Home

Sunday 26 September 2021

மாறுபட்ட கோணங்கள் - புத்தக அறிமுகம்


     நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி 1884இல் வெளிவந்தது. கச்சிதமான வடிவ அமைப்பு, நுட்பமான சித்தரிப்பு, வசீகரமான மொழி ஆகியவற்றின் காரணமாக இலக்கிய உலகில் அவருடைய சிறுகதைகளுக்கான இடம் அப்போதே உறுதிப்பட்டுவிட்டது. அடுத்த இருபதாண்டுகளில் அவர் எழுதிய சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்தன. ரஷ்யாவுக்கு வெளியே பல மொழிகளில் அக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றின் வழியாக உலகெங்கும் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் புதிய தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளராகவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளராகவும் விளங்குகிறார் ஆன்டன் செகாவ்.

தொடக்கத்தில் பணத்தேவைக்காக சுவாரசியமான வாழ்வியல் நிகழ்ச்சிகளையே செகாவ் சிறுகதைகளாக எழுதினார். ஏழாண்டு காலத்தில் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய பிறகே அவரால் அந்த முதற்கட்டத்தைத் தாண்ட முடிந்தது.  அப்போது மாபெரும் எழுத்தாளுமையான தல்ஸ்தோய் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்.  அவருடைய ஒழுக்கவியல் பார்வையும் மனிதர்களின் எண்ண ஓட்டங்களைத் தொகுத்து மதிப்பிடும் பார்வையும் எழுத்துலகில் செல்வாக்கு பெற்றிருந்தது. அப்பார்வைகளின் அடிப்படையில்  செகாவ் தனக்குத் தெரிந்த உலகத்தின் சித்திரங்களை விரிவாக எழுதிப் பார்த்தார். அது அவருடைய இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்த கதைகள். விடைகளைக் கண்டடைவதைவிட, ஒரு தருணத்தை வெவ்வேறு கோணங்கள் வழியாகத் திரட்டி தொகுத்துக்கொள்வதன் வழியாக கேள்விகளை வரிசைப்படுத்துவதே அவருடைய கதைகளின் அழகாக இருந்தது.

ஒருமுறை அவர் சைபீரியாவின் வதைமுகாமுக்குச் சென்று மூன்று மாதகாலம் தங்கி, அங்கு அடைக்கப்பட்டிருந்த பல்வேறு கைதிகளைச் சந்தித்து உரையாடினார். அங்கு வசித்துவந்த பெண்களின் நிலையையும் சிறுவர் சிறுமியரின் நிலையையும் கண்டு ஆழ்ந்த துயருற்றார். அந்த உளமாற்றத்தின் விளைவாக சிக்கலான தனித்துவம் நிறைந்த பல சிறுகதைகளை அவர் எழுதினார். இவையே அவருடைய மூன்றாவது காலகட்டக் கதைகள். அவருடைய படைப்பியக்கத்தில் இந்த மூன்றாம் கட்டக் கதைகளுக்கு மிகமுக்கியமான இடமுண்டு. நாற்பத்துநான்கு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த செகாவ் ஐநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். இந்த மூன்றாம் கட்டக்கதைகள் வழியாகவே உலக அளவில் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்னும் பெருமையை அவர் அடைந்தார்.

செகாவின் சிறுகதைகளை வெவ்வேறு காலகட்டங்களில் தமிழில் ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம், இளம்பாரதி, எம்.எஸ்., .ரத்னம், சு..வெங்கடசுப்பராய நாயகர், சந்தியா நடராஜன் ஆகியோர் மொழிபெயர்த்திருக்கின்றனர். தொகுப்பாக வெளிவரவில்லை என்றாலும், தனித்தனி முயற்சிகளாக மேலும் சிலர் செகாவ் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கின்றனர். அக்கதைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ அறுபது அல்லது எழுபது இருக்கக்கூடும். இப்படி பல வழிகளின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமான கதைகளை விடுத்து, இதுவரை தமிழுக்கு வராத கதைகளிலிருந்து  பன்னிரண்டு கதைகளை நாவலாசிரியரான எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை செகாவின் படைப்பியக்கத்தில் மூன்றாம் காலகட்டத்தைச் சேர்ந்தவை. செகாவின் எழுத்தாளுமையை நெருக்கமாக உணர இக்கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. வான்கா, பச்சோந்தி, ஒரு எழுத்தரின் மரணம், வேட்டைக்காரன் போன்ற கதைகளைவிட முற்றிலும் மாறுபட்ட களத்தையும் மாறுபட்ட கோணத்தையும் கொண்டவை. செகாவின் வாழ்க்கையைப்பற்றியும் படைப்பியக்கத்தைப்பற்றியும் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் விரிவான முன்னுரை இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியத்துவத்தை உருவாக்குகிறது.

குடியானவப் பெண்கள் இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை. ஒரு கிராமத்தில் இரண்டு தளங்களைக் கொண்ட வீட்டில் ஒரு தளத்தை தன் வசிப்பிடமாகவும் இன்னொரு தளத்தை வழிப்போக்கர்கள் வாடகைக்கு தங்கிவிட்டுச் செல்லும் விடுதியாகவும் வைத்திருக்கிறார் ஒரு பெரியவர். அவர் பெயர் கஷின். அவருக்கு இரு மகன்கள். ஒருவன் தொழிற்சாலையில் பணிபுரிபவன். அவன் மனைவி சோஃபியா ஒரு நோயாளி. இன்னொரு மகன் கூனன். தந்தைக்கு உதவியாக இருப்பவன். அவன் மனைவி வார்வரா அழகும் ஆரோக்கியமும் கொண்டவள். இப்படி விரிவான அறிமுகத்துடன் கதையைத் தொடங்குகிறார் செகாவ்.

ஒருநாள் ஒரு பயணி எட்டுவயதுச் சிறுவனொருவருடன் அந்த விடுதியில் தங்குகிறான். ஓய்வு நேரத்தில் கதை பேசும் பழக்கமுள்ள கஷின் அந்தப் பயணியிடம் பேச்சு கொடுக்கும் விதமாகஇந்தப் பையன் உங்கள் பிள்ளையா?” என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். அதற்கு அந்தப் பயணி அச்சிறுவனை தன் தத்துப்பிள்ளை என்று சொல்கிறார். அவனை ஏன் தத்தெடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது என்பதைச் சொல்வதற்காக தன் கதையை விரிவாகச் சொல்லத் தொடங்குகிறார்.

பத்து  ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பயணியின் வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில் ஒரு விதவைத்தாயாரும் வாஸ்யா என்னும் பெயருடைய மகனும் வசித்துவந்தார்கள். தன் இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த அந்தத் தாய், அதே ஊரைச் சேர்ந்த இளம்விதவையான மாஷென்கா என்னும் பெண்ணை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறாள். அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது. அதற்கடுத்து சில மாதங்களுக்குப் பிறகு ராணுவ சேவைக்காக வாஸ்யாவும் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறான். கருவுற்ற மாஷென்காவின் பிள்ளைப்பேறு முடியும் வரைக்கும் உதவிக்கு வந்த அவள் தாய், அதற்குப் பிறகு தன் மகன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள். தனித்திருந்த மாஷென்காவுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்கிற முறையில் அந்தப் பயணி சின்னச்சின்ன ஒத்தாசைகள் செய்கிறார். படிப்படியாக அந்த நட்பு இருவருக்குமிடையில் உறவாக வளர்ந்துவிடுகிறது. பிறழ் உறவை  இருவருமே நாடுகிறார்கள். கணவன்மனைவியைப் போலவே இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள்.

சிறிது காலத்துக்குப் பிறகு ராணுவச் சேவையை முடித்துக்கொண்டு வாஸ்யா கிராமத்துக்குத் திரும்பும் செய்தி கிடைக்கிறது. அக்கணமே பயணியின் மனம் மாறிவிடுகிறது. மாஷென்காவிடம் தன்னை மறந்துவிடுமாறும் வாஸ்யாவுடன் சேர்ந்து தொடர்ந்து இல்லறத்தை நடத்துமாறும் அறிவுரை வழங்கத் தொடங்குகிறான். அதை ஏற்க மறுக்கிறாள் மாஷென்கா. இதற்கிடையில் திரும்பிவந்துவிட்ட வாஸ்யா மீது அன்பைக் காட்ட அவள் மனம் மறுக்கிறது. அடுத்தநாள் வாஸ்யாவின் உயிரற்ற உடலையே அனைவரும் பார்க்கிறார்கள்.

மருத்துவப்பரிசோதனையின் போது வாஸ்யாவின் உடலில் நஞ்சு கலந்திருந்ததை அறிந்த காவல்துறை மாஷென்காவை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அந்த நஞ்சு அவனே அருந்தியதா, அல்லது பிறிதொருவரால் கொடுக்கப்பட்டதா என்பது இறுதிவரைக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆயினும் சந்தேகத்தின் அடிப்படையில் அவளுக்குத் தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறது நீதிமன்றம். சில மாதங்களிலேயே சிறைக்குள் அவள் இறந்துவிடுகிறாள். அவளோடு சிறையில் தங்கவைக்கப்பட்டிருந்த அவளுடைய ஆண்குழந்தையை தத்தெடுத்துக்கொண்ட  பயணி அன்றுமுதல் தானே வளர்த்துவருகிறான். தனக்குத் தெரிந்த தொழிலைக் கற்பிக்கிறான்.

விடிந்ததும் பயணி வாடகையைக் கொடுத்துவிட்டு தன் வழியில் சிறுவனை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் அந்தப் பயணியைப்பற்றி ஒவ்வொரு விதமாக விமர்சனச்சொற்களை வீசுகிறார்கள். அத்துடன் கதை முடிந்துவிடுகிறது.

ஒரு கோணத்தில் சிறுவனைத் தன் மகனாக தத்தெடுத்த பின்னணியை ஒருவன் சொல்வதுபோன்ற கதையாகத் தோற்றமளித்தபோதும், இன்னொரு கோணத்தில் பிறழ் உறவைச் சார்ந்து வேறு சில புள்ளிகளை இக்கதை தொட்டுக் காட்டுவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதறமுடியாத அளவுக்கு பிறழ் உறவின் மீது மாஷென்கா ஏன் நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள், பிறழ் உறவு என்றபோதும் மாஷென்காவை ஆழ்ந்து நேசித்த பயணி, கணவனின் வருகைக்குப் பிறகு சட்டென ஏன் உதறிவிடத் துடிக்கிறான், சிறையில் திடீரென மாஷென்கா மறைந்துபோனதும், ஊரே அறிய அவள் குழந்தையை அவன் ஏன் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்குகிறான் ஆகிய கேள்விகள் முக்கியமானவை.  மாஷென்காவாஸ்யாகுஷ்கா என அமைதியாக, சீராக சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை ஒருவரும் எதிர்பாராத வகையில் ஏன் சீர்குலைந்து திசைமாறிப்போனது? நேராக அமைந்திருக்க வேண்டிய கோடு ஏன் வளைந்துபோனது? ஒழுக்கம் என்பது ஒருபோதும் மாறாத நெறியா அல்லது மாற்றத்தை ஏற்று நெகிழ்ந்துகொடுக்கும் வழிமுறையா என்னும் அடிப்படைக்கேள்வியை நோக்கிய கதையை நகர்த்திச் செல்கிறார் செகாவ்.

ஆரோக்கியமான கணவனுக்கு நோயாளி மனைவி, அழகும் சுறுசுறுப்பும் கொண்ட மனைவிக்கு உடற்குறை உள்ள  கணவன், பணத்தேவை இல்லாத ஒருவனிடம் வந்து குவிந்துகொண்டே இருக்கும் செல்வம். பணத்துக்கான தேவை இருப்பவனை சூழ்ந்திருக்கும் வறுமை என எங்கெங்கும் நிறைந்திருக்கும் எதிரெதிர் புள்ளிகளின் இணைவை போகிற போக்கில் செகாவ் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். மாறிக்கொண்டே இருக்கும் இத்தனை எதிரீடுகளின் நெருக்கடிகளுக்கு  நடுவில் மாற்றமே இல்லாத நெறிக்கும் இருக்கும் மதிப்பென்ன என்னும் மையத்தை நாம் அப்போது காணலாம். அது செகாவின் தரிசனம். அதுவே அவர் எழுப்பும் கேள்வி. நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்வி உயிரோடு இருப்பதாலேயே இந்தக் கதையும் உயிரோட்டத்துடன் உள்ளது.

இன்னொரு கோணமும் இக்கதையில் உள்ளது. பயணி மாஷென்காவுடன் கொண்டிருந்த  பிறழ்உறவு பற்றி விவரிக்கத் தொடங்கியதுமே, கஷின் வீட்டுப் பெண்கள் அதைக் கேட்டு அருவருப்படைகின்றனர். முகம்சுளித்து அவனைப் பார்த்து முணுமுணுக்கின்றனர். அவன் விவரிக்கும் கதையைக் கேட்கவே அவர்கள் தயாராக இல்லை. ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டபடி போகும்போதும் வரும்போதும் காதுகொடுத்துக் கேட்டுவிட்டுச் செல்கின்றனர். தன் மீது கொட்டப்படும் வசைகளைக் காதுகொடுத்து கேட்டும் கேட்காதவனைப்போல அவன் தன் போக்கில் தன் கதையைச் சொல்லி முடிக்கின்றான். எதற்காக அவன் அப்படிச் சொல்லவேண்டும் என்றொரு கேள்வி எழுகிறது. மாஷென்காவின் மெளனமும் மரணமும் உறுதியும் அவனைக் கலங்கவைத்துவிட்டன. அவள் தன் தண்டனையை ஏற்றுக்கொண்ட விதம் அவனை அமைதியிழக்க வைத்துவிட்டது. உறவில் இருவரும் இணையாகப் பங்குகொண்டிருந்தபோதும், தண்டனையை அவள் மட்டுமே ஏற்றுக்கொண்ட விதம் அவனுக்குள் ஒருவித குற்ற உணர்ச்சியைத் தூண்டியபடியே இருக்கிறது. அந்தக் குற்ற உணர்ச்சியின் விளைவாகவே சிறுவன் குஷ்காவை அவன் தத்தெடுத்துக்கொள்கிறான். அவன் தத்தெடுத்த கதையை விவரிப்பது, அதைக் கேட்பவர்கள் சொல்லும் வசைகளை அமைதியாக ஏற்பது எல்லாமே குற்ற உணர்ச்சியின் விளைவுகளே. கிட்டத்தட்ட அது ஒரு சுயவதை என்றே சொல்ல வேண்டும். அந்த வதை வழங்கும் கணநேர விடுதலையே ஒருவேளை அவன் விரும்பும் விடுதலையாக இருக்கலாம்.

கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுத்திருக்கும் மற்றொரு அருமையான சிறுகதை ஈஸ்டர் இரவு.  கோல்த்வா என்னும் நதிக்கரையின் இரு புறங்களிலும் சின்னச்சின்ன கிராமங்கள் உள்ளன. ஒரு கரையில் காத்திருக்கும் மனிதர்களை மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்ல ஒரே ஒரு படகு மட்டுமே அந்த ஊரில் உள்ளது. அந்தப் படகை ஓட்டும் படகோட்டி யெரோனிம்.

ஈஸ்டர் தினம். தேவாலயத்துக்குச் செல்வதற்காக கரைக்கு வந்த ஒருவர் வெகுநேரமாக படகுக்குக் காத்திருக்கிறார். தேவன் எழுந்தருளியதன் அடையாளமாக தொலைவிலிருந்து ஆலய மணியின் சத்தம் கேட்கிறது. அப்போது கரைக்கு வந்த படகு அவரை ஏற்றிக்கொண்டு,  உடனடியாக புறப்பட்டுச் செல்கிறது. ஒரு துறவியின் தோற்றத்தில் இருக்கும் அந்தப் படகோட்டியின் உருவம் பயணியை வியப்பிலாழ்த்துகிறது. அந்தப் பயணத்தில் நிகழும் உரையாடலே கதையாக விரிகிறது.

ஊரே வாணவேடிக்கையைக் கண்டும் தேவாலயத்தில் அலைமோதும் பார்வையாளர்களைக் கண்டும் மகிழ்ந்திருக்கையில், தேவாலயத்துக்குச் சொந்தமான  மடத்தைச் சேர்ந்த நிகலோய் என்னும் துறவி அன்று இறந்துவிட்டதாக அந்தப் படகோட்டி தெரிவிக்கிறார். அது தனக்கு ஆழ்ந்த துயரத்தை அளிப்பதாகவும் சொல்கிறார். தன்னிடம் உரையாடவேண்டும் என்பதற்காக அடிக்கடி கரையிலிருந்து எழும் துறவியின் குரல் நினைவுக்கு வந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவருடைய திறமைகளைப் புகழ்ந்து சொல்கிறார். எந்தப் பள்ளியிலும் படிக்கக் கற்றுக்கொள்ளாத அவர் ஸ்தோத்திரங்களை எழுதி மனமுருகப் பாடும் திறமை வாய்ந்தவர் என்று குறிப்பிடுகிறார். கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது அவருடைய குரல். அவரைப்போன்ற திறமைசாலி அந்த ஊரிலேயே இல்லை. ஆனால் அந்த மடத்தில் அவரை யாரும் பொருட்படுத்தவே இல்லை. அந்த அருமையான துறவிக்கு நிகழும் இறுதிச்சடங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்னும் வருத்தம் வாட்டுகிறது. படகோட்டத் தெரிந்தவர்கள் யாருமே அங்கில்லை என்பதால் படகோட்டுவதையும் அவரால் விடமுடியவில்லை. தனக்கும் அவருக்கும் இருந்த நெகிழ்ச்சி மிக்க உறவைப்பற்றி உணர்ச்சி ததும்ப எடுத்துரைக்கிறார்.

ஈஸ்டருக்கான பூசை தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர்கள் கரையை அடைந்துவிடுகிறார்கள். பயணி படகிலிருந்து இறங்கி தேவாலயத்தை நோக்கிச் செல்கிறார். சுற்றியிருக்கும் மக்கள் அனைவரும் வாணவேடிக்கைகளிலும் பொழுதுபோக்கிலும் மூழ்கியிருக்கிறார்கள். ஒருவரும் அங்கே பாடப்படும் ஸ்தோத்திராத்தின் பொருளை அறிய முனைப்பு காட்டவே இல்லை. அக்காட்சி அந்தப் பயணிக்கு உறுத்தலாக உள்ளது. ஒருபுறம் ஸ்தோத்திரத்தின் பெருமையையோ, அல்லது மறைந்துபோன துறவியின் அருமையையோ எதையும் அறியாத பாமரக்கூட்டம். அதைப்பற்றி அறிந்த அந்தப் படகோட்டிக்கோ அந்த ஆலயத்திலேயே இடமில்லை. எங்கோ யாரையோ ஏற்றிக்கொண்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் படகோட்டியபடி இருக்கிறார்.

வழிபாடு முடிந்ததும் ஆழ்ந்த துயரத்தோடு அந்தப் பயணி கரைக்கு வருகிறார். யெரோனிம் இன்னும் படகை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவரை பணியிலிருந்து விடுவிக்க அப்போதும் ஒருவரும் வரவில்லை. கரையோரம் காத்திருப்பவர்களை ஏற்றிக்கொண்டு அவர் மீண்டும் படகை ஓட்டத்  தொடங்குகிறார். மேலோட்டமாகப் படிக்கும்போது, படகோட்டியுடனான உரையாடலைப்போலவே அமைந்துவிட்ட சிறுகதை என்று தோன்றினாலும் உள்ளூர அது கருணையையும் கனிவையும் முன்வைக்கும் கதை.

நிகலோய் பற்றிய படகோட்டியின் சித்தரிப்பு மிகமுக்கியமானது. இருவரும் சந்திக்காத நாளே இல்லை. இரவு வேளைகளில் கரைக்குத் திரும்ப தாமதமாகிவிடும் பொழுதுகளில் கரையில்  நின்று குரல்கொடுத்து, அக்குரல் வழியாகவே ஒருவரையொருவர் உணர்த்திவிட்டு விலகிப்போன பல தருணங்கள் அவருடைய நெஞ்சில் மோதுகின்றன. துறவி உருகி உருகிப் பாடும் ஸ்தோத்திரங்களின் அழகையும் ஈர்ப்பையும் பற்றி மெய்மறந்து பேசுகிறார் படகோட்டி. ஆனால் எதார்த்தத்தில் அந்தத் துறவியின் திறமைக்கோ, பக்திக்கோ அந்த இடத்தில்  கிஞ்சித்தும் மதிப்பில்லை. இறையியல் அனுபவத்தைவிட, அங்கிருப்பவர்களுக்கு உலகியல் அனுபவமே பெரிதாகத் தோன்றுகிறது. அதனால் அவர்களுடைய பார்வையில் துறவியாக இருந்தாலும் நிகலோய் மிகச்சாதாரணமான ஒரு மனிதர் மட்டுமே. ஆனால் அவருடைய கருணையையும் கனிவையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் படகோட்டிக்கு நிகலோய் அபூர்வமானதொரு மனிதர்.

படகோட்டிபயணி இருவருக்கும் இடையிலான உரையாடலாகத் தோன்றினாலும் ஈஸ்டர் இரவு சிறுகதை ஒருவரை மதிப்பிட  இவ்வுலகத்தினர் வைத்திருக்கும் வெவ்வேறு அளவுகோல்களைச் சித்தரிக்கும் சிறுகதையாகும். தேவன் பிறந்துவரும் நாள் பற்றிய கதையில் படகுக்காக  வெகுநேரம் காத்திருந்த ஒருவனை அழைத்துச் செல்ல தேவனே படகோட்டியாக வந்தான் என்ற கோணத்திலும் ஒரு வாசிப்பை நிகழ்த்தமுடியும். அப்போது தேவமலர் சிறுகதையைப்போல செகாவின் ஈஸ்டர் இரவு நிகழ்த்தும் அற்புதத்தை உணரலாம்.

கடல்சிப்பி, நீத்தார் பிரார்த்தனை, சம்பவம், நலவாழ்வு இல்லம்  போன்ற சிறுகதைகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் எல்லைக்கும் அப்பால் விரிந்துசெல்லக்கூடிய சாத்தியம் நிறைந்தவை. இன்று எழுதப்படும் சிறுகதைகளைப்போலவே இக்கதைகளையும் வாசிக்கமுடிகிறது என்பதே இக்கதைகளின் வெற்றி. செகாவ் மிகப்பெரிய ஆளுமை என்பதற்கு இத்தகு கதைகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இன்றைய புதிய வாசகர்களுக்கு விருந்தாக இக்கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் எம்.கோபாலகிருஷ்ணனும் ராதுகா பதிப்பகத்தின் புத்தகத்தைப்போலவே அழகான அச்சமைப்போடும் உறுதியான அட்டையோடும் ரஷ்யச் சாயலில் இத்தொகுப்பை வெளியிட்டிருக்கும் நூல்வனம் பதிப்பகமும் பாராட்டுக்கு உரியவர்கள்.

 

(ஆன்டன் செகாவ் கதைகள். தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன். நூல்வனம், எம்22, ஆறாவது அவென்யு, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை -89. விலை.ரூ230 )

 

(23.09.2021 புக்டே இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரை)