Home

Sunday 2 September 2018

கலைமாமணி - சிறுகதை




ஒரு வகுத்தல் கணக்குக்காக பதின்மூன்றாவது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால் தெருமூலையில் ஒலித்த தமுக்குச்சத்தம் என் காதில் விழவில்லை.   ஆனால் என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளியெழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். “எழு பதிமூணு தொண்ணத்தொன்னு, எட்டு பதிமூணு…..” என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள் அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்துடன் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு நானும் இருடா ராமு, நானும் வரேன்டாஎன்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்.

தமுக்குத்தாத்தாவின் முன்னால் அவன் பறந்து சென்று நிற்பதைப் பார்த்ததுமே எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. தாத்தா குச்சிகளால் தமுக்கைத் தட்டித்தட்டி எழுப்பிய ஓசையால் அந்த இடமே அதிர்ந்துகொண்டிருந்தது. நான் ஓட்டமாக ஓடி தம்பியின் தோளைப் பிடித்தபடி மூச்சு வாங்கிக்கொண்டு நின்றேன். ஒரே நிமிடத்தில் சிறுவர் சிறுமிகளின் கூட்டம் தாத்தாவைச் சுற்றி சேர்ந்துவிட்டது. பெரியவர்கள் அந்தந்த வீட்டு வாசல்களில் நின்றபடி எங்களைப் பார்த்தார்கள்.
இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு திரெளபதை அம்மன் கோயில் திடல்ல அக்கம்பக்கம் பதினெட்டு பாளையத்திலும் பேர் பெற்ற அமுதகான சிகாமணி, கூத்துச் சக்கரவர்த்தி சிறுவந்தாடு ராமலிங்க வாத்தியாருடைய குழு அபிமன்யு வதம் என்கிற கூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்கிறாங்க. தெரு ஜனங்க எல்லாரும் குடும்பத்தோடு வந்து கண்டு களிக்கணும்……….”
ஒவ்வொரு வாக்கியத்தையும் ராகம் போட்டு அவர் இழுத்து இழுத்து சொல்ல, நாங்களும் அவரைத் தொடர்ந்து அதே ராகத்தில் சத்தம் போட்டுச் சொன்னோம். கண்டு களிக்கணும் என்று அவர் ஒருமுறை சொன்னதை நாங்கள் மூன்றுமுறை திருப்பித்திருப்பிச் சொல்லிவிட்டு குதித்தோம். எங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தாத்தா தொடர்ந்து தமுக்கடித்து ஓசையெழுப்பினார். கண்களைச் சிமிட்டியபடி அவர் தோளைக் குலுக்கியும் தலையைத் திருப்பியும் தமுக்கை அடித்த ஒவ்வொரு முறையும் எங்கள் உடலில் ரத்த ஓட்டத்தின் வேகம் பெருகியது. எங்கள் உடல்நரம்புகளில் பரவிய துடிப்பை எங்களால் தடுக்கவே முடியவில்லை. எங்கள் இடுப்பில் இல்லாத தமுக்கை அடிப்பதுபோல அபிநயித்தபடி நாங்களும் சத்தம் போட்டுக்கொண்டே அவருக்குப் பின்னால் போனோம்.
வேலை முடிந்து அப்பா வீட்டுக்கு வரும் சமயத்துக்காக காத்திருந்து, அவர் வந்ததுமே நானும் தம்பியும் ஓடிச் சென்று ஆளுக்கொரு பக்கமாக நின்று அவரிடம் அபிமன்யு வதம் அறிவிப்பைப்பற்றிச் சொன்னோம். எங்கள் அப்பா ராமலிங்கம் வாத்தியாரின் ரசிகர். அவருடைய கூத்து நடைபெறும் ஊர்களுக்கெல்லாம் சிரமத்தைப் பாராமல் சென்று பார்த்துவிட்டு வரும் பழக்கமுள்ளவர். அவரைப்பற்றி பேசத் தொடங்கினால் அப்பாவுக்கு நிறுத்தவே மனம் வராது. “பெரிய தெறமசாலியான கலைஞன். கண்ண மூடிகினு கடவுள் தூவன வெத மாரி இந்த கிராமத்துல வந்து பொறந்துட்டாரு. வேற ஊரா இருந்தா அவருக்கு கிடைச்சிருக்கக்கூடிய மரியாதை, கெளரவமே வேறமாரி இருந்திருக்கும்என்று சொல்லிவிட்டு நாக்கைச் சப்புக்கொட்டியபடி எங்களைப் பார்த்து சிரிப்பார்.

ஊரு ஒலகத்துக்கு தெரியறமாரி ஐயாவுக்கு ஏதாச்சிம் செய்யணும்என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்த அப்பா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் வாத்தியாரைப்பற்றி ஒரு பெரிய கட்டுரையை எழுதி ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார். இரண்டு மூன்று வார இடைவெளியிலேயே அந்தக் கட்டுரை பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வந்தது. அடுத்த வாரம் அந்தக் கட்டுரையோடு வெளியிட அவரைப் படம் எடுப்பதற்காக பத்திரிகை ஆபீஸிலிருந்து ஒரு கேமிராமேன் வந்திருந்தார். வாத்தியாரை பல இடங்களில் பல கோணங்களில் நிற்கவைத்து படம் எடுத்துக்கொண்டு சென்றார் அவர். கட்டுரை பிரசுரமானபோது இடையிடையே அந்தப் படங்கள் இடம்பெற்றிருந்தன. அன்று ஊர்முழுக்க வாத்தியாரைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. ”கூத்தாடிக்கு வந்த வாழ்வ பாத்தீங்களாடாஎன்று சொல்லி சிரித்தவர்களும் இருந்தார்கள்.
எனக்கு ஒரு பெரிய கெளரவத்த தேடிக் குடுத்துட்ட பலராமாஎன்று வீட்டுக்கே வந்து வாத்தியார் நெகிழ்ச்சியோடு அப்பாவிடம் சொன்னபோது நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”இதெல்லாம் நமக்கு நடக்காதுன்னு நெனச்சிட்டிருந்தேன் பலராமாஎன்றபோது அவர் கண்கள் தளும்பியிருந்தன.  இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருந்துவிட்டு புறப்படுகிற சமயத்தில் எங்க ஊட்டு ஜனங்க எல்லாருக்குமே என்னக் கண்டா எப்பவும் ஒரு எளக்காரம்தான். என் ஊட்டுக்காரிக்குக் கூட என்னமோ இந்த ஆளு ஆத்தமாட்டாம இந்தத் தொழில பண்ணிட்டு கெடக்கறான்ங்கற நெனப்பு உண்டு. பத்திரிகையில படம் வந்தபிறகுதான் என்னமோ இருக்குதுடா இதுலன்னு யோசிக்கறானுவோஎன்றார். அப்பா உடனேஇதுபோல நூறு மடங்கு கெளரவத்துக்கு நீங்க தகுதியானவரு ஐயா. அது எல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்ங்கறதுதான் என் ஆசை. உங்களுக்கு கிடைக்கிற பெருமை இந்த ஊருக்கே கிடைக்கிற பெருமை. என்னால முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்வேன்என்று சொன்னார்.
வாத்தியாருடைய கூத்துகளைப்பற்றி அப்பா எழுதி வைத்த குறிப்புகள் அலமாரியில் ஏராளமாக இருந்தன. கட்டுரை எழுதும்போது இந்தக் குறிப்புகளைத்தான் அவர் பயன்படுத்திக்கொள்வார். சீரான இடைவெளிகளில் அவை பலவிதமான பத்திரிகைகளில் பிரசுரமாகிக்கொண்டிருந்தன. அவரோடு சேர்ந்து கூத்துகளைப் பார்த்துப்பார்த்து எங்களுக்கும் கூத்து மீது ஆர்வம் பிறந்தது. கூத்துகளைப் பார்த்துப்பார்த்து சில பாடல் வரிகளையும் வசனங்களையும் கூட நாங்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்தோம்.
ஞாயிறு காலை நேரத்தில் அப்பா எங்களுக்கு எண்ணெய் தேய்த்துவிடும்போதெல்லாம் எங்கள் வாய் கூத்துப்பாடல்களை ஓயாமல் முழங்கியபடி இருக்கும். வெந்நீரைக் காய்ச்சுவதற்காக அடுப்பின் முன்னால் உட்கார்ந்து மிளார்களை ஒன்றையடுத்து ஒன்றாக அப்பா நெருப்புக்குள் தள்ளத் தொடங்கியதும் அவருடைய ஒருபக்கத் தோளோடு சாய்ந்தபடி நான் அர்ஜுனன் சபதமிடும் பாடல்வரியை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்வேன். அடுத்த கணமே என் தம்பி அப்பாவின் இன்னொரு பக்கத் தோளில் சாய்ந்தபடி பீமன் யானைபோல கர்ஜித்துவிட்டுப் பாடும் பாடல்வரியைப் பாடுவான். பாடல்களாலும் வசனங்களாலும் அப்பாவை  மகிழ்ச்சியில் திளைக்கவைப்போம். “இந்த பாட்டு வசனங்களுக்குலாம் ஒரு கொறைச்சலும் இல்ல. வாய்ப்பாட்ட சொல்லுங்கடான்னாதான் நம்ம புள்ளைங்களுக்கு நோப்பாளமா இருக்குதுஎன்று அம்மாதான் முணுமுணுத்தபடி இருப்பாள்.
பலவிதமான கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சிபற்றிய செய்தியை ஒருநாள் தற்செயலாக பத்திரிகையில் படித்தார் அப்பா. அந்தப் பட்டியலில் எங்களுக்குப் பிடித்த ஒரு நகைச்சுவை நடிகரும் இருந்தார். நானும் தம்பியும் அந்த நடிகரைப்பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அப்பா எங்களைப் பார்த்து, “இப்படி ஒரு விருது நம்ம கூத்து வாத்தியாருக்கு கிடைச்சா எப்படிடா இருக்கும்?” என்று கேட்டார். எங்களுக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புரியாததால்  அவரைக் குழப்பத்துடன் பார்த்தோம். ”பிரபல கூத்துகலைஞர் சிறுவந்தாடு ராமலிங்கம் வாத்தியாருக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதுன்னு பத்திரிகையில கொட்டை எழுத்துல செய்தி வந்தா நம்ம ஊருக்கே பெருமையா இருக்கும், இல்லயா?” என்று மற்றொரு கேள்வியையும் கேட்டார். செய்தியை சத்தம் போட்டு படிக்கிறமாதிரி அவர் குரல் அப்போது இருந்தது. நாங்கள் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தோம். அவர் மட்டற்ற உற்சாகத்துடன் இருப்பதுபோலத் தோன்றியது.
செல்வி, செல்வி…..” என்று தோட்டத்தில் செடிகளுக்கு பூவாளியில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அம்மாவை உடனே அழைத்து அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அம்மா அமைதியாகபெருமையாதான் இருக்கும். ஆனா ஒரு விருதை வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு உங்களுக்கு அரசாங்கத்துல செல்வாக்கு இருக்குதா?” என்று கேட்டாள். அந்தப் பதிலைக் கேட்டபிறகு ஒருகணம் யோசனையில் மூழ்கியிருந்தார் அப்பா. பிறகு செல்வாக்கு இருக்குதோ இல்லியோ, நம்மால முடிஞ்ச அளவுக்கு முட்டிப் பார்க்கறதுல என்ன தப்பு இருக்குது?” என்று சொன்னபடி அம்மாவின் பக்கம் திரும்பினார்.  அம்மாவின் கண்கள் அவரையே அசைவில்லாமல் உற்று நோக்கின. பிறகுமுட்டுங்க, முட்டுங்க. முட்டறத யாரும் வேணாம்ன்னு சொல்லல. தலையை உடைச்சிக்காம பக்குவமா முட்டணும். அவ்ளோதான்என்று சொன்னபடியே தோட்டத்துக்குப் போய்விட்டாள். ஐயாவை கலைமாமணி விருதுக்குரிய கலைஞனாக முன்வைப்பதை அன்றுமுதல் அப்பா தன்னுடைய லட்சியமாக நினைத்துக்கொண்டார்.
முழு ஆண்டுத் தேர்வு முடிந்து ஒருநாள் நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம். அப்பாவோடு விளையாட்டாக கதை பேசிக்கொண்டே தாங்கிகளில் இருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்துத் துடைத்து வேறொரு இடத்தில் வைத்தோம். பிறகு அறையைச் சுத்தம் செய்துவிட்டு தாங்கிகளில் புதிய விரிப்புகளை மடித்து விரித்துவிட்டு, துடைத்த புத்தகங்களையெல்லாம் கொண்டுவந்து அடுக்கிவைத்தோம். ராமலிங்கம் வாத்தியார் பற்றி அப்பா ஏற்கனவே எழுதிவைத்திருந்த கட்டுரை நோட்டுகளை அந்தக் குவியலிலிருந்து தனியே எடுத்துவைத்தார் அப்பா. அவற்றை கடையில் கொடுத்து இன்னொரு பிரதியெடுத்து சிறிய அளவில் புத்தகம்போல ஒரு கோப்பை உருவாக்கினார்.
ஒருநாள் சென்னை செல்லும் ரயிலுக்காக விழுப்புரம் ஸ்டேஷனில் நாங்கள் காத்திருந்த சமயத்தில் விழுப்புரத்து ராஜாங்கம் மாமாவும் அந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருந்தார். அவரை வழியனுப்பிவைக்க அவர் கட்சியைச் சேர்ந்த ஒரு பெருங்கூட்டமே அவருக்குப் பின்னால் நின்றிருந்தது. அவர் அப்பாவைப் பார்த்ததும்என்ன மச்சான், குழந்தைப்பட்டாளத்தோடு எங்க கெளம்பிட்டிங்க?” என்று கேட்டார். “லீவ் நாளாச்சே, வண்டலூரு வரைக்கும் போயி பசங்களுக்கு ஜூவ காட்டிட்டு வரலாம்ன்னு கெளம்பினோம்என்றார் அப்பா.  பேச்சோடு பேச்சாக கலைமாமணி விருது தொடர்பாக சட்ட மன்ற உறுப்பினரைச் சந்திக்க உதவி செய்யும்படி அப்பா அவரிடம் கேட்டுக்கொண்டார். “உங்களுக்கு இல்லாத உதவியா மச்சான். அடுத்த ஞாயித்துக்கெழம நம்ம வீட்டுக்கு வந்துருங்க. ரெண்டு பேருமா சேர்ந்து போய் பாத்துட்டு வந்துருவோம்என்றார்.
மாமாவின் நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு தன் கனவு நனவாகிவிட்டதைப்போலவே நினைத்தார் அப்பா. அடுத்த வாரம் அவர் கிளம்பியபோது அவர் அழைக்காமலேயே நாங்களும் தயாராகி வாசலில் வண்டிக்கருகில் நின்றோம். ”நீங்க எதுக்குடா?” என்று அப்பா முதலில் தயங்கினார். ஆனால்மாமா ஊட்டுல நாலஞ்சி முயல்குட்டிங்க இருக்குதுங்கப்பா. ஒவ்வொன்னும் பஞ்சுமூட்டயாட்டம் மெத்துமெத்துன்னு இருக்கும்பா. அதுங்கள பாக்க ஆசையா இருக்குதுப்பாஎன்று நாங்கள் சொன்னதைக் கேட்ட பிறகு அவர் சம்மதித்துவிட்டார். டிவிஎஸ் வண்டியிலேயே மாமாவைப் பார்க்க விழுப்புரத்துக்குப் போனோம். அவர் வீட்டில் ஒரு மணி நேரம் கழித்த பிறகு எல்லோருமாக சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்றோம்.
அவர் வீடு மிகப்பெரிதாக இருந்தது. பெரிய சுற்றுச்சுவர். வாகனங்களை நிறுத்தும் வசதியோடு கூடிய பெரிய வளாகம். அதையடுத்து சின்ன தோட்டம். அதையொட்டி உயர்ந்து நீண்ட படிகளில் ஏறி அவர் வீட்டுக்குள் சென்றோம். பழகியவர்போல அந்த வீட்டில் மாமா நடந்து செல்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வாசலில் நின்றிருந்தவர்கள் அவருக்கு வணக்கம் வைத்தார்கள். ”ஐயா வணக்கம்என்று கதவுக்கு மறுபுறத்தில் நின்றபடி  அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் மாமா. தலைமுடிக்குச் சாயமேற்றிவிட்டு உலர்வதற்காக கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்வாய்யா சங்கரலிங்கம். எப்படி இருக்க?” என்று புன்னகைத்தபடி முகத்தைத் திருப்பினார். மிகப்பெரிய துண்டால் தன் உடலை அவர் போர்த்தியிருந்தார். அப்பாவின் வணக்கத்துக்கு பதில்வணக்கம் சொன்னபடியேசங்கரலிங்கம் போன்லயே ஒங்களபத்தி சொன்னாரு. நீங்க சொல்லுங்க தம்பி, எந்த மாதிரி விஷயத்துக்கு என் உதவி தேவைப்படுது?” என்று நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார் அவர்.
அப்பா தொண்டையைச் செருமியபடி மாமாவை ஓரக்கண்ணால் ஒருமுறை பார்த்துவிட்டு, ”ஐயாவுக்கு தெரியாதது ஒன்னுமில்ல. தமிழ்நாட்டுல தெருக்கூத்து ஆடக்கூடிய மாவட்டங்கள்ள நம்ம மாவட்டத்துக்கு ஒரு பெரிய வரலாறே இருக்குது. ஆனால், இதுவரைக்கும் நம்ம பக்கத்து கூத்துக்காரங்க யாருக்குமே பெரிய கெளரவம் கிடைச்சதில்லிங்க. இப்ப வாழக்கூடிய தலைமுறையில ராமலிங்கம் வாத்தியார் ரொம்ப முக்கியமான ஆளு. அவருக்கு ஒரு கலைமாமணி விருதாவது கிடைக்கணும். அது உங்க மூலமா நடந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்என்றார் அப்பா.
அது யாரு ராமலிங்கம் வாத்தியார்? எந்த ஊருக்காரர்? எனக்கு தெரியலையே?” என்று இழுத்தார் சட்டமன்ற உறுப்பினர்.
நம்ம பக்கம்தான். சிறுவந்தாட்டுக்காரர். ரொம்ப பெரிய கலைஞர். கர்நாடகத்துலயோ கேரளத்திலயோ இவரு பிறந்திருந்தாருன்னா, இந்நேரத்துக்கு அவர் பத்மஸ்ரீ விருதோ பத்மபூஷன் விருதோ கூட கிடைச்சிருக்கும். அந்த அளவுக்கு கூத்துக்கலைக்கு பெருமையை சேர்த்தவரு. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு எங்கயோ ஒரு மூலையில ஒதுங்கி கெடக்கறாரு. அவருக்கு ஒரு கலைமாமணி விருதாவது கெடைக்கணும். உங்களமாதிரி பெரியவங்கதான் அதுக்கு பரிந்துரை செஞ்சி அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லணும்
சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு கையோடு எடுத்துச் சென்ற கோப்பை அவரிடம் கொடுத்தார்.
உங்களுக்கு சொந்தமா?”
அதெல்லாம் ஒரு பந்தமும் கெடயாது. அவர் கலைஞர். நான் ரசிகன். அவ்ளோதான் ஐயா
அப்பாவை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு கோப்பின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினார். ஒருசில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தன. ஒரு மின்னல்போல வெளிச்சம் அவர் கண்களில் ஒளிர்ந்து மறைந்தது. “இந்த மாதிரி திறமையான ஆட்களை கெளரவிக்க வேண்டியது நம்முடைய கடமை தம்பி. நம்ம தொகுதி ஆள் ஒருத்தருக்கு கலைமாமணி விருதுன்னா, நீங்க சொல்றாப்புல அதுல எனக்கும்தான பெருமை. நிச்சயமா இதுக்கு நான் ஏற்பாடு செய்றேன் தம்பிஎன்று முகம் மலரச் சொன்னார். மடித்த கோப்பை ஒரு கையில் பிடித்தபடி மற்றொரு கைவிரலால் தன் நெஞ்சைத் தொட்டு அவர் சொன்னதைப் பார்த்து அப்பா மிகவும் நெகிழ்ந்துபோனார். அப்பாவுக்கு பேச்சே வரவில்லை. ஒரு சொல் கூட எழாமல் அசையாமல் நின்றார். ”கவலையே படாதீங்க. வர வருஷம் அனெளன்ஸ் பண்ணப் போற லிஸ்ட்ல இவர் பேரு கண்டிப்பா இருக்கும். அதுக்கு நான் உத்தரவாதம்என மறுபடியும் தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னார் அவர். “ரொம்ப நன்றிங்க ஐயா, இதுக்கு இந்த ஊரே கடமைப்பட்டிருக்குதுஎன்று சொன்னபடி கைகுவித்து வணங்கினார்.
கலைமாமணி விருது ராமலிங்கம் வாத்தியாருக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்னும் நம்பிக்கை அப்பாவின் மனத்தில் உறுதியாக விழுந்துவிட்டது. ஆனால் அம்மாவுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வரவில்லை. ஜாடைமாடையாக தன் அவநம்பிக்கையை அப்பாவுக்கு உணர்த்தியபடியே இருந்தார். ”ஆமா, உனக்கு வேற வேலையே இல்ல, நான் இடம் போனா, நீ வலம் போவே. நான் வலம் போனா நீ இடம் போவே. அதான என்னைக்கும் நம்ம ஊட்டுல நடக்குதுஎன்று முனகியபடி சலித்துக்கொண்டார் அப்பா. தனக்கு நெருக்கமான நண்பர்களிடமெல்லாம் அப்பா அச்செய்தியை ரகசியமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார் என்னும் செய்தி கிடைத்ததும் அம்மா சற்றே பதற்றம் கொண்டார். “நாளைக்கு வரபோற பட்டியல்ல அவர் பேரு இல்லைன்னு வச்சிக்குங்க, அப்ப இந்த ஆளுங்கள்ளாம் உங்கள பாத்து சிரிக்க மாட்டாங்களா?” என்று மெதுவாகக் கேட்டார். ”அப்படிலாம் ஆகாது செல்விஎன்று அம்மாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தார் அப்பா. “இங்க பாருங்க.  கோழி முட்டைங்கள அவையத்துக்கு வைக்கிறமாதிரிதான் இந்த விருதுக்கு ஆள எடுக்கிற விவகாரம். ஒன்னு ரெண்டுதான் குஞ்சு பொரிக்கும். மத்ததுலாம் கூழைமுட்டைதான். மொதல்ல அத புரிஞ்சிக்குங்கஎன்று சொல்லிவிட்டுச் சென்றார்.
பத்து நாட்கள் கழித்து விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது ராமலிங்கம் வாத்தியாரின் பெயர் அதில் இல்லை. அப்பா அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார். வெளியே செல்லவே கூச்சப்பட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பெடுத்துக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அவரால் அந்த ஏமாற்றத்திலிருந்து எளிதில் மீளமுடியவே இல்லை. ”ஆரம்பிக்கும்போதே இந்த கரிவாய்க்காரி வசனம் சொல்லிட்டாளே, அப்பறம் எப்படி உருப்படும்?” என்று அம்மாவை நாள்தோறும் திட்டித் தீர்த்தார்.  
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு தன் சோர்விலிருந்து முற்றிலுமாக மீண்டெழுந்தார் அப்பா. இழுப்பறையில் இருந்த கோப்பை எடுத்து மீண்டும் விரிவுபடுத்தி ஆறேழு பிரதிகள் தயார் செய்தார். மாவட்ட ஆட்சியரையும் முக்கியமான பிற அதிகாரிகளையும் நேரில் சந்தித்து ஆளுக்கொரு பிரதியைக் கொடுத்து பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.  அதற்கடுத்த ஆண்டில் ஒரு பொதுக்குடிமகனின் பரிந்துரை என்கிற அளவில் தன் பெயரிலேயே அந்தக் கோப்பை அரசாங்க அதிகாரியின் பார்வைக்கு நேரடியாக அனுப்பிவைத்தார்.
இந்த தரமாச்சிம் அரசாங்கம் இந்த விருதை ஐயாவுக்கு அறிவிக்கணும். திறமையின் உச்சமான புள்ளியில ஐயா இருக்கிற பொருத்தமான நேரம் இது. இப்ப கெடச்சா அவருக்கும் கெளரவம். விருதுக்கும் கெளரவம்
பார்க்கிறவர்கள் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தார் அப்பா. ஆனால் அந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் ஐயாவின் பெயர் இடம்பெறவில்லை. மனமுடைந்துபோன அப்பா யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தார். அது அப்பாவின் இயல்பே அல்ல. மிகவும் கலகலப்பானவர். திடீரென அவர் தன் இயல்பை மாற்றிக்கொண்டதும் நாங்கள் நிலைகுலைந்து போனோம். அவரிடம் மெதுவாகப் பேசிப்பேசி அம்மா அவரை இயல்பானவராக்கினாள். நடந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்டு ராமலிங்கம் வாத்தியாரே ஒருநாள் அப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்துரொம்ப புத்திசாலின்னு ஒன்ன நெனச்சனே பலராமா? நீயா இப்படி நடந்துக்கற?” என்றபடி கைகளைப் பற்றினார்.  
அது……”என்று எதையோ சொல்ல அப்பா இழுத்தார்.
இங்க பாரு பலராமா, ஒரு கூத்தாடிக்கு அவனுடைய ஆட்டத்த பாத்து ரசிச்சி கைதட்டி பேசக்கூடிய ரசிகர்களுடைய பாராட்டுதான் ரொம்ப பெரிய விருது. அரசாங்க விருதுலாம் ஒரு கணக்கே இல்ல. இன்னைக்கும் நான் ஆடற கூத்த பாக்க ஒவ்வொரு இடத்துலயும் வரக்கூடிய முந்நூறு நானூறு பேருங்க நான் பேசற வசனத்தை காதால கேட்டுட்டு நாள்முழுக்க திருப்பித்திருப்பிப் பேசறாங்க, நான் பாடற பாட்ட பாடறாங்க. இதுக்கும் மிஞ்சிய விருதுன்னு ஒன்னு இந்த உலகத்துல இருக்குதா, சொல்லு
அப்பாவின் தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினார்  வாத்தியார்.  நீண்ட உரையாடலுக்குப் பிறகு அன்று இரவு எங்கள் வீட்டில் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டார் அவர்.
சில மாதங்களுக்குப் பிறகு அப்பா யாரும் எதிர்பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். அலுவலக விஷயமாகச் சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் வீடியோ கேமிரா மூலம் படமெடுக்கத் தெரிந்த ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார். சுற்றுவட்டாரங்களில் ராமலிங்கம் வாத்தியாரின் கூத்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று, கூத்தின் முக்கிய பகுதிகளைப் படம் பிடித்துக்கொள்ள வழிசெய்தார். அர்ப்பிசம்பாளையத்தில் மயில்ராவணன் கதை. தாதம்பாளையத்தில் விராடபர்வம். சாலையாம்பாளையத்தில் கர்ணமோட்சம். மடுகரையில் அர்ஜுனன் தபசு.
இன்னும் ஒன் கிறுக்கு போகலையா?” என்று சிரித்தார் ஐயா.
நீங்க சும்மா இருங்க ஐயா, எந்த காரணத்துக்காகவும் என் லட்சியத்துலேருந்து பின்வாங்க மாட்டேன்என்று பேசிச் சமாளித்தார் அப்பா.
கூத்து இல்லாத ஒருநாளில் வாத்தியாரை தன் சொந்த வாழ்க்கையைப்பற்றிப் பேசவைத்து படம் பிடிக்கவைத்தார். அப்புறம் ஊர், கோவில், ஏரிக்கரை, குளங்கள், மரங்கள், தெருக்கள், வயல்வெளிகள் என கண்ணில் பட்டதெல்லாம் படமாகின. பிறகு வீடியோகாரர் சென்னைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். எடுத்த காட்சிகளையெல்லாம் வெட்டியும் இணைத்தும் மாற்றியமைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் திரும்பி வந்து தான் எடுத்த படத்தைப் போட்டுக் காட்டியபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரு படம் எப்படி உருவாகிறது என்பதை அன்று நாங்கள் நேருக்குநேர் புரிந்துகொண்டோம்.
அந்தக் குறும்படத்தின் பிரதியையும் செம்மைப்படுத்தப்பட்ட கோப்பையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்ற அப்பா யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் அதிகாரியை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டு வந்தார். அப்படிப்பட்ட தருணங்களில் முன்பெல்லாம் அப்பாவிடம் தென்படக்கூடிய அதீத உற்சாகம் எதுவும் அச்சமயத்தில் காணப்படவில்லை. அனுபவங்கள் அவரைப் பக்குவப்படுத்தியிருந்தன. அந்த ஆண்டின் அறிவிப்புப் பட்டியலிலும் வாத்தியாரின் பெயர் இடம்பெறவில்லை.
வாத்தியாரைப்பற்றி தான் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு பதிப்பகத்தில் கொடுத்து ஒரு புத்தகமாக வெளிவர ஏற்பாடு செய்தார் அப்பா. ‘உளமுருவி நினைவுருவிஎன்னும் அந்தப் புத்தகம் வாத்தியார் துரியோதனனாக வேஷம் கட்டி கூத்தாடிக்கொண்டிருந்த மதகடிப்பட்டு மேடையிலேயே வெளியிடப்பட்டது. ஹார்மோனியக்காரர் வெளியிட பபூன் வடிவேலு வாத்தியார் வாங்கிக்கொண்டார். கூத்து பார்க்க வந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  புத்தகங்கள் விற்றன.

சாப்பிட்டு முடித்த பிறகு கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ”வதம்னா என்னப்பா அர்த்தம்?” என்று அப்பாவிடம் கேட்டான் தம்பி. ”பத்து பன்னெண்டு பேரு சேந்து ஒரு ஆள சுத்தி நின்னு அடிச்சி கொல்றதுதான் வதம்என்றார் அப்பா. தம்பியின் கண்களில் ஒரு மிரட்சி பரவி தேங்கி நின்றது. “அபிமன்யுவ எதுக்குப்பா வதம் செய்றாங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான். அப்பா எங்களுக்கு அபிமன்யுவின் கதையை சுருக்கமாகச் சொல்லி முடித்தார். நான் அவர் தோளையொட்டி நின்றிருந்தேன். சக்கரவியூகத்துக்குள் நுழையும் கலையை அறிந்துகொண்டவனுக்கு வெளியேறும் கலை தெரியாததால் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்துபோனதைச் சொல்லும்போது அவர் குரல்  மிகவும் தடுமாறியது. ”அது மரணமே இல்லடா, அது ஒரு கொலை, கூட்டுக்கொலைஎன்று நாக்கு சப்புக்கொட்டியபடி சொன்னார். .
பத்து மணி என்பதன் அடையாளமாக ஒருமுறை மின்சாரம் நின்று சில கணங்களுக்குப் பிறகு வந்தது. “சரி கெளம்பலாமா?” என்று எழுந்தார் அப்பா. திரும்பி நீ வரலையா செல்வி?” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டார். ”நீங்க போய்வாங்க சாமிங்களா, அது போதும். எனக்கு கூத்தும் வேணாம். பாட்டும் வேணாம். கண்ணு முழிக்கற வேலைலாம் நம்ம உடம்புக்கு ஒத்து வராதுஎன்று சிரித்தபடியே சொன்னாள் அம்மா. நாங்கள் வெளியேறியதும் கதவைச் சாத்திக்கொண்டாள்.
திரெளபதை அம்மன் கோவில் திடலில் மின்சார விளக்குகளும் கேஸ் விளக்குகளும் வெளிச்சத்தைப் பொழிந்தபடி இருந்தன. ஏராளமான கூட்டம். வெள்ளைத்திரையை இருவர் பிடித்தபடி இருக்க, பின்பாட்டுக்காரர்கள் கடவுள் துதிகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆட்டத் திடலைத் தாண்டி அப்பா ஆட்டக்காரர்கள் வேஷம் கட்டும் இடத்துக்குச் சென்று வாத்தியாரைச் சந்தித்தார். வாத்தியார் முதல் வேஷக்காரனுக்கு புஜக்கிரீடைகளைப் பொருத்தி கட்டியபடியே உரையாடினார்.
எங்கள் கன்னங்களைத் தொட்டு செல்லமாகக் கிள்ளியபடியேஅப்பா ரசனை உங்களுக்கும் தொத்திகிச்சாடா பசங்களா?” என்று கேட்டார் ஐயா. யாரும் எதிர்பாராதபடி தம்பி அவரைப் பார்த்துநீங்கதான் அபிமன்யுவா வேஷம் கட்ட போறீங்களா?” என்று கேட்டான். அவர் சிரித்தபடியேஆமாம்என்று தலையசைத்தார். “அபிமன்யு ரொம்ப சின்ன பையன்னு அப்பா சொன்னாங்க. நீங்க இவ்ளோ பெரியவரா இருக்கிங்களேஎன்று தன் முகவாயில் விரலால் தட்டியபடி கேட்டுவிட்டான். யாருமே அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அப்பாஎன்னடா கேள்வி இது, வா இங்கஎன்று அவனை வேகமாக தனக்கு அருகில் இழுத்தார். “உடு பலராமா, கேட்டுத் தெரிஞ்சிக்கறது நல்லதுதானேஎன்று சிரித்தார் வாத்தியார். பிறகு திரும்பிபெரியவங்க சின்னவங்களா மாறி நடிக்கறதுதான் நடிப்புஎன்று தம்பியிடம் சொன்னார். ”யாராவது அடிக்க வந்தா விடாதீங்க. நீங்கதான் பெரியவராச்சே. தைரியமா திருப்பி அடிங்கஎன்று அவரிடம் சொன்னான் தம்பி. “ஐயோ மானத்த வாங்கறானேஎன்று அப்பா கூச்சத்தில் நெளிந்தார். வாத்தியார் வாய்விட்டு சிரித்தபடி அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
இன்னும் ரெண்டுமூணு வாரத்துல விருது அறிவிப்பு வந்துடும் ஐயா. இந்த தரம் கண்டிப்பா உங்க பேர் பட்டியல்ல இருக்கும்அப்பா சொல்லிக்கொண்டே புறப்படுவதற்கு எழுந்தார்.
இன்னும் நீ அந்த முயற்சிய விடலையா பலராமா? நீயும் விடாக்கண்டனா இருக்க. அவனுங்களும் கொடாக்கண்டனுங்களா இருக்கானுவோஎன்று சிரித்தார் வாத்தியார். பிறகுவரட்டும் வரட்டும் பலராமா. வர காலத்துல பாத்துக்கலாம்என்றார்.
கூத்து தொடங்கியது. ஒவ்வொரு பாத்திரமும் பாடும் பாடல்களும் ஆடும் அடவுகளும் புதுமையாக இருந்தன. அபிமன்யுவை கொஞ்சியபடி சுபத்திரை பாடும் பாடல்களும் உரையாடல்களும் காதுக்கு இதமாக இருந்தன. விடியும்வரைக்கும் நாங்கள் இந்த உலகத்திலேயே இல்லை. வேறொரு மாய உலகத்தில் வசித்துவிட்டு திரும்பியதுபோல இருந்தது. வீட்டுக்குத் திரும்பியதும் சுபத்திரையின் பாடல்களை அம்மா, தாத்தா, ஆயா எல்லாரிடமும் பாடிக் காட்டியபிறகுதான் எங்கள் வேகம் சற்றே குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியது. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், ஏரிக்கரை என நாங்கள் போகும் இடங்களிலெல்லாம் பல நாட்களுக்கு அந்தப் பாடல்களைப் பாடியபடி திரிந்தோம்.

மடுகரையில் தொடர்ச்சியாக பன்னிரண்டு நாட்கள் ஐயாவின் கூத்து தொடங்கியதை ஒட்டி அப்பா விடுப்பெடுத்திருந்தார். தேர்வுக்காலம் என்பதால் கண்டிப்பாக எங்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று அப்பாவுக்கு கட்டளை விதித்திருந்தாள் அம்மா. அதனால் அவர் மட்டும் தனியாக இரண்டு நாட்களாகச் சென்று வந்தார்.
ஒருநாள் காலையில் அப்பா வீட்டுக்கு வரும்போது மனப்பாடச் செய்யுளொன்றை கண்களை மூடியபடி சுவரைப் பார்த்து ஒப்பித்துக்கொண்டிருந்தேன். “அடடா, தமிழ் ஏன்டா இப்படி உன்கிட்ட தாண்டவமாடுது?” என்று சிரித்துக்கொடே என் தோளைத் தொட்ட பிறகுதான் நான் அவர் வருகையை உணர்ந்தேன். பிறகு எதுவும் புரியாமல் அப்பாவைப் பார்த்துச் சிரித்தேன். “சேகாப்பர் இல்லடா, சோகாப்பார். பாத்து ஒழுங்கா படிஎன்று என் தோளை அழுத்தினார். காதில் ஒருபக்கமாக அந்தச் சொற்கள் விழுந்துகொண்டிருக்கும்போதேஎன்னப்பா கூத்து இன்னைக்கு?” என்று கேட்டேன். “திரெளபதை சபதம்டாஎன்று சொன்னபடியே அப்பா நாற்காலியில் உட்கார்ந்தார்.
பரீட்சைக்கு இன்னும் பத்து நாளுதான் இருக்குது. அவன்கிட்ட எதுவும் பேசாதீங்க. பேசிப்பேசியே நேரத்த ஓட்டிடுவான்என்றபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, அப்பாவுக்கு ஒரு தம்ளரில் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். ”சரி சரி தாயே, உன் கட்டளை, எங்கள் பாக்கியம்என்று சிரித்தவாறே தம்ளரை வாங்கி தேநீரைப் பருகி முடித்தார்.
அவர் பின்கட்டுக்குச் சென்று திரும்பி வந்த நேரத்தில் வாசலில் பேப்பர்காரன் மணியடிக்கிற சத்தம் கேட்டது. “இதோ வந்துட்டேன்என்றபடி அவரே வெளியே சென்று வாங்கிக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். தன்னிச்சையாக அவர் உதடுகள் கூத்துப் பாட்டொன்றை முணுமுணுத்தபடி இருந்தன.
செய்தித்தாளில் முதல் பக்கத்தைத் திறந்து படித்ததுமே சந்தோஷத்தில் எழுந்து நின்றுவிட்டார் அப்பா. ”டேய், இங்க பாருடா, இங்க பாருடாஎன்று என்னிடம் அந்தத் தாளைக் காட்டினார். ”இங்க, இங்கஎன்று அவர் விரலால் அழுத்திக் காட்டிய இடத்தில்தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்என்று அச்சாகியிருந்ததை வாய்விட்டுப் படித்தேன். தம்பியும் ஓடிவந்து எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சத்தம்போட்டுப் படித்தான். அதற்குள் அம்மாவும் அங்கே வந்துவிட்டாள். என்னிடமிருந்து தாளை வாங்கி அவளும் படித்தாள்.  அப்பா விரலால் சுட்டிய இடத்தில் விருதாளர்களின் நீண்ட பட்டியல் இருந்தது. நிகழ்கலை என்னும் பிரிவில் ராமலிங்கம் வாத்தியார், சிறுவந்தாடு என்னும் பெயர் தடித்த எழுத்தில் அச்சாகியிருந்தது. அப்பாவின் முகத்தில் படர்ந்திருந்த மகிழ்ச்சியைப் பார்த்து அம்மாவின் விழிகள் கலங்கின.
நான் எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் ஒரு பெரிய வெற்றி இது செல்விஎன்று அம்மாவைப் பார்த்து சிரித்தார் அப்பா. பிறகு. ”ஐயாவுக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோ, ஒரு எட்டு மடுகரை வரைக்கும் போயி சொல்லிட்டு வரேன். விருது விழா நாளைக்கே வச்சிருக்காங்களாம். அவரை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யணும்….…” என்றபடி அப்பா புறப்பட்டார். “அப்பா, நாங்களும் வரோம்பாஎன்று பக்கத்தில் சென்று கெஞ்சினோம். மறுத்துவிடுவாரோ என்று சற்றே எங்களுக்கு ஒருகணம் தயக்கமாக இருந்தது. ஆனால் சிரித்தபடிவாங்கடா செல்லங்களாஎன்று இருவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டார். அம்மா ஒன்றும் சொல்லாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மடுகரையில் பங்களா வாசலிலேயே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே படியேறிச் சென்றோம். கூடத்தில் சுவர்க்கண்ணாடியைப் பார்த்தபடி ஒப்பனையை கலைத்துக்கொண்டிருந்த ஐயா சத்தம் கேட்டு எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினார். அப்பாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஆச்சரியம். ”என்ன பலராமா, ஊட்டுக்குப் போவலையா?” என்று கேட்டார்.
போயிட்டு திரும்பி வந்துருக்கேன் ஐயா. இந்த வருஷத்துக்கான கலைமாமணி விருதுப்பட்டியல் அறிவிச்சிட்டாங்க ஐயா. கூத்துக்கலைப் பிரிவில உங்களுக்குத்தான் விருது. இதோ பாருங்க, உங்க பேர முதல்ல போட்டிருக்காங்கஉற்சாகமாகச் சொல்லிக்கொண்டே செய்தித்தாளை அவரிடம் கொடுத்தார் அப்பா.
அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு அங்கங்கே ஒப்பனையைக் கலைத்தபடி இருந்த கலைஞர்கள் ஒரே நொடியில் ஐயாவைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் பெயரை செய்தித்தாளில் பார்த்துவிட்டு அவரைத் தோளில் தூக்கிவைத்து ஆடினார்கள். “டேய் எறக்குங்கடா, எறக்குங்கடாஎன்று சிரித்தபடியே கெஞ்சினார் ஐயா.
இதுல நான் பெருமைப்பட ஒன்னுமில்லை பலராமா. எல்லாமே உன் உழைப்பு. நீதான் நியாயமா இதுல பெருமைப்பட்டுக்கணும்என்று குழைவான குரலில் சொன்னார் ஐயா.
உங்களுக்கு பெரிய மனசுங்க ஐயா. பெரிய வார்த்தைகள்தான் எப்பவும் உங்க வாய்ல வரும். நீங்க கலைஞன் ஐயா. கலைஞன். நாங்கள்லாம் வெறும் ரசிகர்கள்என்றார் அப்பா. “அதையெல்லாம் நாமளா தீர்மானிக்கறம். எல்லாம் அங்கயே நடந்து முடிஞ்சிடுது…” என்றபடி வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு புன்னகைத்தார் ஐயா.
ஐயா, நாளைக்கி காலையில சென்னையில விழா. நீங்க இன்னைக்கு ராத்திரியே அங்க போய் தங்கினாதான் விழாவுல கலந்துக்க சுலபமா இருக்கும்என்று அப்பா சொன்னார்.
இன்னைக்கா?” என்றார் ஐயா அதிர்ச்சியுடன். பிறகு அது எப்படி முடியும் பலராமா. பன்னெண்டு நாள் கூத்துக்கு கைநீட்டி முன்பணம் வாங்கியிருக்கமே. ரெண்டு நாள் ஆட்டம்தான் முடிஞ்சிருக்குது. இன்னும் பத்து நாள் ஆடியாவணும். உடனே கெளம்புன்னா எப்படி முடியும்?” என்று பதற்றத்துடன் கேட்டார்.
ஒரு ரெண்டு நாளுக்கு இங்க இருக்கறவங்க உங்க வேலைய பாத்துக்க மாட்டாங்களா ஐயா?” என்று தயக்கத்துடன் கேட்டார்  அப்பா. ”கனவெல்லாம் நனவா மாறிட்ட சமயத்துல நீங்க போகலைன்னா எப்பிடி ஐயா?” என்று அவர் தொடங்கியபோது சொற்கள் தடுமாறின. அவருடைய பார்வை சுற்றியிருந்தவர்கள்மீது ஒருகணம் படிந்து திரும்பியது. அவர்கள் உடனே ஐயாவைப் பார்த்துநீங்க போய்ட்டு வாங்க ஐயா, ஒரு கொறயும் இல்லாம இங்க நிகழ்ச்சியை நாங்க பாத்து நடத்தறோம்என்று ஒரே குரலில் சொன்னார்கள்.
நீங்க பாத்துக்குவிங்கன்னு எனக்கும் தெரியும். ஆனா அது தர்மமில்லை. நான் பொறுப்பெடுத்து நடத்துவன்னு நம்பிதான் முன்பணத்த என் கையில குடுத்திருக்காங்க. இப்ப ஒரு ரெண்டு நாள் என் சொந்த வேலைதான் முக்கியம்ன்னு விட்டுட்டு போனா, அடுத்த வருஷம் இப்படி முன்பணம் கொடுப்பாங்களா? யோசிச்சி பாருங்கஎன்றார். ஒரு கணம் யாராலும் பேச்சைத் தொடரமுடியாதபடி மெளனம் நிலவியது.
ஐயா அப்பாவின் தோளைத் தொட்டுஇந்த ஊருல இருபது வருஷத்துக்கு முன்னால ஒரு தரம் மழையே இல்லாம போயிடுச்சி பலராமா. அப்ப இந்த ஊருக்காரங்க மழைக்காக பிரார்த்தன பண்ணிட்டு பன்னெண்டு நாள் கூத்தாடணும்ன்னு தாம்பளத்துல நூத்தியோரு ரூபா வச்சி  குடுத்தாங்க. கூத்து முடிஞ்ச மக்காநாளே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி. ஒரு வாரம் அடைமழை. அப்ப இந்த ஊருகாரங்க எல்லாரும் சேர்ந்து ஒவ்வொரு வருஷமும் இந்த மாசத்துல இந்த நாள்ல இங்க வந்து நீங்கதான் வேஷம் கட்டி ஆடணும்னு எங்கிட்ட ஒரு வாக்கு கேட்டு வாங்கிகிட்டாங்க. அத இதுவரைக்கும் நான் மீறினதில்லை.” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கினார். முகத்திலும் கையிலும் இருந்த எண்ணெய்ப்பசையை ஒரு துணியை எடுத்து துடைத்துக்கொண்டார்.
பேரும் கெடக்கூடாது, தொழிலும் கெடக்கூடாது. அதுதான் பெரிய விருது பலராமா. இந்த மெடலு, பட்டம், பேருலாம் உசிரோட பொழைச்சி கெடந்தா நாளை பின்ன பார்த்துக்கலாம்
அப்பா எதுவும் பேசாமல் ஐயாவையே பார்த்தபடி இருந்தார். “போங்கடா, போங்கடா போய் வேஷத்த கலைச்சிட்டு குளிக்க போங்கடாஎன்று கூடியிருந்தவர்களை கலைந்துபோகச் செய்தார் ஐயா.
கையில் இருந்த செய்தித்தாளை ஐயாவிடம் கொடுத்துவிட்டு பெருமூச்சோடு திரும்பினார் அப்பா. நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம்.
ஒரு நிமிஷம் பலராமாஎன்றபடி ஐயா அப்பாவை நோக்கி கையைக் காட்டினார். அப்பா உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பினார். ”என் சார்பா நீ போய் விருதை வாங்க உனக்கு விருப்பமிருந்தா தாராளமா போவலாம்என்றார். மறுப்பின் அடையாளமாக புன்னகையோடு தலையசைத்துவிட்டு பங்களாவின் படிகளில் இறங்கத் தொடங்கினார் அப்பா.


(2016 இல் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த சிறுகதை)