Home

Wednesday 22 August 2018

பாய்ந்து பரவும் நதி - முன்னுரை



எல்லோ இதே நம் மனெ, இல்லி பந்தே சும்மனேஎன்பது பசவண்ணர் எழுதிய ஒரு வரி. ஓசை நயத்துடன் கூடிய அந்த வரியை மனத்துக்குள் பலமுறை திரும்பத்திரும்ப அசை போட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது ஒவ்வொரு பொருளைத் தருகிறது. அதன் காந்தத் தன்மைக்கு ஈடு இணையே இல்லை. “எங்கோ இருக்கிறது என் வீடு, இங்கே சும்மா வந்தேன்என்பதுதான் இதன் நேரிடையான தமிழ் மொழிபெயர்ப்பு. வாழ்க்கையை மிக எளிதான செயலாக வகைப்படுத்துகிறார் பசவண்ணர். பொழுதுபோக்குக்காக ஆற்றங்கரையிலோ அல்லது கடற்கரையிலோ அல்லது ஏதாவது ஒரு தென்னந்தோப்பிலேயே வந்து நிற்கிற மாதிரி வாழ்க்கையைப் பார்க்கத் தூண்டுகிறார்.



வேடிக்கை பார்ப்பதற்காக நிற்கும்போது நம் பார்வையில் பலவிதமான விஷயங்கள் தென்படக்கூடும். புள்ளிமான்கள்போலத் துள்ளித்துள்ளி ஓடுகிற சின்னச்சின்ன பிள்ளைகளைப் பார்க்கலாம். பெண்களைப் பார்க்கலாம். ஆனந்தமாக கைகளைக் கோர்த்தபடி நடந்து செல்கிற காதலர்களைப் பார்க்கலாம். காசுக்காக நடைபெறுகிற குடைராட்டினத்தையோ அல்லது கழைக்கூத்தாட்ட்த்தையோ பார்க்கலாம். எதிர்பாராமல் நிகழ்கிற அடிதடிகளைப் பார்க்கலாம். கொலைகளையும் பார்க்கலாம். அவமானங்கள், தந்திரங்கள், வஞ்சப்புன்னகைகள், கைகுலுக்கல்கள், வசைகள், சிரிப்பு, அழுகை என பார்ப்பதற்கு இன்னும் ஏராளமா உண்டு. அவற்றோடு ஒட்டி உறவாடாமல் இருக்க முடிந்ததில்லை. அந்த வகையில்தான் ஒவ்வொரு அனுபவமும் நம்மை வந்தடைகிறது. ஆனால் வாழ்க்கை என்பது இத்தோடு தேங்கிவிடுவதில்லை. இங்கே கிடைத்திருப்பது ஒரு துளி. அவ்வளவுதான். நதி வேறெங்கோ பரவிப் பாய்ந்தபடி இருக்கிறது. பசவண்ணரின் ஒற்றைவரியின் தொடர்ச்சியாக இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

வேடிக்கை பார்க்கவந்த இடத்தில் கிடைத்த அனுபவம் வாழ்வின் அனுபவமாகிவிடாது என்பதுதான் பசவண்ணர் உணர்த்த நினைக்கிற உண்மையாக இருக்கக்கூடும். அந்த மாபெரும் கடலின் தரிசனத்துக்காக மானுடர்கள் மாபெரும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது அவருடைய ஆவலாக இருக்கலாம்.

தொடக்க காலத்தில் இந்த வரியை எனக்காகவே எழுதப்பட்ட ஒரு சிறப்புவரியாக நினைத்துக்கொள்வேன். வேலையின் பொருட்டு என் குடும்பத்தையும் உறவுகளையும் விட்டு தொலைவான ஓரிடத்தில் வந்து தங்க நேர்ந்த என் மன ஓட்டத்துக்கு இசைவான ஒன்றாகவே அந்த  வரிகளைப் புரிந்துகொண்டேன். என் வீடு எங்கேயோ இருக்கிறது. நான் இங்கே வேலை செய்து பிழைப்பதற்காகவே வந்திருக்கிறேன். என் வேலை முடிந்ததும் நான் மீண்டும் சென்றுவிடுவேன். என்று அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். வாய்விட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு துயரங்கள் பெருகும் தருணங்களில் இந்த வாசகம் எனக்குப் பெரிதும் ஆறுதலாக இருக்கும். மெள்ள மெள்ள காலம் தனக்கே உரிய மென்மையோடும் நெருக்கத்தோடும் பண்படுத்தியது. இப்போது திரும்பிச் செல்லும் எண்ணமெல்லாம் கரைந்துவிட்டது. இந்த வாழ்க்கையை மனம் ஏதோ ஒரு கணத்தில் நெருக்கமாகவே உணரத் தொடங்கிவிட்ட்து. தமிழ் மண்ணும் கன்னட மண்ணும் என் இயக்கத்துக்கான இரண்டு புள்ளிகளாக மாறின.

கர்நாடக மண்ணில் என் வாழ்க்கையைத் தொடங்கி முப்பத்தைந்து ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் பலதரப்பட்டவை. இவை ஒரு பொதுப்பார்வையில் வாழ்வின் அனுபவமாகிவிடாது என்றபோதும் இந்த அனுபவங்களின் சாரம் வாழ்க்கையின் உண்மையை ஏதோ ஒரு கோணத்தில் முன் வைப்பதாக இருக்கக்கூடும்.

இவற்றை எழுதிப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் தற்செயலாகத்தான் ஏற்பட்டது. இந்தத் தொகுப்புக்காக இக்கட்டுரைகளை மறுபடியும் ஒருமுறை படிக்கிறபோது இவற்றில் இடம்பெற்றிருக்கும் மாந்தர்களின் உருவங்கள் மீண்டும் என் மனத்தில் அசைகின்றன. இவர்களையெல்லாம் சந்திக்கும் நற்பேற்றை எனக்கு வழங்கியிருக்கும் வாழ்க்கைக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

புதிய பார்வை இதழில் 2005, 2006 காலகட்டத்தில் இக்கட்டுரைகளைத் தொடராக எழுதும் எண்ணத்தை வெளிப்படுத்தியதும் அன்போடு இசைவளித்து ஒவ்வொரு கட்டுரையும் பிரசுரமான கையோடு கைபேசியில் அழைத்து ஊக்கமூட்டிய நண்பர் மணாவின் அன்பு அளப்பரியது. அவருக்கு என் நன்றிகள். என்னுடைய எ,ல்லா ஆக்கங்களுக்கும் எண்ணங்களுக்கும் உந்துசக்தியாக இருப்பவர் என் அன்பு மனைவி அமுதா. அவரையும் இந்நூலைத் தொகுக்கும் நேரத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுப்பைப் பத்தாண்டுகளுக்கு முன்பு எனி இந்தியன் பதிப்பகம் முதன்முதலாக வெளியிட்டது. என் நண்பர் கோ.ராஜாராம் அந்தத் தொகுப்புக்கு நல்லதொரு முன்னுரை எழுதியிருந்தார். அவரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுப்பை இப்போது சிறப்பான முறையில் வெளியிடும் சந்தியா பதிப்பகம் நடராஜனுக்கு என் அன்பும் நன்றியும்.

இக்கட்டுரைகள் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு வந்து இதழை வாங்கிச் சென்று படித்து மகிழ்ந்தவர் என் அருமை நண்பர் ரூபலிங்கம். இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூருக்கு வந்து இறங்கியதும் எனக்குக் கிடைத்த முதல் நண்பர் அவர். எங்கள் தெருவிலேயே  நாலைந்து வீடுகள் தள்ளி வேறொரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் அவர். புத்தகப்பரிமாற்றங்கள் வழியாகவே எங்கள் நட்பு வளர்ந்தது. ஒவ்வொரு கட்டுரையும் தன் பழைய நினைவுகளைக் கிளறிவிடுவதாக அவர் சொல்வார். தேநீர் அருந்தியபடி அதைச் சொல்லிப் பகிர்ந்துகொள்வார். துரதிருஷ்டவசமாக இக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற்ற தருணத்தில் அவர் உயிருடன் இல்லை. முதல்நாள் சாயங்காலம் ஏறத்தாழ ஒருமணிநேரம் அவருடைய வீட்டில் அவருடன் பேசியிருந்துவிட்டு வந்தேன். அடுத்தநாள் மாலை அவர் மறைவு நிகழ்ந்துவிட்டது. அவர் மறைவு என் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு. அவர் விரும்பிப் படித்த இக்கட்டுரைகளின் தொகுதியை அவருடைய நினைவுகளுக்குச் சமர்ப்பணம், செய்வதில் என் மனம் ஆறுதலடைகிறது.