துக்கொண்டதால்தான் தன்னால் உயிர் பிழைக்க முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த நெருக்கடியான காலத்தில் அம்மையார் காட்டிய மன உறுதியைப் பெருமையுடன் பதிவு செய்திருக்கிறார்.

1941-ல் ஜப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு அஞ்சி அக்கம்பக்கத்தில் வசித்துவந்த பல குடும்பத்தினர் சர்மாவின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த சமயத்தில், ஓர் அன்னையைப்போல அனைவருக்கும் உணவளித்து உபசரித்த சம்பவம் மிகமுக்கியமான ஒரு பதிவு. பகலென்றும் இரவென்றும் பாராமல் ஜப்பானிய விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. 23.12.1941 முதல் நடைபயணமாக அவர்கள் பர்மாவைவிட்டுப் புறப்பட்ட 21.02.1942 வரை ஏறத்தாழ எண்பத்தாறு முறை விமானத் தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக அவர் செய்திருக்கும் பதிவு ஒரு வரலாற்றுச் சான்று. தம் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் இருவரும் ஏறத்தாழ இரு மாதங்கள் கால்நடையாகவே நடந்து செங்குத்தான மலைகளையும் காடுகளையும் கடந்து கல்கத்தாவுக்கு வந்து சேர்கிறார்கள். வழியில் அவர்கள் சந்தித்த சோதனைகள் ஏராளம். எனினும் ஒருபோதும் தளராத உறுதியுடன் பயணம் செய்திருக்கிறார் அம்மையார். அதைத் தொடர்ந்து பலமுறை உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிவிடுகிறார். சிற்சில நாட்களிலேயே குணமடைந்து நடமாடத் தொடங்கிவிடுவதால், அந்த உடல்நலக்க்குறைவை யாரும் பெரிதென எடுத்துக்கொள்ளவில்லை.  1953 ஆம் ஆண்டில்தான் அவரைத் தாக்கியிருப்பது புற்றுநோய் என முதன்முதலாகக் கண்டறியப்படுகிறது. செய்தியைக் கேட்டதுமே சர்மா திகைப்பில் மயக்கமுற்று நின்ற இடத்திலேயே விழுந்துவிடுகிறார். அவரை எழுப்பி, அவருக்கு ஆறுதல் வழங்கும் பொறுப்பையும் அம்மையாரே ஏற்றுக்கொள்கிறார். முகத்தில் கவலைக்குறியே இல்லாமல் “ஏன் இப்படி அதைரியப்படுகிறீர்கள்? என் உடம்புக்கு ஒன்றுமில்லை. மருத்துவர்கள் என்னைக் கொண்டு ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என முயற்சி செய்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை. நான் விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்று சொன்ன பதிவைப் படிக்கும்போது கண்கள் கலங்குகின்றன. அத்தருணத்திலும் மன உறுதியோடு “வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்” என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தை அவர் பாடிய காட்சியை சர்மாவின் எழுத்துகள் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

ஏழாவது கடிதத்தில் தமக்குள் நிலவிய ஒற்றுமையுணர்வைப்பற்றி எழுதியிருக்கிறார் சர்மா. “எங்களுக்கிடையே பிணக்கு என்பது ஒருநாளும் தலைகாட்டியதே இல்லை. நாங்கள் கருத்து வேற்றுமை கொண்டதே இல்லை. காதல் வாழ்வில் ஊடல் என்று சொல்வார்களே, அதுகூட எங்களுக்குத் தெரியாது” என்று எழுதிச் செல்கிறார் அவர். தன்னுடைய தேவைகளை அறிந்து அவர் செய்த உதவிகளை மிகவும் நன்றியுணர்வோடு நினைத்துக்கொள்கிறார் சர்மா. வாழ்க்கை முழுதும் இருவரும் ஒருவரையொருவர் மதித்து, ஒருவருக்கொருவர் ஆதரவோடு வாழும் வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார்கள். யாருடைய தன்மதிப்புணர்ச்சிக்கும் ஒருபோதும் தாழ்வு நேர்ந்ததில்லை. இருவருமே ஒரே மாதிரி நினைத்து, ஒரே மாதிரி செயல்பட்டு ஒற்றுமையின் இலக்கணமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

எட்டாவது கடிதத்தில் மக்கட்பேறின்மையை ஓர் இழப்பென ஒருபோதும் கருதாமல் தாழ்வென்றும் எண்ணாமல் மிகவும் இயற்கையான முறையில் இருவரும் வாழ்ந்த வாழ்க்கையை அவர் அசைபோடுகிறார். குழந்தையின்மையை முன்னிட்டு அனுதாபம் காட்டும் வகையில் யாராவது பேசத் தொடங்கினாலேயே, “நமக்கென்று குழந்தைகள் இருந்தால் நம் அன்பு அந்தக் குழந்தைகளோடு நின்றுபோகும். அதற்கு மாறாக, எல்லாக் குழந்தைகளையும் நம் குழந்தைகள்போல நினைத்துக்கொள்வோமென்றால் நம் அன்பு உலக அன்பாக மலர்ந்து விடும். என் அன்பு விசாலப்பட்டிருக்கவேண்டும் என்னும் நல்ல நோக்கத்துக்காகவே அந்த இறைவன் எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கவில்லை” என்று புன்னகையுடன் சொல்லி, அனுதாபத்தோடு நெருங்கி நிற்பவரை மேலும் தொடர்ந்து பேச வாய்ப்பளிக்காமல் உறைந்துபோக வைத்துவிடுவார்.

ஒன்பதாவது கடிதத்தில் தாமிருவரும் கருத்தொருமித்து வாழ்ந்த விதத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சர்மா. படிப்பின் மீது அம்மையார் கொண்டிருந்த ஆர்வம் கட்டற்றது. இலக்கிய வாசிப்பிலும் இருவரும்   ஒரே விதமான ரசனையுணர்வுடன் வாழ்ந்திருக்கிறார்கள். தன் இலக்கிய முயற்சிகளுக்கு நல்ல தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் அம்மையார் விளங்கியதை மிகவும் நன்றியுணர்ச்சியோடு நினைத்துக்கொள்கிறார் சர்மா.  உறவினரல்லாத புதியவர் எவரேனும் சந்தித்து, “குழந்தைகள் எத்தனை?” என்று கேட்டால், சுவர்ப்பலகையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் சர்மாவின் நூல்களைச் சுட்டிக் காட்டி ‘இவையே எங்கள் குழந்தைகள்’ என்று பெருமையுடன் சொல்லும் அளவுக்கு மனவிரிவு கொண்டவராக அம்மையார் விளங்கியிருக்கிறார்.
பத்தாவது கடிதத்தில் மீண்டும் அம்மையாரின் மரணச்செய்தியின் பதிவு இடம்பெற்றிருக்கிறது. தன் மனைவியின் பிரிவு அளிக்கும் துயரம் ஆழமானது என்றபோதும், ஒருபோதும் அத்துயரக்கடலில் தான் ஆழ்ந்துவிடக் கூடாது என்னும் எண்ணமும் சர்மாவின் மனத்தில் உறுதியாகப் பதிந்திருக்கிறது. அதனால் அம்மையாரின் சூட்சும இருப்பையே தன் உற்ற துணையாகக் கொண்டு தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் தொடர்ந்து இயங்கத்தக்கதாக வாழ்க்கையை தகவமைத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார் சர்மா.

பத்து கடிதங்களையும் நெடுங்காலம் பாதுகாப்பாக வைத்திருந்த நண்பர் சொக்கலிங்கம் பிறிதொரு சமயத்தில் அவற்றை மீண்டும் படித்துப் பார்த்து அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரும் திட்டத்தோடு சர்மாவை அணுகி ஒப்புதலைப் பெறுகிறார். அதற்குப் பிறகே இவை நூல்வடிவம் பெற்றன. பத்துக் கடிதங்களைத் தொடர்ந்து சொக்கலிங்கம் தமக்கும் சாமிநாத சர்மாவுக்கும் இடையில் நிலவிய நீண்ட நெடுங்கால நட்பைப்பற்றி விரிவாகவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மங்களம் அம்மையாருக்கு தன் கணவர் தம் வாழ்நாளில் நூறு புத்தகங்கள் எழுதி முடிக்கவேண்டும் என்றொரு விருப்பம் இருந்தது. சர்மாவுக்கும் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆவல் இருந்தது. ஒருவகையில் அந்த ஆவலே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான விசையை அவருக்கு வழங்கியது. ஆனால் மனைவியின் பிரிவைத் தொடர்ந்து சரியத் தொடங்கிய அவருடைய உடல்நிலை அவரை  உள்ளூர மெல்ல மெல்ல நிலைகுலைய வைத்துவிட்டது. எண்பத்திமூன்று வயது வரை வாழ்ந்தபோதிலும் ஏறத்தாழ எழுபத்தைந்து நூல்களை மட்டுமே அவரால் எழுதி முடிக்க முடிந்தது. அதற்குள் மரணம் அவரை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது.

((புத்தகம் பேசுது இதழில் எழுதி வரும் தொடரின் ஐந்தாவது பகுதி.)