Home

Sunday 10 May 2020

வத்திகுச்சி கோபுரம் - சிறுகதை




அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் பார்த்தோம். பேருந்து நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் நடந்துவந்துவிட்டோம். அதைக்கூட கல்யாணராமன் போனிலேயே சொல்லியிருந்தார். “ஆட்டோவெல்லாம் வேணாம் தம்பி. புது ஆளுன்னு தெரிஞ்சிட்டா அம்பது குடு நூறு குடுன்னு கேப்பாங்க.  ஸ்டேன்ட்லேருந்து வில்லினூரு பக்கமா ஒரே ரோடு. மூனாவது லெஃப்ட், ரெண்டாவது ரைட். நடக்கற தூரம்தான்அவர் சொற்கள் ஒவ்வொன்றும் இன்னும் காதில் ஒலிப்பதுபோல இருந்தது.

உற்சாகமாக நடக்கத் தொடங்கிய கணத்தில், இளங்கோ தடுத்தான். கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காட்டி, “நாம பத்து மணின்னுதான் சொன்னம். இன்னும் கால்மணி நேரம் இருக்குது. முன்கூட்டியே போய் நின்னு அவர சங்கடத்துக்கு ஆளாக்கிடக்கூடாதுஎன்று நிறுத்தினான். “போனா என்னடா? ஏன் சீக்கிரமா வந்திங்கன்னு கேப்பாரா?” என்ற அண்ணாமலையின் கண்களில் கேள்வி திரண்டு நின்றது.  ஏதாவது எழுத்து வேலையில இருந்தா, நம்மால கெட்டதா ஆவக்கூடாதுடா, புரிஞ்சிக்கோஎன்றான் இளங்கோ.
சாலைத் திருப்பம் வரைக்கும் மறுபடியும் நடந்துசென்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். கேரளா பதிவெண்ணைக் கொண்ட ஒரு சுற்றுலாப் பேருந்து வாகன நெருக்கடிகளில் சிக்கி நின்றிருந்தது. திறந்திருக்கும் ஜன்னல்களில் அடுக்கிவைத்ததுபோல சிறுவர்சிறுமிகளின் முகங்கள். குட்மார்னிங் அங்கிள் என்று கையசைத்த அவர்களின் முகங்களில் சிரிப்பு வழிந்தது. நான் இரண்டு கைகளையும் தூக்கி அசைத்தேன். குழந்தைகள் என்னைச் சுட்டிக்காட்டி சிரிப்பதைப் பார்த்தேன். கல்யாணராமனின் நீலவானம் நாவலில் கடற்கரையோரமாக வந்து நிற்கிற ஒரு சுற்றுலா வாகனத்தைப்பற்றிய சித்திரம் இடம்பெறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இளங்கோவிடம் அதைச் சொன்னேன். “நீல வானம் படிச்சதிலிருந்து உலகத்துல ஒனக்கு எதைப் பாத்தாலும் நீல வானத்துல இருக்கறமாதிரியே தோணுதுபோலஎன்று சிரித்தான் அவன்.
சரியாகப் பத்து மணிக்கு கல்யாணராமன் வீட்டுக்கு வந்துவிட்டோம். சுற்றுச்சுவர் கதவிலிருந்து வீடு சற்றே தள்ளியிருந்தது. ஒரு பக்கம் நந்தியாவட்டை, எலுமிச்சை, நாரத்தை மரங்கள். மற்றொரு பக்கத்தில் வாழைகள், கத்தரிக்காய், தக்காளிச் செடிகள். வாழையைச் சுற்றி வெற்றிலைக்கொடி படர்ந்திருந்த்து.
கதவு திறந்தே இருந்தது. குனிந்த தலை நிமிராமல் ஒரு சிறுமி வத்திக்குச்சிகளை அடுக்கி இணைத்து ஏதோ ஓர் ஆட்டத்தில் மூழ்கியிருந்தாள். நாங்கள் நிற்பதை அவள் உணரவே இல்லை. அதற்குள் நைட்டியோடு பின்கட்டிலிருந்து வந்தவர் எங்களைப் பார்த்துவிட்டு வேகமாக வாசலுக்கு வந்துயாரு வேணும்?” என்று கேட்டார். அண்ணாமலை நிமிர்ந்து பார்த்துகல்யாணராமன்.....” என்று இழுத்தான். அதற்குள் அவர் கூடத்திலிருந்து உள்ளறையின் பக்கமாகச் சென்றுஎன்னங்க, யாரோ உங்கள தேடி வந்திருக்காங்கஎன்று தெரியப்படுத்திவிட்டு, அதே வேகத்தில் வாசலுக்கு வந்துவராரு. நீங்க உள்ள வாங்கஎன்றார். அப்போதுதான் அந்தச் சிறுமி எங்களைப் பார்த்தாள். “என்ன கண்ணு இது?” என்று பேசத் தொடங்கிவிட்டான் அண்ணாமலை. “வத்திக்குச்சி கோபுரம். நூறு குச்சியில செய்யணும். ஒரு குச்சி கூட அதிகமாகவும்  ஆகக்கூடாது. கொறயவும் கூடாது. அதான் கண்டிஷன்என்றாள்.
கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள்  நாவல்களின் அட்டைப்படங்களாக உள்ள மூன்று ஓவியங்களும் தேதி காலண்டருக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கின.  அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு கைகளையும் சேர்த்துவாங்க வாங்க. வணக்கம்என்று வணங்கியபடியே கல்யாணராமன் வெளியே வந்துவிட்டார். “சரியா சொன்ன நேரத்துக்கு வந்துட்டிங்க. வழி கண்டுபிடிக்க ஏதாவது சிரமமிருந்ததா?” என்றபடி ஆவலுடன் எங்களோடு கைகுலுக்கினார். ”சார், நான் பிரபு. இவன் அண்ணாமலை. இவன் இளங்கோ. எல்லாருமே நெய்வேலிதான் சார்என்று அறிமுகப்படுத்தினேன். ”எங்க எல்லாருக்குமெ உங்க நாவல்கள் ரொம்ப புடிக்கும். ரோசம்மா ட்ரையாலஜிய பத்தி நாங்க பேசாத நாளே இல்லை சார்
அப்பா, கோபுரம் தயார், இங்க பாருங்க, ஒரு குச்சி கூட மிச்சமில்லைஎன்றபடி கைகளை உயர்த்தி வெற்றிக்குரல் எழுப்பிய சிறுமியிடம்சரி சரி, அகிலா, இங்க பார். இவுங்ககிட்ட பேசுஎன்று அழைத்தார் கல்யாணராமன்.  எங்களிடம்எங்க மகள்என்றார். “நான்தான் மொதல்ல பேசனேன்என்றாள் அவள். தண்ணீர் நிரம்பிய மூன்று தம்ளர்கள் வைத்த தட்டை எடுத்துக்கொண்டு வந்தவரிடம்இவுங்க நெய்வேலிம்மா. புது வாசகர்கள்என்று அறிமுகப்படுத்தினார். பிறகு எங்களிடம்பரமேஸ்வரி. என் மனைவிஎன்று சொன்னார். நாங்கள் வணக்கம் சொன்னோம். அவர் புன்னகையோடுவணக்கம். எடுத்துக்குங்க.  பேசிட்டே இருங்க. டீ போடறன்என்று திரும்பினார்.
கல்யாணராமன் ஜன்னலோரமாக இருந்த கைபேசியை எடுத்து வத்திக்குச்சி கோபுரத்தை நாலைந்து கோணங்களில் படமெடுத்தார். பிறகுசரி அகிலா, கலைச்சிட்டு வேற விதமா முயற்சி செய்றியாஎன்று கேட்டார்.  அவள் உற்சாகமாகத் தலையைசைத்தபடியே உட்கார்ந்தாள். அப்போது அவள் தலையைத் தொட்டு புன்னகையோடு அசைத்தார் கல்யாணராமன். பிறகு அருகிலிருந்த மடிப்புநாற்காலிகளை எடுத்துக்கொண்டுநாம் அப்படி மரத்தடிக்கு போயிடலாமா? பேச வசதியா இருக்கும்என்றார். அவர் இரண்டை எடுக்க, நான் இரண்டை எடுத்துக்கொண்டு எலுமிச்சை மரத்தடிக்கு வந்தோம்.
நீங்க எழுதறீங்களா? ஏதாச்சிம் பத்திரிகைல வந்திருக்குதா?” என்று கல்யாணராமனே பேச்சைத் தொடங்கினார். “நாங்க வெறும் வாசகர்கள்தான் சார். இதுவரைக்கும் எழுதணும்னு தோணியதில்ல. ஒருவேள அப்படி ஒரு வேகம் வந்தா எதிர்காலத்துல எழுதலாம்......” கூச்சத்தோடு சொன்னான் இளங்கோ.
நான் கல்யாணராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “எழுதற வேகம்லாம் அப்படித்தான் சுனாமிமாதிரி திடீர்னு வந்து ஆள இழுத்துட்டு போயிடும். எழுத்துல திட்டம் போட்டு செய்யறதுலாம் நடக்காத காரியம்என்றார் அவர்.
எனக்கு நீல வானம் நாவலைப்பற்றி பேசவேண்டும்போல தோன்றியது. அதில் வரும் ராகவன் பாத்திரம் செய்கிற விவாதங்கள் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை. அதைப்பற்றி பேசத் தொடங்கியதும் சொற்கள் அருவிபோல பொங்கிப்பொங்கி வந்தன. கல்யாணராமன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “சார், அவன் அந்த நாவலை பத்து தடவைக்கு மேல படிச்சிட்டான் சார். விட்டா மனப்பாடமாவே ஒப்பிச்சிடுவான்என்றான் அண்ணாமலை. கல்யாணராமனின் சதுரமுகத்துக்கு புன்னகை அழகாக இருந்தது.
இளங்கோ எல்லாருமே கவிதை கதைனு தொடங்கி படிப்படியா நாவலுக்கு போகறததான் பாத்திருக்கேன். நீங்க எப்பிடி சார் நேரிடையா நாவலுக்குள்ள போயிட்டீங்க?” என்று கேட்டான்.
கல்யாணராமன் எழுதணும்ங்கற வெறிதான் எனக்குள்ள எழுதற வேகம் உண்டாவறதுக்கு தூண்டுகோல். அப்படி ஒரு நெருக்கடி. அந்த காலத்துல அப்படி ஒரு வாழ்க்க. ஒரு மூட்ட கல்ல தூக்கி என் தலமேல வச்சமாதிரி இருக்கும் அப்ப. அந்த அளவுக்கு பாரம். முதுவுல வச்ச உப்புமூட்டய ஆத்துக்குள்ள உக்காந்து கழுத கரைச்சிக்கிற கத தெரியுமில்ல உங்களுக்கு. அந்த மாதிரி எழுத்துல கரைச்சிகிட்டேன் நான்.....” என்றார். அவருடைய பார்வை எங்களிடமிருந்து விலகி சில நொடிகள் தொலைவில் தெரிந்த வாழைமரங்களின் பக்கம் திரும்பி நிலைத்தது. பெரிய மரத்தைச் சுற்றி ஏராளமான சின்னச்சின்ன கன்றுகள். செய்தித்தாளைச் சுருட்டி வைத்ததுபோன்ற இலைச்சுருள்கள். சுருள்களுக்கிடையில் பறந்து தாவும் சிட்டுக்குருவிகள்.
ஒருகணம் எங்களை நோக்கித் திரும்பிய கல்யாணராமன்நான் உங்களமாதிரி இருந்த காலத்துலேருந்து சொல்றேன். அப்பதான் எல்லாமே வெளங்கும்என்றார். “சொல்லுங்க சார்என்றபடி அவர் முகத்தையே பார்த்தோம் நாங்கள்.
எங்க அப்பாவுக்கு எங்க அம்மா ரெண்டாம்தாரம். கோவில்ல வச்சி மொறயா தாலி கட்டின கல்யாணம்தான். ஆனா தனியா வீடெடுத்து தங்க வச்சிருந்தாரு அப்பா. அம்மாவுக்கு தையல் தெரியும். மார்க்கெட்ல நாலஞ்சி கடையில தொடர்ச்சியா அவுங்களுக்கு ஆர்டர் குடுப்பாங்க. தச்சி முடிச்சதும் கொண்டும் போயி குடுத்துட்டு அம்மா பணம் வாங்கிவந்துடுவாங்க. அப்பா மார்க்கெட்ல ஒரு துணிக்கட வச்சிருந்தாரு. அப்படித்தான் ரெண்டு பேருக்குள்ள பழக்கம். அது கல்யாணம் வரைக்கும் இழுத்துவந்துட்டுது. அம்மாவுக்கு கூடப் பொறந்தவங்க, சொந்தக்காரங்கன்னு சொல்ல யாருமே இல்ல. அவுங்கம்மா மட்டும்தான் அவுங்களுக்கு. அவுங்களும் சின்ன வயசில ரெண்டாம்தாரமா வந்தவங்க. எல்லாம் விதி. வேற எப்படி சொல்லமுடியும்?”
கல்யாணராமனின் முகத்தில் திடீரென ஒரு இருள் வந்து கவிவதைப் பார்க்கமுடிந்தது. அதே நேரத்தில் அப்பா டீஎன்றபடி இரு கைகளாலும் டீக்கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டைத் தாங்கியபடி அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்தாள் அகிலா. அந்தக் குரல் கேட்டுத்தான் கல்யாணராமன் திரும்பினார். “நீ ஜூஸ் குடிச்சியா அகிலா?” என்றபடி கல்யாணராமன் ஒவ்வொரு கோப்பையாக எடுத்து எங்களுக்குக் கொடுத்தார். “இன்னும் இல்லப்பாஎன்ற சிறுமியிடம்சரி, அம்மாகிட்ட போய் ஜூஸ் வாங்கி குடிஎன்று சொல்லி அனுப்பினார். ஆவி பறக்கும் கோப்பையையே ஒருகணம் பார்த்திருந்த கல்யாணராமன் முதல் மிடறை சூடாகவே பருகினார்.
சனி ஞாயிறுல மட்டும்தான் எங்க வீட்டுக்கு வருவாரு. மத்த நாள்ல பெரிய வீட்டுல இருப்பாரு. நானும் தங்கச்சியும் பொறந்தோம். அப்பா மெட்ராஸ்ல வேல செய்றவரு, லீவ் நாள்லதான் இங்க வந்துட்டு போவாருன்னு ஆரம்பத்துல எங்ககிட்ட அம்மா சொல்லி வச்சிருந்தாங்க. நானும் அதத்தான் உண்மைன்னு நம்பிட்டிருந்தேன். அப்பறம் படிப்படியா நானே புரிஞ்சிகிட்டேன். எல்லார் ஊட்டுலயும் அம்மா அப்பா சேந்து நிக்கறமாதிரி போட்டோ புடிச்சி வச்சிருக்காங்களே, நீங்க ரெண்டு பேரும் ஏம்மா புடிச்சி வச்சிக்கலைன்னு ஒருநாள் தெரியாத்தனமா கேட்டுட்டன். என்னைக்கும் கோவப்படாத அம்மா அன்னைக்கு கோவத்துல அடிஅடினு அடிச்சிட்டாங்க. முதுவுல தடிப்பு தடிப்பா ஆயிடுச்சி. அப்பறம் ராத்திரி அழுதுகினே வலிக்குதா கண்ணு வலிக்குதா கண்ணுனு தடவிக் குடுத்து மருந்துலாம் தடவனாங்க. எங்க கல்யாணத்தன்னைக்கு ஊருக்கே லீவ் நாளுடா. ஒரு கடையும் இல்ல. அதான் எடுக்கலை, புரிதான்னு பட்டும் படாம சொன்னாங்க. நானும் நம்பிட்டமாதிரி சரிம்மான்னு தலையாட்டிகினேன். அதுக்கப்பறம் எங்க அம்மாவ நான் சங்கடப்படுத்தனதில்ல.”
டீயை அருந்திவிட்டு கோப்பையை கீழே வைத்தார். நாங்களும் அருந்தி முடித்தோம்.
எங்க அப்பா கெட்டவரா நல்லவரானு நெனச்சி பாக்கற நெலயில நாங்க இல்ல. ஆனா அவுருதான் எங்க ரெண்டு பேரயும் படிக்க வச்சாரு. துணிமணி எடுத்துக் கொடுத்தாரு. அந்த நன்றிய நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். தங்கச்சி ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஒரு வருஷம் டீச்சர் ட்ரெய்னிங் படிச்சிது. யார்யாரயோ புடிச்சி அத ஒரு ஸ்கூல்ல டீச்சராக்கிட்டாரு அவரு. அம்மா அப்பவும் தச்சிட்டுதான் இருந்தாங்க. நான் டிகிரி முடிச்சிட்டு ஸ்டாஃப் செலக்ஷன், பேங்க் எக்ஸாம்னு மாத்தி மாத்தி எழுதிட்டிருந்தன். ஒன்னும் சரியா அமையலை. அந்த கம்பனி, இந்த கம்பனின்னு பேர் சொல்லி எங்கஎங்கயோ என்ன போன்னு அடிக்கடி சொல்வாரு அப்பா. எனக்கு அங்கல்லாம் போவ புடிக்காது. போவமாட்டன். கடைசியில அவனுக்கு சுயபுத்தியும் இல்ல, சொல்புத்தியும் இல்ல, நீயாச்சிம் எடுத்துச் சொல்லக்கூடாதான்னு அம்மாவ திட்டிட்டு போயிடுவாரு.”
கசப்பான ஒரு புன்னகை அவருடைய உதடுகளில் வந்து படிவதை நான் பார்த்தேன். ஒரு கணத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தொடங்கினார். ”என்னைக்கும் என்ன திட்டி பேசாத அம்மா ஒருநாள் மனசு நொந்து திட்டனாங்க. டெலிபோன் டிப்பார்ட்மெண்ட்க்கு எழுதி போட்டிருக்கேம்மா. இன்னும் ரெண்டு மூனு மாசத்துல பதில் வரும்மான்னு நான் சொன்னத, அவுங்க நம்ப தயாராவே இல்ல. இதே கதையைத்தான் நீ மூனு வருஷமா சொல்லிட்டிருக்க போடானு எழுந்து போயிட்டாங்க. நம்மளவிட வயசுல சின்ன புள்ள சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்கற பணத்துல சாப்படறமேன்னு ஒரு வெக்கம் வரணும்டா ஒனக்கு. உப்பு போட்டு சாப்படறவனுக்கு அதுதான் அடையாளம்னு அடுப்ப பாத்துகினே சொன்னாங்க. எனக்கு அப்படியே நாக்க புடுங்கிக்கணும்போல இருந்திச்சி.”
நாங்கள் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் தொடர்ந்து ஒருநாள் அம்மாகிட்ட குடுக்கறதுக்காக துணிலோட் எடுத்தாந்தாரு அப்பா. என்கிட்ட ஒரு சீட்ட காட்டி இந்த அட்ரஸ்ல போயி பாரு. ஏதோ ஒரு அசிஸ்டெண்ட் வேணுமாம். நம்ம கட பேர சொல்லு. மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபா குடுக்கறம்னு சொன்னாங்கன்னு சொன்னாரு. ரெண்டாயிரம் ரூபா ரெண்டாயிரம் ரூபானு திருப்பித்திருப்பி சொல்லறத கேட்ட சமயத்துல எனக்கு தலையில சுத்தியால அடிக்கறமாதிரி இருந்தது. கவுர்மெண்ட் ஆபீஸ்ல அங்க குமாஸ்தா இங்க குமாஸ்தானு போனா கூட அதான் குடுப்பானுங்க தெரிமான்னாரு. நான் சீட்ட வாங்கி பாத்தேன். கம்பெனி மாதிரி தெரியலை. ஏதோ வீட்டு அட்ரஸ். நான் பதில் சொல்லாம சும்மா இருந்தன்.” என்றார்.
திடீர்னு அவர் அம்மா பக்கம் பாத்து சத்தமா பேசனாரு. பேசப்பேச குரல் உடைஞ்சி ஒரு கட்டத்துல அழ ஆரம்பிச்சிட்டாரு. அங்கயும் பசங்க பெரிசாய்ட்டெ இருக்காங்க, தெரியுமில்ல. அத புரிஞ்சிக்கணும். என்னைக்காவது ஒரு நாள் ஊட்ட விட்டு எங்கயும் போவக்கூடாதுனு என்ன புடிச்சி நிறுத்தி வச்சிட்டாங்கன்னா நான் என்ன பண்ணமுடியும். இல்ல, எனக்கே ஒன்னு ஆவுது, அப்ப நீ என்ன செய்வ? இவன ஒரு ஆளாக்கி நிக்க வச்சிட்டா நிம்மதியா இருக்கலாம்னு நெனைக்கறது தப்பா?  இப்பிடி வீம்பு புடிச்சி அலயறானே ஒம் புள்ள. தான் இஷ்டத்துக்குத்தான் நடப்பேன்னு ஆளுக்கு ஆள் நெனைச்சாங்கன்னா, அப்பறம் இங்க நான் எதுக்குனு கேட்டுட்டு கண்ண தொடச்சிகினே வெளிய போயிட்டாரு.....”
கல்யாணராமன் என்னைப் பார்த்தபடி அம்மா என்கிட்ட ஒரு வார்த்த கூட பேசலை. மனசுக்குள்ள அது எனக்கு உறுத்தலா இருந்திச்சி. வீட்டுக்குள்ள இருக்கவே புடிக்கலை. வேகமா வெளிய வந்துட்டன். கையில பத்து பைசா கெடயாது. நெல்லித்தோப்புக்கு நடந்தே போனேன். அப்பா குடுத்திருந்த அட்ரஸ் சீட்டுல இருந்த வீட்ட கண்டுபிடிச்சன். பெரிய ஊடு. பிரான்ஸ்காரங்க இருக்கற ஊடு மாதிரி இருந்திச்சி. வாட்ச்மேன் தாத்தாகிட்ட விவரம் சொன்னேன். அவர் வாசல்லேர்ந்தே இன்டர்காம்ல தகவல் சொன்னாரு. அப்பறமா என்ன உள்ள போவ சொன்னாருஎன்றார்.
ஒரு காகம் வேகமாகப் பறந்துவந்து நாரத்தை மரக்கிளையில் அமர்ந்து சத்தம் போடாமல் எங்களையே சில நொடிகள் பார்த்தபடி அமர்ந்தது. பிறகு விர்ரென பறந்து போனது.
கூடத்துல ஒரு பிரம்பு நாற்காலியில தடியா ஒரு அம்மா உக்காந்து டிவி பார்த்துட்டிருந்தாங்க. சந்தனக்கடத்தல் வீரப்பன் யாரயோ கடத்திம்போயி  காட்டுக்குள்ள வச்சிருக்கறதா செய்தி ஒடிட்டிருந்தது. அவுங்க உட்கார்ந்திருந்த எடத்துக்கு மேல சுவத்துல ஒரு பெரிய படம் ஆணியில மாட்டியிருந்திச்சி. சந்தனமாலை போட்டிருந்தாங்க. தெரிஞ்ச முகமாயிருக்குதேன்னு உத்து பாத்துகினே ஒரு நொடி யோசிச்சேன். ஏராளமான ஆட்கள் பேருங்க மனசுக்குள்ள முட்டி மோதிச்சி. யாரு யாருனு உருட்டிகினே இருந்தேன்.  சட்டுனு ஞாபகம் வந்திடுச்சி. முத்துசாமி நாயக்கர். பாண்டிச்சேரியில ஹரிஜன சேவா சங்கம் நடத்தனவரு. சுப்பையா கம்யூனிஸ்ட் கட்சிக்கு போயிட்ட பிற்கு சங்கத்தை அவர்தான் பாத்துகிட்டாரு. அந்த அம்மா பக்கமா திரும்பி இவர் முத்துசாமி நாயக்கர்தானன்னு கேட்டேன். ஆமாம்னு அந்த அம்மா தலயாட்டிகினே எங்க அப்பான்னு சொன்னாங்க. அப்பறமா என் பேரு, படிப்பு விவரம்லாம் கேட்டாங்க. எல்லாத்தயும் சொன்னேன். கடைசியா உனக்கு முருகேசன் என்ன வேணும்னு கேட்டாங்க. அப்பான்னு சொன்னேன்.”
நெய்வேலி என்பதாலோ என்னமோ எங்களுக்கு அந்தப் பெயர் அறிமுகமான பெயராக இல்லை. அதனால் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். ”முத்துசாமி நாயக்கர தெரிஞ்சிருக்குதுன்னா ஒனக்கு ரோசம்மாவயும் தெரிஞ்சிருக்கணுமேன்னு சொல்லிட்டே அந்த அம்மா என்ன பாத்தாங்க. நாயக்கர் மனைவி, ரெட்டியார்பாளையம் கிறிஸ்து ஆசிரமம்னு சொன்னேன். எங்கம்மாதான் அதுன்னு சொன்னாங்க. சட்டுனு அவுங்க பேர்ல ஒரு மதிப்பும் மரியாதயும் என் மனசுல கூடுதலாச்சி. என் பேரு வெண்ணிலான்னு சொன்னாங்க. நான் கல்யாணராமன்னு சொன்னேன். அம்மாவுக்கு தொண்ணூறு வயசாவுது. இங்கதான் கீழ அந்த அறையில இருக்காங்க. பகல்ல பாத்துக்க ஒரு நர்ஸ், ராத்திரியில பாத்துக்க ஒரு நர்ஸ்னு தனித்தனியா இருக்காங்க அதெல்லாம் கவலயில்ல. அப்பா  போயி பதினஞ்சி வருஷமாவுது. அதுலேருந்து அம்மாவுக்கு ஒரே பொழுதுபோக்கு பழைய டைரிங்கள எடுத்து படிக்கறதுதான். அப்பாவுடைய டைரி ஒரு அம்பது இருக்கும். அம்மாவே எழுதன டைரி ஒரு அம்பது இருக்கும். கைக்கு கெடச்ச டைரிய எடுத்து காலையிலேந்து படிச்சிட்டே இருப்பாங்க. அவுங்களா சிரிச்சிக்குவாங்க. அவுங்களா அழுவாங்க. என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டாங்க. படிச்சி படிச்சி அந்த பழைய காலத்த அவுங்க மறுமடியும் மனசுக்குள்ளயே உண்டாக்கிக்கறாங்கன்னு நெனைக்கறேன். அவுங்க இந்த காலத்துக்கே வர விரும்பலை. ரெண்டு பேரும் சேந்து ஒன்னா வாழ்ந்த காலம் மட்டுமே போதும்னு நிறுத்திட்டாங்க.  சத்தியாகிரகம், சுதந்திரப்போராட்டம், ஆசிரமம்னு அந்த காலத்துக்குள்ளயே இருக்கணும்னு ஆசைப்படறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஒரு வகையில அதுவும் நல்லதுதான். இந்த காலத்துல புதுசா தெரிஞ்சிக்க என்ன இருக்குது. அடிதடி, குத்து, பதவிவெறி, பொறாமை அவ்ளோதானே.”
கல்யாணராமனின் குரலில் ஒருவித உற்சாகம் வந்து படிவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ”இந்த பத்து வருஷத்துல அம்மாவுக்கு மூனுதரம் ஆப்பரேஷன் நடந்திட்டுது. மேக்சிமம் பாய்ன்ட்டுக்கு போயிட்டுது பார்வை. லென்ஸ் வைக்கலாம்ன்னா இந்த வயசுக்கு தாங்காதுன்னு சொல்லிட்டாரு டாக்டரு. ஆனா அம்மாவால படிக்காம இருக்கமுடியலை. பார்வை கொறயுதுன்னு சொன்னதுமே லென்ஸ் வச்சி படிக்க பழகிட்டாங்க. ஆனா அது ஆபத்துன்னு சொல்றாரு டாக்டரு. கண்ணுல துணிய கட்டிகினு கொஞ்ச நாள் எதயும் பார்க்காம இருக்கறது நல்லதுன்னு சொன்னாரு அவர். இப்ப ஒரு பத்து நாளா அம்மாகிட்ட டைரிங்கள குடுக்கறதில்ல. அலமாரியில வச்சி பூட்டிட்டோம். ஆபீஸ் டைம் மாதிரி டென் டு சிக்ஸ். அம்மாவுக்கு நீங்க டைரி படிக்கணும். சிம்பிள். அவ்ளோதான். லஞ்ச் நீங்க இங்கயே சாப்ட்டுக்கலாம்னு சொன்னாங்க. பிறகு வாங்க, அம்மாவ பாருங்கன்னு உள்ள கூப்டும் போனாங்க. வதங்கிப் போன பூசணிக்கொடிமாதிரி ஒரு ஈச்சர்ல படுத்திருந்தாங்க ரோசம்மா. ஒரு காட்டன் நைட்டி. மடியில ஒரு சின்ன துண்டு. அவ்ளோதான்.”
பக்கத்துல ஒரு நர்ஸ் பொண்ணு இருந்தா. வெண்ணிலா மேடம் என்னை ரோசம்மா முன்னால நிறுத்தி டைரி படிச்சி காட்ட ஒரு தம்பி வந்திருக்காரு. ஒன்ன பத்தியும் அப்பாவ பத்தியும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காருன்னு சொன்னாங்க. அப்படியே மெதுவா தலய நிமுத்தி உக்காந்தாங்க ரோசம்மா. ரெண்டு கைங்களையும் நீட்டினாங்க. உங்களத்தான் தேடறாங்க, புடிங்கன்னு சொன்னாங்க வெண்ணிலா மேடம். நான் கைய நீட்டி அவுங்க கைய புடிச்சேன். ஈர மணல்ல கைய வச்சமாதிரி எனக்கு சிலுத்து போச்சி. அவுங்க மெதுவா ஒன் பேரென்ன ராஜான்னு கேட்டாங்க. அந்தக் குரல கேக்கும்போது என்னமோ நெஞ்சயே அடைக்கிறமாதிரி இருந்தது. . நான் பேர சொன்னதும் ரெண்டு மூனு தரம் அதயே திருப்பித்திருப்பி சொன்னாங்க. சரிம்மா, நாளையிலேர்ந்து வருவாரு சரியான்னு எழுந்திருந்தாங்க வெண்ணிலா மேடம். நாளைக்கி வரைக்கும் எதுக்கு மேடம் தள்ளிப் போடணும். இப்பவே ஆரம்பிச்சிடலாம் மேடம். வீட்டுல போயி என்ன செய்யப் போறேன், சாய்ங்காலம்வரைக்கும் படிச்சிட்டு போறேன்னு சொன்னன். அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மா, அவரு இப்பவே ஆரம்பிக்கறாராம். படிக்க சொல்லட்டுமான்னு ரோசம்மாகிட்ட கேட்டாங்க. அழகா சிரிச்சிகிட்டே   சரின்னு தலயாட்டனாங்க ரோசம்மா. வெண்ணிலா மேடம் அலமாரிய தெறந்து கைக்கு கிடைத்த ஒரு டைரிய எடுத்து குடுத்தாங்க. 1947 டைரி. நானும் அதைப் புரட்டி தோராயமா ஒரு பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். படிக்க படிக்கத்தான் ரோசம்மா அந்த பழைய டைரிங்கள ஏன் திரும்பித்திரும்பி படிக்கறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். உண்மையிலயே அந்த பழைய காலம் கண்முன்னால் விரிஞ்சிது. சாயங்காலம் கெளம்பற சமயத்துல என்ன பக்கத்துல கூப்ட்டு கைய புடிச்சி காட் ப்ளஸ் யூ மை டியர் சைல்ட்னு சொன்னாங்க. ஏன்னு தெரியலை. என் கண்ணுலாம் கலங்கி போயிடுச்சி.”
கல்யாணராமனின் சொற்கள் வழியாக என்னால் அந்தக் காட்சியை கற்பனை செய்துகொள்ள முடிந்தது.  எங்கள் கேள்விகளோ, சந்தேகங்களோ அவருடைய பேச்சின் ஒட்டத்தைத் தடுத்துவிடுமோ என அஞ்சி அமைதியாக அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தோம்.
டெலிபோன்ஸ்லேருந்து சீக்கிரமா லெட்டர் வந்துடும்னு நெனச்ச நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வந்தா போதும்னு நெனைச்சிக்கற அளவுக்கு அந்த வேலை எனக்கு ரொம்ப புடிச்சிட்டுது. முதல் மாசம் சம்பளம் வாங்கியாந்த அன்னைக்கு அப்பா எங்க ஊட்ல இருந்தாரு. இப்ப திருப்திதான ஒங்களுக்குன்னு மனசுக்குள்ளயே நெனச்சிகினு நான் அவரு கையிலதான் அந்த பணத்த குடுத்தேன். அப்பா ஒரு நொடி என்ன நிமுந்து பாத்துட்டு சட்டுனு குனிஞ்சி தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு ஒடம்பே நடுங்கிட்டுது. அப்பா ஒன்ன பாழுங்குழியில தள்ளிட்டன்னு நெனச்சிக்காத கல்யாணராமா,  என் காலத்துக்குள்ள நீ உன் கால்ல நிக்கறத பாக்கணும்னுதான் அப்பா நெனச்சேன். இனிமேல உன் உழைப்புல நீ எந்த உயரத்துக்கு போனாலும் சந்தோஷம்தாம்பான்னு சொல்லிட்டு அம்மாகிட்ட குடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கன்னு கைய காட்டனாரு. எனக்கும் அழுகையா வந்துட்டுது. ரெண்டு பேரயும் நிக்க வச்சி கால்ல உழுந்தன். ரெண்டு பேருமே எனக்கு தின்னூரு பூசிவிட்டாங்க.”
டைரிங்கள படிக்கப்படிக்க ரோசம்மாவ பத்தியும்  நாயக்கர பத்தியும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இங்க கல்வே காலேஜ்ல இண்டர்மீடியட், அப்பறம் மெட்ராஸ்ல பி..வும் லாவும் படிச்சிருக்காரு. அப்பதான் தற்செயலா சைதாப்பேட்டைல ஆயிரக்கணக்குல செருப்பு தைக்கிற தொழில செய்யறவங்க கூடியிருந்த ஒரு கூட்டத்துல  காந்தி பேசறத அவரு கேட்டிருக்காரு. எளிய மக்களுக்கான சேவை எந்த அளவுக்கு மகத்தானதுன்னு அன்னைக்கு அவருக்கு புரிஞ்சிது. அன்னைலேருந்து அவர் கதருக்கு மாறிட்டாரு. அவரு வக்கீலா தொழில் செஞ்ச காலத்துல அவருகிட்ட வந்ததுல நூத்துக்கு தொண்ணூறு கேஸ் வாய்க்கா தகராறு வரப்புத்தகராறு கேஸ். சாதித்தகராறு கேஸ். கந்து வட்டி கடனுக்கு நெலத்த எழுதி வைக்கற கேஸ். குடிபோதை கேஸ். அவுங்களுக்கு கல்வி அறிவு இல்லாதது ஒரு பெரிய குறைன்னு அப்ப அவருக்கு தோணுது. பாதிக்கப்பட்டவங்கள்ல பெரும்பாலான ஆளுங்க அடிமட்டத்துல இருந்தவங்க. ஒருநாள் அவுங்க இருக்கற எடத்துக்கே போயி வாங்க, வந்து படிக்க கத்துக்குங்கன்னு கூப்ட்டாரு. ஒரு மரத்தடியில லாந்தர் வெளக்கு வச்சிகினு எழுத்து சொல்லிக் குடுத்தாரு.  அவருடைய ஆர்வம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா வளந்தது. ”
அந்த ஆர்வம் சுப்பையா ஆரம்பிச்ச ஹரிஜன சேவா சங்கத்துகிட்ட கொண்டுவந்து சேத்துது. அவர் செஞ்ச அதே வேலையை கிறிஸ்து ஆசிரமத்துலேருந்து செஞ்சவங்க ரோசம்மா. ஒருத்தவங்க செஞ்ச சேவை இன்னொருத்தவங்களுக்கு புடிச்சிருந்தது. ரெண்டு பேருக்கும் மனசு ஒத்து போனதால ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க. ஒரு இந்துவும் ஒரு கிறிஸ்துவப் பெண்ணும் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னா மதம் மாறணும்ன்னு சொல்றதுண்டு. ஆனா, மதமாற்றத்துக்கு இடமில்லாமலே ரெண்டு பேரும் சேந்து வாழ்ந்தாங்க.”
ஒரு டைரியில நாயக்கரு தன்னுடைய சின்ன வயசு அனுபவங்கள எழுதி வச்சிருந்தாரு. அவருடைய அப்பாவுக்கு அவுங்க அம்மா ரெண்டாம் தாரம். அம்மாவுக்கு அம்மாவும் ரெண்டாம்தாரம். அவருக்கு ஒரு தங்கச்சி இருந்தது. அந்த பொண்ண யாரோ ஒரு பிரான்ஸ்காரனுக்கு ரெண்டாம்தாரமா கட்டி வைக்கறாரு அவுங்கப்பா. பத்து காசி சம்பாதிக்க உனக்கு துப்பிருக்கானு அவரு அப்பா அடிச்ச அடியிலதான் வெறுத்து போயி ஒரு அனாத ஆசிரமத்துல வந்து சேந்து படிக்க ஆரம்பிக்கறாரு. அந்த எடத்த படிக்கும்போது மனசே உருகிட்டுது. ஒரு நிமிஷம் கலங்கி நின்னு யோசிக்கற சமயத்துல அவரு வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்னுபோலவே இருக்குதேன்னு தோணிச்சி. அவருடைய தொடர்ச்சிதான் நானோன்னு கூட ஒரு எண்ணம் வந்தது. அந்த டைரிகள் மீது திடீர்னு ஒரு பெரிய ஈர்ப்பு வந்துட்டுது.”
மதிய சாப்பாட்டுக்குப் பிறகு ரோசம்மா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்குவாங்க. அந்த ரெண்டு மணி நேரமும் நான் மறுபடியும் வருஷ வாரியா டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு பேர் வாழ்க்கயையும் என்னால துல்லியமா புரிஞ்சிக்க முடிஞ்சது. ஒருதரம் ஏதோ ஒரு டைரிய படிச்சிட்டிருந்தேன். அது அவரு ஜெயில்ல எழுதன டைரி. அவரு ஜெயில்ல இருந்த சமயத்துல ரோசம்மா கர்ப்பிணியா இருந்திருப்பாங்க போல. ஒவ்வொரு நாள பத்திய குறிப்பிலயும் அவுங்கள பத்தி ரெண்டு வரி இருந்தது. அத நான் படிச்சிட்டு போவும்போது திடீர்னு ரோசம்மா ஏதோ பதில் சொல்றமாதிரி இருந்தது. முதல்ல அது என் கற்பனையோன்னு நெனச்சேன். அவுங்க உதடு அசைவதை கண்ணால பாத்த பிறகுதான் எனக்கே அது புரிஞ்சிது. சட்டுனு படிக்கறத நிறுத்திட்டு பக்கத்துல போய் அவுங்க சொல்றத கேட்டேன். சாம் சாம்னு சொன்னாங்க. முதல்ல எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு நிமிஷத்துக்குப் பிறகுதான் தன்னுடைய டைரியில பல இடங்கள்ல மை டியர் சாம்னு அவுங்க எழுதி வச்சிருந்தத நெனச்சிகிட்டேன். அது நாயக்கருக்கு அவுங்க வச்சிருந்த செல்லப் பேர்.”
கிட்டத்தட்ட ஆறுமாசம் தெனமும் ரோசம்மா வீட்டுக்கு போயிட்டிருந்தேன். ரெண்டு பேருடைய வாழ்க்கையும் என் கண்ணு முன்னால நடக்கறமாதிரி இருந்தது. அது என்னமோ ஒரு பெரிய வரலாற்றயே தெரிஞ்சிகிட்டமாதிரியான அனுபவம். ஒருநாள் வழக்கம்போல டைரி படிக்க அவுங்க வீட்டுக்கு போயிருந்தன். வீட்டுல யாருமே இல்ல. வாட்ச்மேன்தான் இருந்தாரு. பெரியம்மா பாத்ரூம்ல வழுக்கி உழுந்துட்டாங்க. தலையில அடி, ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அங்க ஓடனேன். வெண்ணிலா மேடம்தான் நின்னுட்டிருந்தாங்க. வழக்கமா ராத்திரி நேரத்துல வரக்கூடிய நர்ஸ் தூங்கிட்டிருந்தா. அவளுக்கு எதுக்கு தொந்தரவு தரணும்ன்னு அம்மா தானாவே பாத்ரூம் போயிட்டாங்க. திரும்பி வரும்போது கதவுல இடிச்சி தடுமாறி விழுந்திட்டாங்க. தலயில இடுப்புல தோள்பட்டையில எல்லா இடத்துலயும் அடின்னு சொன்னாங்க. அவங்க புருஷன் செக்ரடேரியட்ல பெரிய பதவியில இருக்கறவர். அவரும் அங்கதான் உட்கார்ந்திருந்தார். அவர்தான் என்ன ஐசியுவுக்கு அழச்சிம் போயி ரோசம்மாவ காட்டனாரு. ஏகப்பட்ட குழாய்ங்களுக்கு நடுவில அவுங்க ஒரு ஈரத்துணி மாதிரி கெடந்தாங்க.”
ஆபத்தான கட்டத்த தாண்டிட்டாங்க. ஆனா சுயநினைவே வரலை. ரெண்டு மூனு வாரம் ஆஸ்பத்திரிலேதான் இருந்தாங்க. எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லிட்டாங்க டாக்டர்ங்க. அதனால அந்த நிலைமையிலயே ரோசம்மாவ வீட்டுக்கு அழச்சிட்டு வந்துட்டாங்க. அவுங்க அறையையே ஐசியுவா மாத்தி கூடுதலா ரெண்டு நர்ஸ் போட்டு பாத்துகிட்டாங்க. அவுங்கள பாக்கவே பாவமா இருந்தது.”
மேடம், ஒரு டைரிய எடுக்கறீங்களான்னு ஒருநாள் வெண்ணிலா மேடத்துகிட்ட கேட்டன். எதுக்குன்னு மேடம் என்ன குழப்பத்தோடு பாத்தாங்க. மேடம், நம்மள பாக்கவோ, நம்மளோட பேசவோதான் அவுங்க நினைவு அனுமதிக்கலையே தவிர, அவுங்களுடைய நினைவு அப்படியே உயிர்ப்போடுதான் இருக்கும் மேடம். நாம படிக்கற சத்தம் அந்த நினைவை நேரிடையாவே போய் நிச்சயம் தொடும்னு சொன்னன். அவுங்க குழப்பமா பாத்தாங்க. எடுங்க மேடம்னு அழுத்தி சொன்னதும் எடுத்து குடுத்தாங்க. நான் ஒரு பக்கத்த திருப்பி படிக்க ஆரம்பிச்சேன். அந்த மேடமும் சரி, அங்க இருந்த நர்ஸ்ங்களும் சரி,  என்னை ஏதோ பைத்தியக்காரன பாக்கறமாதிரி விசித்திரமா பாத்தாங்க. ஆனா நான் அதை ஆத்மார்த்தமா செஞ்சேன். சாயங்காலமா வந்த டாக்டர் மட்டும் இதுவும் ஒரு ட்ரீட்மென்ட்மாதிரி இருக்கட்டும், பலன் கெடச்சா நல்லதுதானேன்னு சொல்லிட்டு போனார். அப்பறம்தான் அவுங்க அமைதியானாங்க.”
நான் மறுபடியும் டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். முத்துசாமியையும் ரோசம்மாவையும் நெருக்கமா புரிஞ்சிக்கணும்ங்கறதுக்காக நான் ரோசம்மாவின் முதல் டைரியிலிருந்து தொடங்கினேன். என்னைக்காவது ஒருநாள் கண்ண தெறந்து கல்யாணராமான்னு கூப்புடுவாங்கன்னு நிச்சயமா எனக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நாளைக்கு ரெண்டு டைரிய படிச்சேன். சில சமயத்துல மூனு கூட படிச்சிருக்கேன். மூனு மாசத்துல ரெண்டு பேருடைய மொத்த வாழ்க்கைய பத்தியும் எனக்கு ஒரு பிடி கெடைச்சிது.”
துரதிருஷ்டவசமா ரோசம்மா கண்ண தெறக்காமயே செத்துட்டாங்க. ஒருநாள் வழக்கம்போல படிக்க போன சமயத்துல அவுங்க வீட்டு முன்னால ஏகப்பட்ட கூட்டம் நின்னுட்டிருந்தது. அத  பாத்து திகைச்சி நின்னுட்டன். உயிரில்லாத ரோசம்மா முன்னால நிக்கும்போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடியலை. அஞ்சலி செலுத்தறதுக்கு ஆயிரக்கணக்குல ஆளுங்க வந்து போனாங்க. நாலஞ்சி பாதிரியார்கள் வந்தாங்க. ரோசம்மாவ பெட்டிக்குள்ள வச்சி ப்ரேயர் செஞ்சாங்க. திடீர்னு வெண்ணிலா மேடம் என்னை பாத்து சைகை காட்டி கிட்ட வான்னு சொன்னாங்க. ஓடி போயி நின்னதும் மறந்தே போச்சு, போய் அந்த டைரிங்க எல்லாத்தயும் எடுத்துட்டு வான்னு சொன்னாங்க. மெதுவா எதுக்கு மேடம்னு கேட்டன். அந்த நினைவுகள் அவுங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவைன்னு உனக்கே தெரியும், அந்த நினைவுகளோடயே அவுங்க போறது நல்லதுதானேன்னு சொன்னாங்க. அதக் கேட்ட்துமே எனக்கு ஒடம்புல அனல்பட்டமாதிரி இருந்தது. எல்லா சடங்குகளும் அடங்குனதும் டைரிங்கள கேட்டு எடுத்துக்கலாம்னு நான் நெனச்சிட்டிருந்தேன். இப்ப வேற வழியே இல்ல. நெஞ்சு கனக்க எல்லா டைரிகளையும் எடுத்து வந்து ரோசம்மாவ வச்சிருந்த பெட்டிக்குள்ள வச்சேன். அன்னைக்கு சாய்ங்காலமே கல்லறையில புதைச்சிட்டாங்க.”
அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க குடும்பத்துல என்னென்னமோ நடந்துட்டுது. என் தங்கச்சி அவ கூட ஸ்கூல்ல வேலை செய்யற ஒரு கிறிஸ்துவ பையன கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுச்சி. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். பேரலலைஸ் அட்டாக். ரெண்டும் ஒரே சமயத்துல. எங்களால போய் பார்க்கக்கூட முடியலை. அந்த வீட்டுல யாருமே எங்கள சேக்கலை. ஒரு வருஷம் இழுக்க பறிக்க கெடந்து போய் சேர்ந்துட்டாரு. அம்மாவுக்கு ஏற்கனவே சக்கர இருந்தது. மாத்திரை சாப்ட்டுட்டுதான் இருந்தாங்க. ஆனா ஒருநாள் பெரிசா கால் வீங்கிட்டுது. ஆஸ்பத்திரில எடுக்கணும்னுட்டாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம், என்ன வீட்டுக்கு கூப்ட்டிட்டு போன்னு அம்மா புடிவாதம் புடிச்சாங்க. நான்தான் அவுங்கள கவனிச்சிகிட்டேன். நம்மள பெத்தவங்களுக்கு நாம செய்றம்னு நான் நெனச்சேன். ஆனா அவுங்களால அத ஏத்துக்க முடியலை. நான் இல்லாத நேரத்துல ஒருநாள் தூக்கு போட்டுகினு செத்துட்டாங்க. திடீர்னு உலகத்துல எல்லாருமே என்ன தனியா உட்டுட்டு போயிட்டமாதிரி இருந்தது. அப்ப எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம். டெலிபோன்ஸ்ல வேல கெடச்சதுதான்.”
அப்பறம் ஒரு ஆறேழு வருஷம் ஒன்னுமே செய்யலை. திடீர்னு ஒருநாள் ரோசம்மாவயும் நாயக்கரயும் நெனச்சிகிட்டேன். அந்த நூறு டைரிக் குறிப்புகளும் எனக்கு ஞாபகத்துலயே இருந்தது. ஒரு வேகத்துல எல்லாத்தயும் ராப்பகலா எழுதனன். அப்பறமா படிச்சி பாத்து நாயக்கர் சரித்திரம், ரோசம்மா சரித்திரம்னு தனியா பிரிச்சி தொகுத்து எழுதனன். எதுவும் சரியா வரலை. அப்படியே எடுத்து பரண்ல வச்சிட்டேன். ஒருநாள் டிவில ஏதோ ஒரு படம் பாத்துட்டிருந்தேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தை பெத்துக்கறத புரியவைக்கற மாதிரி ஊட்டு வாசல்ல ஒரு மாமரத்த மொதல்ல காட்டனாங்க. அடுத்ததாக மரம் முழுக்க பூநிறைந்த காட்சி. அதற்கடுத்ததாக காய்கள் குலுங்கும் காட்சி. தொடர்ந்து பழங்களெல்லாம் பழுத்து தொங்கும் காட்சி. பாத்துட்டிருக்கும்போதே எனக்குள்ள ஏதோ மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்தது. நாயக்கர் சரித்திரத்துல நான் செய்யவேண்டியது என்னனனு எனக்கு ஒரு தெளிவு கெடைச்சிது. பூ, காய், கனி. அந்த சொற்கள் மனசில ஓடிட்டே இருந்தது. உடனே எழுந்து வீட்டுக்கு வந்துட்டேன். பரண்ல போட்டிருந்த கையெழுத்துப் பிரதிய எடுத்து மறுபடியும் படிச்சேன். ரெண்டு மூனு வாரம் படிச்சி ரெண்டு பேருடைய லட்சியவாதமும் ஓங்கியிருந்த காலகட்டம் வரைக்கும் ஒரு பகுதி, அவுங்க காதல் கல்யாண வாழ்க்கைன்னு ஒரு பகுதி, அவுங்க முதுமை கடைசி பகுதின்னு பிரிச்செடுத்தேன். அவுங்க வாழ்க்கைய சரியா பிரிச்சிட்ட மாதிரிதான் இருந்தது. ஆனாலும் திருப்தி இல்லை. மறுபடியும் சோர்ந்துபோய் அப்படியே மேசைமேல போட்டுட்டேன்.”
நாப்பது வயசுலதான் நான் பரமேஸ்வரிய கல்யாணம் செஞ்சிகிட்டேன். என் கூடவே டெலிபோன்ஸ்ல வேல செய்றவங்க. ஒருநாள் நான் இல்லாத நேரத்துல இந்த கையெழுத்துப் பிரதிகளை படிச்சிட்டு என்னங்க இது, நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களான்னு கேட்டாங்க. நான் இல்லையேன்னு சொன்னேன். அப்ப இது என்னன்னு கையெழுத்திப் பிரதிய காட்டி கேட்டாங்க.  நான் நடந்ததயெல்லாம் அவுங்ககிட்ட சொன்னேன். அவுங்க வரலாறு முழுசா தெரியாம அவுங்களபத்தி நீங்க எப்படி எழுதமுடியும்னு கேட்டாங்க. அதனால்தான் பாதியில நிறுத்திட்டேன்னு சொன்னன். வரலாறாதான் நீங்க எழுதமுடியாதே தவிர, நாவலா நீங்க எழுதலாம்னு அவுங்க சொன்னாங்க. தெரிஞ்ச வரலாறுங்கறது ஒரு உண்மை. ஆண்டனாவ திருப்பி சேட்டிலைட் பக்கமா வைக்கறமாதிரி அந்த உண்மையை அதைவிட பெரிய உண்மையை நோக்கி இழுத்துட்டு போனா போதும். உங்க கற்பனையாலதான் அது முடியும்னு சொன்னாங்க. எவ்ளோ பெரிய விஷயத்த ரொம்ப அசால்ட்டா சொன்னமாதிரி இருந்தது.”
எல்லாத்தயும் எடுத்து வீசிட்டு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். அந்த மாதிரி நாலு முறை எடுத்து வீசியிருக்கேன். அஞ்சாவதா தொடங்கி எழுதி முடிச்சதுதான் கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள் நாவல்கள். இத தனித்தனியாவும் படிக்கலாம். சேத்தும் படிக்கலாம். வாசகர்கள் எப்படியோ அதுக்கு ரோசம்மா ட்ரையாலஜின்னு பேர் குடுத்துட்டாங்க. சொல்லிசொல்லி அந்த பேரே இப்ப நெலச்சிபோச்சி.”
நாங்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தோம். வார்த்தைகளே வரவில்லை. பல நிமிடங்கள் கல்யாணராமனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென எதையோ பேச நினைத்தவனாக நான்இந்த அளவுக்கு சிறந்த நாவல்களா வரும்ன்னு நீங்க இத எழுதற காலத்துல நெனச்சிங்களா சார்?” என்று கேட்டேன்.  கல்யாணராமன் சிரித்துக்கொண்டேசிறப்பா எழுதணும்னு மட்டும்தான்  என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனாலதான் பல தரம் திருப்பித்திருப்பி எழுதனேன். ஒங்கள மாதிரியான வாசகர்கள் அந்த நாவல்களைக் கொண்டாடறத பார்க்கற சமயத்துலயும் புதுப்புது கோணங்கள்ல பேசறத கேக்கற சமயத்துலயும் மகிழ்ச்சியாதான் இருக்குது. என் முயற்சி எதுவும் வீண் போகலைங்கற திருப்தி இருக்குது. இந்த மூனு நாவல்களுக்குப் பிறகு கழுகுகள், ஊற்றுக்கண்கள், நீலவானம் மூனு நாவல்களை எழுதிட்டேன். இருந்தாலும் இன்னும் கூட ரோசம்மா ட்ரையலாஜிக்கு கெடைச்ச வரவேற்பு கொறயலைஎன்று சொன்னார்.
அண்ணாமலைநாவல்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு இலக்கணமே இதனால உருவாய்டுச்சி சார்என்று ஒரு வேகத்தில் சொன்னான்.
அப்பா, புதுசா இன்னொரு கோபுரம் அடுக்கி முடிச்சிட்டேன். வந்து பாருங்கஎன்றபடி எழுந்து நின்று கைதட்டி ஆடினாள் அகிலா.  நாங்களும் கல்யாணராமனும் மரத்தடியிலிருந்து எழுந்து சென்று கோபுரத்தைப் பார்க்கும்போது சமையல்கட்டிலிருந்து கல்யாணராமனின் மனைவியும் வந்துவிட்டார். ஜன்னலோரத்தில் வைத்திருந்த கைபேசியை எடுத்து அந்த வத்திக்குச்சி கோபுரத்தைப் படம்பிடிக்க நல்லதொரு கோணத்துக்காக அங்குமிங்குமாக நகர்ந்தார் கல்யாணராமன்.

(பதாகை - மே 2020 இணைய இதழில் பிரசுரமான சிறுகதை )