Home

Friday 30 March 2018

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை - எம்.சுகுமாரனின் ’சிவப்புச்சின்னங்கள்’



எம்.சுகுமாரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய மலையாள எழுத்தாளர்களில் முக்கியமான ஓர் ஆளுமை. தொழிற்சங்கங்களில் நேரடி ஈடுபாடு கொண்டவர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர் காட்டிய தீவிரத்தின் விளைவாக அரசுப்பணியை இழந்தவர். 1982 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து எழுதிய பிறகு பத்தாண்டு காலம் எழுத்து முயற்சிகளைவிட்டு விலகியே இருந்தார். பிறகுபித்ருதர்ப்பணம்என்னும் சிறுகதையின் வழியாக அவரது இரண்டாவது கட்ட எழுத்துவாழ்க்கை தொடங்கியது. ’சிவப்புச்சின்னங்கள்என்னும் குறுநாவல் தொகுப்புக்காக அவர் சாகித்திய அகாதெமியின் விருதைப் பெற்றார். தட்டகம், ஆலாஹாவின் பெண்மக்கள், யாழ்ப்பாணப்புகையிலை, அய்யன் காளியின் வாழ்க்கைவரலாறு  போன்ற படைப்புகளை ஏற்கனவே மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நிர்மால்யா எம்.சுகுமாரனின் சிவப்புச்சின்னங்கள் குறுநாவல் தொகுப்பையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

பத்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு, வாழ்வின் அடித்தட்டு மனிதர்களின் அக,புற உலகங்களால் நிறைந்திருக்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டை நினைத்தபடி, தெருதோறும் நடந்தபடி இருக்கும் எளிய மனிதர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள். மேல்தளத்தில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களாக இருந்தாலும் அடித்தளத்தில் அவை அமைதியான சமூக விமர்சனமாகவும் உள்ளன.
தூயகாற்றுதொகுப்பில் முக்கியமான குறுநாவலில் காட்டில் அலைந்து குரங்குகளைப் பிடிப்பதை குலத்தொழிலாகக் கொண்ட ஒருவனுடைய வரலாறாக விரிவதைப் பார்க்கலாம். நினைவு தெரிந்த நாள்முதல் குரங்கு பிடித்து விற்பதால் கிடைக்கும் வருமானம்தான் அவன் குடும்பத்துக்கு ஆதாரம். மனைவி உயிருடன் இல்லை. சிறுவனான தன் ஒரே மகனை குரங்குகளுக்குக் காவலாக நிறுத்திவைத்துவிட்டு காட்டுக்குச் செல்கிறான் அவன். குரங்குகளைத் தேடி வியாபாரிகள் வருவார்கள். யாராவது சர்க்கஸ்காரர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். அந்தப் பணம் அவர்களுடைய சாப்பாட்டுச் செலவுக்கு உதவுகிறது. ஒருநாள் குரங்கு வேட்டைக்குச் சென்றிருந்தபோது, வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக அவனை வனக்காவலர்கள் சுட்டுவிடுகிறார்கள். அனாதையான சிறுவன் தன் ஒரே ஆதரவான நொண்டிக்குரங்கோடு தன் ஊரைவிட்டு வெளியேறுகிறான். எங்கோ வழியில் தென்பட்ட ஒரு சிற்றூரில் ஒரு பண்ணையாரிடம் தஞ்சமடைகிறான். சிறுவன் காட்டும் குரங்குவித்தையைக் காண பலரும் வருகிறார்கள். அவன் வித்தையில் மனம் பறிகொடுத்த பண்ணையார் அவனுக்கு தன் வயல்வெளியில் ஒரு வேலையைக் கொடுத்து, அங்கேயே தங்கிக்கொள்ளவும் அனுமதிக்கிறார். சிறுவன் மெல்லமெல்ல இளைஞனாகிறான். அந்த வீட்டில் உள்ள ஊனமுற்ற பெண்ணொருத்தி அவன்மீது மையல் கொள்கிறாள். வீட்டார் அனைவரும் கோவில் வளாகத்தில் கதகளி காணச் சென்றிருந்த சமயத்தில் இரண்டுபேரும் சந்தித்துக்கொள்கிறார்கள். தகவல் தெரிந்த ஆட்கள் அவனைத் துரத்துகிறார்கள். அங்கிருந்து தப்பிச் செல்லும் அவன் ஒரு விலங்குக் காட்சிச்சாலையில் அங்குள்ள அதிகாரியின் இரக்கத்தைச் சம்பாதித்து, குரங்குகள் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறான். அந்த வேலையில் அவன் நல்ல பெயர் சம்பாதித்து, பொழுதுகளை உற்சாகமாகக் கழிக்கத் தொடங்கிய சமயத்தில் குரங்குகள் அவனோடு பேசத் தொடங்குகின்றன. அக்குரங்குகள் அனைத்தும் அவனுடைய தந்தையாரால் வெவ்வேறு சமயத்தில் விற்கப்பட்டவை என்று அவை அவனிடம் சொல்கின்றன. காட்டிலிருந்து தம்மைப் பிரித்த அவன் தந்தையின்மீது தீராத கோபத்தோடு இருக்கின்றன அவை. ஒரே ஒரு இரவுப்பொழுது, காட்டில் திரிந்து மரங்களில் குதித்து, தம்முடைய சுதந்திர வாழ்க்கையை வாழ்வதற்கு அவனிடம் அனுமதி கேட்கின்றன. பொழுது விடிவதற்குள் கூட்டுக்குத் திரும்பி வந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கின்றன. குரங்குகளின் வாக்குறுதியை நம்பிய இளைஞன் அவற்றை விடுதலை செய்கிறான். ஆனால் ஒரு குரங்குகூட திரும்பி வரவில்லை. பொழுது விடியவிடிய அவன் அச்சம் அதிகரிக்கிறது. குரங்குகள் காணாமல் போன செய்தி கிடைத்த அதிகாரியும் ஆட்களும் அவனைத் துரத்தி வருகிறார்கள். அவனுடைய ஓட்டம் மீண்டும் தொடர்கிறது. ஆனால் இந்தமுறை அவனால் தப்பிக்க முடியவில்லை. காவலர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு அவன் இரையாகிறான். காலம்முழுதும் மனிதர்கள் விழைவது வயிறு நிறைய உணவும் படுத்து உறங்க ஓர் இடமும். ஆனால் அந்த எளிய விழைவுகூட அவர்கள் வாழ்வில் நிறைவேவதில்லை. அவர்கள் வாழ்வில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் கூரையைப் பிய்த்துக் கலைத்து ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. நிம்மதியான தூயகாற்று அவர்களுக்குக் கனவாகவே போய்விடுகிறது.
குஞ்ஞப்புவின் தீய கனவுகள்குறுநாவலும் கிட்டத்தட்ட சூறாவளிக்காற்றால் வாழ்வின் வெளியில் ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு சிறுவனின் வாழ்க்கையைத்தான் முன்வைக்கிறது. பகல்முழுதும் குப்பைகளைச் சீய்த்து பழைய இரும்புத்துண்டுகளைத் தேடித்தேடிப் பொறுக்கியெடுத்து கோணிச்சாக்கில் நிரப்பியெடுத்துச் சென்று விற்று, அந்தக் காசில் எதையாவது வாங்கித் தின்றுவிட்டு இரவில் கடைவாசலில் படுத்துறங்கிவிட்டுச் செல்கிறான் ஒரு சிறுவன். அவன்தான் குஞ்ஞப்பு. ஒருநாள் அவன் குப்பைகளுக்காகத் தேடிச் செல்லும் வழியில் ஒரு பள்ளி மைதானம் தென்படுகிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலின் வாக்குகளை அன்று எண்ணும் சடங்கு நடைபெறுகிறது. ஆள்நடமாட்டத்தைக் கண்டதும் விலகி நடக்கத் தொடங்கிய சிறுவனை, ஆள்நடமாட்டத்தை முன்னிட்டு ஒரு தற்காலிக பழச்சாறு கடையை நடத்தும் ஒருவன் அழைத்து, தம்ளர்களைக் கழுவும் வேலையைக் கொடுக்கிறான். அவன் பிய்த்துக் கொடுத்த பழைய பழங்களை ஆவலோடு தின்றுவிட்டு, அவன் சொன்ன வேலையைச் செய்கிறான். பொழுது ஏறஏற கூட்டமும் அதிகமாகிறது. அவனுக்கு வியாபாரமும் அதிகமாகிறது. இதோ முடிந்துவிட்டது என்கிற தருணத்தில், கூட்டத்தினரிடையே தகராறு உருவாகிறது. கட்டுப்படுத்த இறங்கிய காவல்துறை எல்லோரையும் சகட்டுமேனிக்கு அடித்து விரட்டுகிறது. செய்த வேலைக்குக் கூலிப்பணம் வாங்குவதற்காக நின்றிருந்த சிறுவன் அடிவாங்கி நினைவிழந்து மருத்துவமனையில் கிடக்கிறான். மறுநாள்தான் அவன் நினைவு திரும்புகிறது. கண்விழித்துப் பார்த்த அவனை மருத்துவமனையிலிருந்து விரட்டிவிடுகிறார்கள். மைதானத்துக்கு மீண்டும் திரும்பும் அவன் தன் உடைமையான கோணிச்சாக்கை அங்கே கண்டெடுக்கிறான். பசியையும் வலியையும் மறந்து அவன் மகிழ்கிறான். ஆவலோடு அதை எடுத்துக்கொண்டு மீண்டும் குப்பை மேடுகளைநோக்கித் திரும்புகிறான். எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை அப்போது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அப்பெட்டிகள் இரும்பாலானவையாக இருந்தால் நிச்சயம் ஒருநாள் துருப்பிடிக்கும் என்று அவன் யோசிக்கிறான். வாக்குப்பெட்டிகள் தம் கடமைகளை நேர்மையாகச் செய்யவில்லை. அவற்றில் விழும் வாக்குகள் நல்ல பொறுப்புணர்ச்சி உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நல்ல ஆட்சி நடத்தவில்லை. ஏழைமனிதர்கள் வாழ்க்கையின் தரம் உயரவில்லை. உணவு, உடை, உறையுள் என்னும் அவர்களுடைய எளிய கனவுகள் நிறைவேறவே இல்லை. அப்பெட்டிகள் துருப்பிடித்து தெருவில் எரியப்பட்டாலாவது, அவற்றைப் பொறுக்கி விற்பதால் கிடைக்கும் விலையில் ஒருவேளைச் சோறாவது அவர்கள் நிம்மதியாக உண்ண இயலும். அதுதான் அவனை அப்படி நினைக்கத் தூண்டியிருக்கும்.
முலைநரம்புகள்குறுநாவலும் அடித்தட்டு மனிதனொருவனின் வாழ்க்கையை முன்வைக்கிறது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவனை இக்கதை காட்டுகிறது. குழந்தைப்பருவத்திலேயே அவன் தன் தந்தையைப் பறிகொடுத்துவிடுகிறான். பிறகு தாயையும் பறிகொடுத்துவிடுகிறான். வறுமையிலேயே வாடினாலும் எப்படியோ வளர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, சரியான உணவோ மருத்துவவசதியோ இல்லாமல் இறந்துபோகிறாள். குழந்தையின் பசிக்கு பால் கூட வாங்கித் தர முடியாத அவன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு குழந்தையையே கொன்றுவிடுகிறான். குழந்தைக்கொலையை அறிந்த காவல்துறை அவனைக் கைது செய்கிறது. இந்தச் சமூக அமைப்பில் ஏழைகள் ஊட்டமான முலைநரம்புகள் அல்ல, ரத்தஓட்டமே இல்லாத தளர்ந்துபோன முலைநரம்புகள்.
பெரும்பாலான குறுநாவல்கள் வறுமையையும் கண்ணீரையும் முன்வைக்கின்றன. புறா, அசுர சங்கீதம் போன்ற மாறுபட்ட களங்களைக் கொண்ட குறுநாவல்கலும் இத்தொகுப்பில் உள்ளன. இரண்டு வெவ்வேறு தரப்புகளின் காட்சிகளை மாற்றிமாற்றிக் காட்டுவதன்வழியாக பின்னப்பட்ட கதைஅசுர சங்கீதம்’. ‘இந்த நோட்டீஸ் கிடைக்கப்பற்றவர்கள் பெருமாளின் அருளை அடைய, இதை அச்சிட்டு நூறு பேருக்கு அனுப்பிவைக்கவேண்டும்என்று எழுதப்பட்ட நோட்டீஸை தற்செயலாகப் பார்க்கநேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், அதை தனக்கிடப்பட்ட கட்டளையாகவே எண்ணி யாருக்கும் தெரியாதபடி அந்தக் கட்டளையை நிறைவேற்றுகிறார். அதே செய்தியைக் கேள்விப்படும் அவருடைய பால்காரன்  அதைப் பொருட்படுத்தவே இல்லை. அதற்குமாறாக, பேச்சுப்போக்கில்மனுஷங்களோட தெய்வம் மனுஷங்கதான் சாமிஎன்று சொல்லிவிட்டுச் செல்கிறான். ஓர் ஆணி குத்தி, அவன் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேர்கிறது. அவன் மாடு இறந்துபோகிறது. அவன் மனைவியை நோய் தாக்குகிறது. இவை அனைத்தும் நிகழ அவன் கடவுளின் இருப்பை நிந்தித்ததே  காரணம் என்று எண்ணுகிறார் அவர். அவருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. இடமாற்றல் கிடைக்கிறது. பிள்ளைகள் தேர்வை நல்லபடி எழுதுகிறார்கள். இவை அனைத்தும் கடவுளின் இருப்பை மதித்து நோட்டீஸ் அடித்துப் பரப்பியதே காரணம் என்றும் எண்ணுகிறார். இருவருமே அவரவர் எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இறுதிப்புள்ளி வரை அது மாற்றமே இல்லாமல் நீடிக்கிறது. அந்த முரணைத் தக்கவைத்தபடியே இரண்டு தரப்புகளும் நட்போடு நீடிக்கின்றன. இந்தக் கலையமைதி கதைக்கு ஒரு பொலிவை உருவாக்கிறது.
நிர்மால்யாவின் முயற்சியால் மொழியாக்கம் பெற்றிருக்கும் இந்தப் படைப்புகளை, கலைவெற்றி கூடிய முற்போக்குக்கதைகளுக்கான நல்ல முன்மாதிரிகள் என்றே சொல்லவேண்டும்.

(சிவப்புச் சின்னங்கள். மலையாளக் குறுநாவல்கள். எம்.சுகுமாரன். தமிழாக்கம்- நிர்மால்யா. சாகித்திய அகாதெமி. விலை. ரூ.180.)

16.03.2018 அன்று  எழுத்தாளர் எம்.சுகுமாரன் மறைந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி.