Home

Wednesday 7 February 2018

கதவு திறந்தே இருக்கிறது – இசைவு நிகழும் கணம்

புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் நான் பட்டப்படிப்பு படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் .இலெ.தங்கப்பா. கவிதையின்பத்தையும் வாழ்க்கையின்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டிய அவருடைய வகுப்புகள் என்னுடைய புரிதலின் எல்லையை விரிவாக்கின. அவருடைய வீட்டு மேசையில் ஒருமுறை தன்னுணர்வு என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். புத்தம்புதிய மிகச்சிறிய புத்தகம். எமர்சன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை பெருஞ்சித்திரனார் மொழிபெயர்த்திருந்தார். நான் அதை எடுத்துப் புரட்டியதைக் கவனித்ததும்எமர்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான சிந்தனையாளர். நீ அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்என்று சொன்னார் தங்கப்பா. நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன்.


பெருஞ்சித்திரனாரின் அழகான தமிழ்நடையில் அக்கட்டுரையைப் படிக்கத்தொடங்கியதும் யாரோ ஒருவர் நம்மை நோக்கி சொற்பொழிவு நிகழ்த்துவதைக் கேட்பதுபோல இருந்தது. என்னுடைய பல முன்முடிவுகளை அக்கட்டுரை கலைத்துவிட்டன. ஒரு தனிமனிதனுக்குள் நிகழும் மனமாற்றத்தின் விளைவுகள் எவ்வளவு ஆழமானவை என்பதை அதைப் படித்தபோது உணரமுடிந்தது. அந்தப் புத்தகத்தின் நுழைமுகமாக அழகான ஒரு பாடல் இருந்தது. எமர்சனின் நீண்டதொரு வாக்கியத்தை பெருஞ்சித்திரனார் துள்ளும் நடையில் ஒரு தனிப்பாடலாக மாற்றியிருந்தார்.

இடுக நும் பிள்ளையை மாமலைமேல் விளையாடுதற்கே
விடுக செந்நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்
கெடுக வன் அச்சம், நரியொடும் நாயொடும் கேண்மையுற
நடுக நீ நன்மறம் நெஞ்சில், வினையில் நரம்பிலுமே

அழகான தாளக்கட்டுடன் கூடிய அந்தப் பாடலைப் மீண்டும்மீண்டும் படித்தபடி இருந்தேன். ‘நரியொடும் நாயொடும் கேண்மையுறஎன்னும் சொல் என்னை அசைத்துவிட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர், காக்கை குருவி எங்கள் சாதி, வாலைக் குழைத்துவரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா என ஏற்கனவே அறிந்துவைத்திருந்த பல வரிகள் ஒரே கணத்தில் கடந்துசெல்வதை உணரமுடிந்தது. அன்பும் நட்பும் அடையவேண்டிய எல்லைகளை அந்தச் சொற்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதையும் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருக்கும் உயிர்த்துளி ஒன்றே என்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. தன்னுணர்வின் முதல் பாடம் அந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்பதை அக்கணமே புரிந்துகொண்டேன்.

அதைப் படித்த பிறகு ஒருநாள் மீண்டும் தங்கப்பாவிடம் சென்று நின்றேன். அவர் எமர்சனைப்பற்றியும் தன்னுணர்வைப்பற்றியும் மேலும் விரிவாகச் சொன்னார்.

அமெரிக்கச் சுதந்திரப்போராட்டத்தில் பங்காற்றிய குடும்பத்தில் பிறந்தவர் எமர்சன். சுதந்திரச்சிந்தனை என்னும் கருத்தாக்கத்தின் தொடக்கப்புள்ளி அவர். தன் தந்தையைப்போலவே அவரும் மதச்சொற்பொழிவாளராகவே மேடைகளில் முழங்கிவந்தார். கிறித்துவம் முன்வைக்கும் கூட்டு ஆன்மிகம் என்னும் நிலைக்கு மாறாக சுதந்திர ஆன்மிகம் என்னும் கருத்தாக்கத்தை நோக்கி அவர் தன் உரைகளை அமைத்துக்கொண்டார். அதை ஒரு சிந்தனைப்போக்காகவே அவர் வளர்த்தெடுத்தார். ஒரு தனிமனிதன் தன் ஆன்மிக விடுதலைக்காகவும் வாழ்க்கை நிறைவுக்காகவும் தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும் உரிமையை ஒரு சமூகம் வழங்கவேண்டும் என்னும் வாதத்தை அவர் முன்னெடுத்தார். நாளடைவில் அது ஆழ்நிலைவாதம் என்னும் பெயர் பெற்றதுசமூக மையத்துக்கு அக்கருத்து முதலில் அதிர்ச்சியையும் திகைப்பையும் அளித்தது. இரட்டைச்சமூகமாக ஒரு சமூகம் இயங்கமுடியாது என அது வேறொரு நிலைபாட்டை எடுத்ததுஇம்முரண்களின் மோதல் வழியாக எமர்சனின் சிந்தனை மென்மேலும் விசையோடு வளர்ந்தது. நாளடைவில் அதுவே தனிமனித உரிமையை அடிப்படையாகக் கொண்ட இலட்சியவாதப்போக்கை உருவாக்கியது.

தங்கப்பாவின் அன்றைய உரையாடல் இறுதியில் காந்தியில் வந்து முடிவுற்றது. சமூக சீர்திருத்தங்களை முன்வைத்து தேசம் முழுதும் செயலாற்றிய பண்பாளர்கள் அனைவரும் அந்த இலட்சியவாதத்தின் பெரும்கொடை என்றார் அவர். எப்படியோ மீண்டும் உரையாடல் எமர்சனைப்பற்றியதாகத் திரும்பி முடிவடைந்தது. எமர்சனின் பெரும்பாலான உரைகள் அனைத்தும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றில் மூன்று உரைகள்  மிகமுக்கியமானவை என்றும் அவற்றில் ஒன்றே இந்தத் தன்னுணர்வு என்றும் சொன்னார். அக்கணமே எஞ்சிய இரு நூல்களையும் படித்துவிடும் வேகம் எனக்குள் எழுந்தது. அவை இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றார். ஆங்கிலத்தில் படிக்கப்படவேண்டிய அந்தப் புத்தகங்கள் இயற்கை (NATURE), அமெரிக்க அறிஞன்(AMERICAN SCHOLAR) என்றார். அவர் தன் நூலகத்திலிருந்து இயற்கை புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொடுத்தார். மற்றொரு புத்தகத்தை நான் கல்லூரி நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தேன்.

இயற்கைநூலில் இயற்கையோடு இணைந்து வாழ்தல், இயற்கையை வழிபடுதல், இயற்கையில் திளைத்தல், இயற்கையோடு இருத்தல் என்பது கிட்டத்தட்ட கடவுளின் அருகில் இருப்பதைப்போன்ற அனுபவமாகும் ஆகிய கருத்துகள் மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்பட்டன. இயல்பாகவே இயற்கை விரும்பியாகிய எனக்கு அக்கருத்துகள் மிகவும் உவப்பை அளித்தன. நம் வாழ்வில் எழும் எல்லாவிதமான கேள்விகளுக்குமான விடைகள் இயற்கையில் காணக்கிடைக்கின்றனஅவற்றைக் கண்டடையும் பயிற்சியே நம் வாழ்க்கைமுறையை வகுக்கிறது என்பதைப் போன்ற கருத்துகள் எனக்குள் மாபெரும் மன எழுச்சியை ஊட்டின. சிந்தனையைத் தூண்டக்கூடிய பல பகுதிகளை பொன்மொழிகளாகத் தொகுத்து ஒரு நோட்டு முழுதும் எழுதிவைத்துக்கொண்டு தோன்றும்போதெல்லாம் எடுத்துப் படிப்பதை பிற்காலத்தில் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன்.

ஒருமுறை பாரதியார் பாடல்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது வேய்ங்குழல் என்னும் பாடல் மீது பார்வை பதிந்தது. இயற்கையில் தற்செயலாக எங்கிருந்தோ மிதந்துவரும் குழலோசையைக் கேட்கும் ஒருவர் அவ்விசையில் மயங்கிய பரவசத்திலும் அந்த இசை மிதந்துவரும் திசையைக் கண்டறிய முடியாத குழப்பத்திலுமாக உணர்வுநிலையில் மாறிமாறி நின்று பாடுவதாக அமைந்த பாடல் அது. ‘குன்றினின்றும் வருகுவதோ , மரக்கொம்பினின்றும் வருகுவதோ, வெளிமன்றினின்றும் வருகுவதோ, என் மதி மருண்டிடச் செய்குதடிஎன நீளும் ஒவ்வொரு வரியும் தன்னைச் சூழ அமைந்திருக்கும் இயற்கையை ஒரு வலைபோல இணைத்தபடி விரிவடைவதை உணரமுடியும். கிட்டத்தட்ட எமர்சனின் அதே மனப்போக்கு பாரதியாரில் பிரதிபலிப்பதைக் காணமுடிந்தது. இயற்கைமையவாதம் என அவர் தன் எண்ணப்போக்குக்கு அவர் பெயரிடவில்லையே தவிர, ஏறத்தாழ அவரும் இயற்கையை ஆராதிப்பவராகவே இருந்தார். அவருடைய மூன்று காதல் கவிதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளிகாதல் என மூன்று பகுதிகளைக்கொண்ட அப்பாடல் இயற்கைக்காட்சியிலிருந்து மானுடனுக்குக் கிட்டும் தெய்வதரிசனத்துக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

பாரதியாரைப்போலவே எமர்சனும் எனக்குள் கரைந்துபோனார். ஓர் எழுத்தாளனாக வளர்ந்து நிலைபெற்ற பிறகு நண்பர் ஜெயமோகனுடன் உரையாடிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் எமர்சனைப்பற்றிய என் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் எமர்சனை முதலில் விருப்பத்துடன் வாசிக்கத் தொடங்கி, பிறகு மொழிபெயர்த்ததையும் சொன்னார். சில ஆண்டுகளிலேயே அது நூலாகவும் வெளிவந்தது. அதை உடனே படித்தேன். இளமையில் நான் மிகவும் விரும்பிப் படித்த நூலின் தமிழாக்கம் என்பதால் என் ஆர்வம் இருமடங்காக இருந்தது. மிகச்சிறிய புத்தகம் என்றாலும் சிந்தனைத்தளத்தில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றல் உள்ள நூல் அது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் இன்றும் ஒருவர் கவனத்தோடு பரிசீலிக்கத்தக்க கருத்துகளையே அந்த நூல் கொண்டிருந்தது. பொன்மொழிகளாக அன்று நான் எழுதிவைத்துக்கொண்ட பகுதிகளின் தமிழாக்கத்தை, காணாமல்போய் கண்டெடுத்த ஒரு பழைய கடிதத்தைப் படிக்கும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அம்மொழிபெயர்ப்பில் தேடித்தேடிப் படித்து மகிழ்ந்தேன்.

எட்டு சிறுசிறு பகுதிகளின் இணைப்பாக இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேரழகின் தூதர்கள் என்றும் கடவுளின் நகரம் என்றும் நட்சத்திரங்களைச் சுட்டி எழுதப்பட்டிருக்கும் சொற்களின் வசீகரத்தோடு தொடங்குகிறது முதல்பகுதி. நட்சத்திரங்களை எமர்சன் ஓர் எடுத்துக்காட்டாக மட்டுமே இப்பகுதியில் பயன்படுத்துகிறார். வானத்தில் நிறைந்திருக்கும் நட்சத்திரங்களை ஒருவர் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன் அழகில் அவர் மனம் உடனடியாக ஆழ்ந்துவிடுகிறது. ஆரம்பக்கட்ட பரவசத்தை அடுத்து, அக்காட்சியால் தூண்டப்பட்ட பலவிதமான எண்ணங்களும் காட்சிகளும் அவருக்குள் மூண்டெழுகின்றன. பல சொந்த உணர்வுகள் திரண்டெழுகின்றன. அவற்றை நாம் தொகுத்துக்கொள்ள முடியும். ஒருவகையில் அது நம்முடைய அனுபவத்தொகை அல்லது ஞானத்தொகை. நட்சத்திரங்களை மட்டுமல்ல, காடு, மரங்கள், ஆறுகள், மலைகள், வயல்கள், சாலைகள், பூச்சிகள், பறவைகள் என ஒவ்வொன்றையும் முன்வைத்து பலவகையான காட்சிகளை கட்டியெழுப்பிக்கொள்ள முடியும். அது ஒருவிதமான கவித்துவமான நிலை. இந்தப் பார்வை அல்லது மனநிலை ஒவ்வொரு மனிதனும் தேடி அடையவேண்டிய ஒன்று.

நம் புறப்புலன்களுக்கும் அகப்புலன்களுக்குமான ஓர் இணைப்பு  கண்ணுக்குத் தெரியாமல் இயங்கியபடியே இருக்கிறது. இந்த இணைப்பின் சமன்பாட்டை சமநிலையில்  பேணும் மனநிலையில் உள்ளவர்கள் இயற்கையை விரும்பி அணைத்துக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இயற்கைநாட்டம் என்பதும் இயற்கையில் தோய்தல் என்பதும் மூச்சுவிடுவதுபோல, அன்றாட உணவுபோல மாறிவிடுகிறது. அன்றாடத் துயரங்களை அந்த மனநிலை மிக எளிதாக கடந்துபோகிறது. மானுடனுக்கும் தாவரங்களுக்கும் இடையிலான ஓர் உறவை அது புரிந்துகொள்ளவைக்கிறது. எத்தனை முறை நாம் கண்டாலும் ஒரு மரத்தில் ஒரு கிளை அசையும் காட்சி என்பது மிகவும் புத்தம்புதிய காட்சியாகும். உடனடியாக பலவிதமான வாழ்வியல் அனுபவங்களோடு அக்காட்சியை நம்மால் இணைத்துக்கொள்ளமுடியும். ஒரு கணத்தில் நாம் அசைபோடுவது இயற்கையையா அல்லது வாழ்க்கையையா என்பதே புதிராகி இரண்டும் வேறுபாடற்று இணைந்துபோகும். மனிதனும் இயற்கையும் இணையும் தருணத்துக்கு இந்த இன்பத்தை உருவாக்கும் சக்தி இருக்கிறது.

இயற்கையின் இருப்பு என்பது, கண்களுக்குப் புலனாகாத இன்னொரு மானுடத்தொகையின் இருப்பே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மானுட நலத்துக்காக, நம் பார்வைக்குப் புலப்படாத கரங்களுடன் மானுடனுடன் இணைந்து இயற்கையும் உழைக்கிறதுஎடுத்துக்காட்டாக, வயலில் தூவப்படும் விதைகளை காற்று ஏந்திச் சென்று மண்ணில் சேர்க்கிறது. சூரியன் கடலை ஆவியாக்குகிறது. வானேறிய மழைமேகங்களை காற்று வயல்வெளிகளுக்கு மேல் பரவிநிற்க வைக்கிறது. காற்றின் குளிர்ந்த கரங்கள் அவற்றை வருடி மழையாக மாற்றுகிறது. மழை தாவரங்களுக்கு உணவாக மாறுகிறது. தாவரங்கள் விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் உணவாக மாறுகின்றன. முடிவேயின்றி இவ்வாறு இயங்கும் இயற்கையின் கருணை மானுடத்தை ஒரு தாயாக நின்று வளர்த்தெடுக்கிறது.

இயற்கையழகின் கூறுகளை நாம் மூன்றாக வகைப்படுத்தலாம். முதலாவது இயற்கையின் எளிய வடிவங்களைக் கவனிப்பதால் பெறும் இன்பம். பிறகு ஆழ்மனப்பிரக்ஞையோடு அக்காட்சியின்பத்தை இணைத்து விரித்தெடுப்பதால் பெருகும் அழகில் தோய்ந்து பெறும் இன்பம். அடுத்து, அந்த இன்பத்தை அனுபவத்தொகையாகவும் அறிவாகவும் உருமாற்றி எண்ணுந்தோறும் பன்மடங்காக வளர்த்தெடுத்துத் திளைத்துப் பெறும் பேரின்பம். இயற்கையின் இன்பம் அல்லது அழகு என்பது மனத்தில் மறுவடிவம் பெறும் ஆற்றலுள்ளது. அழகின் மீதான காதலே நுண்ணுணர்வு. சிலர் அந்த அழகை வியப்பதோடு நிறைவடையாமல் தம் காதலை புதிய வடிவங்களில் வடித்துப் பார்க்கிறார்கள். அழகை உருவாக்குகிறது கலை.

ஒரு கலைப்படைப்பு என்பது மானுட வாழ்வின் புதிரைப் புரிந்துகொள்ளத் தேவையான வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறதுஒரு கலைப்படைப்பு என்பது உலகத்தின் சுருக்கப்பட்ட, சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு வடிவமே. முழுமை, கச்சிதம், இசைவு ஆகியவற்றின் வழியாகவே இயற்கை அழகு பெறுகிறது. அழகின் பொதுவான அம்சம் என்பது இயற்கைவடிவங்களின் ஒட்டுமொத்தத்தில்தான் உள்ளது. அதுவே இயற்கையின் முழுமை என்பதாகும். தனியாக இருக்கும்போது மட்டுமே அழகாக இருக்கக்கூடியதென எதுவுமில்லை. மொத்தமாக இருக்கும்போது மட்டுமே அழகாக இருக்கக்கூடியதென ஒன்றும் எங்குமில்லை. ஒரு தனித்த பொருள் தன்னைச் சூழந்த பிரும்மாண்டத்தின் எழிலைக் குறிப்புணர்த்தும்போது மட்டுமே அழகாக இருக்கிறது. கவிஞனும் சிற்பியும் ஓவியனும் இசைக்கலைஞனும் ஒரு புள்ளியை நாடி அதில் மனதைக் குவிப்பதன்வழியாகவே உலகின் விரிவை உணர்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் அவனுடைய அழகின் வேட்கையைத் தணித்து, படைப்பூக்கம் நிறைந்தவனாக அவனை மாற்றி மேலும்மேலும் படைக்கும்படி அவனைத் தூண்டுகிறது. மனிதன் என்னும் வடிகட்டியின் வழியாக ஊடுருவிச் செல்லும் இயற்கையே கலையாகும்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவில் மொழிக்கு உள்ள பங்கை எமர்சன் மிகச்சிறப்பாக வரையறுத்துக்கொள்கிறார். மூன்று வகைகளில் அந்த வரையறையை வகுக்கமுடியும் என நினைக்கிறார் எமர்சன்.
1.   சொற்கள் அனைத்துமே ஏதோ ஒருவிதத்தில் குறியீடுகளே.
2.   குறிப்பிட்ட இயற்கை விஷயங்கள் குறிப்பிட்ட உணர்ச்சி சார்ந்த விஷயங்களின் குறியீடுகளாகும்.
3.   இயற்கையே மனித உணர்ச்சியின் குறியீடாகும்.

இயற்கையில் நாம் காணக்கூடிய தோற்றம் ஒவ்வொன்றும் ஒரு மனநிலையோடு தொடர்புகொண்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட மனநிலையை அந்த இயற்கைத்தோற்றத்தை விவரிப்பதன் வழியாக மட்டுமே வெளிப்படுத்த முடியும். அவ்வியற்கைத் தோற்றம் அந்த மனநிலையின் ஓவியமாகும். கோபம் கொண்ட மனிதன் கர்ஜிக்கிறான் என்றும் உறுதியான மனிதனை அசைவற்றவன் என்றும் கற்றறிந்த மனிதனை நாம் ஒளியுள்ளவன் என்றும்  மொழிகிறோம். குருவிகள் சுதந்திரத்தின் அடையாளம். வெள்ளாடு களங்கமின்மையின் அடையாளம். இப்படி எண்ணற குறியீடுகளை நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தியபடி இருக்கிறோம்.

ஒருவித தியான மனநிலையுடன் நதியோட்டத்தைப் பார்க்கும் ஒருவருடைய மனத்தில் அனைத்துப் பொருட்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன என்னும் எண்ணம் தானாகவே எழுகிறது. நீரில் ஒரு கல்லை வீசும்போது உருவாகும் அலையலையான வட்டங்கள் எல்லா மனப்பாதிப்புகளுக்குமான குறியீடாகத் தோன்றுகிறது. இந்த இணைவுகளில் தற்செயலென சொல்லத்தக்கது எதுவுமில்லை. மாறும் தன்மைகொண்டதென சொல்லத்தக்கதும் எதுவுமில்லை. இவை நிலையானவை. இயற்கையெங்கும் பரவியிருப்பவை. இங்கு மனிதன் என்பவன் ஓர் இணைப்பாளன் மட்டுமே. பொருட்களுக்கிடையிலான உறவை அவனே உருவாக்குகிறான். அவனே அனைத்து இருப்புகளுக்கும் மையத்தில் இருப்பவன்.

காட்சி வடிவங்களுக்கும் மனித சிந்தனைகளுக்கும் இடையிலான உறவின் காரணமாகவே பழங்குடிகள் உருவகங்கள் வழியாக உரையாடுகிறார்கள். வரலாற்றில் நாம் பின்னோக்கி நகரும்தோறும் மொழி மேன்மேலும் சித்திரத்தன்மை கொண்டதாக மாறுவதைக் காணலாம். சாராம்சத்தில் அவற்றை கவிதை என்றே சொல்லலாம். அதாவது எல்லா விஷயங்களும் அன்று நேரிடையாக இயற்கைக்குறியீடுகள் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அக்குறியீடுகளே எல்லா மொழிகளிலும் ஆதாரக்கூறுகளாக இன்றும் காணப்படுகின்றனஎல்லா மொழிகளிலும் வழக்காறுகளும் சொலவடைகளும் மிகுந்த நாவன்மையோடு பிணைக்கப்படும்போதுதான் உச்சக்கட்ட வெளிப்பாடு சாத்தியமாகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். அதாவது இயற்கைக்குறியீடுகளே முதல் அடிப்படை. அவையே இறுதியானவையும் கூட. இயற்கைக்கும் மொழிக்குமான இந்த உறவைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். தன்னுடைய சிந்தனையை பொருத்தமான குறியீடுகளுடன் இணைக்கும் ஒரு மனிதனின் திறமைக்கும்  அவனுடைய ஆளுமைக்கும் நேரிடையான தொடர்பு உள்ளது. அதாவது அவனுக்கு உண்மையின் மீதான நாட்டத்தையும் அதைக் குறைவுபடாமல் பிறருக்குச் சொல்லவேண்டும் என்னும் ஆர்வத்தையும் அது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஒரு மனிதனின் போலித்தனம் என்பது அவனுடைய மொழியின் போலித்தனத்தைத் தொடர்ந்து உருவாகும் ஒன்று. மனம்நிறைய பொய்மையும் போலித்தனமும் சேர்ந்துவிடும்போது இயற்கையைச் சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் திறமையை மனிதன் இழந்துவிடுகிறான். புதிய படிமங்கள் உருவாவது தடைப்படுகிறது. சொற்கருவூலம் காலியாக இருக்கும் நிலையில் போலிச்சொற்கள் எழுகின்றன. நீண்டகால பண்பாட்டு வரலாற்றை உடைய ஒரு நாட்டில் உண்மையைச் சொல்வதாக நம்பி, பிறரையும் நம்பவைக்கக்கூடிய நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களால் ஒரே ஒரு சிந்தனையைக்கூட  அதற்குரிய இயற்கையான உருவத்தில் முன்வைக்கமுடியாது. அவர்கள் அத்தேசத்தின் அடிப்படையான இலக்கியப்படைப்பாளிகள் உருவாக்கிய மொழியை தங்களை அறியாமலேயே வளைத்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். மற்றொரு பக்கத்தில், பெரும் இலக்கியப்படைப்பாளிகளின் மொழியோ இயற்கையை நேரிடையாகச் சார்ந்திருக்கும்.

வரலாற்றில் எழுந்த சொற்களும் பல நாடுகளின் பழமொழிகளும் உண்மையில் இயற்கையிலிருந்து பெறப்பட்ட ஓர் உண்மையையே சொல்கின்றன. அவை மனித வாழ்வைப் பற்றிய ஓர் உண்மையைக் குறிப்பவையாக தாமாகவே அமைந்துவிட்டன. எடுத்துக்காட்டாக, ‘உருளும் பாறையில் பாசி படிவதில்லை’, ‘கையிலுள்ள ஒரு பறவை மரத்தில் உள்ள இரு பறவைகளைவிட மேலானது’, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’, ‘கடைசி வைக்கோல் துரும்பு ஒட்டக முதுகை உடைத்தது’ ‘நீண்ட நாள் வாழும் மரங்கள் முதலில் வேர்களைப் பரப்புகின்றனஎன இன்னும் ஏராளமானவற்றைச் சொல்லலாம். மேலோட்டமான பார்வைக்கு இவை அனைத்தும் மிக எளிய தகவல்களைப்போலவே காணப்படுகின்றன. ஆனால் நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது இவற்றின் உருவகப் பொருளிலேயே பயன்படுத்துகிறோம்.

இயற்கையோடு இணைந்த ஒரு மனம் இயற்கையைப் புரிந்துகொள்ளும் கண்களை அடையும். மெல்ல மெல்ல நாம் இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உள்ள அடிப்படையான மாறாத இயல்புகளை அறியத் தொடங்குவோம். இயற்கை ஒரு சிறந்த புத்தகமாகும். அதில் உள்ளுறைந்துள்ள ஒவ்வொரு வடிவமும் முக்கியமானதாகும். ஒவ்வொன்றும் இயற்கையின் வாழ்வையும் ஆதிமுதல் காரணத்தையும் நமக்குக் கூறும்.

கட்டுப்பாடுஎன்னும் பகுதியில் இயற்கையின் மகத்தான கட்டுப்படுத்தும் ஆற்றலை விளக்குகிறார் எமர்சன். இந்த உலகில் உழைப்பு, உணவு, பருவநிலை, போக்குவரத்து, விலங்குகள் ஆகிய அனைத்துமே நமக்கு தினந்தோறும் எல்லையற்ற அர்த்தம் கொண்ட பாடங்களை வழங்கியபடியே உள்ளன. நம் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தர்க்கத்தையும் அவை வலிமைப்படுத்துகின்றன. இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளும் நாம் புரிந்துகொள்ள உதவும் பள்ளியாகும். அவற்றின் பருண்மை அல்லது தாக்குப்பிடிக்கும் தன்மை, விரிவாக்கம், வடிவம், பகுபடும் இயல்பு முதலியவற்றைப்பற்றி புரியவைக்கும். இந்த அறிவானது இச்சூழலில் செயல்படத் தேவையான வசதியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. கூட்டுவது, வகுப்பது, பெருக்குவது, அளவிடுவது, இணைத்துப்பார்ப்பது ஆகியவற்றின் மூலம் அது இதைச் சாதிக்கிறது. அதே சமயம் தர்க்க அறிவு அனைத்தையும் தன் சிந்தனை உலகுக்கு மாற்றிக்கொண்டு பொருட்களையும் இணைத்து உலகக்காட்சியை உருவாக்கிக்கொள்கிறது. இயற்கையின் கட்டுப்பாடு பற்றிய பல விவரங்களைச் சொல்லும்போதே எமர்சன் மானுட இச்சாசக்தியைப்பற்றியும் சொல்கிறார். குழந்தை தன் புலன்கள் பற்றிய பிரக்ஞையை ஒவ்வொன்றாக அடையத் தொடங்குவது முதல் அது முதிர்ந்துஎல்லாம் உன் செயல்எனச் சொல்வது வரையிலான காலம் வரை தொடர்ந்து இந்த ரகசியத்தைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. தன் இச்சாசக்திக்கு ஏற்ப தன் முன் நிகழும் எல்லாச் சம்பவங்களையும் எல்லாவிதமான அறிதல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் எல்லாத் தகவல்களையும் இவ்வாறு தன் ஆளுமைக்கும் இயல்புக்கும் ஏற்ப பொருத்திக்கொள்ள முடியும் என்றும் அது அறிகிறது.

கருத்துமுதல்வாதம்என்னும் கட்டுரையில் தன் சமகாலத்தில் இயற்கை குறித்தும் புற உலகம் குறித்தும் எழுந்த பல ஐயங்களுக்கெல்லாம் விடைகூறும் விதமாக பல கோணங்களில் தன் வாதத்தை முன்வைத்திருக்கிறார் எமர்சன். ‘ஆத்மாஎன்னும் பகுதியில் மானுட வாழ்வில் இயற்கையின் பங்கு என்ன என்பதைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தையே வழங்குகிறார் எமர்சன். அவர் இயற்கையை கிறிஸ்துவாகவே காண்கிறார். இயற்கை தலைகுனிந்து மார்பின்மீது கட்டிய கரங்களோடு நம் முன் நிற்கிறது என்கிறார் எமர்சன். இயற்கையிலிருந்து பிரார்த்தனைப்பாடல்களைக் கற்றுக்கொள்பவனே மிகமிக மகிழ்ச்சியான மனிதன் என்று குறிப்பிடுகிறார் எமர்சன். இயற்கையைப் பணிதல், இயற்கையை வணங்குதல் என்பதே இதன் நேர்பொருளாகும். ஜடம் என்பது என்ன, அது எதிலிருந்து வருகிறது? எங்கு போகிறது? என இயற்கை எழுப்பும் மூன்று கேள்விகளை முன்வைத்து எமர்சன் நிகழ்த்தும் விரிவான விவாதங்கள் ஆர்வமூட்டுபவையாகவும் தெளிவை நோக்கி நம்மைச் செலுத்துவதாகவும் உள்ளன. ஆத்மாவே அனைத்துக்கும் மேலான பேரிருப்பு என்பது எமர்சன் முன்வைக்கும் உண்மை. அது இயற்கையை நம்மைச் சுற்றி கட்டி எழுப்பியிருக்கிறது என்று கூறமுடியாது. மாறாக, அது இயற்கையை நம் வழியாக முன்வைக்கிறது. கிளைகள் வழியாக மரம் இலைகளையும் தளிர்களையும் மலர்களையும் முன்வைப்பதுபோல,

நம் மனம் என்னும் தூய இருப்புடன் நம் வாழ்வை எந்த அளவுக்கு நாம் இசைவுகொள்ளச் செய்கிறோமோ அந்த அளவுக்கு மகத்தான சாத்தியங்கள் நம் முன் எழும் என்று கட்டுரையின் இறுதிப்பகுதியில் குறிப்பிடுகிறார் எமர்சன். இந்த ஒற்றை வாக்கியமே அவருடைய இறுதிச்செய்தி. இசைவு பெருகிநிற்கும் கணம்தோறும் தீமை எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள எங்கெங்கும் நன்மை விரிந்து படரத்தொடங்கும்.