Home

Friday 11 May 2018

காரணம் - கன்னடச்சிறுகதை - விக்ரம் ஹத்வார




கடலலைகளின் நடனக்கோலத்தைக் கண்டு கரைந்துபோன சூரியன்.  பாதையெங்கும் செம்மண் சேறு. பாதையின் இடதுபக்கத்தில் விளைந்து நிற்கும் வயல்வெளிகள். வயல்வெளிக்கு நடுவில் நீண்டு செல்லும் ஒரு சின்னப் பாதை. பாதையோரத்தில் மேகத்தைத் தொட்டுவிடுவதுபோல உயர்ந்து நிற்கும் மரங்களின் வரிசை. மரங்களை ஒட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். அங்கிருந்த மொத்த சூழலே காவி உடுத்திய தெய்வாம்சம் பொருந்திய துறவியைப்போல காணப்பட்டது. காயம்மா மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டிருந்தார். முதுகு சற்றே வளைந்திருந்தது. ஆனால் கூனலில்லை. நெற்றி மீது இழுத்துவிடப்பட்டிருந்த புடவை முந்தானை காற்றில் சரிந்தபோதெல்லாம் இழுத்துத் தடுத்தபடி இருந்தார்

பத்மநாப புராணிகரின் வீட்டில் சாப்பிட்ட பிறகு பாத்திரங்களையெல்லாம் கழுவிவைத்துவிட்டு, தேநீர் கூட அருந்தாமல் மதிய வேளையிலேயே புறப்பட்டிருந்தார். புராணிகரின் மனைவி கொடுத்த இரண்டு சிறிய பாத்திரங்கள் கையில் இருந்தன. இரவுச் சாப்பாட்டுக்காக ஒரு பாத்திரத்தில் குழம்பும் இன்னொரு பாத்திரத்தில் இரண்டு அகப்பை சோறும் ஒன்றிரண்டு மெதுவடைகளும் போட்டுக் கொடுத்திருந்தார்கள். பொசுக்கும் வெயிலில் வயல்வெளி ஓரமாகவே நடந்து சென்று வைத்தியர் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தோட்டத்தைக் கடந்து, மண்சாலைக்கு வந்தார். புராணிகரின்  வீட்டில் சேஷம்மா சொன்னதையெல்லாம் நினைத்து நினைத்து, வழிமுழுதும் காயம்மாவின் மனம் முழுக்க வேறொரு கணக்கு ஓடியது.
எதிர்த்திசையிலிருந்து இரண்டு சைக்கிள்கள் வருவது தெரிந்தது. இரு சிறுவர்கள் ஒரே சமயத்தில் ஒரே விதமாக ஒலிக்கும்படி மணியடித்தபடி, அச்சமூட்டுவதுபோல வேகமாக காயம்மாவுக்கு வெகு அருகில் வந்தார்கள். “என்ன காயம்மா பிச்சி? சாப்ட்டியா?”  என்று கேலியாகக் கேட்டபடி ஒருவன் வண்டியை ஓட்டிவர, இன்னொருவன் அவரை உரசுவதுபோல வேகமாக ஓட்டி வந்து அருகிலிருந்த செடியின் இலைகளைக் கிள்ளி அவர் மீது வீசிவிட்டுச் சென்றான். “பாவி மவனே…… உன் தோலை உரிச்சிடுவேன்….. தேவடியா மவனே…..” என்று கோபத்துடன் திட்டினார் காயம்மா. இதைக் கேட்டு உற்சாகமுற்ற சைக்கிள்காரர்கள் மீண்டும் மணியடித்தபடி திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று சாலையின் திருப்பத்தில் மறைந்துபோனார்கள். பாதையின் இடதுபக்கமாகத் திரும்பிய காயம்மா சந்துக்குள் நுழைந்து வீட்டை அடைவதுவரைக்கும் முணுமுணுவென்று சபித்தபடியே இருந்தார்.
யாராவது காயம்மா பிச்சி என்றால் போதும், காயம்மாவுக்கு கோபம் பொங்கி வரும். அவரைச் சீண்டுவதற்காகவே மாகணெ பிள்ளைகள், அவர் அமைதியாக தன் போக்கில் சாலையில் போய்க்கொண்டிருந்தாலும் காயம்மா பிச்சி….” என்று கூச்சலிடுவார்கள். எப்போதிலிருந்து காயம்மா பித்து பிடித்தவளானார்? யாரும் அழைக்காவிட்டாலும் கூட தொடர்பே இல்லாதவர்களுடைய வீடுகளுக்கு சாப்பிடச் செல்லும் பழக்கம் எப்போதிருந்து அவருக்கு வந்தது?  யாருக்கும் தெரியாவிட்டாலும்கூட, “புருஷன் செத்ததுக்குப் பிறகு இப்படித்தான்என்னும் எண்ணம் மாகணெ  முழுக்கப் பரவியிருந்தது. முதலில் மாகணெயில் யாருடைய வீட்டு நிகழ்ச்சியென்றாலும் சரி, அங்கே புரோகிதர்கள், பாத்திரங்கள், பந்தல்கள் இருப்பதைப்போலவே காயம்மாவும் கண்டிப்பாவும் இடம்பெற்றிருப்பார். அது மட்டுமில்லாமல், எந்த வீட்டிலாவது அப்பளம், வற்றல், ஊறுகாய் மிளகாய் போடுவது, அவல் இடிப்பது என எந்த வேலையாக இருந்தாலும் காயம்மாவுக்கு அழைப்பு சென்றுவிடும். காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு, நொறுக்குத்தீனி, இரவுச் சாப்பாட்டுக்குத் தேவையான அளவு சோறு, குழம்பு, பொரியல், சிற்சில சமயங்களில் பழைய புடவை, ரவிக்கைஇவையே அவருடைய சம்பளம். பணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.  ஏதோ ஒரு வகையில் உறவு என்கிற சாக்கில் சமையலுக்கும் பண்டபாத்திரங்கள் தேய்க்க ஒரு ஆள் கிடைத்தது என அவருக்குச் சொல்லி அனுப்பினார்கள். காயம்மாவும் பத்து ஆள் வேலைகளைச் செய்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார்.
மடி, ஆசாரம் ஆகியவற்றை மறக்கத் தொடங்கியதுமே, எல்லா வீட்டுக்காரர்களும் காயம்மாவின் நடமாட்டத்தை சமையலறையிலிருந்து விலக்கி சற்றே தொலைவிலேயே நிறுத்தத் தொடங்கினார்கள். விறகுகள் எரியும் அடுப்புக்கு அருகில் சாப்பாட்டுத் தட்டை வைக்கவேண்டாம் என்று எவ்வளவோ பொறுமையாக எடுத்துச் சொன்னாலும் கூட, காயம்மா ஒரு கணம் எதுவுமே புரியாதவளைப்போல நின்றிருந்துவிட்டு, சட்டென அர்த்தமே இல்லாமல் எதைஎதையோ பேசிவிட்டு சோற்றுத் தட்டை தொட்ட கையாலேயே வாணல், கரண்டிகளைத் தொட்டுவிடுவார். அது மட்டுமல்ல, அந்த நேரத்தில் அவ்வட்டாரத்தில் சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டதால் காயம்மாவைப்போன்ற பெண்களுக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. அதனால், காயம்மாவுக்கு சொல்லி அனுப்புவதே நின்று போனது. ஆனாலும் காயம்மா யாரோ ஒருவர் வீட்டில் ஏதோ விசேஷம் நடக்கிறது என்பது  தெரிந்ததுமே அழைப்பு எதுவும் இல்லாமலேயே போகத் தொடங்கினார்.  பாவம், அவுங்களுக்கும் வயசாயிட்டுது. புருஷனும் இல்ல, புள்ளைங்களும் இல்ல. எங்க சாப்பாடு கெடைக்கும்ன்னு தெரியுதோ, அங்க போறாங்கஎன்று இரக்கத்துடன் சொன்னபடி பலரும்  வெளிவேலைகளை அவருக்கு அளித்தார்கள்.
மாகணெயில் வாழ்ந்துவரும் எத்தனையோ பெண்களைப்போலவே காயம்மாவுக்கும் தன் வயதைப்பற்றிய கவனம் எதுவும் இல்லை. நினைத்துப் பார்ப்பதற்கான அவசியம் மாகணெயில் யாருக்கும் இல்லையென்பதால் அவருடைய வயது இதுவரைக்கும் எழுபதிலேயே நின்றிருக்கிறது. பத்மநாப புராணிகரின் பேரனின் உபநயனத்துக்கு வந்த சேஷம்மா,  அது என்ன எழுபது? எங்க அம்மா சாகற சமயத்துல எண்பது வயது. அவ செத்து எட்டு வருஷம் ஆவுது. எங்க அம்மாவை விட காயம்மா நாலஞ்சி வருஷம் பெரியவங்கஎன்று சொன்னது காதில் விழுந்தபோது காயம்மாவுக்கு சட்டென ஒரே நேரத்தில் தன் வயது இருபது ஆண்டுகள் அதிகமாகிவிட்டதுபோலத் தோன்றியது. அன்று பாத்திரங்கள் கழுவும்போது தோன்றிய களைப்பு சேஷம்மா அக்கா விவரித்த கணக்கை நிரூபிப்பதுபோல இருந்தது. இதுவரை இல்லாமலேயே இருந்த காயம்மாவின் ஆயுள் கணக்கு அன்றுமுதல் தொடங்கியது. புராணிகரின் வீட்டிலிருந்து புறப்பட்டு திரும்பி வரும் வழிமுழுக்க அதே சிந்தனை. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விளக்குத்திரி சுற்றும்போதும் கூட அதே கேள்விகள்புருஷன் இறந்தபோது தனக்கு என்ன வயது? இறந்து எவ்வளவு வருஷங்கள் கழிந்தன? எவ்வளவு முயற்சி செய்தாலும் காயம்மாவுக்கு சரியான கணக்கு பிடிபடவில்லை. திருமணம் நடந்தபோது பன்னிரண்டு. இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது இருபத்தெட்டு. மகன் இறந்தபோது முப்பது. அதற்குப் பிறகு? சேஷம்மா அக்கா ஏதோ ஒரு கணக்கில் தனக்கு வயது தொண்ணூறு என்று சொல்லிவிட்டாள். அந்த முப்பதுக்கும் இந்த தொண்ணூறுக்கும் இடையிலான  அறுபது வருஷ காலப் பகுதியில் எல்லாமே அடங்கியிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த அடையாளமும் தன்னிடம் இல்லை. தன் எதிர்கால வாழ்க்கையின் அடையாளம் எப்படி இருக்கும்? இனி எந்த அடையாளத்துக்காக தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? தொண்ணூறு ஆகிவிட்டது. இந்த உடல் இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்கும்? எப்போது கீழே விழும்? விழுந்த பிறகு இதற்குத் தேவையான விஷயங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? – சிம்னி விளக்கு வெளிச்சத்தில் காயம்மாவின் கண்கள் பெரிதாகச் சுடர்ந்தன. அதே நேரத்தில் மூடுகோபாடியைச் சேர்ந்த நாகேஷுடன் ஏறத்தாழ முப்பத்தைந்து வயதுள்ள ஒரு புதிய ஆள் ஒருவன் காயம்மாவைப் பார்ப்பதற்காக வந்தான்.
காயம்மா….. இருக்கியா?” கதவில் கைகளை ஊன்றியபடி உள்ளே தலையை நீட்டி கேட்டான் நாகேஷ். வெளியில் நின்றிருப்பதைப்போலவும் இருக்கவெண்டும், உள்ளே சென்றதைப்போலவும் இருக்கவேண்டும் என்பதுபோல நின்று எட்டிப் பார்த்தான்.
கண்ணு தெரியலையா…?” விளக்குத்திரி சுற்றிக்கொண்டிருந்த காயம்மா பதில் சத்தம் கொடுத்தார். அவர் பேசினாலேயே உறுமுவதுபோல இருக்கும் என்று நாகேஷ் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தாலும், இப்படி ஒரு வரவேற்பு ஹர்ஷனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. புதியவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த சமயங்களில் ப்ளீஸ் கம்என்று புன்முறுவலோடு அழைக்கும் முகம், தொலைபேசியில் ஷ்யூர். யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்என்று  நாகரிகத்துடன் உரைக்கும் குரல், முதல் நாள் நாகேஷின் அம்மாவந்தியா, வா வா என்று வரவேற்றபடி தண்ணீரையும் வெல்லத்துண்டுகள் நிரம்பிய ஒரு பாத்திரத்தையும் தனக்கு முன்னால் வைத்து மனப்பூர்வமாக வெளிப்படுத்திய நெருக்க உணர்வுஇப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிய ஹர்ஷ, காயம்மாவின் வீட்டில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்குமென்று எண்ணிப் பார்த்திருக்கவில்லை.
உங்கள பார்க்கறதுக்காக பெங்களூருலேருந்து ஹர்ஷன்னு ஒருத்தர் வந்திருக்காருவாசலில் நின்றபடியே சொன்னான் நாகேஷ். அறிமுகமில்லாத ஒருவனுடைய எதிர்பாராத வருகையால் காயம்மாவின் மனத்தில் ஏதேதோ கேள்விகள் எழுவதை அவருடைய புருவ அசைவுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. ”உள்ள வாங்கஎன்று கண்ணசைவினாலேயே ஹர்ஷனிடம் தெரியப்படுத்தினான். இருவரும் உள்ளே சென்று காயம்மாவுக்கு எதிர்ப்புறமாக திண்ணையில் உட்கார்ந்தார்கள். தன் வீட்டுக்கு வந்திருக்கும் அறிமுகமில்லாதவனை ஏறெடுத்துப் பார்க்கும் எவ்விதமான உற்சாகத்தையும் காயம்மா வெளிப்படுத்தவில்லை. விளக்குத்திரிக்காக பஞ்சை உருட்டியபடி உட்கார்ந்திருந்தார். தலைமுடியெல்லாம் வெளுத்து அங்கங்கே உதிர்ந்திருந்தது. வெகுகாலம் தோடு அணிந்து நடமாடியததற்கு அடையாளமாக பெரிய துளைகளுடன் காதுகள் தொங்கி அசைந்தபடி இருந்தன. கழுத்தில் ஓரிழை சங்கிலியொன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் பொன்னிறக் கோடுகளால் நிரம்பி, இப்போது வெளுத்துப்போன பழுப்பு நிறத்தில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டிருந்தார். ஆயினும் ஒருசில சமயங்களில் காயம்மா பார்க்கும் விதமும் முகச்சலனங்களும் இந்தக் கிழவிக்கு பார்க்கும் சக்தியே இல்லையோ என்னும் சந்தேகம் தோன்றும் வகையில் இருந்தன. ஹர்ஷனுக்கும் அவ்விதமாகவே தோன்றின.  ஏற்கனவே பித்துப் பிடித்தவர் போல இருந்தார். இந்த நிலையில் கண்பார்வையும் இல்லையென்றால் இந்தக் கிழவியுடன் எப்படி உரையாடலைத் தொடங்குவது என்னும் கவலை எழுந்தது. உள்ளேயிருந்து பஞ்சு எடுத்து வந்து குவித்துவைத்துக்கொண்டு விளக்குத்திரி சுற்றத் தொடங்கியபோதுதான் ஹர்ஷனின் சந்தேகம் தீர்ந்தது.
கொஞ்ச நேரம் வீட்டைச் சுற்றிப் பார்த்தான் ஹர்ஷ. நிறம் மங்கிப் போன சுவர்கள். மூலையில் கால் முரிந்துபோன ஒரு நாற்காலி. செம்மண் தரை.  வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அசாதாரணமான அமைதி கவிந்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஒருவர் அறுபது வருஷ காலம் தனிமையில் கழித்திருக்கிறார் என்பதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. காயம்மாவே ஏதேனும் கேள்வி கேட்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருந்தவன், அவருடைய ஆர்வமின்மையைப் பார்த்து தானாகவே உரையாடலைத் தொடங்க நினைத்தான். ஏதோ ரகசிய மந்திரமொன்றைச் சொல்வதுபோல காயம்மாவின் பக்கமாக குனிந்துபெரியம்மா, நான் லட்சுமி நாராயண வாத்தியாருடைய பேரன்என்றான்.
ஹர்ஷனின் வாயிலிருந்து லட்சுமி நாராயண வாத்தியார் என்னும் பெயரைக் கேட்டு ஒரு கணம் காயம்மா அதிர்ச்சியுற்றவர் போல இருந்தார். தலையைத் திருப்பி ஹர்ஷனைப் பார்த்தார். லட்சுமி நாராயணனுடைய குரலின் நினைவும் உடனடியாக எழுந்தது. அத்தோடு சீற்றமும் பொங்கி வந்தது. “அதுக்கு நான் என்ன செய்யறது?” என்று முரட்டுத்தனமாகக் கேட்டார்.
பெரியம்மா, லட்சுமி நாராயண வாத்தியாருடைய பிள்ளை ஜனார்தனனுடைய மகன் நான். உங்க பேரன். உங்களை பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்என்று அமைதியாகச் சொன்னான் ஹர்ஷ.
பெரியம்மான்னு சொன்னா கால முரிச்சிடுவேன். யாரு உனக்கு பெரியம்மா?” மீண்டும் சீறினார் காயம்மா.
ஐயோ காயம்மா, இவரும் உங்க ஆளுங்கதான்…..” என்று நாகேஷ் எதையோ விவரிப்பதற்காக முனைந்தான். காயம்மா இன்னும் அதிகமாக சீற்றம் கொண்டார். “எனக்கு இருந்ததெல்லாம் ஒரே புள்ளைதான். அந்தக் கடவுள் அவனைக்கூட எனக்காக விட்டுவைக்கலை. சின்ன வயசிலயே கூப்பிட்டுகிட்டான். அவனுக்காக ஒரு நாராயண பலி பூசை செய்யுங்கன்னு அவருகிட்ட கேட்டேன். அவருக்கு செய்யறதுக்கு மனசிருந்தாலும் அந்த மாயக்காரி செய்ய விடலை. இப்ப அந்த வம்சத்தை கட்டிகிட்டு எனக்கு என்ன ஆவப்போவுது? மொதல்ல வெளியே போங்கஎன்றார்.
காயம்மா சீறும்போதெல்லாம் அவருடைய கண்ணாடிபோன்ற கண்களில் கோபம் பொங்கியது. எங்கே அடித்துவிடுவாரோ என்று அஞ்சி நாகேஷ் பின்வாங்கினான். இந்த நேரத்தில் இங்கிருந்து புறப்படுவது ஒன்றே நல்லது என்பதுபோல ஹர்ஷனுக்கு சைகை செய்து காட்டினான். காயம்மா தலை குனிந்தபடி விளக்குத்திரி உருட்டத் தொடங்கினார். ஹர்ஷ எழுந்தபோது வணங்கும்படி சைகை செய்தான் நாகேஷ். ”இன்னொரு நாள் வரேன் பெரியம்மாஎன்றபடி ஹர்ஷ சற்றே தொலைவில் கால்களை மடித்து குனிந்து வணங்கினான். அது காயம்மாவை குளிரவைக்கிற, இவன் தம்முடைய ஆள் என்னும் எண்ணத்தை ஊட்டுகிற ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. அவர்கள் வாசலைக் கடந்து செல்லும் கணத்தில்இன்னொரு தரம் இந்த வாசல் பக்கமா கால் வைக்கக்கூடாது, ஜாக்கிரதைஎன்று காயம்மா எச்சரிக்கும் குரல் கேட்டது.
**
அந்த அம்மாவுக்கு மூளை சரியில்லைன்னு  தெரிஞ்சதுக்கப்புறமா பக்குவமா எடுத்துப் பேசி நம்ம வேலையை முடிச்சிக்கணும். நானும் வரேன். சுமுகனையும் நம்மோடு அழைச்சிகிட்டு  போயிடலாம். சின்னப்பையன் முகத்தை பார்த்தாவது அவுங்களுக்கு நாம் சொல்ல வர விஷயம் புரியும்காயம்மாவிடம் விஷயத்தைச் சொல்லாமல் வந்ததை முன்னிட்டு ஹர்ஷனிடம் கோபித்துக்கொண்டாள் கோகாலி. அவள் இந்தியில் சொன்னது எதுவுமே வீட்டுக்கு வெளியே திண்ணையில் அவரோடு உட்கார்ந்திருந்த நாகேஷின் அம்மாவுக்குப் புரியவில்லை. புரிந்துகொண்ட நாகேஷ்அது ஒரு மாதிரியான பித்து புடிச்ச பொம்பளை. உங்க பக்கத்துல வேற யாராவது வயசானவங்க இருக்காங்களான்னு விசாரிச்சி பாருங்க. அந்த கிழவிகிட்ட போகறதே தெண்டம்என்று சொல்லி, ஹர்ஷனிடம் இன்னும் கொஞ்சம் அவநம்பிக்கையை விதைத்தான்.
பார்க்கலாம். போய் பையனுக்கு சாப்பாடு கொடுஹர்ஷ கோகாலியை அமைதிப்படுத்தினான். கோகாலி எழுந்து உள்ளே சென்றாள். நாகேஷின் அம்மாவும் உள்ளே சென்றாள்.
ஹர்ஷ சிறிது நேரம் யோசனையில் மூழ்கியிருந்த பிறகு, “இல்லை, வேற யாரும் இல்லை. அவுங்க ஒரு ஆள்தான் தெரிஞ்சவங்க. சித்தப்பாவுக்கும் சரி, மும்பையில இருக்கிற எங்க அத்தைக்கும் சரி, எதுவுமே தெரியாது. அவுங்களுக்கெல்லாம் ஊரோடு எந்தத் தொடர்பும் கிடையாது. ஒன்னு ரெண்டு பேரு சொந்தக்காரங்க இருக்காங்க. அவ்வளவுதான். அப்பாவுக்கும் கூட எந்த அம்மன்னு தெரியாது. ஒருவேளை, அப்பா இருந்திருந்தால் தெரிஞ்சிக்கறது சுலபமான வேலையா இருந்திருக்குமோ என்னமோஎன்று சொல்லிவிட்டு, கோகாலி உள்ளே சென்றிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “இவள் தகராறு செய்யாம இருந்திருந்தா, போன வருஷமே ஊருக்கு வந்திருக்கலாம். குழந்தைக்கு தினந்தினமும் காய்ச்சல், வாந்தி, பேதி, அம்மை, டைபாய்டுன்னு ஏதாச்சிம் ஒன்னு மாத்தி ஒன்னு வந்து பிரச்சினை ஆரம்பிச்ச சமயத்துலதான் எங்க ஊரு ஜோசியர் ஒருத்தரிடம் குழந்தையுடைய ஜாதகத்தை கொண்டும் போயி காட்டனாரு அப்பா. ஜாதகத்தை பார்த்த ஆள், “உங்க குடும்பத்துல இருக்கறவங்க காலம்காலமா நம்பிக்கொண்டு வந்த அம்மன் ஆராதனை நின்னுபோயிருக்குது. அநேகமா நீலாவரத்துல இருக்கிற துர்காபரமேஸ்வரியா இருக்கலாம். உங்க குடும்பத்துல இருக்கிற பெரியவங்ககிட்ட விசாரிச்சி பாருங்க. எந்த அம்மன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க. குடும்பத்துக்குள்ளயே பெரியவங்க யாரு இருக்காங்கன்னு தேடி கண்டுபிடிச்சி, அவுங்க முன்னிலையில அம்மனுக்கு பூசை செய்து அபராத காணிக்கை செலுத்தி, இனிமேல வருஷத்துக்கு ஒரு தரம் கண்டிப்பா வந்து பூசை செய்துட்டு போறோம்ன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டு வாங்கன்னு சொன்னார். ”ஊரில் எங்கள் அப்பாவின் முதல் மனைவி காயம்மா உயிரோடுதான் இருக்காங்க. ஒரு தரம் போய் வரலாம்ன்னு அப்பா அப்பவே சொன்னார். ஆனால் அப்பா சொல்றதுக்கெல்லாம் இவள் தலைகீழா நடக்கிறவ. இவள் ஒரிசாக்காரி. ரெண்டு பேரும் ஒன்னா வேலை செய்றோம். இவளை கல்யாணம் செஞ்சிகிட்டேன்னு அப்பாவுக்கு கோபம். அப்பா செத்தததுக்குப் பிறகு, குழந்தைக்கு இந்த தோல் வியாதி எப்ப ஆரம்பிச்சிதோ அப்பவே இவளுக்கு பயம் வந்திடுச்சி. ஊருக்கு போய் வரலாமான்னு ஒருதரம் அவளே கெளம்பிட்டா. கிளம்பலாம்ன்னு நெனைக்கிற நேரத்துல எல்லாம் உடனடியா கிளம்பிட முடியுமா?  நான் சின்ன வயசா இருக்கும்போது ஒருதரம் ஊருக்கு போய் வந்திருக்கோம்ன்னு அப்பா சொல்லி எனக்குத்  தெரியுமே தவிர, எனக்கும் வேறு எதுவுமே ஞாபகத்துல இல்லை. கோடீஸ்வரி, கொரோடின்னு வீட்டுல பேசி கேட்டிருக்கேனே தவிர, அங்க யாரும் எனக்கு அறிமுகம் கிடையாது. மும்பையில இருக்கிற உஷா அத்தை – “ஊருல நம்ம வீடு கொரோடியில இருந்தது. காயம்மா கோப்பாடியில இருந்தாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னால விசாரிச்ச சமயத்துல அவுங்க இன்னும் உயிரோடுதான் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சது. அம்மனைப் பத்தி அவுங்களுக்கு ஒருவேளை தெரிஞ்சிருந்தாலும் தெரிஞ்சிருக்கலாம்ன்னு சொல்லி உங்க போன் நெம்பர கொடுத்தாங்க.  ரெண்டு பேரும் வேலைக்கு மூணு நாளு லீவ் போட்டுட்டு வந்திருக்கோம். நாளைக்கு கோகாலியையும் குழந்தையையும் அழச்சிகிட்டு போயி காயம்மாவை பார்த்து பேசி ஒத்துக்க வைக்கணும்
ஹர்ஷ பேசி முடிக்கும் வரைக்கும் நாகேஷ் திண்ணையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சுற்றிலும் இருள் அடர்ந்திருந்தது.  வீசும் காற்றில் வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்கள் எழுப்பும் சத்தம். வீட்டுக்குள் எரிந்துகொண்டிருந்த டியூப் லைட்டின் வெளிச்சம் முற்றத்தில் அரைகுறையாக படர்ந்திருந்தது. கோகாலி பையனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். சமையலறையில் இருந்தவண்ணம் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நாகேஷின் அம்மா அப்போது வெளியே வந்தாள். “அது சரி, இப்படி சொல்றேன்னு தப்பா நெனைச்சிக்காதீங்க. வாசலை மிதிக்கக்கூடாதுன்னு சொன்னதக்கப்புறமா கூட, ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டுகிட்டு உங்க மனைவி இனிமேல அங்க போயி அவுங்க வீட்டு முன்னால நின்னு இந்தியில பேசிட்டா, வேலை நடந்திடுமா?” என்று கேட்டான் நாகேஷ். ”அது ஒரு பிரச்சினையே இல்லைஎன்பதுபோல அவனுடைய கேள்வியை அங்கேயே துடைத்தெறிந்துவிட்டு நாகேஷின் அம்மா பேசத் தொடங்கினார். “காயம்மா பிச்சியா இருக்கலாம். ஆனா கெட்ட பொம்பளை இல்லை. அவுங்க சின்ன பிள்ளையா இருந்தபோதே அவுங்க அப்பா செத்துட்டாரு. சின்ன வயசிலயே அவுங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும்  கல்யாணம் நடந்தது. உங்க தாத்தா இவுங்கள ஒதுக்கி வச்சிட்டு எதுக்காக இன்னொரு கல்யாணம்  செஞ்சிகிட்டாரோ, தெரியலை. புருஷன்காரன்  வீட்டிலேருந்து வெளியேத்திட்ட பிறகு காயம்மா கோபாடியில இருக்கற தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க.  என்னென்னமோ சட்டமெல்லாம் வந்து, இருந்த ஒன்னு ரெண்டு துண்டு நிலம் கூட கைய விட்டு போயிடுச்சி. அம்மாகாரியும் செத்துட்டாங்க. சாப்பாடு கிடைக்கிற இடத்துக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், காயம்மா ஒருநாளும் அங்க ஒரு பேச்சு, இங்க ஒரு பேச்சுன்னு புறம் பேசனது கிடையாது. சும்மா போய் நின்னு எங்கயும் சாப்ட்டுட்டு வந்தது கிடையாது. அரிசி புடைக்கிறது, வாசல் பெருக்கறது, வீடு கழுவறதுன்னு ஏதாச்சிம் வேலை செஞ்சிட்டுதான் வருவாங்க. அதுமட்டுமில்ல, ஒரு வீட்டு விஷயத்தை இன்னொரு வீட்டுல போயி சொல்லி பேசி சிரிச்சதில்லை. வேலை செய்யற சமயத்துல ஊரு விஷயங்களை ஒளிவுமறைவில்லாம பேசினாலும் கூட, அவுங்க இவுங்கள பத்தி என்ன சொன்னாங்கன்னு கோள் மூட்டி சண்டை மூட்டிவிட்டதில்லை. அதனால அவுங்ககிட்ட எல்லாருமே அடுத்தவங்கள பத்தி தனக்கு இருக்கக்கூடிய கோபதாபம், பொறாமை வயித்தெரிச்சல் எதுவா இருந்தாலும் எந்த பயமும் இல்லாம கொட்டுவாங்க. இந்த வட்டாரத்துல  ரெண்டுபேருக்கு நடுவுல நெருக்கமும் நம்பிக்கையும் எந்த அளவுக்கு இருக்குதுங்கற விஷயம் காயம்மா ஒருத்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும்….. அவுங்க ஒன்னும் கெட்ட பொம்பளை கிடையாது. ஆனா, பிச்சி. பிச்சின்னா முழுசா பைத்தியம்னு அர்த்தம் கிடையாது. தினமும் கோபாடி காந்தீஷ்வர கோயிலுக்கு பூ கட்டி கொடுப்பாங்க. விளக்குத்திரி உருட்டி கட்டுகட்டா கொடுப்பாங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நீங்க கொஞ்சம் கவனமா பேசணும் , அவ்வளவுதான்என்றார்.
மறுநாள் எல்லோருமே காயம்மாவின் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். நாகேஷின் அம்மா தன் புடவைகளிலே மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஒரு புடவையை கோகாலியிடம் கொடுத்து உடுத்திக்கொள்ளச் செய்தார். நாகேஷும் அவர்களோடு கிளம்பினான். பாப் கட் செய்த தலைமுடியுடன் கோகாலி புடவை உடுத்தியிருந்த கோலம் ஹர்ஷனுக்கு கிளர்ச்சியூட்டுவதுபோல இருந்தது. அதே சமயத்தில் நாகேஷுக்கு வேடிக்கையாக இருந்தது. வயல்வெளிகளின் ஓரமாகவே நடந்து சென்று, வைத்தியரின் வீட்டுக்குப் பின்னால் இருந்த பள்ளத்தைத் தாண்டிய பிறகு, அங்கிருந்து தொடங்கும் மண்சாலையில் நடந்தார்கள். அந்தச் சாலை கோபாடி கிராமத்தைப் பிளந்தபடி சென்று நேராக சமுத்திரத்தில் போய் முடிகிறது. பள்ளத்தைத் தாண்டிய பிறகு, ஒன்றிரண்டு பர்லாங் தூரம் நடந்து இடது பக்கமாக பிரிந்துசெல்லும் சந்துக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்து ஒரு சின்னப் பாதை. அதன் ஓரமாக இருக்கும் ஏரியைச் சுற்றிக்கொண்டு சென்றால் காயம்மாவின் வீடு வந்துவிடும். உள்ளே செல்லும் வழியில் காணப்பட்ட செடிகொடிகளையெல்லாம் உரசிக்கொண்டு எல்லோரும் காயம்மாவின் வீட்டை அடைந்தார்கள். நாகேஷிடம் வீடு வரைக்கும் வந்தால் போதும், வீட்டுக்குள் வரவேண்டாம்என்று சொல்லிவிட்டார்கள்.
வாசலைப் பெருக்கிக்கொண்டிருந்தார் காயம்மா.  ஹர்ஷனைப் பார்த்தபடியே துடைப்பத்தின் பிடியை தரையில் குத்தினார். அவனோடு கோகாலியும் சிறுவனொருவனும் இருப்பதைப் பார்த்து எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றார். ஹர்ஷனும் கோகாலியும் வீட்டு முன்கதவு வரைக்கும் அவரைப் பின்தொடர்ந்து வந்து, அதற்குப் பிறகு கதவுக்கு அருகிலேயே நின்றனர்.
பெரியம்மா, இவ என் மனைவி. இவன் என் பையன்என்று ஹர்ஷ அறிமுகப்படுத்தினான். காயம்மா பதில் எதுவும் பேசவில்லை. தலையை நிமிர்த்திப் பார்க்கவும் இல்லை. உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சுப்பொதியை எடுத்து தரையில் பரப்பிக்கொண்டார். “நான் சொல்றது உங்களுக்கெல்லாம் புரியலையா? ஒரு தரம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா?” என்று சட்டென வேகமாக கேட்டுவிட்டு, அதே வேகத்தில் அமைதியானார்.
கோகாலி தூக்கிவைத்திருந்த சிறுவனை ஹர்ஷ தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.  பெரியம்மா, இவனுக்கு நாலு வயசாவுது. விசித்திரமான தோல்வியாதி. தோல் உரிஞ்சிகிட்டே இருக்குது. ஒரு காயம் ஆறணும்ன்னா மாசக்கணக்குல ஆவும். காயத்தினுடைய எரிச்சல் தாங்காம ராத்திரியும் பகலும் அழுதுகிட்டே இருக்கிறான்என்றபடி ஹர்ஷ சிறுவனை காயம்மா பார்க்கும் வகையில் குனிந்து காட்டினான். ஒருமுறை குழந்தையை உற்றுப் பார்த்தபிறகு காயம்மா மறுபடியும் திரி உருட்டத் தொடங்கினார்.
நம்ம குடும்பத்துல இருந்தவங்க நம்பிக்கை வச்சிருந்த அம்மனை நாங்க மறந்துபோனதுதான் இதுக்கெல்லாம் காரணம். அந்த அம்மனுக்கு படையல் வச்சி, அபராதத்தொகையை காணிக்கையா செலுத்தி பிரார்த்தனை செஞ்சிட்டு வாங்கன்னு, பையனுடைய ஜாதகத்தைப் பார்த்தவங்க எல்லாருமே சொல்றாங்க.  நீலாவர, முந்தர்த்தி, கடீலு எல்லா இடங்களுக்கும் போய் வந்துட்டோம். எங்க போய் வந்தாலும் குணமான பாடில்லை. நம்முடைய குலதெய்வ அம்மன் யாரு? எங்க இருக்குது அந்த அம்மன் கோவில்? எல்லா விஷயங்களும் தெரிஞ்ச ஒரே ஆளு நீங்க மட்டும்தான். இந்தப் பையன் உங்க வம்சத்தின் அடையாளம் அல்லவா? அந்தக் காலத்துல வாழ்ந்தவங்க செஞ்ச தப்புக்கு எங்க மேல ஏன் கோபம்? தயவு செஞ்சி, இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்கஎன்று அழுது புலம்பினான் ஹர்ஷ.
கோகாலியும் இந்தியில் எதைஎதையோ சொல்லிக் கெஞ்சிப் புலம்பி வேண்டிக்கொண்டாள். அவளுடைய மொழி காயம்மாவுக்கு புரியவில்லை என்றபோதும், அவளுடைய ஆதங்கம் புரிந்தது. அடிவயிறு சுருக்கென்றது. அத்துடன் கோபமும் பொங்கியெழுந்தது. ஆயினும் அமைதியாக இருந்தார். கோகாலியின் கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது. எதுவும் புரியாத சிறுவனும் அழுதான். காயம்மா திரி சுற்றியபடியே இருந்தார். கண்களைத் துடைத்துக்கொண்ட ஹர்ஷ, கோகாலியை அமைதிப்படுத்தியபடி, “சரி, கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே சிறுவனைத் தூக்கிக்கொண்டான். கோகாலி மற்றொரு முறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். எந்த விஷயமும் காயம்மாவின் மனத்தைத் தொடவில்லை என்பதை உணர்ந்துகொண்ட இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
அவர்கள் பெரிய வாசலைத் தொடும் வேளையில்என்ன கிளம்பிட்டியா? கொஞ்சம் நில்லுஎன்ற காயம்மா அவர்களைத் தடுத்து நிறுத்தினார். பிறகு அங்கேயே அவர்களை உட்காரவைத்துக்கொண்டு சிறுவனை ஆழ்ந்து பார்த்தார்.
வழியில வைத்தியர் வீட்டுக்கு பக்கத்துல ஒரு பள்ளத்தை பார்த்தீங்க இல்லையா, அங்க இருந்த பலகையைத் தாண்டும்போது கால் தடுக்கி, கீழ இருந்த அழுக்குக் குளத்துக்குள்ள விழுந்து எனக்கிருந்த ஒரே பிள்ளை செத்துப் போயிட்டான். அப்ப எனக்கு முப்பது வயது. உங்க தாத்தாகிட்ட அவனுக்கு ஒரு நாராயண பலி செய்யுங்கன்னு கெஞ்சினேன். அவுங்க அம்மா அவரை செய்ய விடலை. அந்த அம்மா மேலே எனக்கு கோபம் இருக்குதுங்கறது உண்மைதான். அவரு மேலயும் கோபம் இருக்குது. ஆனால் பாவம், அவுங்க யார் மேலயும் தப்பில்லைன்னு இப்ப தோணுது. அந்த பத்மநாப புராணிகர் ஒரு சமயம் நம்ம வீட்டுக்கு ஒரு தரம் புரோகிதம் செய்யறதுக்காக வந்தபோது நம்ம வீட்டு சாமி மாடத்துல இருந்த நரசிம்மர் சாலிகிரமத்தையே திருடிட்டாரு. அப்போது வட்டாரம் முழுக்க இதே பேச்சாயிடுச்சி. ஆனாலும் புராணிகர் தம்முடைய திருட்டை ஒத்துக்கவே இல்லை. அது அவர் ஒருத்தருடைய பழக்கம் மட்டுமில்லை. நம்ம ஊரு புரோகிதருங்க எல்லோருக்குமே இது ஒரு பழக்கம். போகிற இடங்களில் அவுங்கவுங்க வீட்டுல இருக்கிற அபூர்வமான சாலிகிராமத்தை திருடிக்கொண்டு வந்துடுவாங்க. ஸ்ரீநிவாச வாத்தியார், சேஷபட்டர், இந்த புராணிகர் எல்லார் மேலயும் சாலிகிராம் திருடினவங்கன்னு குற்றச்சாட்டு இருந்தது. நம்ம வீட்டுல நரசிம்ம சாலிகிராம போனது போனதுதான். இவரு ஆளே மாறி போயிட்டாரு. ரொம்ப பிடிவாதம் பிடிச்சி ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு வந்தாரு. என்னை வெளியே தள்ளிட்டாரு. இருந்த ஒரே பிள்ளை செத்து போயிட்டான். அந்த பெண்டாட்டியுடைய அண்ணனொருத்தன் பெங்களூருல இருந்ததால, இவரும் ஊருல இருந்த சொத்துபத்துங்கள எல்லாம் வித்து எடுத்துட்டு என்னமோ வியாபாரம் செய்யப்போறேன்னு பெங்களூருக்கே போயிட்டாரு. செத்துட்டாருன்னு யாரோ ஒருத்தவங்க ஒருநாள் சொன்னாங்க. அன்னையிலிருந்து நெத்தியில குங்குமம் வச்சிக்கிறத நிறுத்திட்டேன். தாலியையும் மெட்டியையும் எடுத்து வச்சிட்டேன். வேற ஒன்னும் வித்தியாசம் கிடையாது. என்னோட சம்பந்தப்பட்டவங்க யாருமே உயிரோடு இல்லை. இப்ப நீ வந்து வம்சத்தை பத்தி பேசறஎன்று சொல்லிவிட்டு சிரித்தார். காயம்மா இந்த அளவுக்கு தெளிவோடு பேசுவதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம் உண்டானது.
காயம்மா அதே தெளிவோடு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.          இருக்கட்டும் விடு. எனக்கு இப்ப தொண்ணூறாயிடுச்சி. பீஷ்மர்னு ஒருத்தர் எண்ணூறு வருஷம் உயிரோட இருந்தாராம். நானும் இந்த வட்டாரத்துல இருக்கறவங்ககிட்ட வேலை செஞ்சி, இவ்வளவு காலத்தை ஓட்டிட்டேன். உன் மேல எனக்கு ஏன் கோபம் இருக்கணும்? அந்த புள்ளைக்காக சொல்றேன். ஆமாம், நம்ம குடும்பத்துல இருந்தவங்க நம்பிக்கை வச்சி பூசை செஞ்சி வந்த ஒரு அம்மன் உண்டு. என்னை அந்த வீட்டிலேருந்து வெளியே அனுப்பிட்ட பிறகு அந்த அம்மனுக்கு சரியான முறையில பூசை நடந்ததோ இல்லையோ தெரியாது.  பெங்களூருக்கு போய் சேந்த பிறகு, வீட்டுல இருந்தவங்க எல்லாருமே அந்த அம்மன மறந்தே போயிட்டாங்க. பிள்ளைங்களுக்கு அம்மன் ஞாபகமே இல்லையோ என்னமோ. சொத்தையெல்லாம் விக்கலாம், ஆனா நம்பிக்கை வச்சிருந்த தெய்வத்தை விக்க முடியுமா? சொல்றேன். ஆனால், அதுக்கு முன்னால எனக்கு ஒரு வேலை நடக்கணும். என் புள்ளை அந்த பள்ளத்தைத் தாண்டும்போது முழுகி செத்துட்டான்னு சொன்னேன் இல்லையா? பிரம்மச்சாரி சாவு. அவனுக்கு ஒரு நாராயண பலி பூசை செய்யணும். நம்ம ஊரு புரோகிதர்ங்க யாராவது ஒருத்தவங்கள புடிச்சி, அவனுக்காக ஒரு நாராயண பலி பூசை செஞ்சி மோட்சபலன் கிடைக்கிறமாதிரி செய்யணும். இதை செஞ்சா அபராத காணிக்கை செலுத்தறதுக்கு நானும் உன்னோடு கோயிலுக்கு வரேன்என்று ஹர்ஷனிடம் ஒரு நிபந்தனை விதித்தார். ஹர்ஷ அதற்கு ஒப்புக்கொண்டான். எல்லோரும் காயம்மாவை வணங்கிவிட்டு புறப்பட்டார்கள்.
காயம்மா சம்மதித்துவிட்டதால் கோகாலி அமைதியடைந்தாள். ஹர்ஷனுக்கும் மனபாரம் குறைந்ததுபோல இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு வீட்டை அடையும் வரைக்கும் காயம்மாவின் சொற்கள் வழிமுழுதும் ஹர்ஷனை துன்பத்தில் ஆழ்த்துவது போல இருந்தன. எட்டு பேர்களின் ஆயுளை தனி ஒரு ஆளாக வாழ்ந்த பீஷ்மரும், அறுபது ஆண்டுகளை ஒரே விதமாக வாழ்ந்த காயம்மாவும் ஒரே நேரத்தில் கண்முன்னால் நின்றார்கள். பீஷ்மரின் ஆயுள் எண்ணூறு ஆண்டுகள். ஒரே பிறவியில் எட்டு பேர்களின் ஆயுள் அனுபவங்களை அனுபவித்த பீஷ்மர். அவரைப் பொறுத்த வரையில்  மொத்த நாடே அவருடைய குடும்பமாக இருந்தது. வெற்றிகளின் கொண்டாட்டத்துக்கும் சோர்ந்து நிற்கும்போது துணை நிற்கவும், உறவினர்களின் ஜனன மரணங்களுக்கும் போர்களுக்கும் சபதங்களுக்கும், வாழ்நாள் முழுக்க நடைபெற்ற எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சி இருந்தது. சாட்சியாக நிற்கவும் அதனுடைய கதையை எடுத்து சொல்லவும் நாடு முழுக்க அவருக்குச் சொந்தமாக இருந்தது. அதைவிட முக்கியமாக அவருக்கு நாட்டைப் பாதுகாப்பதே குறிக்கோளாக இருந்தது. என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் அடுத்த பிறவிக்கும் போதும்போதும் என்கிற அளவுக்கு குடும்பக்கடன்கள், தொழில் கவலைகள் என்று ஏகப்பட்ட காரணங்கள் இருக்குது. ஆனால் காயம்மாவுக்கு? நான் வந்து கேட்ட பிறகே தன் மகனுக்கு நாராயண பலி பூசை செய்யவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததே தவிர, அது ஒரு முக்கிய காரணமாமாக அவருடைய மனசில் இத்தனை ஆண்டுகளாக அடைந்துகிடக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், இத்தனை ஆண்டுகளில் எப்படியாவது பாடுபட்டு மகனுக்கான பூசையை செய்து முடித்திருப்பார். காலையில் எங்கேயாவது வீடு வாசல் பெருக்குவது, மதிய வேளையில் யாரோ ஒருவருடைய  வீட்டில் சாப்பிடுவது, வேலை செய்வது, ராத்திரிக்கு சாப்பிட அந்த வீட்டிலிருந்தே ஏதாவது கொண்டு வந்துவிடுவது, சிம்னி விளக்கு வெளிச்சத்துல விளக்குத்திரி உருட்டுவது, பூ கட்டுவது…… இந்த ஒரு நாளே காயம்மாவின் அறுபது ஆண்டு காலம் முழுக்க விரிந்திருந்தது. ஒரு நாளைப்போலவே இன்னொரு நாள். இருபது, நாற்பது, அறுபது எவ்வளவானாலும், இருபதிலிருந்து நாற்பது வரை கடப்பபதுபோலவே நாற்பதிலிருந்து அறுபதும் கடந்துபோகிறது. முப்பதுக்கும்  தொண்ணூறுக்கும் இடையில் உள்ள அறுபது ஆண்டுகள் முழுக்க ஒரே வழிமுறை. மாற்றமே இல்லை. எந்த அடையாளமும் இல்லை. இடையில் எந்தக் கடலும் இல்லை. அலைகளின் ஆர்ப்பாட்டமும் இல்லை. அவை எல்லாவற்றையும் விட குறிக்கோளே இல்லாத ஒரு காலகட்டத்தின் அளவு எவ்வளவு நீண்டிருந்தால்தான் என்ன? குறிக்கோளே இல்லாமல் வாழ்வதுதான் எப்படி? இப்படிப்பட்ட ஆயுட்காலத்தை மதிப்பிடுவது எப்படி? ஆயுட்காலத்துக்கு எது அர்த்தத்தைக் கொடுக்கிறது? ஆயுள் என்றால் என்ன? வாழும் காலத்தின் அளவு மட்டுமா? ஆயுளின் பொருளைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் தவித்தான் ஹர்ஷ.
**
வலது புறத்தில் கடலையொட்டி வெகுதொலைவு வரை குடியிருப்புபகுதிகள் இருந்தன.  அங்கங்கே வயல்வெளிகள். மணற்குன்றுகள். இடதுபுறத்தில் பீஜாடி, கோபாடி, கொரோடி, கொமெ என சில குடியிருப்புகள். நடுவில் அகலம் குறைந்து நீண்டு செல்லும் தார்ச்சாலை. கொரோடியில் ஹலியம்மன் கோவில் நிறுத்தத்தில் ஹர்ஷ, நாகேஷ், காயம்மா எல்லோரும்கஜானனபஸ்ஸிலிருந்து  இறங்கினார்கள். சிவப்புச் சேலை உடுத்தியிருந்த கோகாலி தன் மகனுடன் மிகவும் கவனமுடன் இறங்கினாள். ஹர்ஷ வெள்ளை வேட்டியுடுத்தி, பழுப்பு நிற டீ ஷர்ட் அணிந்திருந்தான்.
காயம்மா சொன்னதைப்போலவே நாகேஷிடம் விஷத்தைத் தெரியப்படுத்தி நாராயண பலி பூசைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி சொன்னான் ஹர்ஷ. முதல்நாளே எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. ”நாராயண பலி போன்ற பூசைகளையெல்லாம் கோகர்ணத்துக்குப் போய்தான்  செய்யவேண்டும். அதே சமயத்தில், கும்பாஸியில் இருக்கும் ஹரிஹர சன்னிதானமும் அதற்குத் தகுந்த இடம்தான். இங்கேயும் பூசை செய்யலாம்.” என்றார்கள். சாலிகிராமத்தைத் திருடியவர் என்று சொல்லப்பட்ட அதே பத்மநாப புராணிகருடைய மகன் கோபாலகிருஷ்ண புராணிகரே முன்னின்று பூசையை செய்து தருவதாகச் சொல்லியிருந்தார். சூரிய புஷ்கர்ணியாலும் சந்திர புஷ்கர்ணியாலும் சூழப்பட்ட கும்பாஸி ஹரி-ஹர ஆலயத்துக்கு எதிரில் இருந்த யாகசாலையில் காயம்மாவும் ஹர்ஷனும் நாகேஷும் பலி பூசை நடந்துமுடியும் வரைக்கும் அமர்ந்திருந்தார்கள். காயம்மாவைப் பொறுத்தவரை, அவருடைய முப்பது வயது முதல் தொண்ணூறு வயது வரைக்குமான வாழ்க்கையை வாழ்ந்ததன் முக்கிய அடையாளமாக அந்தச் சடங்கு அமைந்துவிட்டது. ஒருவேளை, இந்த ஒரு அடையாளத்தை நினைவில் வைத்திருப்பதற்காகவே தான் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தோமோ என்று அவருக்குத் தோன்றியது. இத்தனை ஆண்டுகளாக இதைப்பற்றி கொஞ்சம் கூட யோசனையே  இல்லாமல் இருந்த காயம்மா, தன்னைக் கட்டாயப்படுத்தியதன் நோக்கம் வெறும் நாராயண பலி பூசை மட்டுமாகவே இருக்க சாத்தியமில்லை என்று நினைத்தான் ஹர்ஷ. உன் தாத்தா அன்று செய்யவில்லை, இப்போது நீ செய் என்னும் பிடிவாதமாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. எப்படியோ, ஒருவழியாக அம்மனைப்பற்றிய விவரங்களைக் கூறி தம்மோடு வருவதற்கு ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டான்.
பஸ் புறப்படும் சமயத்தில் அதற்குப் பின்னால் ஒரு குடியிருப்பு தென்பட்டது. பக்கத்தில் மணற்குன்றுகளால் சூழப்பட்ட வெட்டவெளி. அதற்கு நடுவில் சட்டென அடையாளம் காணமுடியாத சின்னதொரு சந்து. ‘ஹலியம்மன் கோவிலுக்கு வழிஎன மங்கலான எழுத்துகளால் எழுதப்பட்டிருந்த கல், அந்தச் சந்தையொட்டி வளர்ந்திருக்கும் மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளால் மூடப்பட்டு காணப்பட்டது. எல்லோரும் ஒருவர் பின்னால் ஒருவரென அந்த சந்துக்குள் நடந்து சென்று மற்றொரு குடியிருப்பை அடைந்தார்கள். அந்தக் குடியிருப்பின் எல்லையோரமாக ஒரு மூலையில் நாகப்பிரதிஷ்டைக் கற்களைவிட சற்றே உயரமான ஒரு கோவில் காணப்பட்டது. பைக்கில் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்திருந்த கோபாலகிருஷ்ண புராணிகர் மடிவேட்டியை அணிந்துகொண்டு நின்றிருந்தார். கோவிலுக்குள் கல்பீடத்தில் நின்றிருந்த மூன்றடி உயரமும் ஓரடி பருமனும் உள்ள ஒரு தூண் இருந்தது. அதனை வணங்கும் வகையில் பூ சாத்தினார்கள். ”ஹலியம்மன்னு பேச்சுக்கு சொல்றதுதானே தவிர, அது பெண்தெய்வமில்லை, ஆண் தெய்வம்என்று சொன்னார் காயம்மா.
எல்லோரும் தரையில் விழுந்து வணங்கினார்கள். பூசைகளையெல்லாம் முடித்த புராணிகர் தேங்காய் உடைத்து நைவேத்தியம் வைத்து படைத்து ஆரத்தி காட்டினார்கள். பூவையும் குங்குமம் வைத்த தேங்காயையும் பிரசாதமாக ஹர்ஷனிடம் கொடுத்தார். நாகேஷின் ஆலோசனைப்படி இருநூற்றி ஒன்று ரூபாயை புராணிகருக்கு பூசை தட்சணையாக கொடுத்த ஹர்ஷ, அபராதக் காணிக்கை என்கிற வகையில் ஐநூற்றி ஒன்று ரூபாயை கோவிலுக்கு  முன்னால் இருந்த உண்டியலில் செலுத்தினான். ஆண்டுக்கொரு முறை வந்து பூசை செய்துகொண்டு செல்வதாக ஹர்ஷனும் கோகாலியும் பிரார்த்தனை செய்துகொண்டார்கள். எல்லோரும் மீண்டுமொரு முறை விழுந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டார்கள்.
அங்கிருந்து திரும்பும்போது, குடியிருப்புக்கு நடுவிலேயே ஹர்ஷனை  அழைத்து நிறுத்திவைத்துக்கொண்டார் காயம்மா. மற்றவர்கள் அனைவரும் தொடர்ந்து நடந்தார்கள். கோபாலகிருஷ்ண புராணிகர் பைக்கில் புறப்பட்டுவிட்டார். ஹர்ஷனின் கண்களை எதையோ ஆழ்ந்து சோதிப்பதுபோல உற்று நோக்கினார் காயம்மா. முந்தானையின் மறைவில் மூடிவைத்திருந்த கையை அவன் முன்னால் நீட்டினார். ”இந்தா….. இத்தன வருஷமா காத்திட்டிருந்தேன். சரியான நேரம் அமையலை. முந்தாநாள் பத்மநாப புராணிகர் பேரனுடைய உபநயனத்துக்கு போயிருந்த நேரத்துல, யாரும் இல்லாத நேரமா பாத்து, இந்தா……..” என்று மூடியிருந்த கையைப் பிரித்து நீட்டினார். ஹர்ஷனுக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. காயம்மா இதற்கு முன்பு சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்ததும் திகைத்துவிட்டான். காயம்மாவின் உள்ளங்கையில் கரிய கல்லாலான சாலிகிராமம் மின்னிக்கொண்டிருந்தது.

( கன்னட இளம் எழுத்தாளர் வரிசையில் முக்கியமானவர் விக்ரம் ஹத்வார. உடுப்பிக்கு அருகில் உள்ள கோட்டேஷ்வர என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிகிறார். கவிதையும் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இரண்டு கவிதைத்தொகுதிகளும் ஒரு சிறுகதைத்தொகுதியும் இதுவரை நூலாக்கம் பெற்றுள்ளன. ’ஜீரோவும் ஒன்றும்என்னும் சிறுகதைத்தொகுதிக்காக 2015 ஆம் ஆண்டுக்கானயுவ புரஸ்காரவிருதைப் பெற்றவர்.)   

(நற்றிணை - மும்மாத இதழில் சமீபட் வெளிவந்த சிறுகதை)