உமா மகேஸ்வரியை
ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில்
அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையொன்று
என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. நதியையும் ஒரு பெண்ணின் புடவையையும் பல்வேறு
நிலைகளில் ஒப்புமைப்படுத்தியபடி செல்லும் அக்கவிதை. சின்னஞ்சிறு வயதில் அம்மாவின் புடவையென
அலையோடியிருக்கிறது நதி. பருவ வயதில் ஓரம் தைத்த தாவணியாக உருவம் மாறிக் கிடக்கிறது.
திருமணமாகி வேறு திசைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் தருணத்தில் நூலிழை பிரிந்த
கந்தலாகக் கிடக்கிறது. ஒருபுறம் காலம் ஒரு சிறுமியை திருமணம் முடித்த பெண்ணாக வளர்ந்து
நிற்கவைக்கிறது. மறுபுறத்தில் அதே காலம் அலைகளோடிய நதியை நீரோட்டம் இல்லாத சிறு குட்டையாகச்
சிறுக்க வைத்திருக்கிறது. இந்தக் கவிதையை இன்னும் என் நினைவில் பதிந்திருப்பதற்குக்
காரணம் நதியைக் குறிப்பிட உமா மகேஸ்வரி ’அம்மாவின் புடவை’ என கையாண்டிருக்கும் உவமை.
எந்த நதியைப் பார்த்தாலும் அந்த உவமை ஒருகணம் என் மனத்தில் எழுந்து மறையும்.
அந்தக் கவிதைக்குப்
பிறகு உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் விரும்பிப் படிக்கத்
தொடங்கினேன். நல்ல உவமைகளையும் படிமங்களையும் அசைபோடுவது எனக்கு எப்போதும் பிடிக்கும்.
’காத்திருக்கிறது அந்தக் கூடு – தன் சொந்தப் பறவைக்கென’ என்ற படிமம் தந்த மன எழுச்சி
மறக்கமுடியாத அனுபவம். வீட்டின் மூலையில் நிற்கும் மரத்தில் ஏதோ ஒரு பறவை கட்டிய கூடு காணப்படுகிறது.
பறவை எங்கோ போய்விட்டது. பருவமாற்றத்தால் மரமும் இலைகளை உதிர்த்து மொட்டையாக எலும்புக்
கிளைகளோடு நிற்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்தாலும் அந்த மரம் அந்தக் கூட்டை மட்டும்
உதிர்க்கவில்லை. அதை அப்படியே தாங்கிப் பிடித்தபடி இருக்கிறது. தன் சொந்தப் பறவை திரும்பி
வருமென அந்தக் கூடு காலம்காலமாகக் காத்திருக்கிறது அந்தக் கூடு. மரம் – கூடு – பறவை
ஆகிய மூன்று முனைகளுக்கிடையே ஓர் உணர்ச்சிகரமான நாடகமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கவிதைகளைத் தொடர்ந்து,
தன் கவித்துவம் தோய்ந்த வரிகளுடன் ஒரு கட்டத்தில்
சிறுகதைகளின் உலகுக்குள் நுழைந்தார் உமாமகேஸ்வரி. அன்றுமுதல் சமீபத்தில் தீராநதி இதழில்
எழுதிய சிறுகதைவரைக்கும் அவருடைய எல்லாச் சிறுகதைகளையும் நான் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
குழந்தைகள் அவருடைய சிறுகதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறார்கள். குழந்தை இல்லாத
இடத்தில் குழந்தையுள்ளம் கொண்ட பெண்கள் இடம்பெறுகிறார்கள். ஆண்களின் துரோகங்களையும்
வன்முறைகளையும் திகைப்பும் வேதனையும் படிந்த விழிகளுடன் மீண்டும்மீண்டும் கண்டு அவையனைத்தையும்
தன் நெஞ்சுக்கடியில் ஆழக் குழிதோண்டிப் புதைத்து பெருமூச்சுவிட்டபடி வளர்கிறார்கள்
அவர்கள். அவர்களுக்கு இந்த வாழ்வின்மீதும் மனிதர்கள்மீதும் சொல்வதற்கு ஏராளமான புகார்கள்
உள்ளன. யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என அவர்களுக்குப் புரியவில்லை. மனிதர்களின் நடிப்பைப் பார்த்து மனம் கசந்துபோகிறார்கள் பலர்.
கூந்தலைக் கலைத்தாடும் காற்றையும் காற்றிலாடும் சின்ன மலரையும் மலரின் நிறங்களையும்
பார்த்து, அவை வழங்கும் கணநேரப் பரவசத்தில் தன் எல்லாக் கசப்புகளையும் கரைத்துக்கொள்கிறார்கள்.
கனவுகளில் திளைக்கிறார்கள். கசப்புகள் கொட்டிக்கிடக்கிற பள்ளத்திலேயே அந்தக் கசப்பிலிருந்து
மீண்டு ஆறுதல் பெற உதவுகிற ஊமத்தம்பூக்களையும் அரளிப்பூக்களையும் பார்த்து மெய்மறந்து
நிற்கிறார்கள். உமா மகேஸ்வரியின் சிறுகதைகளில் பலவேறு கோணங்களில் கசப்பும் கனவும் மீண்டும்
மீண்டும் வந்தபடியே இருக்கின்றன.
உமா மகேஸ்வரியின்
மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படவேண்டிய கதை மூடாத ஜன்னல்.
அம்மாவோடு கோவிலுக்குப் போன சிறுமிகள் அவசரம் அவசரமாக வீட்டுக்குத் திரும்பிவிடுகிறார்கள்.
அம்மா மட்டும் வீட்டுக்குள் நுழைய பிள்ளைகள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிடுகிறார்கள்.
சின்னஞ்சிறு வயதில் பார்க்கக்கூடாதவற்றை அவர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் காரணம்.
ஆயினும் ஆர்வத்தின் காரணமாக யார் கண்ணிலும் படாமல் சுற்றுவழியாக தோட்டத்துப்பக்கம்
சென்று பின்கட்டுச் சுவரில் மூடாமல் வைக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியே உள்ளே நடப்பதையெல்லாம்
பார்த்துவிடுகிறார்கள். அப்பாவுக்கும் வேலைக்காரப் பெண்ணுக்கும் உள்ள உறவைத் தெரிந்து
ஒருபக்கம் அதிர்ச்சியில் திகைத்து நிற்கிறாள் அம்மா. எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல்
அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார் அப்பா. பின்கட்டு வாசல் வழியாக வெளியேற்றப்படும்
வேலைக்காரி. அனைத்தையும் பார்த்துவிடும் பிள்ளைகள் வேதனையில் மூழ்கிவிடுகிறார்கள்.
அவர்களுடைய வேதனைக்குக் காரணம் அப்பாவின் முறைமீறிய செயலல்ல. அதைப் புரிந்துகொள்ளும்
பக்குவம் அவர்களுக்குக் கிடையாது. அம்மாவை அழவைத்துவிட்டாரே என்றுதான் அவர்கள் வேதனையில்
சோர்வடைகிறார்கள். ‘எனக்கு அப்பாவை பிடிக்கவே இல்ல’ என்று சொல்கிறாள் ஒருத்தி. ‘எனக்கும்
சுத்தமா பிடிக்கலை’ என்கிறாள் இன்னொருத்தி. ‘எனக்கு இத்தனூண்டு மட்டும் பிடிக்குது’
என்கிறாள் மற்றொருத்தி. கதையின் தொடக்கத்தில் அம்மாவோடு ஒட்டி உட்கார்ந்துகொண்டு காரில்
கோவிலுக்குப் புறப்பட்ட பிள்ளைகள், கதையின் இறுதியில் அழுத கோலத்துடன் உட்கார்ந்திருக்கும்
அம்மாவை தொலைவிலிருந்து பார்த்து சங்கடத்தில் அமிழ்ந்துவிடுகிறார்கள். குழந்தைகளின்
துயரத்தை முன்வைப்பதுபோல கதை காட்சியளித்தாலும், உண்மையில் மூடாத ஜன்னல் வழியே அவர்கள்
கண்ட ஒரு குடும்பத் துரோகமே கதையின் மையம். பார்ப்பதற்கு வசீகரமாகவும் பாதுகாப்பாகவும்
காட்சியளிக்கும் வீட்டுக்குள், அதன் ஒரு பகுதியாக துரோகமும் இருக்கிறது. மூடாத ஜன்னல்
வழியே அவர்கள் கண்டடையும் உண்மை அதுதான்.
ஆண்களின் அகம்பாவத்தின்
ஒரு துளியை முன்வைத்திருக்கும் சிறுகதை அரளிவனம்.
கைகால்கள் விளங்காமல் முதுகுத்தண்டு வேலை செய்யாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்
கணவன். கழுத்துக்கு மேற்புறம் மட்டுமே அவன் உடலில் செயல்படுகிறது. எல்லாமே படுக்கையில்.
மருத்துவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள். ஆனாலும் உறவுக்காரர்கள் கைவிடத் தயாராக இல்லை.
அங்கே காட்டினால் பிழைக்கவைத்துவிடலாம், இங்கே காட்டினால் பிழைக்கவைத்துவிடலாம் என்று
நம்பிக்கைச்சொல் சொல்கிறார்கள். அவனோ அக்கணத்திலும் மனைவிமீது கோபத்தையும் சொல் நெருப்பையும்
கொட்டுகிறவனாக இருக்கிறான். அருகில் இருந்தாலும் கோபம். இல்லாவிட்டாலும் கோபம். என்ன
மனிதன் அவன். ராட்சசன் என்கிற எண்ணம் கதையைப் படிக்கிற எவருக்கும் எழும். ஆனால் அந்த வீட்டில் யாருக்குமே அந்த எண்ணம் எழவில்லை.
‘எதற்கு இப்படிப் பேசுகிறாய்?’ என்று யாரும் தட்டிக் கேட்கவில்லை. ‘இப்படியெல்லாம்
பேசாதே’ என்று பேச்சுக்குக்கூட புத்தி சொல்லவில்லை. கண்டிக்கவும் இல்லை. அப்படிப் பேசுவது
அவனுடைய உரிமை என நினைப்பதுபோலவே அவர்களுடைய நடவடிக்கைகள் இருக்கின்றன. அரளிப்பூவின்
மணத்தில் லயித்தபடியும் அரளிவிதைகளைச் சேகரித்தபடியும் பொழுதைப் போக்குகிறாள் அவன்
மனைவி. அந்த மணத்தை ஒரு துணையாகக் கொண்டு இந்த வேதனையிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும்
தப்பித்துச் செல்ல விழைகிறாள் அவள். உமா மகேஸ்வரியின் கதைமாந்தர்களுக்கு பெரிதும் துணையாக
இருப்பவையெல்லாம் இப்படிப்பட்ட மணம், காற்று, செடி, கொடி, மரம், கூடு, மலை, தொலைகடல்,
பூ ஆகியவையே.
தன் மனத்தையும்
எண்ணங்களையும் இப்படி இயற்கையின் மீது குவித்து மடைமாற்றிக்கொள்வதன் வழியாக அவர்கள்
தனக்குள் பொங்கும் சீற்றத்தை தானே அணைத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஏற்றுக்கொள்வதும் இயைந்துபோவதும் அவர்களுடைய இயல்பாகவே இருக்கிறது. இரக்கமும் கருணையும்
அவர்கள் நெஞ்சில் எப்போதும் சுரந்தபடி இருக்கின்றன. இந்த இரக்கத்தின் விளைவாகத்தான்
ஒருவேளை குடும்ப வன்முறையையும் சகித்துக்கொள்கிறார்களோ என்றொரு மெல்லிய ஐயம் எழுவதைத்
தவிர்க்கமுடியவில்லை. ஒரு சிறுகதையில் நாற்பது பவுன் நகையை வீடு புகுந்து திருடிச்
சென்றுவிட்ட திருடனை ஒருநாள் காவலர்கள் பிடித்துவிடுகிறார்கள். நகைகளை அடையாளம் காட்ட
அவள் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறாள். நகைகள் அவளுடையதுதான். தைரியமாகவே அடையாளம் காட்டுகிறாள். புருஷன் சொல்லிக்
கொடுத்ததுபோல பொய்சொல்லவேண்டிய அவசியமே இருக்கவில்லை. ஆனால் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்
மெலிந்த உடலும் பரட்டைத்தலையும் இடுப்பில் ஒரு பழைய டவுசரோடு மெலிந்து காணப்பட்ட திருடனைப் பார்த்த பிறகு, அவள் தைரியமெல்லாம் வடிந்து
விடுகிறது. ’அவனைப் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்’ என்று கனிவோடு ஒரு சொல் அவள் வாயிலிருந்து
வெளிப்படுகிறது.
இந்தக் கனிவை ஒரு
பெண் எப்படிப் பெறுகிறாள் என்பது ஒரு கேள்விக்குறியாக நம் முன் நிற்பதைக் காணலாம்.
அதற்குரிய விடை எளிது. குடும்பத்துக்குள் நிகழும் துரோகத்தை அவள் செரித்துக்கொள்ளக்
காரணம் அச்சமோ பீதியோ தவிர்க்கமுடியாத இயலாமையோ அல்ல. அப்படி ஓர் ஆண் நினைத்துக்கொள்வானேயானால்
அதைப்போல ஒரு பேதைமை வேறில்லை. அவள் தனக்குள் ஊற்றெனப் பெருகும் கனிவின் விளைவாகவே
அந்தத் துரோகத்தைச் சகித்துக் கடந்துபோகிறாள். அதே கனிவின் விளைவாகவே, வீட்டுக்குள்
புகுந்து திருடி பிடிபட்டுவிட்ட திருடனைப் பார்த்ததும் இரக்கம் மிகுந்த சொல்லைச் சொல்கிறாள்.
கனிவென்னும் கடல் பெண்ணின் ஆழ்மனத்தில் மிக இயல்பாகவே பொங்கித் தளும்பியபடி இருக்கிறது.
எவ்வளவு கடுமையான கசப்பாக இருப்பினும், அதை ஒரு சின்ன கனவின் வழியாகக் கடந்துசெல்ல,
ஒரு பெண்ணுக்கு அந்தக் கனிவே கற்றுத் தந்திருக்கக்கூடும்.
உமா மகேஸ்வரிக்கு என் வாழ்த்துகள்.
(அம்ருதா பதிப்பகம் வழியாக சமீபத்தில் வெளிவந்த ‘முத்துகள் பத்து – உமா மகேஸ்வரி சிறுகதைகள்’ தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை )