Home

Wednesday 22 September 2021

’அக்பர் சாஸ்திரி’ சிறுகதைகள் : பாலைவனக்கள்ளி படர்ந்திருக்கும் உலகில்


நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தைப்பற்றி ஒருநாள் என் கன்னட நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நதியை ஒட்டிய பயணம் என்பதைக் கேட்டு அவர்கள் மலைத்துவிட்டார்கள். அதுவும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பயணம் என்பதைக் கேட்டு அவர்களுடைய வியப்பு பல மடங்காகப் பெருகியது. அப்படி ஒரு பயணம் நாமும் செல்லவேண்டும் என்று கனவு மிதக்கும் கண்களோடு ஒவ்வொருவரும் மாறிமாறிச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அப்படி ஒரு தருணம் வாய்க்கவே இல்லை. அதனால் ஒரு மாற்றுத் திட்டமாக ஒருநாள் பயணமாக சிவசமுத்திரம், தலக்காடு, திருமுக்கூடல், சோமநாதபுர ஆகிய இடங்களுக்கு மட்டும்  சென்றோம். அருவிச்சாரல், சோழர் காலத்துக் கோவில், ஒரு காலத்தில் ஊரையே மூடியிருந்த மணல்மேடு, குறுகியும் விரிந்தும் பரவியோடும் காவிரி என எண்ணற்ற காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பினோம். என்னிடம் அப்போதுதான் புதுசாக வாங்கிய ஒரு டிஜிட்டல் கேமிரா இருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான படங்களை எடுத்தேன்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகு முன்னூறு நானூறு படங்களிலிருந்து ஐம்பது படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிட்டு ஒரு ஆல்பம் தயாரித்தேன். தன் வீட்டிலிருப்பவர்களுக்குக் காட்டவேண்டும் என்று முதலில் ஒரு நண்பர் ஆல்பத்தை எடுத்துச் சென்றார். பிறகு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என அப்படியே கைமாறி கைமாறிச் சென்று, கடைசியாக பத்து நாட்கள் கழித்து என்னிடம் திரும்பி வந்தது. கொண்டுவந்த நண்பர் தன் தந்தையார் என்னை உடனடியாக பார்க்க விரும்புவதாகச் சொல்லி அழைத்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. “என்ன செய்தி?” என்று கேட்டேன். “இந்த ஆல்பத்தை அவரும் பார்த்தார். அதற்குப் பிறகுதான் உன்னைப் பார்க்கவேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரியப்படுத்தினார்என்று பதில் சொன்னார். வேறு வழியில்லாமல் நான் அவருடன் சென்றேன்.

அவர் அப்பாவுக்கு எண்பது வயதுக்கும் மேல் இருக்கும். முதுமைக்கே உரிய மெலிவு இருந்ததே தவிர,  உற்சாகமாகவே உரையாடினார். “உடம்புதான் என் வசம் இல்லையே தவிர, மனம் என் வசம் இருக்கிறதுஎன்று சிரிக்கச்சிரிக்க பேசினார்.

நீங்க எடுத்த படங்களைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. வழக்கமா டூர் போறவங்க எடுக்கற படம் மாதிரி எதுவும் இல்ல. அதான் உங்கள அழச்சி பாராட்டணும்னு நெனச்சேன்என்றார். அதற்குள் எங்கள் மேசைக்கு காப்பிக்கோப்பைகள் வந்துவிட்டன. ஒவ்வொரு மிடறாக அருந்தினேன்.

ஒவ்வொன்னும் ரொம்ப ரொம்ப அபூர்வமான காட்சி. பாறைமேல நின்னபடி வானத்த பாக்கற ஆடு, பாறையில தேங்கி நிக்கற தண்ணீர், அடிக்கற காத்து தாங்காம ஒருபக்கமா வளஞ்சி திரும்பி நிக்கற மரம், கை உடைஞ்சிபோன சிலை, ஆகாயத்துல பறக்கற மீன்கொத்தி எல்லாமே அற்புதம்”. அவர் தன் ஞாபகத்திலிருந்து ஒவ்வொன்றையும் திரட்டியெடுத்துச் சொன்னார். மெதுவாக கைநீட்டி என் கைகளைப் பற்றி தட்டிக்கொடுத்தார். நான் நண்பரின் பக்கம் திரும்பினேன்.

மரம், செடி, தோப்பு, அருவி எல்லாத்துக்கும் முன்னால ஆளுங்கள தேமேன்னு நிக்கவச்சி எடுக்கறதுலாம் படம் கெடயாது. ஒரு படம்ங்கறது ஒரு தனிக்காட்சி. ஒரு மனநிலை. ஒரு தகவல். ஒரு கண்டுபிடிப்பு. ஒரு உண்மை. அம்பது வருஷம் கழிச்சி பாத்தாலும் அது அப்படியே இருக்கும்.  ஆப்பரேஷன் தழும்புமாதிரி.”

பல ஊர்களில் பல இடங்களில்  தான் பார்த்த பலவிதமான படங்களைப்பற்றி எனக்கு அவர் கூறினார். அன்று வெகுநேரத்துக்குப் பிறகே நான் வீடு திரும்பினேன்.

இந்தக் கட்டுரைக்காக தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி தொகுப்பைப் படித்து முடித்தபோது இந்த நிகழ்ச்சியில் மனம் தானாகவே சென்று நிலைத்துநின்றது. சிலிர்ப்பு, பாயசம் போல இந்தப் பதினோரு சிறுகதைகளில் மாபெரும் கதைத்தருணங்கள் என்று சொல்லத்தக்க தருணம் எதுவும் இல்லை. பெரிய திருப்பங்களோ உச்சங்களோ இல்லை. பெரிய கேள்விகளும் இல்லை. சலிப்போ வருத்தமோ எதுவும் இல்லை. மாறாக, நாம் காண்பதெல்லாம் மிகமிக விசித்திரமான மானுட சுபாவங்கள். அபூர்வமான கோணங்கள். அபூர்வமான தருணங்கள். திகைக்கவைக்கும் மனநிலைகள். தடுமாறவைக்கும் எண்ணங்கள். தோராயமாக நம்மிடம் உள்ள சாமானிய அளவுகோலால் வகுத்துக்கொள்ளமுடியாத மனிதர்களைப்பற்றிய சித்திரங்கள் என்று சொல்லலாம். ஒருவகையில் வரையறைக்கு அப்பால் நிற்கும் மனிதர்கள். அதுதான் இத்தொகுப்பின் முக்கியத்துவம்.

கள்ளி சிறுகதையில் கிருஷ்ணன், சுப்பண்ணா என இரு நண்பர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சுப்பண்ணா ஒருகாலத்தில் பிடில் சுப்பண்ணா என்று மக்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்ட மனிதர். உள்ளூரில் மட்டுமல்ல, வெளிநாட்டில் இசைநிகழ்ச்சி நடத்தும் நிகழ்த்தும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. செல்வமும் அவரைத் தேடி வந்தது. செல்வத்தோடு புதிய மதுப்பழக்கமும் தேடி வந்து அவரோடு ஒட்டிக்கொண்டது. சுரம் தப்பிய இசையின் காரணமாக அவர் மேடை வாய்ப்புகளை மெல்ல மெல்ல இழந்தார். சேர்த்துவைத்த செல்வமெல்லாம் கரைந்து காணாமல் போனாலும் மதுப்பழக்கம் மட்டும் அவரைவிட்டுப் போகவில்லை.

ஒருநாள் அவர் தனக்கு நெருக்கமான நண்பரான கிருஷ்ணனைச் சந்தித்து பத்து ரூபாய் கடனாகக் கேட்கிறார். அவரும் ஒரு அன்றாடங்காய்ச்சி. அவர் தன்னிடம் இல்லை என்பதை முதலிலேயே திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார். பிறகு யாரிடமாவது கிடைத்தால் வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைக்கிறார். அதனால் மீண்டும் அவரைத் தேடி வருகிறார் சுப்பண்ணா. அவர் குரல் கேட்டதுமே, அவர் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாதே என்கிற கலக்கத்தில், வேகமாக வாசலைத் தாண்டி தெருவுக்கு வந்து அவரோடு பேசத் தொடங்குகிறார் கிருஷ்ணன். பணம் புரட்டமுடியவில்லை என்பதையே வேறுவேறு விதமாக தொடங்கி பட்டும் படாமல் சொல்லிமுடிக்கிறார்.

தன் மகன் பள்ளியில் தேர்வு எழுதவேண்டும். கல்விக்கட்டணம் கட்டாததால் பள்ளியில் அவன் பெயரை எடுத்துவிட்டார்கள். தேர்வுக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிட்டால் எப்படியாவது அவனைத் தேர்வுக்கு அனுப்பிவிடலாம். அதற்குத்தான் அந்தக் கடன் என்று சொல்கிறார். கிருஷ்ணனுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுப்பண்ணாவுக்கு கொடுக்கும் பணம் என்பது கிணற்றுக்குள் போடும் கல் என்பதை மற்றவர்களைப்போல கிருஷ்ணனுக்கும் புரியும். அதனால் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவைத்துவிடுகிறார்.

சுப்பண்ணா சென்ற பிறகு, சிறுவனின் படிப்பு விஷயம் என்பது அவர் மனத்தை அறுக்கிறது. அது வழக்கமான பொய் என்றே அவர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார். ஒருவேளை அது உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்கிற கேள்விக்குத்தான் அவரால் சரியான பதிலை எட்டமுடியவில்லை. குழப்பத்தில் உணவு உண்ணவும் அவருக்கு மனம் வரவில்லை. அப்போது மழை பொழிகிறது. சாப்பிடாமல் மெத்தைக்குச் சென்று மழையை வேடிக்கை பார்க்கிறார். தன் மகள் வளர்க்கும் தொட்டிச்செடிகளையும் வேடிக்கை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் தன் மனம் எழுப்பும் கேள்வியின் சுமையை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அக்கணமே பெட்டியில் வைத்திருக்கும் பத்து ரூபாய்த்தாளை எடுத்துக்கொண்டு அந்த மழையிலேயே சுப்பண்ணாவைப் பார்க்கச் செல்கிறார். அவருடைய வீட்டைக் கண்டுபிடித்து வெளியே அழைத்து பணத்தைக் கொடுக்கிறார். அப்போதுதான் அவர் மனபாரம் இறங்குகிறது. அக்கணத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லும் சுப்பண்ணாவிடமிருந்து மதுவீச்சத்தையும் அவரால் உணரமுடிகிறது.

இச்சிறுகதையில் ஒவ்வொருவரிடமும் நிகழும் குணமாற்றங்கள் பற்றி ஏராளமான உட்குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. மன விரிவு கொண்டவர்கள் சுருங்கிவிடுகிறார்கள். உண்மை பேசுகிறவர்கள் பொய் உரைக்கிறார்கள். பணம் கொடுக்க எடுப்பதுபோல சட்டைப்பைக்குள் கைவிடுகிறவர்கள் சட்டென அரிப்புக்குச் சொரிந்துகொள்வதுபோல நடிக்கிறார்கள். ஒரு கோப்பை மதுவுக்காக கூசாமல் பொய் சொல்லி பணம் திரட்டுகிறார்கள். தேர்வுக்கட்டணத்துக்காக பெறும் பணத்தை அதற்குத்தான் சுப்பண்ணா செலவு செய்வான் என்பதில் எந்த உறுதியும் இல்லை. தேர்வுக்கட்டணம் செலுத்த பணம் புரட்ட முடியாதவன் மது அருந்த எப்படிப் பணத்தைப் புரட்டினான் என்பது நம்பமுடியாத புதிராக இருக்கிறது. அன்பு, மேன்மை, நம்பிக்கை, உறவு, பற்று, பாசம் எல்லாமே வாழ்க்கையில் பொருளிழந்த சொற்களாகிவிடுகின்றன. உயிரோடு இருக்கிறார்கள் என்பதைத்தவிர மனிதர்களுக்கென ஆற்றுவதற்கு ஒன்றும் இல்லை.

கதையின் போக்கில் கிருஷ்ணனின் மகள் தொட்டிச்செடியாக கள்ளியை வளர்க்கும் காட்சியொன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மலராத, காய்க்காத கள்ளி. பல நேரங்களில் தண்ணீரே கூட தேவைப்படாத கள்ளி. பாலைவனக்கள்ளி. மாறிவிடும் மனிதர்களின் விசித்திரப் போக்குக்கு கள்ளியைவிட பொருத்தமான படிமம் வேறெதுவும் இல்லை. மனிதர்கள் செடியாக, கொடியாக, மரமாக நின்ற காலமெல்லாம் மறைந்து பாலைவனக்கள்ளியாக உயிர்த்திருக்கும் காலம் வந்துவிட்டது. உலகமே ஒரு கள்ளிக்காடாக மாறி நிற்கும் கட்டத்தை நோக்கி வேகவேகமாக நகரும் போக்கை அடையாளப்படுத்தும் கதையாக கள்ளி சிறுகதையை வகுத்துக்கொள்ளலாம்.

அர்த்தம் என்னும் சிறுகதை, ஒருவரை ஒருவர் பற்றி கொடியென வளர்ந்திருக்கும் மனிதர்கள் பாலைவனக்கள்ளியாக மாறி நிற்கும் மற்றொரு அவலக்காட்சியைச் சித்தரிக்கிறது. இக்கதையில் இடம்பெற்றிருப்பவர்கள் இரு சகோதரர்கள். அண்ணன் சமையல்காரன். அவன் மனைவி ஒரு மாதத்துக்கு மேல் அவனோடு வாழப் பிடிக்காமல் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறாள். சிறுவனான தம்பியை தனியொரு ஆளாக சிரமப்பட்டு வளர்க்கிறான் அண்ணன். ஆண்டுகள் நகர்கின்றன. தம்பி வளர்ந்துவிடுகிறான். அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறான் அண்ணன். அது ஒரு தொடக்கம். அங்கிருந்து அவன் உயர்கிறான். ஐதராபாத் சென்று அவன் வேறொரு வேலையில் சேர்ந்துவிடுகிறான். அவனே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் பேசுகிறான். அண்ணனுக்கு  திருமண அழைப்பு அஞ்சலில் வருகிறது. பல வருஷங்கள் கழித்து தம் குடும்பத்தில் நடைபெறும் மங்களகரமான நிகழ்ச்சி என்பதால், அத்திருமணத்தை ஒட்டி வீட்டைப் புதுப்பித்து விருந்து கொடுக்கிறான் அண்ணன். தம்பியும் தம்பி மனைவியும் புதுமணமக்களாக அவ்விருந்தில் கலந்துகொள்கிறார்கள். விடுப்புக்காலம் முழுதும் கலகலப்பாக கழிந்துவிட, ஊருக்குப் புறப்பட இன்னும் ஒருநாள் இருக்கும்போது பிரச்சினை முளைக்கிறது. கள்ளி தன்னைத்தானே தன் நிறத்தாலும் அடர்த்தியாலும் அடையாளம் காட்டும் இடம்.

அண்ணன் இல்லாத நேரத்தில் வீட்டுச்சுவரை இடித்து அங்கங்கே ஓட்டை போடுகிறான் தம்பி. அம்மா காலத்தில் சுவருக்குள் மறைத்து வைத்திருந்த சில்லறை நாணயங்களையும் நகைகளையும் தேடி எடுக்கிறான். வெளியேயிருந்து வீட்டுக்குத் திரும்பிவரும் அண்ணன் அதைக் கண்டு வருந்துகிறான். கிடைத்த தொகையும்  மிகமிகக் குறைவு. இதற்காக தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் வீட்டுச்சுவரை கொத்திச் சிதைத்துவிட்டானே என்று வருத்தப்படுகிறான். சரிபாதியாக பிரித்துக்கொள்ளக்கூட முடியாத அளவுக்கு உள்ள சில்லறையை வைத்து என்ன செய்வது என்று கேட்கிறான். அது ஒரு பேச்சுக்காக சொன்ன வார்த்தைதான். ஆனால் அதைக் கேட்டு வெகுண்டெழுகிறான் தம்பி. இரண்டு பங்கு என்பது தவறு, மூன்று பங்காகப் பிரிக்கவேண்டும் என்று சொல்கிறான் தம்பி. தனக்கும் தன் மனைவிக்குமாக இரு பங்கு, அண்ணனுக்கு ஒரு பங்கு என்பது அவன் கணக்கு.

அந்த வார்த்தை அண்ணனைச் சீண்டிவிடுகிறது. வார்த்தைக்கு வார்த்தை ஒண்டிக்கட்டை என்றும் குழந்தையோ குடும்பமோ இல்லாத தனி ஆள் என்றும் குத்திக் காட்டுகிறான் தம்பி. அது அண்ணனை மிகவும் சிறுமை கொள்ளச் செய்கிறது. நாணயங்களைப் பிரித்துக்கொண்டதுபோலவே வீட்டையும் நிலத்தையும் இரண்டு பங்கு, ஒரு பங்கு என்கிற கணக்குப்படி பிரித்துக்கொள்ளவேண்டும் என்று தம்பி வாதிடுகிறான். மற்றவர்கள் சொற்கள் அவன் நெஞ்சில் பதியவில்லை. இதற்கிடையில் விடுமுறை முடிந்துவிட வேலைக்குச் சென்றுவிடுகிறான் தம்பி.

ஒண்டிக்கட்டை என்னும் சொல் அண்ணன் நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கிறது. அதை ஒரு காரணமாகக் காட்டி தனக்குரிய சொத்துப்பங்கை அபகரிக்கும் எண்ணம் தம்பியின் மோசடியான எண்ணம் ஆழமாகப் புண்படுத்திவிடுகிறது. தனக்குரிய பங்கை இழந்துவிடக் கூடாது என்று தவிக்கிறான். ஒரு கட்டத்தில் சமையல்வேலை செய்யப் போன ஓர் ஊரிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்துவருகிறான். .அன்பான அண்ணன் தம்பிகளின் உள்ளம் மெல்ல மெல்ல பாலைவனக்கள்ளிகள் வளரும் தொட்டிகளாக மாறிவிடும் அவலத்தை அறிந்துகொள்ளும்போது நாம் அடையும் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

கள்ளியும் ஒரு செடியே. நீர்வளம் குறைந்த இடத்தில் உயிர்வாழும் செடி. உயிர்த்திருக்கவேண்டும் என்னும் பிடிவாதத்தாலேயே அது வேரூன்றி நிலத்தை உறுதியாகப் பற்றிக்கொள்கிறது. அது இயற்கை. ஆனால் தென்னை, வாழை, மா, கொய்யா, நெல், கரும்பு, மல்லிகை, ரோஜா என வளர்ந்து செழிக்கவேண்டிய தோட்டங்கள் கூட மெல்லமெல்ல கள்ளிக்காடாக மாற்றமுறுவதை இயற்கை என்று எப்படி நினைக்கமுடியும். மானுட வாழ்வில் நிகழும் விசித்திரக்கோணல்களை ஒவ்வொன்றாக தி.ஜா. சுட்டிக்காட்டும் தருணத்தில்  நாம் எப்படி இருக்கிறோம் என்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தூண்டுகிறது. அவர் கொடுத்திருக்கும் ஆல்பத்திலிருந்து ஒவ்வொரு படமாகப் பார்க்கப்பார்க்க மனம் பதைக்கிறது.

மனத்தை கள்ளிக்காடாக வைத்திருப்பவர்களைப் பற்றிய மற்றொரு சிறுகதை மரமும் செடியும். ஒரே ஊரில் வெவ்வேறு தெருக்களில் வசிக்கும் இரு வணிகர்களைப்பற்றிய கதை. ஒருவர் மூங்கில்காரர். மற்றவர் ஈயக்காரர். இருவரும் தத்தம் வணிகத்தை தமக்கே உரிய நீக்குப்போக்குகளோடு செய்து பிழைக்கும் ஆட்கள். அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு, எப்போதாவது சந்தித்தால்சொகந்தானே, சொகந்தான்என்று கேள்விகேட்டு பதில் சொல்கிற அளவுக்கு உட்பட்டதாக மட்டும் இருந்தது.

அந்த ஊரில் தேர்தல் வருகிறது. ஈயக்காரர் போட்டியிடுகிறார் என்று யாரோ தூண்டிவிட்டதால் மூங்கில்காரரும் தேர்தல் களத்தில் இறங்கிவிடுகிறார். இருவரும் பணத்தை தண்ணீராகச் செலவழிக்கின்றனர். இறுதியில் ஈயக்காரர் வென்றுவிட, மூங்கில்காரர் தோற்றுவிடுகிறார். எக்கச்சக்கமான பணநஷ்டம். மனம் குமைகிறார் மூங்கில்காரர். வெற்றி பெற்ற ஈயக்காரர் தன் கடைக்கு அருகிலேயே ஒரு சர்பத் கடையைத் திறக்கிறார். அவருக்கு எலுமிச்சை தேவைப்படுகிறது. அதற்காக உள்ளூரிலேயே ஒரு தோட்டத்தை வாங்க அவர் திட்டமிடுகிறார். மூங்கில்காரருக்குச் சொந்தமான எலுமிச்சைத்தோட்டத்தை விலை பேச வருகிறார்கள். அது விளைச்சலே இல்லாத தோட்டம். பிஞ்சிலேயே வெம்பி உதிர்ந்துவிடும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள். தோட்டத்துக்கு விலை பேச வருகிற நாளன்று, கடையிலிருந்து ஒரு கூடை எலுமிச்சம்பழம் வாங்கி வந்து மரத்தடியில் உதிர்ந்துகிடப்பதுபோல நம்பவைக்கிறார் மூங்கில்காரர். மூன்று மடங்கு கூடுதலான தொகையைக் கொடுத்து தோட்டத்தை விலைக்கு வாங்கிவிடுகிறார் ஈயக்காரர். குற்ற உணர்ச்சியின் காரணமாக விற்ற பிறகு தோட்டத்துப் பக்கம் செல்வதையே தவிர்த்துவந்த மூங்கில்காரர் தற்செயலாக ஒருநாள் அந்தப் பக்கம் செல்கிறார். உண்மையிலேயே பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தண்ணீருக்கும் உரத்துக்கும் வழிசெய்துகொண்டு தோட்டத்தைச் செழிப்பாக்கிய கதையை அறிந்து சற்றே சோர்வுற்றாலும், தான் அடைந்த லாபத்தை எண்ணி ஆறுதல் கொள்கிறார் மூங்கில்காரர்.

வெம்பி விழும் பழுங்களைக் கொண்ட தோட்டத்தை ஒரு காட்சியில் சித்தரிக்கிறார் தி.ஜா. மூங்கில்காரரின் உருவகமாகவே அத்தோட்டம் காட்சியளிக்கிறது. முதிராத மனம். பேராசை. ஈரமில்லாத போக்கு. பொறாமை. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றத் தயங்காத வேகம். நல்லுணர்வுகள் அனைத்தையும் துறந்து அவர் மனம் கள்ளிக்காடாக இருக்கிறது. விளைச்சலில்லாத எலுமிச்சைத் தோட்டத்துக்கு அதுவே காரணம்.

நல்ல உருண்டையான பழங்கள் பழுத்துத் தொங்கும் தோட்டத்தை மற்றொரு காட்சியில் சித்தரிக்கிறார் தி.ஜா. ஈயக்காரரின் உருவகமாகவே அப்போது அத்தோட்டம் காட்சியளிக்கிறது. மூங்கில்காரருக்கு இருப்பதைப்போலவே அவருக்கும் முதிராத மனம். பேராசை. ஈரமில்லாத போக்கு. பொறாமை. கூடுதலாக வஞ்சம், தந்திரம், அரசியல் எந்திரத்தை தனக்குச் சாதகமாக திருப்பிக்கொள்ளும் சாமர்த்தியம் அனைத்தையும் கொண்டிருக்கிறார். மனித உணர்வுகள் அனைத்தையும் இழந்து அவர் மனமும் கள்ளிக்காடாகவே இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் விளைச்சல் மண்ணின் மனம் கனிந்து இயல்பாக நிகழ்ந்ததல்ல. சூழல்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஒருவருக்குக் கிட்டிய வெற்றி. அவ்வளவே.

கதையின் எல்லைக்கு அப்பால் சென்றும் சில விஷயங்களை நாம் யோசிக்கமுடியும். தி.ஜா. இச்சிறுகதையில் ஒரு தேர்தல் களத்தைச் சித்தரிக்கிறார் என்பதை நாம் மறக்கத் தேவையில்லை. மரமும் செடியும் தேர்தல் சின்னங்கள். இருவரிடமும் அந்த ஊர்மக்கள் தாராளமாக வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இருவருமே பணத்தை தண்ணீராகச் செலவு செய்கிறார்கள். சாப்பாட்டுக்காகவே டின் டின்னாக நெய்யை வரவழைத்ததாகச் சொல்கிறார் மூங்கில்காரர். இறுதியில் அவர் தோல்வியடைகிறார். மரத்தைப் போலவே வாக்குச்சீட்டில் செடியை அச்சடித்துக் காட்டமுடியும் என்பதாலேயே செடி சின்னம் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று மூங்கில்காரரை நம்ப வைக்க முயற்சி செய்கிறார் ஒருவர். அந்த ஊரில் ஒருவரும் நேர்மையாக வாக்களிக்கவில்லை. நேர்மையாக வாக்கு கேட்கவுமில்லை. இரு தரப்பினருமே அற்பத்தனமாக நடந்துகொள்வதை நாம் உணரமுடியும். ஒருவருக்கும் தம் மனத்தை செடிகள் வளர்க்கும் தோட்டமாக வளர்த்துப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பமோ முனைப்போ இல்லை. கிடைத்த  விலைக்கு அதை விற்றுவிட்டு கள்ளிக்காடாக மாற்றிக்கொள்வதில் ஒருவருக்கும் வெட்கமில்லை. இக்கருத்தை தி.ஜா. தன் கதையில் எங்கும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ஆனால் வாசிப்பின் தடத்தை ஒட்டி ஒருசில அடிகள் முன்னால் சென்றால் நாம் இந்தப் புள்ளியைச் சென்று சேர்ந்துவிடமுடியும்.

காட்டுவாசம் சிறுகதையில் ஒரு பாட்டியின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறார் தி.ஜா. சமையல் வேலை செய்து பிழைப்பவள் அவள். தினந்தோறும் சமைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் வழியில் கிடக்கும் செங்கற்களை எடுத்துக்கொண்டு வருகிறாள் அவள். எங்காவது வீட்டுவேலை நடப்பதைப் பார்த்துவிட்டால், அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அரைபடி ஒருபடி சிமெண்ட் வாங்கி வந்துவிடுவாள் அவள். அப்படி சேர்த்த கற்களையும் சிமெண்டையும் கொண்டு கழுகுக்கூடு மாதிரி இருந்த குடிசையை இடித்து ஒரு நல்ல வீடு கட்டுகிறாள். ஆனால் அந்த வீட்டில் அவளால் நிம்மதியாக வாழ்ந்து கஞ்சி குடிக்க முடியவில்லை. அவள் மருமகள் அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி திண்ணையில் தள்ளிவிடுகிறாள். பிறகு ஒருநாள் இரவு பால்கோவாவை வாயிலேயே வற்புறுத்தித் திணித்து உயிர்பிரியச் செய்துவிடுகிறாள். பெற்றெடுத்த மகனே, தன் மனைவியோடு கூட்டு சேர்ந்து அவளை உலகத்திலிருந்தே அப்புறப்படுத்திவிடுகிறான். அன்பில்லாத அந்த மனிதர்களின் மனத்தை, கள்ளிக்காடு  என்று சொல்லாமல், வேறெந்த சொல்லால் சுட்டிக் காட்டமுடியும்?

குளிர் சிறுகதையில் இடம்பெறும் பாட்டியின் பாத்திரமும் இத்தகையதே. முதுமையின் காரணமாக சமைக்கமுடியாமல் இரவு நேரத்தில் கோவிலுக்குச் சென்று பிரசாதமாகக் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவள் அவள். மெல்ல தடுமாறி வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டுவிடுகிறாள், வீட்டுக்குச் சொந்தக்காரியான இன்னொரு பாட்டி. அவள் வாய்க்கு அஞ்சி மற்ற குடித்தனக்காரர்களும் அந்தக் கொடுமையை வாய் திறந்து கண்டிப்பதுமில்லை. கதவைத் திறந்து உதவி செய்வதுமில்லை. மணிக்கணக்காக அழைத்து அழைத்து, அழுது ஓய்ந்த பிறகுதான் அந்தப் பாட்டி வந்து கதவைத் திறப்பாள். பிறகு ஏராளமான வசைகள். அடி உதைகள். ஒருவரும் அதைத் தட்டிக் கேட்பதே இல்லை. குறிப்பிட்ட நாளில் மழை பொழிகிறது. குளிர்க்காற்று வீசுகிறது. வழக்கம்போல மூடிய கதவுக்கு வெளியே நின்றுகொண்டு கதறுகிறாள். கெஞ்சுகிறாள். வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் அவள் கதறலும் வேண்டுகோளும் காதில் விழுகிறது. ஆனால் எல்லோருமே சொல்லிவைத்ததுபோல காதில் விழாததுபோல நடிக்கிறார்கள். இரக்கமோ கருணையோ கிஞ்சித்தும் இல்லாமல் போன அவர்கள் இதயங்களை கள்ளிக்காடு என்று அழைப்பதில் தவறே இல்லை.

இத்தொகுப்பில் மிகமுக்கியமானதொரு சிறுகதை குழந்தைக்கு ஜுரம். சரவண வாத்தியார் என்கிற ஓர் எழுத்தாளர் பாத்திரமும் பஞ்சு என்கிற ஒரு பதிப்பாளர் பாத்திரமும் இக்கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். நானூறு ரூபாய் பாக்கியை முன்னூறு ரூபாய் என்று வாதித்து நிறுவப் பார்க்கும் பதிப்பாளர் மனத்தில் உண்மைக்கே இடமில்லை. கள்ளிக்காடாகவே காட்சியளிக்கிறது. உண்மையை நிறுவமுடியாத கசப்போடும் உண்மை தோற்றுவிட்டதே என்னும் விரக்தியோடும் வெளியேறும் சரவண வாத்தியாரிடம் வருத்தம் இருக்கிறது. ஆனால் கையறுநிலையில் கூட அவர் தன் மனத்திலிருக்கும் ஈரத்தையோ இரக்கத்தையோ   இழக்கவில்லை.

எதிர்பாராத விதமாக அவர் குழந்தை காய்ச்சல் கண்டு படுத்துவிடுகிறாள். பணமில்லாததால் மருத்துவம் பார்க்க முடியவில்லை. முன்பொருநாள் பதற்றத்தில் பதிப்பாசிரியரிடமே விட்டுவிட்டு வந்த கையெழுத்துப் பிரதியை கேட்டு வாங்குவதற்காக வருகிறார் வாத்தியார். வந்த இடத்தில் பதிப்பாசிரியரின் மனைவி படுத்த படுக்கையாய் இருப்பதைப் பார்க்கிறார். எந்த மருத்துவரும் வரத் தயாராக இல்லை என்பதையும் அறிந்துகொள்கிறார். அவர் உடனே மனமிளகி தமக்கு அறிமுகமான மருத்துவரை அழைத்துவந்து காட்டுகிறார்.  நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து தேவையான மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைக்க வழியும் செய்கிறார். வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில்தான் தன் குழந்தையின் ஜுரம் நினைவுக்கு வருகிறது. மருத்துவரிடம் சொல்லி மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தே திரும்புகிறார்.

நெருக்கடியான ஒரு தருணத்தில் அவர் தன் கடன் பாக்கியை எல்லாம் மறந்துவிடுகிறார். பதிப்பாசிரியர் அவமானப்படுத்தும் விதமாகச் சொன்ன ஒரு சொல் கூட அவர் நினைவுக்கு வரவில்லை. அனைத்தையும் மறந்துவிடுகிறார். பிழைக்கத் துடிக்கும் ஒரு உயிரை மீட்கத் துணையாக இருக்கவேண்டும் என்னும் ஒரு நினைவு மட்டுமே அவரை விசைகொள்ள வைக்கிறது. ஒரு கட்டத்தில் கூட தன் மனத்தில் நிறைந்திருக்கும் ஈரத்தை, அன்பை, கருணையை அவர் உதறவில்லை. கள்ளிக்காடென தன்னை காட்டிக்கொண்டவர் முன்னிலையில் கூட அவர் தன்னை ஒரு விளைநிலமாகவே காட்டிக்கொள்கிறார். எந்தத் தருணத்திலும் பதிப்பாசிரியர்நாளைக்கு பாக்கி பணத்தை அனுப்பிவைக்கிறேன்என்று வாய்திறந்து சொல்லவில்லை. எந்தத் தருணத்திலும் அவர் வாய்திறந்து கையெழுத்துப் பிரதியையும் கேட்டுப் பெறவில்லை. இருளில் தனிமையில் நடந்து வீடு திரும்ப வேண்டிய சூழலில் இருந்தபோதும் தன் நெஞ்சிலிருக்கும் கருணைச்சுடரை அவர் அணையவிடவில்லை.

இந்த மண்ணில் ஒவ்வொருவரும் பாலைவனக்கள்ளியாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் தன்னை என்றென்றும் விளைநிலமாகவே வைத்திருக்கும் சரவண வாத்தியார், தி.ஜா.வின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. அந்தத் தாய்விதையிலிருந்தே ஆயிரமாயிரம் கன்றுகள் முளைவிட்டு விளைநிலம் நிரம்பவேண்டும்.

(எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜானகிராமனின் பல்வேறு படைப்புகளைப்பற்றிய கட்டுரைகளைத் தொகுத்த கல்யாணராமன், அவற்றை ஜானகிராமம் என்னும் தலைப்பில் ஒரு பெருந்தொகைநூலாகக் கொண்டுவந்தார். அதற்காக ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை )