Home

Sunday 2 September 2018

கதவு திறந்தே இருக்கிறது – அழிவற்ற செல்வம்


இலக்கியம் வழியாக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்துபோகும் மேடுபள்ளங்களையும் உணர்வுகளின் உச்சத்தருணங்களையும் குணம் மாறும் விசித்திரங்களையும் மானுடத்தை அலைக்கழிக்கும் வஞ்ச உணர்வையும் அறிந்துகொள்வது என்பது முக்கியமான வாசிப்பனுபவம். உலக மொழிகள் அனைத்திலும் முதன்மைக்கட்ட படைப்பாளிகள் வாழ்க்கையின் சித்திரங்களை மிகவும் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களைத் தொகுத்து ஒரு பட்டியலை எழுத முனைந்தால், அதில் பால்சாக், மாப்பசான் இருவருடைய பெயர்களும் முதலிடத்தில் வைக்கத்தக்கவை.

பிரெஞ்சு மொழியில் பத்தொன்பதான் நூற்றாண்டில் எழுதிய பால்சாக், மாப்பசான் படைப்புகளுக்கு உலகம் முழுதும் வாசகர்கள் இருந்தார்கள்.  இவர்களுடைய எழுத்துப்போக்குகள் அக்காலத்தில் மிகவும் விரிவான அளவில் உலக இலக்கியத்தளத்தில் செல்வாக்கு செலுத்தின. ஐரோப்பிய இலக்கிய வரலாற்றில் எதார்த்தப்போக்கை எழுதி எழுதி நிலைநாட்டியவர்கள் இவர்கள். எமிலி ஜோலா, சார்லஸ் டிக்கன்சன், குஸ்தாவ் பிளாபர்ட் போன்ற எழுத்தாளர்களின் அணி உருவாக இவர்களுடைய எழுத்துகளே தடமமைத்துக்கொடுத்தன. பல மொழிகளில் இவர்களுடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன. இளம் எழுத்தாளனாக இருந்த தஸ்தாவெஸ்கி பால்சாக்கின் நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார் என்று சொல்வதுண்டு. தமிழின் முதன்மைப்படைப்பாளியான புதுமைப்பித்தன் பால்சாக், மாப்பசான் இருவருடைய கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
வாடிவாசல்நாவலை எழுதியவரும்எழுத்துஇதழைத் தொடர்ந்து நடத்தியதன் வழியாக தமிழில் நவீனத்துவத்தை வேரூன்றச் செய்தவருமான சி.சு.செல்லப்பாயூஜினிஎன்னும் பிரெஞ்சு நாவலை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் அந்நாவல் அவர் உயிருடன் வாழ்ந்திருந்த காலத்தில் அது புத்தகமாக வெளியாகவில்லை. அவர் மறைந்த பிறகே தமிழினி பதிப்பகம் வழியாக 2001 இல் வெளிவந்தது.
ஒருவர் மனத்தில் ஆசை குடியேறுவதும் பிறகு அந்த ஆசை மெல்ல மெல்ல வஞ்சமாக மாறுவதும் அதையடுத்து குற்ற உணர்வாகப் பொங்கி அகமெரிய வாழ்ந்து மறைவதும் உலக இயற்கையாகிவிட்டது. வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் ஒவ்வொன்றையும் அழகிய ஆபரணமாகக் கருதி ஆசையோடு எடுத்து அணிகிறோம். மற்றோர் தருணத்தில் அவையே நமக்குத் தளையாகிவிடுகின்றன. எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் அவற்றை எடுத்து வீசுவதற்கே செலவு செய்ய நேர்ந்துவிடுகிறது.
சோமூர் என்னும் கிராமத்தில் வாழும் வியாபாரி கிராந்தே. திராட்சை விவசாயத்தில் கொழுத்த லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பவர். விவசாயத்தைத் தவிர அவர் மரபீப்பாய்களைச் செய்து விற்பதையும் ஒரு தொழிலாகச் செய்துவருகிறார். அந்த வட்டாரத்திலேயே மிக அதிகமாகச் சம்பாதிப்பவர் அவர். ஆனால் அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார். எப்போதும் மிகச் சாதாரணமான ஆடைகளையே அணிவார். அவர் வீடு இருக்கக்கூடிய இடத்தில் ஒரு பெரிய அரண்மனையையே கட்டிவிடமுடியும். ஆனால் அவர் மிகவும் எளிய முறையில் கட்டப்பட்ட வீட்டிலேயே வசித்துவந்தார். அவர் உடுக்கும் உடைகள் கூட உயர்ந்த தரத்தில் உள்ளவை அல்ல.
அவரிடம் செல்வம் சேர்ந்ததே ஒரு தற்செயல். சேரத் தொடங்கிய செல்வத்தை அவர் கைகள் வேகமாகக் கவ்விக்கொண்டன. தொடக்கத்தில் பீப்பாய் செய்வது மட்டுமே அவர் தொழிலாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியின் பெற்றோர் எதிர்பாராமல் மறைந்துவிட, அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அவருக்கு ஒரே நாளில்  சொந்தமாகிவிட்டன. அந்நிலங்கள் திராட்சை விளையும் பூமி. மிகக்குறுகிய காலத்திலேயே திராட்சை விவசாயத்தைப் பற்றிய விஷங்களைத் தெரிந்துகொண்டார். செல்வத்தைச் சேர்க்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொண்ட பின்னர், அவர் மனம் மேலும் மேலும் செல்வம் என அலையத் தொடங்கிவிட்டது. செல்வம் சேரச் சேர அவர் கடுமையான சிக்கனவாதியாக மாறிக்கொண்டிருந்தார்.
தங்கத்தைச் சேகரிப்பதில் பைத்தியக்காரத்தனமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார் அவர். தான் சம்பாதிக்கும் நாணயங்களை முதலில் அவர் நோட்டுகளாகவும் பிறகு தங்கமாகவும் மாற்றி தன்னுடைய ரகசியச் சேமிப்புக்கிடங்கில் அடுக்கிவைத்தார். நிலவறைகளின் கதவுகளை அடைத்துக்கொண்டு தன்னிடம் உள்ள பணத்தையும் தங்கக்கட்டிகளையும் எண்ணிப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். செல்வத்தை தங்கமாக மாற்றும் வேலையில் அக்கிராமத்தில் அவருக்கு துணையாக இருந்தவர் க்ரசேன். இன்னொரு முக்கிய நண்பர் அவருடைய வழக்கறிஞரான குருசோ.
கிராந்தேவுடன் அவர் மனைவியும் மகள் யூஜினியும் நானோ என்னும் ஒரு வயதான வேலைக்காரியும் வசித்து வந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட ஆசைகளைப்பற்றியோ தேவைகளைப்பற்றியோ கிராந்தே ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. வீட்டுச் செலவுக்கான பணத்தைக்கூட எண்ணியெண்ணிக் கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கிராந்தேயுடன் பழகுவதற்கும் அவருக்கு உதவி செய்வதற்கும் அவருடைய நண்பர்களுக்கு சில உள்நோக்கங்கள் உண்டு. இருவருக்கும்  கிராந்தேவின் செல்வத்தின் மீது ஒரு கண் இருந்தது. அந்தச் செல்வத்தை அடைவதற்குக் குறுக்குவழியாக யூஜினியின் மனத்தில் இடம்பிடிப்பதற்காக படாதபாடு பட்டனர். யூஜினியை மணந்துகொண்டால், கிராந்தேவின் மறைவுக்குப் பிறகு அனைத்துச் சொத்துகளையும் சொந்தமாக்கி மகிழலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஒருபக்கம் க்ரசேன் தன் மகன் அடால்ஃபை எப்போதும் தன்னோடு அழைத்துச் சென்று யூஜினியின் அன்பைப் பெறுவதற்கு முயற்சி செய்தபடி இருந்தார். மறுபக்கம் குருசோ தன் நெருங்கிய உறவினனான பான்பானை களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தார். ஓர் எல்லை வரைக்கும் தன் குடும்பத்துக்குள் இந்த விளையாட்டை அனுமதிக்கிறவராகவே இருந்தார் கிராந்தே. ஒவ்வொரு முறையும் எவ்விதமான வாக்குறுதியையும் அவர்களுக்கு அளித்துவிடாதபடி உரையாடலை திசைதிருப்பிக் கொண்டுபோவதில் வல்லவராகவும் இருந்தார். அதே சமயத்தில் தங்கம் சேர்க்கும் தன் விழைவுக்கு அவர்களுடைய உதவிகளைக் கேட்டுப் பெற அவர் ஒருபோதும் தயங்கியதே இல்லை.
இச்சூழலில் யூஜினியின் பிறந்தநாள் வந்தது. அன்றுகூட கருமியான கிராந்தே விருந்துக்குத் தேவையான பணத்தையும் பொருட்களையும் எண்ணியெண்ணிக் கொடுக்கிறார். நானோவின் முயற்சியால் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது. எதிர்பாராத விதமாக அக்கணத்தில் பாரிஸ் நகரத்திலிருந்து சார்லஸ் என்னும் இளைஞன் அங்கு வந்து சேர்கிறான். கிராந்தெயின் தம்பி மகன் அவன். கடந்த பல ஆண்டுகளாக தொடர்பே இல்லாத குடும்பத்திலிருந்து அவன் திடுதிப்பென வந்து நின்றதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் கிராந்தெ. விருந்து நேரம் என்பதால் அவனும் உற்சாகமாக அதில் பங்குகொள்கிறான். பார்த்த கணத்திலேயே அவன் மீது மையல்கொள்கிறாள் யூஜினி.
சார்லஸ் முழுக்கமுழுக்க பாரிஸ் நாகரிகத்தில் திளைத்து வளர்ந்தவன். எவ்விதமான மதிப்பீடுகளுக்கும் அவன் வாழ்வில் பொருளில்லை. தன் பெரியப்பா வாழும் கிராமத்தைப்பற்றியோ, அவர் வசிக்கும் விதம் பற்றியோ எவ்விதமான உயர்ந்த எண்ணமும் அவனிடம் இல்லை. மாறாக ஒருவிதமான கிண்டலுணர்ச்சியே அவனிடம் மேலோங்கி நிற்கிறது.
யூஜினியும் நானோவும் அவனை மாறிமாறி உபசரிக்கிறார்கள். தன் வீட்டில் இருப்பதில் மிகச்சிறந்தவற்றையே அவனுக்கு அளித்து மகிழ்கிறார்கள். காரணமே இல்லாமல் சார்லஸ் முன் சென்று பேசுவதில் யூஜினி மகிழ்ச்சிகொள்கிறாள்.
அப்போது கிராந்தேவுக்கு ஒரு கடிதம் வருகிறது. சார்லஸின் தந்தையும் கிராந்தேயின் தம்பியுமான கிலாம் எழுதிய கடிதம். தான் செய்துவந்த வியாபாரத்தில் அவன் சரிந்து வீழ்ந்துவிட்டதாகவும் திவாலானவன் என வங்கிகளால் அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கிறது அக்கடிதம். துன்பம் தெரியாமல் வளர்ந்துவிட்ட தன் மகனைக் கவனித்துக்கொள்ளும்படியும் அவன் குறிப்பிட்டிருந்தான். முதலில் அச்செய்தியை சார்லஸிடமிருந்து மறைத்துவைக்கவே கிராந்தே நினைக்கிறான். ஆனால் அடுத்து சில நாட்களுக்குள்ளேயே கிலாமின் தற்கொலைச்செய்தி செய்தித்தாளில் பிரசுரமாகிவிடுகிறது. வேறு வழியின்றி அவர் அச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறார்.
கையில் பணமில்லாத சார்லஸை வீட்டுக்குள் வைத்திருப்பது பெருஞ்சுமை என உணர்ந்த கிராந்தே மேற்கிந்தியத்தீவுகளை நாடிச் சென்று பிழைக்கும் வழியைக் கண்டறியுமாறு அறிவுரை சொல்கிறார். அங்கு செல்வதற்கான கப்பல் செலவை தான் அளிப்பதாகவும் சொல்கிறார். முகம் தெரியாத இடத்தில் எவ்விதமான சங்கடமும் இல்லாமல் உழைத்து முன்னேறமுடியும் என்றும் சொல்கிறார்.
எதிர்பாராமல் அரும்பி மணம் வீசத்தொடங்கிய தன் காதல் இவ்வளவு விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என நினைத்திராத யூஜினி பெருத்த துயரத்தில் ஆழ்கிறாள். ஆனால அச்சூழலில் அவளால் செய்வதற்கு ஒன்றுமில்லை. இரவு உறக்கமின்றி மெல்ல எழுந்து அடிமேல் அடிவைத்து  அவன் துயிலும் அறைவரைக்கும் சென்று திரைவிலக்கி எட்டி அவன் முகம் பார்த்து மகிழ்ச்சியடைகிறாள்.
ஊருக்குப் புறப்படும் முன்னால் யூஜினியின் தாய்க்கும் நானோவுக்கும் அன்பளிப்புகளைக் கொடுக்கிறான் சார்லஸ். அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க தன்னிடம் ஏதுமில்லையே என துயரம் கொள்கிறாள் யூஜினி. அவ்வப்போது அன்பளிப்பாக தன் தந்தையிடமிருந்து பெற்ற தங்கநாணயங்களை அவள் ஒரு சிறு முடிச்சாக வைத்திருந்தாள். அதைக் கொடுத்தாலென்ன என்று அவளுக்குத் திடீரென தோன்றுகிறது. அது அவளுக்கென வழங்கப்பட்ட செல்வம் என்பதால், அதைப் பயன்படுத்தும் உரிமை அவளுக்கே உள்ளது என்று யூஜினியின் தாயாரும் சொல்கிறாள். காதல் வேகத்தில் அந்த முடிச்சை அப்படியே சார்லஸிடம் கொண்டுசென்று கொடுத்துவிடுகிறாள். அதைப் பெற்றுக்கொள்ளும் சார்லஸ் தன் நினைவாக வைத்துக்கொள்ளும்படி அவளுக்கு ஒரு பரிசை அளிக்கிறான். அதில் பதிக்கப்பட்டிருக்கும் ஆடம்பர வளைவுகள் தங்கத்தாலும் வைரத்தாலும் ஆனவை என்று சொல்கிறான். பிறகு தன் அம்மா பயன்படுத்திய பேழையை அவளிடம் கொடுத்து, அதை என்றாவது ஒருநாள் திரும்பி வந்து பெற்றுக்கொள்வதாகவும் அதுவரை பாதுகாப்பாக வைத்திருக்கும்படியாகவும் கேட்டுக்கொள்கிறான். தன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு யூஜினி மனம் நெகிழ்ந்துபோகிறாள். அவன் தன்னை நெருங்கி அணைத்து முத்தமிட அனுமதிக்கிறாள். அவளும் அவனை முத்தமிட்டு அனுப்பிவைக்கிறாள். இது நாவலின் முதல் பகுதி.
ஒவ்வொரு புத்தாண்டும் தந்தை தன் மகளை வாழ்த்துவதற்கு முன்பாக அவள்வசம் உள்ள தங்கத்தையெல்லாம் ஒருமுறை பார்க்கும் பழக்கம் அக்குடும்பத்தில் இருந்தது. அதன்படி வாழ்த்தி முத்தமிடுவதற்கு முன்பாக யூஜினி தன்வசம் உள்ள தங்கத்தைக் கொண்டுவந்து காட்டுவாள் எனக் காத்திருக்கிறார் கிராந்தே. அவருக்கு அவளிடம் கொடுத்த தங்கத்தின் கணக்கு துல்லியமாக நினைவிலிருந்தது. வேறு வழியின்றி யூஜினி உண்மையை தந்தையிடம் சொல்ல நேர்கிறது. முதலில் அதை நம்பமுடியாமல் தடுமாறுகிறார் கிராந்தே. பிறகு சீற்றமுற்று அவளைக் கடுமையான சொற்களால் வசைபாடுகிறார். அன்றுமுதல் அவளுக்கு காய்ந்த ரொட்டி தவிர வேறெந்த உணவும் வழங்கப்படக்கூடாது என மனைவியிடமும் வேலைக்காரியிடமும் கட்டளையிடுகிறார். யூஜினி தீராத துயரில் மூழ்கிவிடுகிறாள். தற்செயலான ஒரு சோதனையின்போது அவன் அன்பளிப்பாகக் கொடுத்த சட்டகம் போலித்தங்கத்தால் ஆனதென அனைவருக்கும் தெரிந்துபோகிறது. சார்லஸ் தன் அன்புக்கு இழைத்த அவமானமாகவே அதை உணர்கிறாள் யூஜினி.
மகள் படும் துயரத்தைக் காணப் பொறுக்காத யூஜினியின் தாய் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுகிறாள். தன் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்கவே தயாரில்லாத கணவன் மீது அவள் ஆழ்ந்த வருத்தம் கொள்கிறாள். சில ஆண்டுகளிலேயே அவள் உடல்நலம் மோசமடைகிறது. வழக்கம்போல அந்த வீட்டுக்கு வரும் கிராந்தேயின் நண்பர்கள் அவளுடைய நிலையைக் கண்டு வேதனையடைகிறார்கள். ஒருநாள் கிராந்தேயை நேரில் கண்டு தாயின் உயிரும் மகளின் உயிரும் அவர் கையில் இருப்பதாகச் சொல்லி, அவர் மனம் வைத்தால் மட்டுமே அவர்கள் இருவரும் பிழைக்கமுடியும் என்றும் சொல்கிறார்கள். மேலும் அவர்கள் இறப்பதால் உருவாகும் சட்டச்சிக்கல்களையெல்லாம் எடுத்துரைத்து கல்லைக் கரைப்பதுபோல அவர் மனத்தை மெல்ல மெல்ல கரைக்கிறார்கள். இறுதியில் மனம் மாறி அவர் யூஜினை மன்னிக்கத் தயாராகிறார். அது அவர் மனைவியின் மனத்துக்கு சற்றே ஆறுதல் அளிக்கிறது. ஆயினும் அதையெல்லாம் கடந்து அவர் உயிர் பிரிந்துவிடுகிறது. அவளுடைய இழப்பை ஈடுசெய்ய முடியாத இழப்பாக உணர்கிறார் கிராந்தே.
அதற்குப் பிறகு செல்வம் சேர்ப்பதில் மட்டுமே அவர் அக்கறை கொள்கிறார். வருமானத்தையெல்லாம் உடனுக்குடன் தங்கக்கட்டிகளாக மாற்றுவதிலும் கூடுதல் வட்டி கிடைக்கக்கூடிய அரசாங்கப்பத்திரங்களாக மாற்றுவதிலும் வேகமாக இயங்கத் தொடங்குகிறார். பாதுகாப்புப் பெட்டகத்தை இரவில் திறந்து அடுக்கடுக்காக உள்ள தங்கக்கட்டிகளை மனநிறைவுடன் பார்த்தபடி நிற்பதில் பேரின்பம் கொள்கிறார். கைவிளக்கின் சுடர்பட்டு மின்னும் தங்கக்கட்டியை ஒவ்வொருமுறையும் காணக்காண அவர் மனம் இன்பத்தில் மூழ்குகிறது. அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, அக்கம்பக்கமுள்ள நகரங்களில் தானே பெரிய பணக்காரன் என்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி உருவாகிறது. அந்த மகிழ்ச்சியிலேயே அவர் மறைந்துபோகிறார்.  அவர் சேர்த்துவைத்துவிட்டுச் சென்ற சொத்துகள் அனைத்துக்கும் அவள் சொந்தக்காரியாக மாறுகிறாள். இது நாவலின் இரண்டாவது பகுதி.
செல்வம் சேர்க்கச் சென்ற சார்லஸ் சிறிதுகூட அறவுணர்ச்சியே இல்லாமல் அடிமைகளை வாங்கிவிற்கும் தொழிலைச் செய்கிறான். மேலும் வெளிப்படையாகச் சொல்லவியலாத வேலைகளையெல்லாம் செய்து பணமீட்டுகிறான். ஏராளமான செல்வத்தோடு பாரீஸ் நகருக்கு மீண்டும் வருகிறான். மிக உயர்ந்த செல்வந்தர் வீட்டுப் பெண்ணைத் தன் காதல் வலையில் வீழ்த்துகிறான். அவர்கள் திருமணம் கிட்டத்தட்ட  உறுதியாகி ஊர்முழுக்க அதே பேச்சாகிறது.
ஒருநாள் யூஜினிக்கு ஒரு கடிதம் வருகிறது. அது சார்லஸ் அவளுக்கு எழுதிய கடிதம். காலமெல்லாம் எதிர்பார்த்திருந்த கடிதம் வந்துவிட்டதென நினைத்து திறந்து படிக்கத் தொடங்கியவள் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோகிறாள். காதலை எதிர்பார்த்து கடிதத்தைப் பிரித்தவளைஅன்புள்ள உறவினளேஎன்று அழைக்கப்பட்டிருந்த முதல் வரி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு இடத்தில் கூட தன் காதலைப்பற்றிய குறிப்பே இல்லை. முதிர்ச்சியற்ற ஈர்ப்பு என அதை அவனே கிண்டல் செய்திருந்த விதம் அவளை மேலும் புண்படுத்தியது. இறுதியில் அவள் கொடுத்த தங்கக்கட்டிக்கு நன்றி சொல்லி முடித்திருந்தான். தங்கத்தின் மதிப்புக்கு இணையான பணத்தை காசோலையாக கடிதத்தோடு இணைத்து அனுப்பியிருந்தான். பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ஒப்படைத்த சட்டகத்தை அஞ்சல் வழியாக தன் முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தான். இது நாவலின் மூன்றாவது பகுதி.
யூஜினி தன் அன்பும் காதலும் அவமானப்படுத்தப்பட்டதாக  உணர்கிறாள். மெல்ல அவள் நெஞ்சில் வஞ்சம் குடியேறுகிறது. அவள் மனமும் தந்திரங்களின் கணக்குகளைப் போடத் தொடங்குகின்றன. பல ஆண்டுகளாக தன் இளமைக்காலம் தொட்டு தன்னையும் தன் சொத்தையும் இலக்காகக் கொண்டு இடைவிடாது அலையும் வழக்கறிஞர் பான்போனை அழைக்கிறாள். தன்னை அவன் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அதன் வழியாக தன் சொத்துகள் மீது முழு உரிமை கொண்டவனாக அவன் இருக்கலாம் என்றும் சொல்கிறாள். அது பான்போனை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆயினும் அத்திருமணத்தின் வழியாக வேறெந்த உரிமையையும் அவள்மீது அவன் கொள்ளலாகாது என்றும் சொல்லிவைக்கிறாள். அதற்கு ஈடாக அவன் அவளுக்காக ஒரு வேலையைச் செய்துதரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். ஒன்று, உடனடியாக பாரீஸ் சென்று விக்தோர் கிராந்தே வாங்கியிருக்கும் எல்லாக் கடன்களையும் அடைத்து ரசீது பெறுவது. இரண்டாவது, அந்த ரசீதுகளையும் பாதுகாப்பாக அவள்வசம் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த சட்டகத்தையும் ஒரு கடிதத்தையும் சார்லஸைச் சந்தித்து ஒப்படைப்பது. முழுச்சம்மதத்தோடு பான்போன் பிரான்ஸுக்குப் புறப்படுகிறான்.
சார்லஸின் திருமணம் திடீரென முறிந்துபோகும் நிலைக்கு வந்துவிடுகிறது. சார்லஸின் தந்தை விக்தோர் கிரந்தேயின் விஷயத்தைக் கேள்விப்பட்டு, பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திவிடுகிறார். அந்த நேரத்தில் பான்போன் அவனைச் சந்தித்து எல்லாக் கடன்களும் தீர்க்கப்பட்டுவிட்டன என்று சொல்லி ரசீதுகளை ஒப்படைத்து கடிதத்தையும் கொடுக்கிறான். ’அன்புள்ள உறவினரேஎன்று தொடங்கும் அக்கடிதத்தின் எழுத்துகள் அவனைச் சாட்டையடியாகத் தாக்குகின்றன. அவள் கொண்டிருக்கும் செல்வத்தின் அளவை அவன் முதன்முதலாக உணர்கிறான். நின்றுபோன திருமணம் நடைபெறுகிறது. நிபந்தனைப்படி அனைத்தையும் செய்து முடித்துவிட்டுத் திரும்பும் பான்போனை யூஜினும் ஊரறியத் திருமணம் செய்துகொள்கிறாள்.  இது நாவலின் நான்காவது பகுதி.
தான் வகுத்த திட்டத்தில் யூஜினி வென்றபோதும் காலம் ஏதோ ஒருவகையில் காத்திருந்து அவளை மீண்டும் வீழ்த்துகிறது. வஞ்சம் வடிந்த மனம் நீரற்ற கலமென வெறுமையில் மூழ்கிவிடுகிறது. நீண்ட காலம் காத்திருந்து யூஜினை மணந்துகொண்ட பான்போன் எதிர்பாராத விதமாக மரணமெய்திவிடுகிறான். இளம் விதவையாகவும் குழந்தையற்றவளாகவும் எஞ்சும் யூஜினி மற்றவர்களைப்போல வீட்டு மூலையில் முடங்கி துயரத்தில் ஆழ்ந்துவிடவில்லை. அவள் தன்னைச்சுற்றியும் தன் விவசாய நிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிற மக்கள் கூட்டத்தாரோடு திறந்த மனத்தோடும் உள்ளன்போடும் பழகி அவர்களுடைய நட்பையும் நம்பிக்கையும் பெறுகிறாள். அன்பை விதைத்து அன்பைப் பெறுகிறாள். இது நாவலின் ஐந்தாம் பகுதி.
1833 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாவல் ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளைக் கடந்தும் வாசிக்கத்தக்கதாகவும் பழைமையென்னும் தூசு படியாததாகவும் இருப்பது ஆச்சரியமானது. நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் எளிய, மிகையற்ற, நாம் பார்க்கிற மனிதர்களின் சாயல்களோடு இருக்கின்றன. சம்பவங்களை சிறிதும் மிகையின்றி எதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக அமைப்பதில் திறமைமிக்கவர் பால்சாக் என்பதற்கு இந்த நாவல் ஒரு எடுத்துக்காட்டு.
கிராந்தேயின் குடும்பத்தில் நடைபெற்ற கதை என்னும் மேம்போக்கான தோற்றத்தை பால்சாக் இந்த நாவலுக்குக் கொடுத்திருந்தாலும் அழிவற்ற செல்வம் என்றால் என்ன என்னும் கேள்வியோடு நாவலை அணுகும்போது பால்சாக்கின் கலை செயல்படும் தளங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
கிராந்தே இந்த நாவலின் முதன்மைப் பாத்திரம். தொடக்கத்திலிருந்தே அவர் சிக்கன மனப்பான்மை உள்ளவராகவும் செல்வம் மீது அளவற்ற நாட்டம் கொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். செல்வம் சேர்ப்பதை மட்டுமே அவர் தன் வாழ்க்கையின் உயர்நோக்கமாகக் கொண்டவர். செல்வம் வாழ்க்கையில் மிகமுக்கியமானது என்றும் மதிப்பும் மகத்துவமும் உள்ளதென்றும் அவர் உண்மையிலேயே நம்புகிறார். அதனாலேயே சரியான உணவை உட்கொள்ளாமலும் நல்ல உடைகளை உடுப்பதைத் தவிர்த்தும் பொலிவில்லாத ஒரு வீட்டில் வாழ்ந்தும் பணத்தை மிச்சம் பிடித்துச் சேமித்துவைக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அழிவற்ற செல்வம் என்பது தேடித்தேடிச் சேர்க்கும் தங்கக்கட்டிகள் மட்டுமே. ஆனால் ஒருநாள் தங்கக்கட்டிகள் அனைத்தும் சேமிப்புக்கிடங்கில் குவியலாகக் கிடக்க அவர் உயிர் பிரிந்தபோது, காலமெல்லாம் அவர் தேடிய செல்வத்தால் அவர் ஆறுதல் அடையமுடியவில்லை. மன்னிப்பதிலும் விட்டுக்கொடுப்பதிலும் வாழ்வில் ஆறுதல் கிட்டும் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் ஒரு தருணம் அவர் வாழ்க்கையில் இடம்பெறுகிறது. மகளை மன்னிப்பதிலும் மனைவியை பரிவோடு நடத்தும்போதும் அந்த ஆறுதலை அவர் சற்றே பெறுகிறார். ஆனால் அதை நீட்டித்து வாழ்க்கை முழுமைக்குமான நிறைவாக அந்த ஆறுதலை அவரால் வளர்த்தெடுத்துத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
கிராந்தே போலவே செல்வத்தை நாடியோடும் பாத்திரம் சார்லஸ். கிராந்தே பேராசை உள்ளவரே தவிர, யாருக்கும் துரோகம் செய்ய நினைப்பவராக  அவர் வாழவில்லை. மாறாக, சார்லஸ் தன்னலம் நிறைந்தவன். பேராசை மிக்கவன். சூழல்களை தனக்குச் சாதகமாக மாற்றி லாபமீட்டப் பார்க்கும் சாமர்த்தியம் மிக்கவன். ஒரு கிராமத்துப் பெண்ணின் தூய்மையான காதலை செல்வத்துக்காகத் தூக்கியெறியக்கூட அவன் தயக்கம் காட்டவில்லை. கிராந்தேவுக்குக் கிட்டும் ஆறுதல் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. நின்றுபோகவிருந்த தன் திருமணம் மீண்டும் நிகழும் சாத்தியத்தை உருவாக்கிய யூஜினியின் நடவடிக்கை அல்லது கருணையே வாழ்க்கையில் அழிவற்ற செல்வம் என்பதை ஒருவேளை அக்கணத்தில் அவன் உணர்ந்திருக்கலாம்.
யூஜினி ஒரு செல்வந்தனின் மகள். ஆனால் செல்வத்தின் சாயலே தன்மீது படாமல் வளர்ந்தவள். அன்பானவள். காதலையே அழிவற்ற செல்வமாக முதலில் அவள் மனம் நினைக்கிறது. காதலனின் துரோகத்தால் அது சிதைவுறும்போது அவளிடம் நிகழும் மாற்றம் மிகமுக்கியமானது. ஒரு கோணத்தில் வஞ்சம் தீர்ப்பவளாக மாறி பழைய காதலனுக்கு உண்மையை உணர்த்துகிறாள். இன்னொரு கோணத்தில் தன் காதலுணர்வை அன்புணர்வாக மாற்றி தன் வீட்டை, தெருவை, நிலங்களை, தொழிற்சாலையை, தேவாலயத்தைச் சுற்றி நிறைந்திருக்கும் அனைவரையும் நெருங்கி ஆரத் தழுவிக்கொள்கிறாள். அழிவற்ற செல்வம் அன்பே என்பதை அக்கணத்தில் அவள் உணர்ந்துகொள்கிறாள்.