Home

Saturday, 2 December 2017

கதவு திறந்தே இருக்கிறது - பால்யத்தின் அடித்தளம்

வில்லியம் சரோயன், சிங்கர் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும்படி முதன்முதலில் எனக்கு ஆலோசனை வழங்கியவர் அசோகமித்திரன். அதற்குப் பிறகுதான் அவர்களுடைய சிறுகதைத்தொகுதிகளைத் தேடி வாங்கிப் படித்தேன். இருவருமே மகத்தான எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு தன் இளம்பருவத்து அனுபவங்கள் விதைகளாகவும் உரங்களாகவும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என்பதை இத்தொகுதிகளைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். இவர்களுக்கு இணையாக தமிழில் சொல்லத்தக்க ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன் மட்டுமே.


கலிபோர்னியாவில் குடியேறிய ஆர்மீனியக் குடும்பத்தில் பிறந்தவர் சரோயன். சரோயன் மூன்று வயதுச் சிறுவனாக இருக்கும்போதே மதபோதகராக பணியாற்றி வந்த அவருடைய தந்தை  அகால மரணமடைந்துவிட்டார். அதனால் அவரும் அவருடைய சகோதரியும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார்கள். படித்துக்கொண்டே அவர் பலவிதமான வேலைகளைச் செய்து பொருளீட்டி தன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கினார். அவருடைய தந்தையார் எழுதிவைத்திருந்த பல குறிப்பேடுகளை தற்செயலாகப் படிக்க நேர்ந்த அனுபவம் மாபெரும் மன எழுச்சியை அவருக்குள் தூண்டிவிட, எழுதும் கனவு அவர் நெஞ்சில் சுடர் விடத் தொடங்கியது. தொடக்கத்தில் சின்னச்சின்ன கட்டுரைகளை எழுதிப் பழகி, பிறகு சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். திராட்சைத் தோட்டங்களிலும் தர்பூசணிப்பழத் தோட்டங்களிலும் குடியேறி வேலை செய்யும் ஆர்மீனியர்களின் வாழ்க்கை அனுபவங்களையே பெரும்பாலும் அவர் தன் படைப்புகளுக்கான கருக்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். பழத்தோட்டம் திரும்பத்திரும்ப அவர் கதைகளில் இடம்பெறும் களம். ஒரே தருணத்தில் அது கனவுகளின் படிமமாகவும் ஏமாற்றங்களின் படிமமாகவும் அமைந்திருப்பதை சரோயனின் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக நான் ஆங்கிலத்தில் படித்த வில்லியம் சரோயனின் சிறுகதைத்தொகுதி ’என் பெயர் ஆரம்’ என்னும் தலைப்பில் தமிழில் வெளிவந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மொழிபெயர்த்தவர் பஷீர். வெளியிட்டிருப்பது அகல் பதிப்பகம். ஒரு புத்தகக்கண்காட்சியில்தான் அதை வாங்கிப் படித்தேன். இளம்பருவத்துச் சித்திரங்களாக விளங்கும் இத்தொகுதியின் ஊடாக வரலாற்றின் ஒரு சரடும் அமைந்திருக்கிறது. ஆரம் காராக்லானியான் என்ற அமெரிக்கச் சிறுவனுடைய அனுபவங்களாக இத்தொகுதியை அமைத்திருக்கிறார் சரோயன். கார், ஆக்லான், இயான்  ஆகிய சொற்களின் கூட்டாக அமைந்த சொல்லே காராக்லானியான். கார் என்றால் கருமை. ஆக்லான் என்றால் மகன். இயான் என்பது இனம். கருப்பு மனிதனின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதே இதன் கூட்டுப்பொருள். தொகுதியின் அனைத்துச் சிறுகதைகளிலும் அவன் இடம்பெற்றிருக்கிறான். எல்லா அனுபவங்களோடும் அவன் கலந்திருக்கிறான்.

’ஹான்ஃபோர்டு பயணம்’ இத்தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. ஹான்ஃபோர்டு என்பது இருபத்தேழு மைல்களுக்கப்பால் இருக்கும் ஓர் ஊர். அந்த ஊருக்கு ஜார்கி மாமா அனுப்பப்படுகிறார். அவருக்குத் துணையாக அனுப்பப்படுகிறான் சிறுவன் ஆரம். அவனுக்குச் சமைக்கும் வேலை. ஹார்ன்ஃபோர்டில் தர்பூசணித் தோட்டம் இருக்கிறது. அங்கே வேலை செய்து பணமீட்டி வரவேண்டும் என்பதுதான் திட்டம். ஜார்கிக்கு பொழுதெல்லாம் சிதார் இசைப்பதில்தான் ஆர்வம். வேலை எல்லாம் அவனுக்கு ஒத்துவராத செய்தி. ஆனால் தாத்தாவுக்கு அவனை எப்படியாவது சம்பாதிக்கத் தெரிந்த ஆளாக மாற்றவேண்டும் என்பது ஆசை. ஹான்ஃபோர்டை அடைந்ததும் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறி ஓய்வெடுக்கிறார்கள்.  மறுநாள் காலையில் முணுமுணுத்தபடி வெளியே தோட்டங்களின் பக்கம் செல்லும் ஜார்கி, போன வேகத்திலேயே திரும்பிவிடுகிறான். தோட்டங்களில் அறுவடைக்காலம் முடிந்துவிட்டது என்றும் எங்கும் வேலையே இல்லை என்றும் சொல்கிறான். ஆனால் அவர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லாமல் அங்கேயே தங்கி சிதார் இசைத்துப் பழக்கி பொழுதை ஓட்டிவிட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு வீட்டுக்கு வருகிறார்கள். எதையும் சம்பாதிக்காமலேயே மகன் திரும்பியிருக்கிறான் என்பதையொட்டி தாத்தாவுக்கு  ஆழ்ந்த வருத்தம் ஏற்படுகிறது. அந்த வருத்தத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் வீட்டுக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து ஜார்கி இசைக்கும் சிதார் இசை கேட்கிறது. அந்த இசை தன்னைக் கரைப்பதையும் அமைதியில் ஆழ்த்துவதையும் ஆச்சரியத்தோடு உணர்கிறார் தாத்தா. வாழ்வில் செல்வத்தைத் தேடுவதுதான் முதன்மையான பணியென நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்த தாத்தா, இசையும் ஒரு செல்வமெனக் கண்டடைந்துகொள்ளும் தருணத்தில் கதை தன் உச்சத்தைத் தொட்டுவிடுகிறது.

’மாதுளை மரங்கள்’ மற்றொரு சிறப்பான சிறுகதை. மெலிக் என்பவருக்கு மாதுளைகள் மீது கட்டற்ற ஆர்வம். ஒரு பெரிய மாதுளைப்பண்ணையை தன் வாழ்நாளில் உருவாக்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அதை நிறைவேற்ற ஒருமுறை பாலைவனத்தை ஒட்டி அறுநூற்றி எண்பது ஏக்கர் நிலத்தை விலைகொடுத்து வாங்குகிறார்.  அதை ஒரு சோலையாக்க படாத பாடு படுகிறார். பலவிதமான முள்மரங்களாலும் செடிகொடிகளாலும் அடர்ந்து விலங்குகள் நிறைந்ததாக இருக்கிறது அவ்விடம். முதலில் அனைத்தையும் அகற்றித் தூய்மை செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறார். அதற்காகவே டிராக்டர் வாங்குகிறார். பிறகு கிணறு வெட்டுகிறார். எதிர்பார்த்த ஆழத்தில் மிகக்குறைவாகவே நீர் கிடைக்கிறது. மாபெரும் பண்ணை என்பது அவருடைய ஆழ்மனக்கனவு என்றாலும் ஒரு தொடக்கமாக சிறிய அளவில் ஒரு தோட்டத்தை உருவாக்கி மாதுளையைப் பயிரிடுகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவை வளர்ந்து பூத்தன. ஆனால் எல்லாமே வாடி உதிர்ந்தன. மூன்றே மூன்று பழங்கள் மட்டுமே அவருக்குக் கிடைக்கின்றன. அவற்றில் ஒரு பழத்தை அவரே சாப்பிடுகிறார். இன்னொன்றை தனக்குத் துணையாக இருக்கும் சிறுவனுக்கு அளிக்கிறார். மற்றொன்றை தனது அறைக்குள் வைத்துக்கொள்கிறார்.

அடுத்த ஆண்டு இருநூறு பழங்கள் கிடைக்கின்றன. மிகுந்த பொருட்செலவில் அவற்றை அழகாக பெட்டியில் அடைத்து மொத்த விற்பனைக்கூடத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு பணத்துக்காகக் காத்திருக்கிறார். பல நாள் தாமதத்துக்குப் பிறகு விற்பனைக்கூடத்தைச் சேர்ந்தவன் எல்லாப் பழங்களுமே தகுதியற்றவை என்றும் சுவையற்றவை என்றும் தகவலைத் தெரிவிக்கிறான். அவர் அனுப்பிவைத்த பதினோரு பெட்டிகளும் திரும்பிவிடுகின்றன. ஏராளமான பொருளிழப்பு. தோட்டத்தைப் பராமரிக்க செலவு செய்ய இயலாமல் தனக்கு விற்றவரிடமே விற்றுவிடுகிறார் மெலிக். ஐந்தாறு ஆண்டுகள் உழைத்துப் பெற்ற அனுபவங்களோடு மட்டும் அவர் ஊருக்குத் திரும்பிச் செல்கிறார். கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியைக் கடந்து செல்ல ஏதோ ஒரு நுண்ணறிவு தேவைப்படுகிறது. அதை அடைந்தவர்கள் இடைவெளியை எளிதாகக் கடந்து செல்கிறார்கள். அதை அடையாதவர்கள் கசப்பான அனுபவங்களையே இனிமை நிறைந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்.

’சர்க்கஸ்’ ஒரு சாதனைச்சிறுகதை. சிலருக்கு சர்க்கஸ் நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். சிலருக்கு, அதையும் தாண்டி சர்க்கஸ்காரர்களை வேடிக்கை பார்ப்பதும், அவர்களோடு இணைந்து வேலை செய்வதும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஆசை கொண்ட சிறுவர்களாக கதையில் இடம்பெறுகிறவர்கள் ஆரமும் ரென்னாவும். கதையில் இரண்டு சர்க்கஸ் தருணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முதல் தருணத்தில் வகுப்பறையைவிட்டு தன்னிச்சையாக வெளியேறிய குற்றத்துக்காக அவர்களுக்கு இருபது கசையடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது தருணத்தில் அவர்கள் தம்மைப் பிடிப்பதற்காக துரத்தி வருபவரிடம் அகப்பட்டுவிடக் கூடாதென ஆளுக்கொரு பக்கம் ஓடிவிடுகிறார்கள். அதையும் மீறி அவர்களைப் பிடித்து வகுப்பறைக்கு அழைத்து வருகிறான் காவல்காரன். முப்பது கசையடிகள் தண்டனை. திரும்பத்திரும்ப தண்டனை பெறும் சிறுவர்களைப் பார்த்து தண்டனையளிக்கும் டாசன் கருணை கொள்கிறான். வழக்கமாக தன் வேலையை உடனடியாகத் தொடங்கிவிடும் டாசன் அன்று அவர்களிடம் பொறுமையாக உரையாடுகிறான். சர்க்கஸ் அனுபவம் பற்றிக் கேட்கிறான். இறுதியில் தண்டனையும் வழங்குகிறான். ஆனால் அவை வலிவற்ற அடிகள் என்னும் விஷயம் அடித்தவனுக்கும் அடிபட்டவனுக்கும் மட்டுமே தெரியும். கட்டுப்பாடு மிகுந்த பள்ளியில் குழந்தைகள் மனத்தைப் புரிந்துவைத்திருக்கும் ஒருவனை மிகவும் அடங்கிய தொனியில் சுட்டிக் காட்டுகிறது கதை. பள்ளியும் ஒரு சர்க்கஸ் அரங்கமென இயங்குவதை ஒரு மாற்றுச்சித்திரமாக நம் மனத்துக்குள் எழுப்பிக்கொள்ளும்போது கதை நம் மனத்துக்கு இன்னும் நெருக்கமாக மாறும் விசித்திரத்தை உணரலாம். 

அழகிய ஒரு வெள்ளைக்குதிரையின் மீது ஏறி வந்த சிறுவன் மூராத் ஓர் அதிகாலை வேளையில் வேறொரு வீட்டில் உறங்கும் சிறுவன் ஆரமை கூவியெழுப்பும் தருணத்தோடு தொடங்குகிறது ‘அழகிய வெண்புரவியுடன் ஒரு கோடைக்காலம்’ என்னும் சிறுகதை. குதிரையை ஓட்டிப் பழக வரும்படி சின்னச் சிறுவனை அழைக்கிறான் பெரிய சிறுவன். குதிரைப்பயிற்சியை விட, குதிரை யாருக்குச் சொந்தமானது என்னும் விவரத்தை அறிவதில் ஆரமுக்கு ஆவலாக இருக்கிறது. பலவிதமான உரையாடல்கள் வழியாக அவன் கவனத்தைத் திசைதிருப்பும் பெரிய சிறுவன் ஒரு கட்டத்தில் அதை வேறொரு இடத்திலிருந்து திருடிக்கொண்டு வந்ததாகவும் திராட்சைத் தோட்டத்தை ஒட்டி சரக்குக்கூடத்தில் மறைவிடத்தில் அதைக் கட்டிக் காப்பாற்றி வருவதாகவும் சொல்கிறான். கருக்கலிலேயே கிளம்பிச் சென்று பொழுது முற்றிலுமாக விடிவதற்குள் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பி வருவதுதான் அவனுடைய திட்டம். அது திருட்டுக்குதிரை என்பது ஆரமின் நெஞ்சில் கலவரத்தை ஊட்டுகிறது. அதே சமயத்தில் குதிரையேற்றம் என்னும் கனவு இச்சையைத் தூண்டுகிறது. இறுதியில் இருவருமே இணைந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். பெரிய சிறுவன் லாவகத்தோடு குதிரையின் மீது சவாரி செய்கிறான். சின்னச்சிறுவனோ ஒவ்வொரு முறையும் கீழே தடுமாறிவிழுந்துவிடுகிறான். விழும் ஒவ்வொரு முறையும் குதிரைச்சவாரி மீது அவன் கொண்ட ஆர்வம் அதிகரிக்கிறது.

அன்று மாலை கோஸ்ராவ் என்பவர் அவர்களுடைய வீட்டுக்கு வருகிறார். ஒரு மாதத்துக்கு முன்பாக தன் குதிரை திருடுபோய்விட்டதாகச் சொல்லிப் புலம்புகிறார். அந்தச் செய்தியை அறிந்ததும் சிறுவன் பெரிய சிறுவனைச் சந்திக்க ஓடுகிறான். ஒரு மாதம் வரையில் பயிற்சியில் நன்றாக ஈடுபட்டு அவன் தேர்ச்சியடைந்ததுபோல, தானும் தேர்ச்சியடையும் வரையில் குதிரையைத் திருப்பிக் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறான். துரதிருஷ்டவசமாக, அவனுக்குக் குதிரை கீழ்ப்படிய மறுக்கிறது. அதையொட்டி இருவருக்குமிடையே நீண்ட விவாதம் நிகழ்ந்தாலும் இறுதியில் பெரிய சிறுவன் அந்த ஏற்பாட்டுக்கு இசைகிறான். எனினும் ஒவ்வொரு நாளும் குதிரை சிறுவனை கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது.

சில வாரங்கள் கழித்து சிறுவர்கள் குதிரைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் குதிரைக்குச் சொந்தக்காரன் பார்த்துவிடுகிறான்.  இருமாத இடைவெளி அவனுக்குள் சற்றே குழப்பத்தை உருவாக்கியதால் அவன் ஒரு சிறிய விசாரணையை மட்டும் நிகழ்த்திவிட்டுச் சென்றுவிடுகிறான். அச்சம் கொண்ட சிறுவர்கள் யாருமற்ற தனிமையில் சொந்தக்காரன் வீடுவரைக்கும் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பிவிடுகிறார்கள்.

’எரியும் எளிய அராபியர்’ என்னும் சிறுகதையில் ஒரு அராபியரைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. ஆர்மீனியரைப்போலவே அவரும் தன் தேசத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்துக்காக கலிஃபோர்னியாவுக்குக் குடியேறி வந்தவர். வயது முதிர்ந்தவர். ஆனால் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை. ஒரு சிறுவனைப்போல காட்சியளிப்பவர். ஆனால் தலை நரைத்து உடல் தளர்ந்தவர். ஆரமின் மாமாவுக்கு நண்பர். அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் மாமா. ஆனால் இருவரும் தமக்குள் உரையாடிக்கொள்வதே இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடி அறைக்குள் உட்கார்ந்தபடி பொழுது போக்குவார்கள். ஓரிரு மணி நேரங்களுக்குப் பிறகு அவர் கண்கலங்கச் சென்றுவிடுவார். இப்படியே வீட்டுக்குள் அடிக்கடி நிகழும் சந்திப்புகளைப் பார்க்கும் சிறுவனுக்கு அந்த அராபியரைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவல் எழுகிறது. ஆனால் அவன் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.  அபூர்வமாகத்தான் அவர் அந்த வீட்டுக்கு வருகிறார். ஒருமுறையும் சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. அவர் வீட்டுக்கு வரும் கால இடைவெளியின் நேரம் ஒருமுறை அதிகரித்தபோது, அந்தச் சிறுவன் மீண்டும் அந்த அராபியரைப்பற்றி கேள்வி கேட்கிறான். முதன்முறையாக அவனுடைய கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தொடங்குகிறார். அந்த அராபியர் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கிறார் வீட்டிலிருந்து ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் முற்றிலும் புதியதொரு இடத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் தன் இறுதிக்காலத்தை தம் சொந்த ஊரில் கழிக்க விரும்பினார். தம் சொந்த வீட்டுக்குள் உயிர் துறக்க விரும்பினார். தனது மகன்களை மறுபடியும்  காண விரும்பினார். அவர்களுடைய சுவாச ஒலியைக் கேட்க விரும்பினார். அவர்களை முகர விரும்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. அதனால் மனத்தளவில் அவர்களைப்பற்றியே அவர் எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தார். அவர்களைப் பார்க்கச் சென்ற பயணத்தில் நடுவழியிலேயே இறந்துபோய்விடுகிறார்.

இரு பெரியவர்களின் மெளனமே கதையின் மையம் என்பதைக் கவனிக்க வேண்டும். இருவருமே ஒருவகையில் சொந்த நாட்டைத் துறந்து, வாழ்க்கையைத் தேடி அந்த நாட்டில் குடியேறியவர்கள். இருவருக்குமே சொந்த நாடு, சொந்த மக்கள் சார்ந்த ஏக்கம் இருக்கிறது. பேசத் தொடங்கினால், அந்த ஏக்கத்தைத்தான் பேசவேண்டும். பெரும்பணத்தைச் செலவு செய்து போய்த் திரும்பும் அளவுக்கு வசதியற்ற அவர்களால் பேசிப்பேசித்தான் அந்த ஏக்கத்தைக் கரைத்துக்கொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக, கரையும் அளவுக்கு மீண்டும்மீண்டும் வெள்ளமெனப் பெருகி ஆளையே மூழ்கடித்துவிடும் வலிமை ஏக்கத்துக்கு உண்டு. உரையாடுவதைத் தவிர்த்து மெளனத்தில் அவர்கள் ஆழ்ந்துவிடுவதற்கு இதுவே காரணம். ஒருவகையில் அவர்கள் உரையாடலையே அஞ்சுகிறார்கள். குறைந்தபட்சம் மாமாவைச் சுற்றி குடும்பம் இருக்கிறது. ஆனால் அராபியருக்கு அதுவும் இல்லை. ஒருவேளை அராபியர் குடும்பத்துடன் குடியேறியவராக இருந்திருந்தால், அவருடைய துயரத்தின் பாரம் இந்த அளவுக்கு இருந்திருக்காது. மெளனம் என்னும் ஒற்றைச்சொல்லைச் சுற்றி இந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ளும்போதுதான் கதைமையத்தை நாம் இன்னும் கூடுதலாக நெருங்கிச் செல்லமுடியும்.

ஒரு வேடிக்கைக்கதைபோல தொடங்கி வளர்ந்து சென்றாலும் முக்கியமான ஒரு புள்ளியைத் தொட்டு முடியும் சிறுகதை மாதாகோவில் பாடகர்கள். ஆரம் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுவன். பதின்மூன்று வயது. இன்னும் ஞானஸ்னானம் செய்யப்படவில்லை. அந்தச் சடங்கைச் செய்வதற்குத் தேவையான பணவசதி இல்லாததாலேயே குடும்பத்தாரால் ஒவ்வொரு ஆண்டும் ஒத்திப் போடப்பட்டு, அப்போதுதான் அந்தச் சடங்கை நிறைவேற்றுகிறார்கள். பாண்ட்ரோவும் அதுபோல தான்தோன்றியாக வளர்ந்துவரும் ஒரு சிறுவன். இருவரும் நண்பர்கள். செல்வி பலாய்ஃபால் என்பவரின் பார்வையில் அவர்கள் இருவரும் ஒருமுறை பட்டுவிடுகிறார்கள். அங்கிருந்துதான் கதை தொடங்குகிறது. அவர் தனிமையில் வசிக்கும் பெண்மணி. வீட்டிலிருக்கும் ஆர்கனை ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நகர்த்தி வைப்பதற்காக அவர்களுடைய உதவியை நாடுகிறார் பெண்மணி. சிறுவர்களும் அந்த உதவியைச் செய்கிறார்கள். அவ்வீட்டில் இருக்கும்போதே அடிக்கடி அவர்கள் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்கிறார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பெண்மணி இருவரையும் அழைத்துத் திருத்த முயற்சி செய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மிக இயற்கையாக தன் கைவசம் இருக்கும் சில பிரசுரங்களைக் கொடுத்து அவர்களைப் படிக்கச் சொல்கிறார். படித்த பிறகு தான் ஆர்கன் வாசிக்கும்போது இணைந்து பாடச் சொல்கிறார். தமக்குப் பாட வராது என்று அவர்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. பாடலின் முடிவில் ஆரமின் குரல் மிக நன்றாக இருப்பதாகவும் வரும் ஞாயிறு அன்று தேவாலயத்துக்கு வந்து பாடகர் குழுவோடு இணைந்து பாடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆரம் மறுக்கிறான். வாரத்துக்கு ஒரு டாலர் பணம் தருவதாகச் சொல்லி அவனைப் பாட அழைக்கிறார். அது ஒரு ரகசிய ஏற்பாடு. யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். பணத்தேவையால் அவன் சம்மதிக்கிறான். பாண்ட்ரோ பாட மறுத்து பார்வையாளர் கூடத்திலேயே தங்கிவிட, ஆரம் மட்டுமே பாடுகிறான்.  பணம் கிடைக்கிறது. அடுத்த வாரம் பாண்ட்ரோ இல்லாமல் தன்னால் பாடமுடியாது என்று அறிவித்துவிடுகிறான் ஆரம். அவன் குரல் நன்றாக இல்லை என பெண்மணி சொல்வதை ஆரம் ஏற்க மறுக்கிறான். வேறு வழியில்லாமல் பாண்ட்ரோ பாடத் தேவையில்லை என்றும் குழுவோடு சேர்ந்து நின்றால் போதும் அதற்கு அரை டாலர் தரப்படும் என்றும் ஒப்பந்தம் உருவாகிறது. இப்படியே பல வாரங்கள் கழிகின்றன. அது ஒரு பிரெஸ்பட்டீரியன் தேவாலயம். அந்தக் கட்டத்தில்தான் அவனுக்கு கத்தோலிக்க தேவாலயத்தில் ஞானஸ்னானம் செய்விக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவனுடைய குரல் உடைந்துவிடுவதால் அவனால் தேவாலயப் பாடகனாகத் தொடரமுடியாமல் போய்விடுகிறது. தேவாலயப் பெண்மணிக்கு அது ஒரு பேரிடி. ஆனால் சிறுவர்களுக்கு அது ஒரு பெரிய நிம்மதி. ஒருபுறம் பெண்மணியின் ஆழ்ந்த மதநம்பிக்கை. மறுபுறம் சிறுவர்களிடம் தென்படும் அவநம்பிக்கை. ஒரு சிறிய பேரம் மட்டுமே இரண்டையும் இணைந்துபோகச் செய்கிறது. மோதல்களோடும் பிரியங்களோடும் தொடர்ந்த ஒரு ஏற்பாடு சட்டென்று ஒரு முடிவைத் தொட்டுவிடுகிறது. ஒருவன் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவனுடைய இயல்பில் நல்லவனாக இருந்தால் போதும் என்று நினைத்துக்கொள்கிறான் சிறுவன்.

ஒரு பெரிய நாவலின் தனித்தனி அத்தியாயங்களைப்போலவே சரோயனின் தொகுதி அமைந்திருக்கிறது. அதுவே அவருடைய தொகுதியின் மாபெரும் பலம். பால்யத்தின் பார்வையில் அனைத்துக் கதைகளையும் அமைத்திருக்கிறார் சரோயன். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறி வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மகிழ்ச்சி, மோதல்கள், நம்பிக்கைகள், நடிப்புகள் அனைத்தையும் பால்யத்தின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் புதுப்புது மனிதர்களையும் புதுப்புது பின்னணியையும் அவர் அறிமுகப்படுத்துகிறார். ஒவ்வொரு கதையிலும் இடம்பெற்றிருக்கும் பால்யத்தின் சித்தரிப்புகளுடன் கூடிய அடித்தளத்தின் மீது நின்றிருப்பதாலேயே, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும் இன்றும் விரும்பிப் படிக்கத்தக்க கதைகளாக சரோயனின் கதைகள் அமைந்திருக்கின்றன. வாழ்க்கையைத் தேடி வலசைப்பறவைகளென இடம்பெயர்ந்து செல்லும் மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை, சரோயனின் கதைகளுக்கான தேவையும் இருந்தபடியே இருக்கும்.


((புத்தகம் பேசுது இதழில் எழுதி வரும் தொடரின் நான்காவது பகுதி.)