Home

Monday 2 August 2021

மிகையின் தூரிகை - புதிய சிறுகதைத்தொகுதி

 

இன்பத்திகைப்பில் ஆழ்ந்துபோகும் வகையில் நேற்று (30.07.2021)  ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல நண்பகல் உணவு இடைவேளை சமயத்தில் அஞ்சல்காரர் வந்து அஞ்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். கொரானா சடங்குகளை முடிக்கும் வகையில் அவற்றை வாசலிலேயே சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பிறகு உள்ளே எடுத்துவந்தேன்.

அஞ்சல்களில் ஒரு புத்தகக்கட்டு இருந்தது. யார் அனுப்பியிருப்பார்கள் என்கிற கேள்வியோடு உறையைப் பார்த்தேன். சந்தியா பதிப்பகத்தின் முத்திரை இருந்தது. என்ன புத்தகமாக இருக்கும் என்று மனத்தில் ஒரு கேள்வி ஓடியது. நூலாக்க வேலை நடந்துகொண்டிருப்பதாக சந்தியா நடராஜன் குறிப்பிட்டிருந்த வண்ணதாசனின் அகம்புறம்நெ.து.சுந்தரவடிவேலின் வள்ளுவன் வரிசை புத்தகங்களின் தலைப்புகள் மனத்தில் மின்னி மறைந்தன. என்னால் அக்கணத்தில் சரியாக ஊகிக்க முடியவில்லை.




பிரித்துத்தான் பார்ப்போமே என்று புத்தகக்கட்டைப் பிரித்தேன். வெண்ணிறப் பட்டுத்துணி மீது மயிலிறகை வைத்ததுபோன்ற அட்டைப்படம். அந்த அட்டைப்படத்தின் அழகில் ஒருகணம் மயங்கி மாறுபட்ட கோணங்களில்  புத்தகத்தைத் திருப்பித்திருப்பிப் பார்த்தபோதுதான் முகப்பில் என் பெயரைப் பார்த்தேன். பிறகு புத்தகத்தின் தலைப்பையும் பார்த்தேன். மிகையின் தூரிகை.  அந்தத் தலைப்பில் நான் ஒரு கதையையும் எழுதவில்லையே என்று ஒருகணம் குழப்பமாக இருந்தது. புத்தகத்தலைப்புக்கு மேல் அச்சிடப்பட்டிருக்கும் என் பெயரை மறுபடியும் ஒருமுறை பார்த்தேன்.  குழப்பம் நீங்காதவனாக அட்டையின் பின்பக்கம் மெதுவாகத் திருப்பினேன். என் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே நான் திகைத்துவிட்டேன். என் பெயரில் இப்படி ஒரு புத்தகம் எப்படி வந்தது என்று புரியாமலேயே பின்னட்டைக்குறிப்பைப் படித்தேன். எழுதியிருந்தவர் எஸ்.ஜெயஸ்ரீ. எங்கள் நீண்டகால நண்பர். நல்ல இலக்கிய வாசகர். அந்தக் குறிப்பைப் படிக்கத் தொடங்கிய கணத்தில் எல்லாமே விளங்கிவிட்டது. எல்லாத் திகைப்பும் விலகிவிட, மனம் ஒருவித பரவசத்தில் திளைக்கத் தொடங்கியது. என்னுடைய பல்வேறு சிறுகதைத்தொகுதிகளிலிருந்து தொன்மம் சார்ந்த பதினான்கு சிறுகதைகளை மட்டும் தேடியெடுத்து ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறார் ஜெயஸ்ரீ.  அவருக்கு உதவியாக இருந்தவர்கள் நண்பர்கள் கே.பி.நாகராஜன், சந்தியா நடராஜன். மூவரும் சேர்ந்து  எனக்கொரு இன்ப அதிர்ச்சியை அளிக்கவேண்டும் என்று இப்படி ஒரு தொகுதியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். உண்மையிலேயே அக்கணத்தில் என் மனம் சொல்லொணா பரவசத்தில் திளைத்திருந்தது. பொன்னான அத்தருணத்தை உருவாக்கிக் கொடுத்த அந்த மூவரையும் நண்பர்களாகப் பெற்றது இவ்வாழ்வில் நான் பெற்ற பேறு. அவர்கள் மூவருக்கும் என் அன்பும் வணக்கமும்.

ஜெயஸ்ரீ, நாகராஜன், நடராஜன் மூவருமே அவ்வப்போது என்னுடன் தொலைபேசியில் உரையாடுகிறவர்களே. ஆனால் ஒரு தருணத்தில் கூட இந்தத் தொகுதி பற்றி ஒரு சொல் கூட சொல்லவில்லை. ஏறத்தாழ ஒரு மாதம் இதற்கான வேலை தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.   ஒரு கனவை செயலாக்கி கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் முனைப்பில் மூவருமே ஒன்றிணைந்து உழைத்திருக்கிறார்கள். இத்தொகுதி உண்மையிலேயே எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிப் பார்க்கும்போதெல்லாம் இவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் அர்ப்பணிப்புணர்வையும் உணர்கிறேன்.

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே நண்பர் நடராஜனை முதலில் தொலைபேசியில் அழைத்தேன். ஒரு மாதமாக இத்தொகுதிக்கான திட்டமும்  வேலையும் நடைபெற்று வந்ததாக அப்போது சொன்னார்.  புத்தகத்தை நேரிடையாக பெற்று நானே தெரிந்துகொள்ளும் வரையில் யாரும் அதைப்பற்றி மூச்சுவிடக் கூடாது என்பதுதான் மூவரும் சேர்ந்து செய்துகொண்ட ஒப்பந்தம் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.  அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஜெயஸ்ரீயை அழைத்தேன். அவரும் அதையே சொன்னார். இப்படி ஒரு தொகுதியை உருவாக்கவேண்டும் என்பது தன் நீண்ட கால ஆவல் என்றும் தற்செயலாக நாகராஜனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அந்த ஆவல் திட்டவடிவமாக மாறி, பிறகு நடராஜனுடன் உரையாடியபோது செயல்வடிவம் பெற்றுவிட்டதாகவும் சொன்னார். 

உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் ஜெயஸ்ரீ கேட்டார். இத்தனை பேருடைய அன்பும் இந்தத் தொகுதியாக்கத்தில் இணைந்திருக்கும் போது எனக்கு எப்படி பிடிக்காமல் போகும். எனக்கு மிகவும் பிடித்திருப்பதாக பதில் சொன்னேன். இக்கதைகளை எழுதிய காலத்துக்கும் இன்றைக்கும் இடையிலான இருபதாண்டு கால இடைவெளி சட்டென்று கரைந்துபோய்விட, எல்லாமே போன வாரத்தில், போன மாதத்தில் எழுதிய கதைகளென தோன்றத் தொடங்கிவிட்டன. ஒரு புதிய கதைத்தொகுதியைப் பெற்றுக்கொண்டதும்  இலக்கில்லாமல் புரட்டிப் புரட்டிப் பார்ப்பதுபோல வெகுநேரம் அத்தொகுதியைப் புரட்டிக்கொண்டே  இருந்தேன். 

பிறகு கே.பி.நாகராஜனை அழைத்தேன். புத்தகம் கிடைத்துவிட்டது நாகராஜன்என்று சொன்னதுமே பார்த்திட்டீங்களா சார், பார்த்திட்டீர்ங்களா சார்என்று பரவசத்துடன் சொல்லிச்சொல்லி  அவர் சிரித்தார். இவ்வளவு அமைதியா வேலை நடந்திருக்குதே, எப்படி நாகராஜன்?” என்று கேட்டேன். எதையும் வெளியே காட்டிக்காம இருக்கணும்ங்கறதுதான் எங்களுக்குள்ள ஒப்பந்தம்.  உங்களுக்கு ரொம்ப சர்ப்ரைஸா ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்னு நெனச்சோம். அதுக்காகத்தான் சார் அந்த அமைதிஎன்று சிரித்தார். தொடர்ந்து ஆனா, அமைதியா இருக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் சார். ஒவ்வொரு தரமும் உங்களோடு பேசும்போது நெஞ்சுவரைக்கும் வார்த்தை வந்து முட்டி நிக்கும். அப்புறம் கஷ்டப்பட்டு அப்படியே விழுங்கிடுவேன் சார். ரகசியம்லாம் எனக்கு ஒத்து வராத விஷயம்.  எப்படியோ சொன்ன வார்த்தையை கடைசி வரைக்கும் காப்பாத்திட்டேன்என்றார்.  இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்குது. அட்டைய பார்த்தீங்களா சார், அழகான ஆர்ட் ஒர்க். உங்களுக்கு பிடிச்சிருக்குதா சார்?” என்று வழக்கமான உரையாடலுக்குத் திரும்பினார். நீங்க எல்லாரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கும்போது பிடிக்காம இருக்குமா நாகராஜன், அற்புதமா இருக்குதுஎன்றேன். உரையாடலை முடிக்கும்போது  எல்லா கதைகளையும் படிச்சிட்டேன் சார். ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகு சார்என்றார் நாகராஜன்.

இத்தொகுதிக்கு எஸ்.ஜெயஸ்ரீ சிறப்பானதொரு முன்னுரையை எழுதியிருக்கிறார்.  அவர் தன் உள்ளத்தையே அம்முன்னுரையில் திறந்து காட்டியிருக்கிறார். இருபதாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த முதல் சந்திப்பை உயிர்ப்புடன் எழுதியுள்ளார். அன்று நிகழ்ச்சிக்கூடத்தில் தன் இரு பிள்ளைகளின் தோள்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டபடி அவர் உரையாடிவிட்டுச் சென்ற அந்த முதல் கணத்தின் சித்திரம் இன்னும் என் நெஞ்சிலும் அழியாத ஓவியமாக உள்ளது.  இத்தனை ஆண்டு கால வாசிப்புப்பயிற்சியின் வழியாகவும் எழுத்துமுயற்சியின் வழியாகவும் அவர் அடைந்திருக்கும் மொழித்தேர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற அழகான முன்னுரையுடன் அவர் வெகுவிரைவில் தன் சொந்தத்தொகுதியொன்றை விரைவில் வெளியிடவேண்டும் என்பது என் விருப்பம்.

எஸ்.ஜெயஸ்ரீ, கே.பி.நாகராஜன், சந்தியா நடராஜன் மூவருக்கும் என் அன்பு.